வர்த்தகம் மற்றும் பொருளாதாரத்தில், இந்தியாவின் வணிக நலன்கள் மற்றும் டிரம்பின் பொருளாதார கண்ணோட்டம் ஆகியவை தற்போது ஒரே நேர்கோட்டில் வருவதாக கூறப்படுகிறது. இதன் மூலம் சிறிய அணுக்கரு உலை, இரு நாடுகளுக்கும் இடையே பொதுவான ஆர்வம் உள்ளதாக பார்க்கப்படுகிறது. இதன் உந்துதலுக்கு அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டிரம்ப் உதவியாக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆங்கிலத்தில் படிக்கவும்: Nuclear energy: Why Trump govt could be a net positive for India’s SMR push
ஜோ ரோகனுடனான தேர்தலுக்கு முந்தைய உரையாடலின் போது, பெரிய அணு உலைகள் உருவாக்குவதற்கான திட்டங்கள் இருப்பதாக டிரம்ப் கூறினார். எனினும் இதனை உருவாக்க பொருட்செலவு அதிகமாகும் எனவும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடமிருந்து எதிர்ப்புகள் வரலாம் எனவும் கூறிய அவர், சிறிய அணுக்கரு உலைகள் இதற்கு பதிலாக இருக்குமென தெரிவித்தார்.
ஒரு தொழிற்சாலையில் கட்டப்படும் சிறிய அணுக்கரு உலைகள், பெரிய அணு உலைகளுடன் தொடர்புடைய சிக்கல்களைத் தவிர்க்கலாம் என்று தான் நம்புவதாக டிரம்ப் கூறினார்.
தூய்மையான எரிசக்தி மாற்றத்திற்கான அதன் உறுதிப்பாட்டை நிறைவேற்றுவதற்கும், தொழில்நுட்பம் தலைமையிலான வெளியுறவுக் கொள்கை கருவியாக சிறிய அணுக்கரு உலைகளை ஒருங்கிணைக்கவும், இதன் உற்பத்தி மதிப்புச் சங்கிலியில் இறங்குவதற்கு இந்தியா செயல்படுகிறது. இந்த சூழலில் தான் டிரம்ப் அமெரிக்க அதிபராக வெற்றிபெற்றுள்ளார்.
சிறிய அணுக்கரு உலைகள்
சர்வதேச அணுசக்தி முகமை என்பது அரசாங்கங்களுக்கு ஆலோசனை வழங்கும் அமைப்பாகும். இந்த அமைப்பு, உலகம் நிகர பூஜ்ஜியத்தை அடைவதற்கு ஏதேனும் வாய்ப்பு இருந்தால், அணுசக்தி 2050 இல் இரட்டிப்பாகும் என்று கூறுகிறது. மிகவும் பெரியதாகவும், விலை மதிப்பு அதிகமாகவும் இருப்பது அணுசக்தியின் தற்போதைய பிரச்சனை. மேலும், இவற்றை உருவாக்க அதிக நேரம் எடுக்கும். இதில் ஏதேனும் தவறு நிகழ்ந்தால், மிகப்பெரிய விபத்துகள் ஏற்படும்.
இதற்கு ஒரு தீர்வாக சிறிய அணுக்கரு உலைகள் விளங்குகிறது. சிறிய அணுக்கரு உலைகள் ஒரு யூனிட்டுக்கு 30MWe முதல் 300 MWe வரை உற்பத்தி செய்யும் திறன் கொண்டவை. AI இயந்திர கற்றல் பயன்பாடுகள் மற்றும் தரவு மையங்களில் இருந்து வரும் பெரிய அளவிலான மின்சாரத் தேவையைக் கருத்திற் கொண்டு, தொழில்நுட்ப நிறுவனங்களின் மின் தேவை அதிகரித்து வருவதால் இது மிகவும் பொருத்தமானதாக இருக்கும்.
பல்வேறு வகையான சிறிய அணுக்கரு உலைகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. இவற்றில் நான்கு வகைகள் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. ஒவ்வொன்றும் அணுக்கரு பிளவு எதிர்வினையின் தீவிர வெப்பத்தை நிர்வகிக்க வெவ்வேறு குளிரூட்டியைப் பயன்படுத்துகின்றன. லேசான நீர், அதிக வெப்பநிலை வாயு, திரவ உலோகம் மற்றும் உருகிய உப்பு ஆகியவை பயன்படுகிறது.
எனினும், இலகுவான நீர் உலைகள் பெரும்பாலும் பயன்படுகிறது. இவை ரஷ்யா, பிரான்ஸ் மற்றும் அமெரிக்காவில் கட்டப்படும் பாரம்பரிய அணுமின் நிலையங்களைப் போலவே இருக்கின்றன. இன்றைய அணுசக்தி விதிமுறைகள் பெரும்பாலும் நீர்-குளிரூட்டப்பட்ட உலைகளை அடிப்படையாகக் கொண்டிருப்பதால், இலகுவான நீர் சிறிய அணுக்கரு உலைகளை வடிவமைத்து ஒப்புதல் பெற மிகவும் எளிதாகிறது. எனவே இந்த இலகுவான நீர் உலைகள் மூலம், ஒரு பெரிய பாரம்பரிய அணுமின் நிலையத்தை எடுத்து, அதை சுருக்கி, அதை ஒரு தொழிற்சாலையில் பெருமளவில் உற்பத்தி செய்ய வேண்டும் என டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் அணுசக்தித் துறை, ஏற்கனவே நியூ ஜெர்சியின் கேம்டனில் உள்ள ஹோல்டெக் இன்டர்நேஷனலுடன் ஆய்வுப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது. இது தனியாருக்கு சொந்தமான நிறுவனமாகும். இது தற்போது உலகின் மிகப்பெரிய மூலதன அணு கூறுகளை ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களில் ஒன்ற்.
தற்போது, இரண்டு சிறிய அணுக்கரு உலை திட்டங்கள் உலகளவில் செயல்பாட்டு நிலையை எட்டியுள்ளன. அதில் ஒன்று அகாடமிக் லோமோனோசோவ். இது ரஷ்யாவின் 35 MWe இரண்டு தொகுதிகள் கொண்ட ஒரு மிதக்கும் சக்தி அலகு ஆகும். இது, மே 2020 இல் வணிகச் செயல்பாட்டைத் தொடங்கியது. மற்றொன்று சீனாவில் HTR-PM எனப்படும் செயல்விளக்க சிறிய அணுக்கரு உலை திட்டமாகும். இது 2023 டிசம்பரில் வணிகச் செயல்பாடுகளைத் தொடங்கியதாகக் கூறப்படுகிறது.
ஹோல்டெக்கின் SMR-300 தவிர, ரோல்ஸ் ராய்ஸ் SMR, NuScale இன் VOYGR SMR, வெஸ்டிங்ஹவுஸ் எலக்ட்ரிக்ஸ் AP300 SMR மற்றும் GE-ஹிட்டாச்சியின் BWRX-300 ஆகியவை இந்த பிரிவில் வளர்ந்து வரும் மற்ற மேற்கத்திய போட்டியாளர்களாக கருதப்படுகிறன.
ஹோல்டெக்கின் SMR-300 என்பது அமெரிக்க எரிசக்தித் துறையின் ஏழு மேம்பட்ட உலை வடிவமைப்புகளில் ஒன்றாகும். 2020 ஆம் ஆண்டில், இந்நிறுவனத்தின் அணுக்கரு உலை திட்டமானது, வடிவமைப்பு, பொறியியல் மற்றும் உரிமம் வழங்கும் நடவடிக்கைகளை விரைவுபடுத்த 116 மில்லியன் அமெரிக்க டாலர்களை பெற்றது. மேலும், தற்போது யுனைடெட் கிங்டம் மற்றும் கனடாவில் அதன் சிறிய அணுஉலையை பயன்படுத்துவதற்கான ஆரம்ப வடிவமைப்பு மறுஆய்வு நிலைகளை எட்டியுள்ளது.
சட்ட ரீதியான சிக்கல்கள்
இதில் சில சட்ட சிக்கல்கள் உள்ளன. இந்தியத் தரப்பில், அணுசக்தி சேதத்திற்கான சிவில் பொறுப்புச் சட்டம், 2010-இன் கீழ், அணுசக்தி விபத்தால் ஏற்படும் சேதத்திலிருந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கும், பொறுப்புகளை ஒதுக்குவதற்கும், இழப்பீடுக்கான நடைமுறைகளைக் குறிப்பிடுவதற்கும் ஒரு நெறிமுறையை உருவாக்கியுள்ளது. இவை இந்தியாவில் முதலீடு செய்வதில் தயக்கத்தை ஏற்படுத்துவதாக வெளிநாட்டு நிறுவனங்களால் பார்க்கப்படுகிறது.
ஹோல்டெக் போன்ற அமெரிக்க நிறுவனங்கள் சில கடுமையான பாதுகாப்புகளின் கீழ் இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்யும் திறனை வழங்குகிறது. ஆனால் இந்தியாவில் அணுசக்தி சாதனங்களைத் தயாரிக்கவோ அல்லது அணுசக்தி வடிவமைப்புப் பணிகளைச் செய்யவோ அவர்களை அனுமதிக்காது.
எனவே, அமெரிக்க-இந்தியா அணுசக்தி ஒப்பந்தத்திற்கு சில கூடுதல் அவகாசம் தேவைப்படலாம். 2010 சட்டத்தில் மாற்றங்களை செய்யாவிட்டாலும், இதற்கான தீர்வுகளை இந்தியா ஆராய முயற்சிக்கிறது.
ஆனால், இந்த விவகாரத்தில் அமெரிக்கா அடுத்தகட்ட நகர்வை மேற்கொள்ள வேண்டுமென இந்தியா விரும்புகிறது. ஜோபைடன் நிர்வாகத்தின் கீழ் இதில் முன்னேற்றத்திற்கான சில அறிகுறிகள் இருந்தாலும், அமெரிக்க சட்டதிட்டங்களிலும் சிக்கல்கள் நிலவுகிறது. எனவே, டிரம்ப் பதவியேற்றால், அவரது நோக்கத்தின் படி சில சலுகைகள் கிடைக்கலாம் என இந்தியா கருதுகிறது. சிறிய அணுக்கரு உலை துறையில், இந்தியா தன்னை நிலைநிறுத்திக் கொள்ளும் என நம்புகிறது.
இதனிடையே, சீனாவும் பெரிய அணு உலைகளைப் போன்று அல்லாமல், சிறிய அணுக்கரு உலைகளின் உலகளாவிய தலைமைத்துவத்தின் வாய்ப்பைப் பயன்படுத்துவதற்கான ஒரு லட்சியத் திட்டத்தில் செயல்படுகிறது. இந்தியாவை போலவே சீனாவும், உலகலாவிய தென்பகுதியில் சிறிய அணுக்கரு உலைகளை, தனது ராஜதந்திரத்தின் வெளிப்பாடாக பார்க்கிறது. மின்னணு வாகன துறையை போலவே, இதையும் அசைத்து பார்க்கலாமென சீன நம்புகிறது.
இந்தியாவுடனான அணுசக்தி ஒத்துழைப்பை விரிவுபடுத்த ரஷ்யாவும் ஆர்வமாக இருப்பதாக கூறப்படுகிறது. இவை சிறிய அணுக்கரு உலைகளில் ஒரு கூட்டாண்மையை சேர்ப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன. "அணுசக்தி சட்டம், 1962 இன் ஒட்டுமொத்த வரம்புக்குள் அரசாங்கத்தின் முடிவின் அடிப்படையில் எதிர்கால நடவடிக்கை இறுதி செய்யப்படும். மேலும் இந்தத் துறையில் தனியார் துறை மற்றும் ஸ்டார்ட் அப்கள் ஈடுபடுவதற்கான சாத்தியக்கூறுகளும் ஆராயப்படும்" என அதிகாரிகள் கூறுகின்றனர்.
செய்தி - அனில் சசி
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.