Creamy layer : இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டில் க்ரீமி லேயருக்கான அளவுகோல்களை திருத்துவதற்கான திட்டம் பல ஆண்டுகளாக கிடப்பில் உள்ள நிலையில், நடைபெற்று வரும் மழைக்கால கூட்டத் தொடரில் இது தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். இந்த கட்டுரை க்ரீமி லேயர் எவ்வாறு வரையறுக்கப்படுகிறது மற்றும் இதற்கான அளவுகோல் வரையறைகள் திருத்தம் ஏன் தாமதமாகிறது என்பதை விளக்குகிறது.
க்ரீமி லேயர் என்றால் என்ன?
ஓ.பி.சி. இட ஒதுக்கீடு நன்மைகளை பெறுவதற்கான வரம்பை கட்டமைக்கிறது க்ரீமி லேயர். 27% இட ஒதுக்கீடு ஓ.பி.சி. பிரிவினருக்கு அரசு வேலைகள் மற்றும் உயர்க் கல்வி நிறுவனங்களில் வழங்கப்பட்டாலும், க்ரீமி லேயருக்கு உள்ளே வரும் நபர்கள் இந்த இட ஒதுக்கீட்டின் நன்மைகளை பெற முடியாது.
இரண்டாவது பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் என்று வழங்கப்படும் மண்டேல் ஆணையத்தின் பரிந்துரைப் படி, 1990ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 13ம் தேதி அன்று சமூக மற்றும் கல்வி ரீதியாக பின்தங்கிய வகுப்பினருக்கு (Socially and Educationally Backward Classes (SEBCs)) நேரடி பணியமர்த்தலில் நிரப்பப்பட வேண்டிய சிவில் பணியிடங்கள் மற்றும் சேவைகளில் 27% இட ஒதுகீட்டினை அறிவித்தது. இதனை எதிர்த்து போடப்பட்ட (இந்திரா ஷாவ்னே) வழக்கில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம் நவம்பர் 16, 1992 அண்டு 27% இட ஒதுக்கீட்டினை , க்ரீமி லேயரை தவிர்த்து, இதர பிற்படுத்தப்பட்டோருக்கு உறுதி செய்தது.
இது எவ்வாறு தீர்மானிக்கப்பட்டது?
இந்திரா ஷாவ்னே வழக்கு தீர்ப்பை தொடர்ந்து, ஓய்வு பெற்ற நீதிபதி ஆர். என். பிரசாத் தலைமையிலான நிபுணர் குழு கிரீமி லேயரை நிர்ணயிப்பதற்கான அளவுகோல்களை நிர்ணயிக்க அமைக்கப்பட்டது. 1993ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 8ம் தேதி அன்று, பணியாளர்கள் மற்றும் பயிற்சித் துறை (டிஓபிடி), தரவரிசை, அந்தஸ்து மற்றும் வருமானம் ஆகியவை அடிப்படையில் யார் யார் ஓ.பி.சி.யின் இட ஒதுக்கீட்டு பலன்களை பெறமுடியாது என்ற பட்டியலை வெளியிட்டது.
அரசு பணிகளில் இல்லாதவர்களில், ஆண்டுக்கு ரூ. 8 லட்சம் வருமானம் ஈட்டக் கூடியவர்கள், அரசு பணிகளில் இருப்பவர்கள் எனில், அவர்களின் பணி அடிப்படையைக் கொண்டு (வருமானத்தை அடிப்படையாக கொண்டு அல்ல) க்ரீமி லேயர் வரையறுக்கப்பட்டது. ஒரு மாணவர் அல்லது மாணவியின் பெற்றோர்கள் இருவரும் அல்லது ஒருவர் அரசியலமைப்பு பதவிகளில் இருந்தால், நேரடியாக க்ரூப் ஏ பதவிகளில் பணியமர்த்தப்பட்டிருந்தால், இரண்டு பெற்றோர்களும் க்ரூப் பி பதவிகளில் இருந்தால், 40 வயதுக்கு முன்பு பதவி உயர்வு பெற்று க்ரூப் ஏ பதவிகளில் இருந்தால் அவர்களின் குழந்தைகள் க்ரீமி லேயருக்கு வருவார்கள்.
கர்னல், ராணுவத்தில் உயர் பதவிகளில் இருக்கும் நபர்கள், அதற்கு இணையான பதவிகளில் கடற்படை மற்றும் விமானப்படைகளில் பணியாற்றும் பெற்றோர்களின் குழந்தைகளும் க்ரீமி லேயரில் வருவார்கள். க்ரீமி லேயரை நிர்ணயிக்கும் போது சம்பளம் அல்லது விவசாய நிலத்திலிருந்து வருமானம் இணைக்கப்படவில்லை என்று அக்டோபர் 14, 2003ம் ஆண்டு டிஓபிடி வெளியிட்ட விளக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நீட் 2021 : ஓ.பி.சி., பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள்., மற்றும் அனைந்திந்திய இட ஒதுக்கீடு
இப்போது என்ன நடைபெறுகிறது?
மழைக்கால கூட்டத்தொடரின் போது, எட்டு மக்களவை உறுப்பினர்கள் (7 பாஜக உறுப்பினர்கள் 1 காங்கிரஸ் உறுப்பினர்) க்ரீமி லேயரின் அளவுகோல்களை திருத்துவதற்கான நிலுவையில் உள்ள திட்டம் குறித்து இரண்டு கேள்விகளை எழுப்பினர். இதற்கு பதிலளிக்கும் விதமாக, சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் பிரதிமா பௌமிக், OBC களில் க்ரீமி லேயரை நிர்ணயிப்பதற்கான வருமான அளவுகோலை திருத்துவதற்கான திட்டம் அரசாங்கத்தின் பரிசீலனையில் உள்ளது" என்று ஜூலை 20ம் தேதி அன்று கூறினார்
மாநிலங்களவையில் மூன்று எம்பிக்கள் (சமாஜ்வாடி கட்சியில் 2 உறுப்பினர்கள், காங்கிரஸ் 1) ஓ.பி.சி. பிரிவினருக்கு மட்டும் அரசு வேலைகளில் க்ரீமி லேயர் வழங்குவது நியாயமானதா என்று கேள்வி எழுப்பினர்கள். ஜூலை 22ம் தேதி அன்று, இணை அமைச்சர் ஜித்தேந்திர சிங், இந்திரா சாவ்னே வழக்கை மேற்கோள் காட்டி, 2015 முதல் 2019 வரையில் சிவில் தேர்வுகள் மூலம் ஐ.ஏ.எஸ்.-ல் தேர்ச்சி பெற்ற 63 நபர்கள் க்ரீமி லேயருக்குள் வந்ததால் அவர்களுக்கு பதவி நியமனம் வழங்கப்படவில்லை என்று கூறினார்.
இதற்கு முன்பு இந்த வரையறைகள் திருத்தப்பட்டதா?
வருமான வரம்பைத் தவிர, க்ரீமி லேயரின் தற்போதைய வரையறை டிஓபிடி செப்டம்பர் 8, 1993 அன்று அறிவிக்கப்பட்டவையே. அவை மீண்டும் அக்டோபர் மாதம் 2004ம் ஆண்டு தெளிவுபடுத்தப்பட்டது. "க்ரீமி லேயரை வரையறுக்க வேறு எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை" என்று சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் கிரிஷன் பால் குர்ஜார் மார்ச் மாதம் நாடாளுமன்றத்தில் ஒரு கேள்விக்கு பதிலளித்தார்.
க்ரீமி லேயரில் உள்ள வருமான வரம்பு பல ஆண்டுகளாக திருத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு மூன்று வருடங்களுக்கும் திருத்தம் செய்யப்பட வேண்டும் என்று டிஓபிடி நிர்ணயித்திருந்தாலும், செப்டம்பர் 8, 1993க்குப் ( ஆண்டுக்கு ஒரு லட்சம்) பிறகு முதல் திருத்தம் 2004ம் ஆண்டு மார்ச் 9ம் தேதி அன்று தான் நடைபெற்றது. அப்போது வருமான உச்ச வரம்பு 2.50 லட்சமாக உயர்த்தி அறிவிக்கப்பட்டது. 2008ம் ஆண்டு அக்டோபர் மாதம் ரூ. 4. 50 லட்சமாக அறிவிக்கப்பட்டது. 2013ம் ஆண்டு மே மாதம் 6 லட்சமாகவும், செப்டம்பர் மாதம் 13ம் தேதி 2017 அன்று அது 8 லட்சமாகவும் உயர்த்தி அறிவிக்கப்பட்டது. தற்போது இந்த உச்ச வரம்பு திருத்தப்பட்டு மூன்று ஆண்டுகளுக்கும் மேல் ஆகிறது.
பாஜக எம்.பி. கணேஷ் சிங் தலைமையிலான இதர பிற்படுத்தப்பட்டோர் மேம்பாட்டு பாராளுமன்ற குழு ஜூலை மாதம் 2020 அன்று வெளியிட்ட அறிக்கையில், “வருமான வரம்பை மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை திருத்தி வழங்குவதற்கான உத்தரவு சரியாக பின்பற்றப்படவில்லை என்றும், அரசாங்கம் நீண்ட இடைவெளிக்கு மத்தியில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட விதிமுறைகளை அரசே மீறுகிறது” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த திருத்தத்திற்கு அரசாங்கம் என்ன செய்ய உள்ளது?
மார்ச் 12 அன்று, சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம், தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு (என்சிஎன்சி) ஒரு வரைவு அமைச்சரவை குறிப்பை அனுப்பியது, வருமான வரிக்கு கணக்கிடப்பட்ட சம்பளம் உட்பட அனைத்து வருமானத்திலும் கிரீமி லேயர் தீர்மானிக்கப்படும், ஆனால் விவசாய வருமானம் அல்ல. இது முன்னாள் டிஓபிடி செயலாளர் பி பி சர்மா தலைமையிலான ஒரு குழுவின் பரிந்துரைகளை அடிப்படையாகக் கொண்டது, இது செப்டம்பர் 8, 1993 இன் டிஓபிடி வழிமுறைகளைச் செயல்படுத்துவதை மறுஆய்வு செய்ய பரிந்துரைத்தது.
எம்பிக்களின் எதிர்ப்பு காரணமாக, இந்த நடவடிக்கை தடைபட்டுள்ளது மற்றும் அரசாங்கத்தின் தற்போதைய நிலைப்பாடு "பரிசீலனையில் உள்ளது”. சம்பளம் மற்றும் விவசாய வருமானத்தையும், ஆண்டு வருமானத்தை கணக்கிடும் போது சேர்க்க கூடாது என்று பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோருக்கு குறுஞ்செய்திகள் மற்றும் ட்வீட்கள் மூலம் வலியுறுத்த வேண்டும் என்று இதர ஓ.பி.சி. எம்.பிகளுக்கு கடந்த ஆண்டு ஜூலை மாதம் 5ம் தேதி அன்று கடிதம் எழுதியுள்ளார் கணேஷ் சிங்.
வருமான வரம்பை ரூ .15 லட்சமாக உயர்த்துவதற்கு நாடாளுமன்றக் குழு பரிந்துரைத்திருப்பதாக அவர் எழுதினார், ஆனால் அரசாங்கம் "ரூ .12 லட்சத்தில் ஒருமித்த கருத்தை பரிசீலித்து வருகிறது, ஆனால் மொத்த வருவாயில் சம்பளம் மற்றும் விவசாய வருமானமும் சேர்க்கப்படுகிறது, இது தவறு ”.
டிசம்பர் 21, 2011 அன்று மக்களவையில் ஒரு பிரேரணை கொண்டுவரப்பட்டதைத் தொடர்ந்து, ஜூன் 2012 இல் இந்த குழு அமைக்கப்பட்டது. தற்போது மக்களவையில் இருந்து 18 உறுப்பினர்களும், மாநிலங்களவையில் இருந்து எட்டு உறுப்பினர்களும் உள்ளனர், மேலும் மக்களவை உறுப்பினர் ராஜேஷ் வர்மா (பிஜேபி) தலைவராக உள்ளார்.
இந்த எதிர்ப்புக்கு பிறகு என்ன நடந்தது?
கடந்த ஆண்டு ஜூலை 21 அன்று, அமித் ஷா என்சிபிசி பிரதிநிதிகள் கூட்டத்திற்கு அழைப்புவிடுத்தார். பாஜக பொதுச் செயலாளர் (இப்போது மத்திய அமைச்சர்) பூபேந்திர யாதவ் ஆகியோர் பங்கேற்றனர். மத்திய அரசு வேலைகளில் ஓ.பி.சி. பிரதிநிதிகள் குறைவாக உள்ளனர் என்றும் ஓ.பி.சிக்கு ஒதுக்கப்பட்ட பதவிகள் பொது பிரிவினருக்கு வழங்கப்படுகிறது என்றும் என்.சி.பி.சி. உறூப்பினர்கள் கூறியுள்ளனர். இது தொடர்பான தரவுகளை திரட்டி மீண்டும் ஆலோசனை கூட்டத்திற்கு வர வேண்டும் என்று அவர் கூறினார்.
எங்களிடம் தரவுகள் உள்ளன. ஆலோசனை கூட்டத்தை நடத்த உள்துறை அமைச்சரிடம் கேட்டிருக்கின்றோம். கூட்டத்திற்காக நாங்கள் காத்திருக்கின்றோம் என்று என்.சி.பி.சி. சேர்மென் பக்வான் லால் ஷானி கடந்த வாரம் இந்தியன் எக்ஸ்பிரஸிடம் கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.