தமிழகத்தில் அதிகரித்த ஆலிவ் ரிட்லி ஆமைகள் இறப்பு; கவலைகளும் காரணங்களும்

இனப்பெருக்கத்திற்காக தமிழக கடற்கரைகளில் ஒதுங்கும் ஆலிவ் ரிட்லி ஆமைகளின் இறப்பு எண்ணிக்கை அதிகரிப்பு; காரணங்கள் என்ன?

இனப்பெருக்கத்திற்காக தமிழக கடற்கரைகளில் ஒதுங்கும் ஆலிவ் ரிட்லி ஆமைகளின் இறப்பு எண்ணிக்கை அதிகரிப்பு; காரணங்கள் என்ன?

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil Nadu Forest department releases baby Olive Ridley Turtles into the ocean

கட்டுரையாளர்: நிகில் கானேகர்

கடந்த இரண்டு வாரங்களாக, ஆலிவ் ரிட்லி கடலாமைகள் அதிக எண்ணிக்கையில் சென்னை கடற்கரையில் இறந்ததால், பாதிக்கப்படக்கூடிய கடல் ஊர்வனவற்றுக்கான போதிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த கவலையைத் தூண்டியது. இலாப நோக்கற்ற பாதுகாப்பு அமைப்புகள், தன்னார்வலர்கள் 300-350 ஆமைகள் இறந்ததாக மதிப்பிட்டுள்ளனர். 

Advertisment

ஆலிவ் ரிட்லி ஆமைகள் இனப்பெருக்கம் செய்வதற்காக செப்டம்பர்-அக்டோபர் மாதங்களில் தமிழ்நாட்டின் கடற்கரைக்கு அருகில் வருகின்றன, மேலும் கூடு கட்டும் காலம் நவம்பர் இறுதியில் தொடங்கி மார்ச் மாதத்தில் முடிவடைகிறது. கூடு கட்டும் பருவத்தில் ஏற்படும் இறப்புகள் அசாதாரணமானது அல்ல என்றாலும் கூட, கூடு கட்டும் காலத்தின் ஆரம்பத்தில் அதிக எண்ணிக்கையிலான இறப்புகள் பாதுகாவலர்கள் மற்றும் தன்னார்வலர்கள் மத்தியில் கவலையைத் தூண்டியுள்ளன. 

எத்தனை இறப்புகள் மதிப்பிடப்பட்டுள்ளன மற்றும் இறப்புகள் எங்கிருந்து பதிவாகியுள்ளன 
ஆமைகளைப் பாதுகாப்பதில் ஈடுபட்டுள்ள இலாப நோக்கற்ற நிறுவனங்கள் மற்றும் தன்னார்வலர்கள் 300-350 ஆமைகளின் இறப்புகளைக் கணித்துள்ளனர், மேலும் இந்த எண்ணிக்கை வரும் நாட்களில் உயரக்கூடும் என்று கருதுகின்றனர். கடல் ஆமைகளை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ள லாப நோக்கற்ற நிறுவனமான ட்ரீ அறக்கட்டளையின் நிறுவனர் சுப்ரஜா தாரிணி கூறுகையில், சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் சுமார் 290 ஆமைகள் இறந்து கரை ஒதுங்கியுள்ளதாக தெரிவித்தார். நீலாங்கரை, பெசன்ட் நகர், கோவளம் உள்ளிட்ட சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட பகுதிகளில் ஆமைகள் இறந்ததாகக் கூறப்படுகிறது.

மாநில வனத்துறை அதிகாரிகள், இறப்புகள் குறித்த சரியான தரவுகளை இன்னும் சேகரித்து வருகிறோம் என்று தெரிவித்தனர்.  சென்னைக்கு வடக்கே திருவள்ளுவர் மாவட்டத்தில் உள்ள புலிக்காட்டில் இருந்தும் இறப்புகள் பதிவாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். வேறு சில பாதுகாப்பு அமைப்புகளின் தன்னார்வத் தொண்டர்கள், சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள குடிமக்களிடமிருந்து தொடர்ந்து அழைப்புகள் வருவதாகவும், வெவ்வேறு கடற்கரைகளில் இருந்து இறந்த ஆமைகளைக் கண்டதாக பொதுமக்கள் கூறுவதாகவும் தெரிவித்தனர். 

இறப்புக்கான காரணம் மற்றும் அதிக இறப்பு

Advertisment
Advertisements

ஆலிவ் ரிட்லி ஆமைகள் இறந்து கரை ஒதுங்குவது அசாதாரணமான நிகழ்வு அல்ல. ஆமைகள் அருகிலுள்ள கரையோரங்களில் இனப்பெருக்கத்திற்காக இணைகின்றன மற்றும் பெண் ஆமைகள் மாநிலத்தின் கடற்கரைகளில் கூடு கட்டுவதற்காக சிறிய தொகுதிகளாக வந்து சேரும். வணிக விசைப்படகுகளின் மீன்பிடி வலைகளில் சிக்கியதால் நீரில் மூழ்குவதே ஆமைகள் இறப்பிற்கு முதன்மையான காரணம் என நிபுணர்கள் மற்றும் பாதுகாப்பு குழுக்கள் சுட்டிக்காட்டினர். கடல் ஆமைகள் பெரும்பாலும் நீண்ட சுருக்குமடி வலைகளில் பிடிபடுவதன் மூலம் சிக்கிக் கொள்கின்றன.

பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தின் சூழலியல் மற்றும் சுற்றுச்சூழல் அறிவியல் துறை பேராசிரியர் கே.சிவக்குமார், ஆமைகள் கூடும் பகுதிகளுக்கு அருகில் அதிக அளவில் மீன்கள் கிடைப்பதே அதிக எண்ணிக்கையிலான ஆலிவ் ரிட்லி இறப்புக்குக் காரணமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கிறார். "ஆலிவ் ரிட்லி ஆமைகள் சுவாசிக்க கடல் மேற்பரப்பு வரை நீந்த வேண்டும். அவை வலையில் சிக்கினால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு இறந்துவிடும்,'' என்று சிவக்குமார் கூறினார். அதிக எண்ணிக்கையில் மீன்கள் கிடைப்பதால், ஆமைகள் அதிகம் கூடும் இடத்திற்கு அருகிலேயே விசைப்படகுகள் இயங்க வாய்ப்புள்ளதாக சிவக்குமார் தெரிவித்தார். தவிர, ஆமைகள் அனைத்துண்ணி வகையைச் சேர்ந்தது என்பதால், மீன்பிடி கப்பல்கள் இயங்கும் பகுதிகளில் அவை மீன்களை உண்ணும் வாய்ப்புகள் இருந்திருக்கலாம் என்றும் சிவக்குமார் கூறினார்.

இந்த ஆண்டு சென்னை துறைமுகங்களில் இருந்து மீன்பிடி இறங்குதளங்களில் முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் மீன் பிடிப்பு அதிகரித்திருக்கிறதா என்பதைக் கண்டறிய வேண்டும் என்று சிவக்குமார் பரிந்துரைத்தார். வணிக மீன்பிடி படகுகள் அடிக்கடி கரையை நெருங்கி வருவதால் ஆமைகள் வலையில் சிக்கிக் கொள்கின்றன என்று சுப்ரஜா தாரிணி கூறினார். 

இறந்த ஆமையின் பிரேதப் பரிசோதனையில் நுரையீரலில் காயங்கள் இருப்பது தெரியவந்துள்ளது, இது ஆமைகளுக்கு மூச்சுத் திணறலைக் குறிக்கிறது என்று சென்னை வனவிலங்கு காப்பாளர் மணீஷ் மீனா தெரிவித்தார். வீங்கிய கண்கள், வீங்கிய கழுத்து இவை அனைத்தும் நீரில் மூழ்கி இறந்ததற்கான அறிகுறிகள் என்று சுப்ரஜா தாரிணி கூறினார். 

சிவக்குமார் கூறுகையில், வலைகளில் பொருத்தப்பட்டுள்ள ஆமைகள் தப்பிக்கும் சாதனங்கள் தவிர, வலையில் உள்ள மடல் மூலம் தற்செயலான பிடிபடுதலில் இருந்து தப்பிக்க அனுமதிக்கும் சாதனங்களை பயன்படுத்துவதை அதிகாரிகள் கண்டிப்பாக அமல்படுத்த வேண்டும் என்றார்.

ஆலிவ் ரிட்லி ஆமை கூடு கட்டும் பருவம்

ஆலிவ் ரிட்லி ஆமைகள் இந்தியாவின் கிழக்கு கடற்கரை மற்றும் மேற்கு கடற்கரையில் உள்ள பல கடலோர மாநிலங்களில் முட்டையிடுகின்றன, இருப்பினும், ஒடிசாவிலும், அதைத் தொடர்ந்து ஆந்திரா மற்றும் தமிழ்நாட்டிலும் பெருமளவில் கூடு கட்டுகிறது. ஒடிசாவின் கஹிர்மாதா மற்றும் ருஷிகுல்யா கடற்கரைகள் ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான பெண் ஆலிவ் ரிட்லி ஆமைகளின் வருகையைக் காண்கின்றன. அவை ஃபிளிப்பர்களைப் பயன்படுத்தி மணலில் கூடுகளை உருவாக்கி 100-110 முட்டைகள் இடுகின்றன. முட்டையிட்ட பிறகு, அவை வேட்டையாடப்படுவதைத் தடுக்க கூடுகளை மணலால் மூடிவிட்டு கடலுக்குத் திரும்புகின்றன. 

45-60 நாட்களுக்குப் பிறகு, ஆயிரக்கணக்கான குஞ்சுகள் கடலுக்குச் செல்கின்றன. மனிதர்களின் இடையூறு மற்றும் வேட்டையாடக்கூடிய கூடு கட்டும் இடங்களில், வனத்துறையினர் குஞ்சு பொரிப்பகங்களை உருவாக்குகின்றனர். முட்டைகள் கூடுகளில் இருந்து மிகுந்த கவனத்துடன் மீட்டெடுக்கப்பட்டு, குஞ்சு பொரிப்பகங்களில் வைக்கப்படுகின்றன. முட்டைகள் பொரிந்த பிறகு, குஞ்சுகள் கூடைகளில் வைக்கப்பட்டு கடலுக்கு அருகில் விடப்படுகின்றன.

Tamil Nadu Chennai

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: