Advertisment

கொரோனா சிகிச்சை: ஆக்சிஜன் செறிவூட்டிகள் ஏன் தேவை?

சிலிண்டர்களுக்கு எளிமையான மாற்றாக இருக்கும் ஆக்சிஜன் செறிவூட்டிகளால் நிமிடத்திற்கு 5 முதல் 10 லிட்டர் ஆக்சிஜனை மட்டுமே வழங்க முடியும்.

author-image
WebDesk
New Update
கொரோனா சிகிச்சை: ஆக்சிஜன் செறிவூட்டிகள் ஏன் தேவை?

இந்தியா முழுவதும் உள்ள கொரோனா நோயாளிகள் பலரும் ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழந்த நிலையில், ஆக்சிஜன் செறிவூட்டிகள் குறித்தான பேச்சு தொடங்கி இருக்கிறது.

Advertisment

ஆக்சிஜன் செறிவூட்டி :

சுற்றுப்புறக் காற்றிலிருந்து ஆக்சிஜனை பிரித்து, தேவையான நோயாளிகளுக்கு அளிக்க உதவும் மருத்துவ சாதனம் ஆக்சிஜன் செறிவூட்டி. வளிமண்டல காற்றில் சுமார் 78 சதவீதம் நைட்ரஜனும், 21 சதவீதம் ஆக்ஸிஜனும், ஒரு சதவீதம் மற்ற வாயுக்களும் அடங்கி உள்ளன. ஆக்ஸிஜன் செறிவூட்டியானது, வளிமண்டல காற்றில் உள்ள ஆக்சிஜனை ஒரு சல்லடை மூலம் வடிகட்டுகிறது. அப்போது உறிஞ்சப்படும் நைட்ரஜனை மீண்டும் காற்றில் விட்டு விடுகிறது.

செறிவூட்டி மூலம் சேகரிக்கப்பட்ட ஆக்ஸிஜனை, கேனுலா எனும் குழாய் மூலம் சேமித்து விநியோகிக்கப்படுகிறது. இவ்வாறு, வளிமண்டலத்திலிருந்து சேகரிக்கப்படும் ஆக்சிஜனானது, 90 முதல் 95 சதவீதம் தூய்மையானது. ஆக்சிஜன் செறிவூட்டியில் தேவையான அளவு அழுத்தத்தை பொருத்துவதன் மூலம் நிமிடத்திற்கு 1-10 லிட்டர் ஆக்சிஜன் விநியோகத்தை பெற உதவுகிறது.

உலக சுகாதார அமைப்பின் 2015 ஆம் ஆண்டின் அறிக்கையின்படி, செறிவூட்டிகள் தொடர்ச்சியான செயல்பாட்டிற்காக வடிவமைக்கப்பட்டுள்ளன. மேலும் ஆக்ஸிஜனை 24 மணி நேரமும், வாரத்தில் 7 நாட்களும், 5 ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட காலத்திற்கு தொடர்ந்து உற்பத்தி செய்யும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

90 முதல் 95 சதவீத தூய்மையில், செறிவூட்டிகளிலிருந்து வரும் ஆக்சிஜன் போதுமானதா?

செறிவூட்டிகளிடம் இருந்து கிடைக்கும் ஆக்சிஜன் 99% தூய்மையானதாக இல்லை என்றாலும், 85% அல்லது அதற்கு மேற்பட்ட ஆக்சிஜன் செறிவு அளவைக் கொண்ட லேசான மற்றும் மிதமான பாதிப்புடைய கொரோனா நோயாளிகளுக்கு இது போதுமானதாக உள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர். இருப்பினும், தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வரும் கொரோனா நோயாளிகளுக்கு இது நல்லதல்ல.

ஒரே நேரத்தில் இரண்டு நோயாளிகளுக்கு உதவும் வகையில், செறிவூட்டிகளை பல குழாய்களுடன் இணைக்க முடியும், ஆனால், குறுக்கு-தொற்று அபாயத்தை கொண்டிருப்பதால் மருத்துவர்கள் அதை பரிந்துரைப்பதில்லை.

ஆக்சிஜன் சிலிண்டர்களிலிருந்து ஆக்சிஜன் செறிவூட்டிகள் எவ்வாறு வேறுபடுகின்றன?

ஆக்சிஜன் செறிவூட்டிகள் சிலிண்டர்களுக்கு எளிமையான மாற்றாக இருந்து வருகின்றன. ஆனால், செறிவூட்டிகளால் நிமிடத்திற்கு 5 முதல் 10 லிட்டர் ஆக்சிஜனை மட்டுமே வழங்க முடியும். கொரோனா தொற்று பாதிப்பால் மோசமான நிலையில் உள்ள நோயாளிகளுக்கு நிமிடத்திற்கு 40-50 லிட்டர் ஆக்சிஜன் தேவைப்படலாம். இதனால், பாதிப்பு அதிகமாக இருப்பவர்களுக்கு செறிவூட்டிகளை பயன்படுத்த இயலாது. மிதமான பாதிப்புக்கு உள்ளாகி இருக்கும் நோயாளிகளுக்கு இது மிகவும் பொருத்தமான ஆக்சிஜன் மூலம் ஆகும்.

செறிவூட்டிகள் அளவில் சிறியவை மற்றும் கிரையோஜெனிக் டேங்கர்களில் சேமித்து கொண்டு செல்ல வேண்டிய எல்.எம்.ஓ போல இவற்றை பத்திரப்படுத்த சிறப்பு வெப்பநிலை தேவையில்லை. மறு நிரப்புதல் தேவைப்படும் சிலிண்டர்களைப் போலல்லாமல், செறிவூட்டிகள் சுற்றுப்புறக் காற்றையே நம்பி செயல்படுகின்றன.

செலவு மற்றும் பராமரிப்பு அடிப்படையில் சிலிண்டர்களுக்கு செறிவூட்டிகள் எவ்வாறு வேறுபடுகின்றன?

ஆக்சிஜன் செறிவூட்டிகள் ரூ .40,000 முதல் 90,000 மதிப்பில் சந்தைகளில் விற்பனை செய்யப்படுகின்றன. செறிவூட்டிகள் சிலிண்டர்களை விட, ரூ .8,000 முதல் 20,000 வரை அதிக விலை கொண்டவை என்றாலும், இது பெரும்பாலும் ஒரு முறை முதலீடாகவே இருக்கிறது. சிலிண்டர்களைப் போல் இல்லாமல், செயல்பாட்டு செலவுகள் குறைவாகவே உள்ளன. செறிவூட்டிகளுக்கு மின்சாரம் மற்றும் வழக்கமான பராமரிப்பைத் தவிர, வேறு எந்த செலவும் இல்லை. ஆனால், சிலிண்டர்களில் மறு நிரப்புதல் மற்றும் போக்குவரத்து செலவுகளை உள்ளடக்கியது.

ஆக்சிஜன் செறிவூட்டிகளின் சந்தை நிலவரம் :

ஆக்ஸிஜன் செறிவூட்டிகளின் ஆண்டு தேவை 40,000 என்றிருந்த நிலையில், தற்போதுள்ள கொரோனா இக்கட்டான சூழலால், மாதத்திற்கு 30,000 முதல் 40,000 வரை அதன் தேவை அதிகரித்துள்ளது என்று தொழில் வல்லுநர்கள் கூறுகின்றனர். மருத்துவ சாதனத் துறையின் சங்கமான AIMED-ன் மன்ற ஒருங்கிணைப்பாளர் டாக்டர் ராஜீவ் நாத், தினசரி 1,000 முதல் 2000 ஆக்சிஜன் செறிவூட்டிகளின் தேவை உள்ளதாக கூறுகிறார். ஆனால் அந்த வகையான தேவையை பூர்த்தி செய்ய, இந்தியாவில் போதுமான உற்பத்தியாளர்கள் இல்லை என்வும் கூறியுள்ளார். பெரும்பாலும், ஆக்சிஜன் செறிவூட்டிகள் இறக்குமதி செய்யப்பட்டே உபயோகிக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Coronavirus Lack Of Oxygen Supply
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment