Pranav Mukul
இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான் எல்லையில் பறப்பதற்கு பாகிஸ்தான் அரசு அனுமதி அளித்துள்ளது. இதனால், இந்திய விமான நிறுவனங்களுக்கு ஏற்பட்ட கூடுதல் செலவு குறைய உள்ளது.
ஜம்மு காஷ்மீரில் புல்வாமாவில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, இந்திய விமானப்படை பாகிஸ்தானில் செயல்பட்ட தீவிரவாத நிலைகள் மீது தாக்குதல் நடத்தியது. இதனைத் தொடர்ந்து, பிப்ரவரி 26 ஆம் தேதி முதல் இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான் எல்லை வழியாக பறக்க அனுமதி இல்லை என்று பாகிஸ்தான் அரசு தடை விதித்தது.
பாகிஸ்தான் விதித்த இந்த தடையால், இந்தியாவிலிருந்து மேற்கத்திய நாடுகளுக்கு செல்லும் பயணிகள் விமானம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வரும் விமானங்கள் அதிக தொலைவு சுற்றிக்கொண்டு பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால், விமான பயண காலமும் விமான எரிபொருள் செலவும் அதிகரித்தது.
அதிக எரிபொருள் செலவு காரணமாக ஏர் இந்தியா விமான நிறுவனத்துக்கு ஜூலை 2 ஆம் தேதி வரை ரூ.491 கோடி இழப்பும், இந்தியாவின் மிகப்பெரிய உள்நாட்டு விமான போக்குவரத்து நிறுவனமான ஏர்லைன் இண்டிகோ நிறுவனத்துக்கு மே 31 ஆம் தேதி வரை ரூ.25.1 கோடி இழப்பும் ஏற்பட்டது. அதே போல, ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனத்துக்கு ஜூன் 20 ஆம் தேதி வரையில் ரூ.30.73 கோடியும் இழப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்திய அரசு மேற்கொண்ட முயற்சியின் விளைவாக, பாகிஸ்தான் விமானப் போக்குவரத்து ஆணையம் இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான் எல்லையில் பறக்க அனுமதி அளித்துள்ளது. செவ்வாய்க்கிழமை இரவு 1 மணி முதல் இந்த தடையை நீக்கியுள்ளதாக பாகிஸ்தான் விமானப் போக்குவரத்து ஆணையம் விமானிகளுக்கு அளித்துள்ள நோட்டீஸில் தெரிவித்துள்ளது. இதன் மூலம், இந்திய விமானங்களின் பயண நேரம் 70 – 80 நிமிடங்கள் குறைவதோடும் விமான எரிபொருள் செலவும் குறைகிறது.