Statue of Equality in his honour: பிரதமர் நரேந்திர மோடி வருகின்ற பிப்ரவரி 5ம் தேதி அன்று ஐதராபாத்தில் நிறுவப்பட்டுள்ள மிகப்பெரிய சமத்துவ சிலையை திறந்து வைக்க உள்ளார்.
யார் இந்த ராமானுஜாச்சாரியார்?
தமிழகத்தின் ஸ்ரீபெரும்பதூரில் 1017ம் ஆண்டு பிறந்தவர் ராமானுஜாச்சாரியார். அவர் சமூக சீர்திருத்தவாதியாகவும், வேத தத்துவவாதியாகவும் போற்றப்படுகிறார். இந்தியா முழுவதும் பயணம் மேற்கொண்டு சமத்துவம் மற்றும் சமூக நீதியை நிறுவ முயற்சி செய்தார்.
பக்தி இயக்கத்திற்கு புத்துயிர் தந்த அவரின் பிரசங்கங்கள் மற்ற பக்தி சிந்தனைகளுக்கு ஊக்கம் அளித்தன. அன்னமாச்சார்யா, பக்த ராமதாஸ், தியாகராஜா, கபீர் மற்றும் மீராபாய் போன்ற கவிஞர்களுக்கு உத்வேகமாக ராமானுஜாச்சாரியார் இருந்தார் என்று கருதப்படுகிறது.
இளம் தத்துவஞானியாக இருந்த போதே, அவர் இயற்கையையும் அதன் வளங்களான காற்று, நீர் மற்றும் மண் போன்றவற்றையும் பாதுகாக்க வேண்டுகோள் விடுத்தார். அவர் நவரத்தினங்கள் எனப்படும் ஒன்பது வேதங்களை எழுதினார், மேலும் வேத சாஸ்திரங்களுக்கு பல விளக்கங்களை இயற்றினார்.
இந்தியா முழுவதும் உள்ள கோவில்களில், குறிப்பாக மிகவும் பிரபலமான திருமலை மற்றும் ஸ்ரீரங்கம் கோவில்களில் செய்யப்படும் சடங்குகளுக்கான சரியான நடைமுறைகளை நிறுவிய பெருமையும் அவருக்கு உண்டு.
சமத்துவத்தின் சிலை என்று ஏன் அழைக்கப்படுகிறது?
ராமானுஜர் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு அனைத்து தரப்பு மக்களிடையேயும் சமூக சமத்துவத்தை வலியுறுத்தினார், மேலும் பல சாதிகளை சேர்ந்தவர்கள் கோவில்களுக்குள் நுழைவது தடைசெய்யப்பட்ட நேரத்தில், சமூகத்தில் சாதி அல்லது பதவியைப் பொருட்படுத்தாமல் அனைவருக்கும் கோவில் கதவுகள் திறக்கப்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
யாருக்கெல்லாம் கல்வி மறுக்கப்பட்டதோ அவர்களுக்கு கல்வியை எடுத்துச் சென்று சேர்த்தார். அவரது மிகப்பெரிய பங்களிப்பு "வசுதைவ குடும்பகம்" என்ற கருத்தை பரப்புவதாகும். இதன் அர்த்தம் அனைத்து பிரபஞ்சமும் ஒரே குடும்பம் என்பதாகும்.
இந்தியா முழுவதும் பயணம் மேற்கொண்ட அவர் கோவில் மேடைகளில் இருந்து சமூக சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் பற்றிய தனது கருத்துக்களை பிரசங்கம் செய்தார். அவர் சமூக ரீதியாக ஒதுக்கப்பட்டவர்களை அரவணைத்து, அவர்களை சமமாக நடத்த வேண்டும் என்று அரசவைகளில் கேட்டுக் கொண்டார். கடவுள் பக்தி, கருணை, பணிவு, சமத்துவம் மற்றும் பரஸ்பர மரியாதை ஆகியவற்றின் மூலமே ரட்சிப்பை பெற முடியும் என்றூ பேசினார். இவை ஸ்ரீ வைஷணவம் சம்பிரதாயம் என்று அழைக்கப்பட்டது.
மனிதகுலத்தை அரவணைக்கும் வகையில் வைணவ பார்வைக்கு அப்பாற்பட்ட வகையில் ராமானுஜாச்சாரியரின் சமத்துவ சிலை நிறுவப்பட்டுள்ளது என்று சின்ன ஜீயர் சாமி குறிப்பிட்டுள்ளார்.
தேசம், பாலினம், இனம், ஜாதி அல்லது மதம் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் ஒவ்வொரு மனிதனும் சமம் என்ற அடிப்படை நம்பிக்கையுடன் சமூக, கலாச்சார, பாலினம், கல்வி மற்றும் பொருளாதார பாகுபாடுகளிலிருந்து லட்சக்கணக்கான மக்களை விடுவித்தார் அவர். நாங்கள் அவருடைய 1000ம் ஆண்டு பிறந்த தினத்தை சமத்துவ திருநாளாக கொண்டாடினோம் என்று ஜீயர் கூறினார்.
இந்த சிலை எங்கே நிறுவப்பட்டுள்ளது?
216 அடி உயரம் கொண்ட இந்த சிலை முதலில் 2018ம் ஆண்டு முன்மொழியப்பட்டது. ஐதராபாத் புறநகர் பகுதியில் அமைந்திருக்கும் ஷம்சாபாத் அருகே உள்ள முசிந்தலில் செயல்பட்டு வரும் ஜீயர் இன்டெக்ரேட்டட் வேதிக் அகாதெமியில் 45 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த சிலையை சின்ன ஜீயர் முன்மொழிந்து வடிவமைத்தார். சிலையை பிரதிஷ்டை செய்வதற்கான சடங்குகள் புதன்கிழமை (பிப்ரவரி 2) தொடங்கியது, 5,000 க்கும் மேற்பட்ட வேதவிற்பன்னர்கள் மகா யாகத்தை நடத்தினார்கள். இது நவீன காலத்தில் மிகப்பெரிய யாகம் என்று பலரால் கூறப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.