Celebrities Pink Suit Campaign Politics Tamil News: கடந்த வாரம், ஹாலிவுட் நடிகை கெர்ரி வாஷிங்டன், "பிங்க் சூட்டில் ஓர் கிளாடியேட்டர்" என்ற கேப்ஷனோடு பாப் பிங்க் பேன்ட்சூட்டில் எடுக்கப்பட்ட செல்ஃபி ஒன்றை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டார். பிங்க்சூட் அணிந்து இந்த நடிகை எடுக்கப்பட்ட புகைப்படம், நவம்பர் 3-ம் தேதி நடைபெறவுள்ள அமெரிக்கத் தேர்தல் டிஜிட்டல் பிரச்சாரத்தின் ஓர் பகுதிதான். தற்போது மற்ற பிரபலங்களும் அதேபோன்ற உடையை அணிந்து சமூக வலைத்தளங்களில் ஆக்கிரமித்திருப்பது, "பவர் பிங்க்" என்ற 2020-ம் ஆண்டின் அரசியல் அறிக்கையாக மாறியிருக்கிறது.
பிரபலங்கள் ஏன் பிங்க் சூட்களில் எடுக்கப்பட்ட செல்ஃபிக்களை சமூக ஊடகங்களில் பதிவிடுகிறார்கள்?
#AmbitionSuitsYou என்ற ஹேஷ்டேக்குடன் நடைபெறும் சமூக ஊடக பிரச்சாரம், அமெரிக்கப் பெண்களை வாக்களிக்க அணிதிரட்டும் ஓர் முயற்சி. பிரபலங்கள் பலர் பதவிக்குப் போட்டியிடும் பெண் வேட்பாளர்களை ஆதரிக்கும் கூட்டு நோக்கத்துடன், பிங்க் நிற உடையை வெவ்வேறு வழிகளில் அணிந்து சமுக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். "அமெரிக்கப் பெண்கள் மிகச் சக்திவாய்ந்த ஆயுதம். நாங்கள்தான் இந்த நாட்டின் பெரும்பான்மையான மக்கள் மற்றும் வாக்காளர்கள். இந்த தேர்தலின் முடிவை நாங்கள் நிச்சயம் தீர்மானிப்போம்” என்ற பொதுவான கேப்ஷனோடு அவர்களின் பதிவுகள் இருந்தன.
கெர்ரி வாஷிங்டன், ஜோ சல்தானா, மேண்டி மூர் மற்றும் ஏமி ஷுமர் போன்ற பிரபலங்களின் ஃபுஷியா பிங்க் பேன்ட்சூட்டுகள், அர்ஜென்ட் ஆடை பிராண்டின் சிறப்பு “தேர்தல் கலெக்ஷன்”-ல் இருந்து வந்தவை. இதன் விற்பனை வருமானத்தின் ஒரு பகுதி பெண்களின் தேர்தல் பங்களிப்பை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்ட குழுவான சூப்பர்மஜோரிட்டிக்குச் செல்லும். இந்தக் குழு, Planned Parenthood, பிளாக் லைவ்ஸ் மேட்டர் மற்றும் தேசிய உள்நாட்டுத் தொழிலாளர் கூட்டணியின் உறுப்பினர்களால் நிறுவப்பட்டது.
'பிங்க்' அரசியல் நிறமாகப் பயன்படுத்தப்படுவது இதுவே முதல் முறையா?
இல்லை. 1990-களில் இருந்து, பெண்ணிய மற்றும் பிற இயக்கங்கள் பாலின நிறத்தை ஓர் அரசியல் தேர்வாகப் பயன்படுத்தியுள்ள. வரலாற்று ரீதியாக, 18-ம் நூற்றாண்டில் மேற்கில் பெரும்பகுதியில், "ஆக்டிவ்" நிறமாக பிங்க் காணப்பட்டது. சிறுமிகளை விட மேல் வர்க்க சிறுவர்களுக்கே இந்த நிறத்தை அதிகம் விரும்பி தேர்வு செய்தனர். காலப்போக்கில், ஆடை உற்பத்தியாளர்கள் தங்களின் ஆடை விற்பனையை அதிகரிக்கக் குழந்தைகளின் வண்ண குறியீடாகச் சிறுமிகளுக்கு பிங்க் நிறத்தையும் மற்றும் சிறுவர்களுக்கு நீல நிறத்தையும் தேர்வு செய்தனர்.
முன்னதாக, “girly” (அதாவது பெண்பால் மற்றும் பலவீனமான) அடையாளமாகக் காணப்பட்ட பிங்க் வண்ணம், வலிமையின் அறிக்கையாகவும், பாலின ஸ்டீரியோடைப்பிங்கிற்கு எதிராகத் தள்ளுவதற்கான சிறந்த வழிகளில் ஒன்றாகவும் மாற்றப்பட்டது. அதற்கு எடுத்துக்காட்டாக, 1992-ம் ஆண்டில் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்கு பிங்க் ரிப்பன்களைப் பயன்படுத்துவதைக் குறிப்பிடலாம்.
'பேட் ஃபெமினிஸ்ட்' புத்தகத்தின் ஆசிரியர் ரோக்ஸேன் கே, “பிங்க் எனக்கு மிகவும் பிடித்த நிறம். முன்பெல்லாம், எனக்குப் பிடித்த நிறம் கருப்பு என்று கூறுவேன். ஆனால், அது பிங்க்- அதிலும் அனைத்து பிங்க் ஷேடுகளும் பிடிக்கும்” என்று தன்னுடைய Essays (2014) புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். சமூக ஆர்வலர் ஸ்கார்லெட் கர்டிஸ், 2018-ம் ஆண்டு வெளியான தன் புத்தகத்திற்கு, 'Feminists Don’t Wear Pink and Other Lies’ என்ற தலைப்பு வைத்திருந்தார்.
இந்தியாவிலும் பிங்க் அரசியல் இருக்கிறதா?
பெண்களின் இயக்கங்களுடன் பிங்க் நிறத்தின் வலுவான தொடர்பு இந்தியாவிலும் இருக்கிறது. பெண்களுக்கு எதிரான வன்முறைக்குக் குரல் கொடுக்கும் உத்திர பிரதேசத்தைச் சேர்ந்த குலாபி கும்பலின் உறுப்பினர்களை அவர்கள் அணியும் பாப் பிங்க் புடவைகளால் உடனடியாக அடையாளம் காணலாம். 2009-ம் ஆண்டின் பிங்க் சாடி பிரச்சாரத்தின்போது, மக்கள் பிங்க் உள்ளாடைகளை ஸ்ரீ ராமசேனாவின் பிரமோத் முத்தலிக்கு அனுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவில் பெண் அரசியல்வாதிகள் பிங்க் நிற உடையை ஏற்றுக்கொண்டார்களா?
ஹிலாரி கிளிண்டன், பிங்க் நிற உடையில் இருக்கும் பிரபலங்களின் புகைப்படங்களை பகிர்ந்து, "இந்த பவர் பேன்ட்சூட்களையும், அவற்றை அணிந்திருக்கும் சக்திவாய்ந்த பெண்களையும் நேசிக்கிறேன்" என்று குறிப்பிட்டார். இந்த அமெரிக்க அரசியல்வாதி, பல பிங்க் நிற ஷேடுகளை அணிந்ததற்காக, விமர்சிக்கப்பட்டும் உள்ளார். ஏப்ரல் 2019-ல், பெண்களுக்கு எதிரான வன்முறைச் சட்டத்தைக் காங்கிரஸ் நிறைவேற்றியபோது அலெக்ஸாண்ட்ரியா ஒகாசியோ-கர்டெஸ் ஓர் பிங்க் நிற உடையை அணிந்து, “கேபிடல் ஹில்லில் நாங்கள் பிங்க் நிறத்தை அணிவோம்” என்று ட்வீட் செய்துள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"