இந்திய நாட்டின் பிரதமராக உள்ள நரேந்திர மோடியின் அரசியல் வாழ்க்கை, 1990ம் ஆண்டில் பாரதிய ஜனதா கட்சி முன்னெடுத்த அயோத்தியில் ராமர் கோயில் விவகாரத்தின் மூலமே துவங்கியது.
பா.ஜ. மூத்த தலைவர் அத்வானி ரதயாத்திரை துவக்கியிருந்த நிலையில், குஜராத் மாநிலத்தின் ஒருங்கிணைப்பாளராக இருந்தவர் தான் தற்போதைய பிரதமர் மோடி. அப்போது யாராலும் பெரிதும் அறியப்படாமல் இருந்த மோடி, இன்று 30 ஆண்டுகளுக்குப்பிறகு பல்லாயிரக்கணக்கானோரின் கனவான ராமர் கோயில் கனவை அடிக்கல் நாட்டி இந்திய வரலாற்றில் இடம்பிடித்துள்ளார் பிரதமர் மோடி.
மோடி, குஜராத் முதல்வர் என்ற நிலையில் இருந்து பிரதமர் என்ற நிலையை நோக்கிய டெல்லி பயணத்தில் அவர் எப்போதுமே, ராமர் கோயில் விவகாரத்தால் அடையாளம் காட்டப்படவில்லை.
2014 மற்றும் 2019ம் ஆண்டில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போதும், மோடி ஒருமுறை கூட சர்ச்சைக்குரிய ராம் ஜென்மபூமி பகுதிக்கு செல்லவில்லை. 2014ம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில், உத்தரபிரதேச மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சிக்கு அதிக வாக்குகள் பெறும்பொருட்டு அயோத்தியில் தேர்தல் பிரசாரம் நடைபெற்றபோதிலும், மோடி, ராமஜென்ம பூமி பகுதிக்கு செல்லவில்லை.
2019ம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில், அயோத்தியில் இருந்து 27 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கோசைன்கஞ்ச் பகுதியில் தேர்தல் பிரசாரம் நடைபெற்ற போதும் அவர் ராம ஜென்ம பூமிக்கு செல்லவில்லை. இந்த தேர்தல் பிரசாரத்தில், பிரதமர் மோடி, அயோத்தி, ராமர் கோயில் என்று குறிப்பிடுவதை தவிர்த்தார்.
2019ம் ஆண்டு நவம்பர் 9ம் தேதி, அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான இருந்த தடையை, உச்சநீதிமன்றம் விலக்கியது. இதனையடுத்து, ராமர் கோயில் கட்டுவதற்கான நடவடிக்கைகளை முடுக்கிவிட்டார். இதனிடையே, 2020ம் ஆண்டு பிப்ரவரி 5ம் தேதி நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில், அயோத்தியில் ராமர் கோயில் கட்ட டிரஸ்ட் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இந்த நிகழ்வை, வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குறிப்பிட்டிருந்தார். இதன்மூலம், பாரதிய ஜனதா அளித்த தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றப்பட்டுள்ளதாக ஷா, மேலும் குறிப்பிட்டிருந்தார். ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கி வந்த 370வது சட்டப்பிரிவு நீக்கம், மற்றும் குடியுரிமை திருத்த சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்று வந்தநிலையில், மத்திய அரசு இந்த முடிவை எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது மற்றும் அதுதொடர்பான விசயங்களை ஸ்ரீராம் ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா என்ற டிரஸ்ட் கவனித்துக்கொள்ளும் என்றும் இது தன்னிச்சையான அமைப்பு என்று பிரதமர் மோடி மக்களவையில் தெரிவித்திருந்தார். புதிய இந்தியாவை நோக்கிய மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு மக்கள் உறுதுணையாக இருக்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
பாரதிய ஜனதா கட்சி நிர்வாகி ஒருவர் கூறியதாவது, ராம ஜென்ம பூமி இயக்கத்தில், பிரதமர் மோடி எப்போதும் நெருக்கமான தொடர்பு வைத்துக்கொண்டதில்லை. ரத யாத்திரையிலும், அத்வானிக்கு பிறகு காலஞ்சென்ற பிரமோத் மகாஜனே இருந்தார். அப்போது (1991ம் ஆண்டு), மோடி, முரளி மனோகர் ஜோஷியுடன் இணைந்து தேசிய ஒருமைக்காக கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான ஏக்தா யாத்திரையை நடத்தினர். அயோத்தி ராமர் கோயில் விவகாரத்தில், தனது அடையாளம் இருந்துவிடக்கூடாது என்பதில் மோடி மிகவும் உறுதியாக இருந்தார். அவர் தேசிய அரசியலுக்கு வந்த போது, இந்த விவகாரம் நீதிமன்றத்தில் இருந்தததாக அவர் கூறினார்.
பாரதிய ஜனதா, குஜராத் வன்முறை மற்றும் மோடி
1984ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில், பாரதிய ஜனதா கட்சியால் வெறும் 1 மக்களவை எம் பி சீட்டுகளே பெற முடிந்தது. அப்போது திட்டமிட்ட பா.ஜ மற்றும் ஆர்எஸ்எஸ், ராமர் கோயில் விவகாரத்தை கையில் எடுப்பதன் மூலம், தேசிய அளவில் பிரபலம் ஆவது மட்டுமல்லாது தேர்தலிலும் பிரகாசிக்க முடியும் என்று திட்டமிட்டது. அவர்களின் திட்டம் வீண்போகவில்லை. 1989ம் நடைபெற்ற தேர்தலில், பா.ஜ.கட்சி 89 இடங்களில் வெற்றி பெற்றது.
அத்வானி, ரத யாத்திரை துவங்கியிருந்த நிலையில், மோடி, கட்சியின் தேசிய தேர்தல் குழு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். சோம்நாத்தில் இருந்து மும்பை வரையில் ரத யாத்திரை நிகழ்வின் பொறுப்பாளராக மோடி நியமிக்கப்பட்டிருந்தார். அவர் தனது முழுஅர்ப்பணிப்பை காட்டியிருந்த போதிலும், மூத்த தலைவர்களான கேசுபாய் படேல், சங்கர்சிங் வகேலா, கன்சிராம் ராணா உள்ளிட்டோரால் மோடியின் உழைப்பு வெளியே தெரியவில்லை. 2002ம் ஆண்டு நிகழ்ந்த குஜராத் வன்முறைக்கு பிறகே, மோடி வெளியுலகிற்கு தெரிய துவங்கினார்.
2002, பிப்ரவரி 27, மோடி, குஜராத் முதல்வராக பதவியேற்று சரியாக ஒரு மாதத்திற்கு பிறகு, அயோத்தியில் கரசேவையை முடித்துவிட்டு 2000க்கும் மேற்பட்ட கரசேவகர்கள் ரயிலில் குஜராத் திரும்பிக்கொண்டிருந்தனர். கோத்ரா பகுதியில் ரயில் தாக்கப்பட்டது. இதில் 52 கரசேவகர்கள் பலியாயினர். இந்த சம்பவத்தால், குஜராத்தில் பெரும்வன்முறை வெடித்தது. ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இவர்களில் பெரும்பாலானோர் முஸ்லீம்கள். தனது அதிகாரத்தை பயன்படுத்தி வன்முறைக்கு வித்திட்டதாக மோடி மீது குற்றம் சுமத்தப்பட்டது.
குஜராத் வன்முறை நிகழ்வு, நாட்டில் இந்துக்கள் - முஸ்லீம்களிடையே பிளவை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல், மோடியின் புகழுக்கு களங்கமாகவும் அமைந்தது. அடுத்தடுத்து நடைபெற்ற தேர்தல்களின் போது காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மோடியை மரண வியாபாரி என்றே விமர்சித்தார். 2007 குஜராத் சட்டசபை தேர்தலில், நிதீஷ் குமார், பாரதிய ஜனதாவிடமிருந்து விலகினார்.
2004 நாடாளுமன்ற தேர்தலில், அப்போதைய பிரதமர் வாஜ்பாய்க்கு, குஜராத் வன்முறை நிகழ்வு, அதிர்ச்சித்தோல்வியை பரிசாக வழங்கியது. அதன்பின் வாஜ்பாய், தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், கட்சி அடைந்த தோல்விக்கு, குஜராத் வன்முறையின் தாக்கத்தை நாட்டின் அனைத்துப்பகுதியும் உணர்ந்துள்ளதே காரணம். இந்நிகழ்விற்கு பிறகு, மோடி நீக்கப்பட்டுவிட்டதாக தெரிவித்தார். குஜராத் கலவரம் தொடர்பாக அவதூறு பிரச்சாரத்தினால் மோடி பாதிக்கப்பட்டுள்ளார் என்று அப்போது மோடிக்கு ஆதரவாக அத்வானி குரல் கொடுத்தார்.
தடைக்கற்களை படிக்கற்களாக ஆக்கிய மோடி
என் மீது எறியப்படும் கற்களை கொண்டு நான் மென்மேலும் முன்னேறுவேன் என்று சொல்லி வந்த மோடி, குஜராத் வன்முறை, தாக்குதல் நிகழ்வே, தன்னை, இந்துத்துவாவின் முன்னணி தலைவராக மாற்றியுள்ளதாக மோடி குறிப்பிட்டு வந்தார். பாரதிய ஜனதாவின் வெற்றிக்கு பின்னால், இந்துத்துவாவினரின் வாக்குகள் இருப்பது உறுதியானதால், மோடியின் புகழ் அதிகரிக்க துவங்கியது.
2014 பொதுத்தேர்தலில் அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் நிகழ்வை, நாட்டின் கலாச்சார பெருமை என்று தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்ட மோடி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி, அயோத்தியில், இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படையில் ராமர் கோயில் கட்டப்படும் என்று தெரிவித்தது.
ராமர் கோயில் விவகாரத்தில், இந்து மக்களின் சென்டிமெண்ட்கள் தவறாக பயன்படுத்தப்படுவதாக அவர் குற்றம் சாட்டியிருந்த நிலையில், 2017 உத்தரபிரதேச சட்டசபை தேர்தலின் போது, ராமர் கோயில் விவகாரம் மீண்டும் அங்கு சூடுபிடித்தது.
தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டபடி, 2019 ம் ஆண்டு ஜனவரியில், அயோத்தியில் ராமாயண அருங்காட்சியகம் திறக்கப்பட்டது. ராமர் கோயிலை, இந்திய அரசியலைமப்பின்படி விரைந்து கட்ட மத்திய அரசை, விஸ்வ இந்து பரிஷத் உள்ளிட்ட இந்து அமைப்புகள் நெருக்கடி கொடுக்க துவங்கியதை அடுத்து, உச்சநீதிமன்றத்தில் இருந்துவந்த வழக்கு விசாரணை துரிதப்படுத்தப்பட்டு, சர்ச்சைக்குரிய நிலம் ராம ஜென்மபூமிக்கே சொந்தம் என்றும், முஸ்லீம்களுக்கு 5 ஏக்கர் நிலம் வழங்கப்படுவதாக உச்சநீதிமன்றம், 2019ம் ஆண்டில் தீர்ப்பளித்த நிலையில், பணிகள் முடுக்கிவிடப்பட்டு, இன்று (2020, ஆகஸ்ட் 5ம் தேதி), அயோத்தியில் புதிய ராமர் கோயில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.