இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் (எஸ்.ஐ.ஏ.எம்) 61வது ஆண்டு மாநாடு புதன்கிழமை நடைபெற்றது. இந்த மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட அரசு பிரதிநிதிகள், இந்தியாவின் வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கத்தில் தொழில்துறையின் பங்களிப்பைப் பாராட்டினார்கள்.
அதே நேரத்தில், அரசாங்க பிரதிநிதிகள் கேட்கும்போது, ஆட்டோமொபைல் தொழில் துறை தலைவர்கள் தொழில் துறையின் வீழ்ச்சி குறித்து கவலை எழுப்பினர். மேலும், அவர்கள், நிலைமையை மாற்ற உறுதியான நடவடிக்கை இல்லை என்று கூறினார்கள்.
தொழில் துறையை பாராட்டியது யார்?
இந்தியாவின் வளர்ச்சிக்கு ஆட்டோமொபைல் துறையின் பங்களிப்புக்காக அரசாங்கத்தின் பல்வேறு தரப்பிலிருந்தும் பாராட்டுக்கள் வந்தன.
பிரதமர் தனது உரையில், உற்பத்தி, ஏற்றுமதியை மேம்படுத்துதல், ஏராளமான வேலை வாய்ப்புகளை உருவாக்குதல் மற்றும் மக்களின் வாழ்க்கையை எளிதாக்குதல் ஆகியவற்றில் தொழில்துறையின் பங்களிப்பைப் பாராட்டினார்.
நிதி ஆயோக் தலைமை நிர்வாக அதிகாரி அமிதாப் காந்த் கூறுகையில், நாட்டின் வளர்ச்சிக்கு ஆட்டோமொபைல் துறை முக்கிய உந்துசக்தியாக இல்லாமல், இந்தியா நீண்ட காலத்திற்கு அதிக விகிதத்தில் வளர்வது சாத்தியமில்லை என்று கூறினார்.
தொழில் துறை தலைவர்கள் என்ன சொன்னார்கள்?
மாருதி சுசுகி இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் ஆர் சி பார்கவா மற்றும் டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் தலைவர் வேணு சீனிவாசன் ஆகியோர் அதிக வரிவிதிப்பு குறித்து தங்கள் கவலைகளை வெளிப்படுத்தினர். தொழில்துறையின் பங்களிப்பு அங்கீகரிக்கப்பட்டிருக்கிறதா என்று அவர்கள் ஆச்சரியப்பட்டனர்.
புதிய எரிபொருள் புகை உமிழ்வு விதிமுறைகள், காப்பீட்டு கட்டணங்கள் மற்றும் மூலப்பொருட்களின் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் வாகனங்களின் விலைகள் உயர்ந்து வருவதாலும் அதிக வரி மற்றும் எரிபொருள் விலை உயர்வாலும் வாடிக்கையாளர் வாங்கும் திறன் பாதிக்கப்பட்டுள்ளதாக தொழில் துறையினர் கருதுகின்றனர்.
"கடந்த 18 மாதங்களில் இந்த ஆட்டோமொபைல் தொழில் ஒப்பீட்டளவில் மெதுவான வளர்ச்சியைக் கண்டு வருகிறது … ஆட்டோமொபைல் துறையின் முக்கியத்துவத்தைப் பற்றி நிறைய அறிக்கைகள் உள்ளன. ஆனால், உறுதியான நடவடிக்கையின் அடிப்படையில், சரிவை மாற்றியமைப்பதற்கு களத்தில் நான் எந்த நடவடிக்கையையும் பார்க்கவில்லை. நுகர்வோருக்கு கார்களின் மலிவு விலை பற்றிய கேள்வியை நாம் எதிர்கொள்ளாவிட்டால், ICE அல்லது CNG, பயோ எரிபொருள்கள் அல்லது EVகளுடன் கார் தொழில் புத்துயிர் பெறும் என்று நான் நினைக்கவில்லை” என்று பார்கவா கூறினார்.
தொழில் துறையின் தேவை என்ன?
தொழில் நிறுவனங்கள் வரி விகிதங்களை குறைக்க வேண்டும் என்று கோரி வருகின்றன. மாநாட்டில், இரு சக்கர வாகனங்களுக்கு அதிக வரி விதிப்பது குறித்து வேணு சீனிவாசன் கவலை தெரிவித்தார். “நாட்டின் அடிப்படை போக்குவரத்து முறைக்கு 28 சதவீத ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது. இது ஒரு ஆடம்பர தயாரிப்புக்கு விதிக்கப்படும் வரிக்கு சமம். நான் கேட்க விரும்புவது நாங்கள் அங்கீகரிக்கப்படுகிறோமா? ஆட்டோமொபைல் தொழில் துறை வேலைவாய்ப்பு, வருவாய் மற்றும் அந்நியச் செலாவணி சம்பாதிப்பதில் பங்களித்ததற்காக அங்கீகரிக்கப்படுகிறதா?” என்று வேணு சீனிவாசன் கேள்வி எழுப்பினார்.
வரியைக் குறைப்பதற்கான கோரிக்கைகளுக்கு வருவாய் துறை செயலாளர் என்ன கூறினார்?
வருவாய் செயலாளர் தருண் பஜாஜ் திறந்த மனதுடன் இந்தியாவின் ஜிடிபி மற்றும் ஜிவிஏ ஆகியவற்றிற்கு தொழில் துறை அளித்துவரும் பங்களிப்பை அங்கீகரித்தார். “இந்த கட்டத்தில் விகிதங்கள் குறையும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை, ஆனால் அதை சரி செய்ய முடியும் என்பதைக் கண்டு நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். எனவே, சில பிரிவுகள் ஊக்குவிக்கப்படுகின்றன” என்று தருண் பஜாஜ் கூறினார்.
வாக்கும் திறனில் வரிவிதிப்பின் குறிப்பான தாக்கம் குறித்து ஆழ்ந்த ஆய்வு செய்ய அவர் இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் சங்கத்திடம் வேண்டுகோள் வைத்தார். மேலும், தொழில்துறையின் வளர்ச்சிக்காக இந்திய அரசு எப்படி பங்களிப்பாளர்களுடன் இணைந்து செயல்பட முடியும் என்பதற்கான நடவடிக்கைகளை பரிந்துரைக்குமாறு கேட்டுக்கொண்டார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.