Advertisment

மருத்துவக் கல்வியை காஷ்மீர் மாணவர்களுக்கு எப்படி வழங்குகிறது பாகிஸ்தான்?

இக்கூற்றை நாம்  ஒப்புக் கொண்டால், இப்பகுதியில் இயங்கும் ஒரு மருத்துவ நிறுவனம் இந்திய மருத்துவ கவுன்சிலின் (எம்சிஐ) அங்கீகாரத்தை பெற வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது” என நீதிமன்றம் தெரிவித்தது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Kashmiri students, Syed Ali Shah Geelani, Hurriyat Conference,pakistan occupied kashmir

Kashmiri students, Syed Ali Shah Geelani, Hurriyat Conference,pakistan occupied kashmir

ஹுரியத் மாநாட்டுக் கட்சியில் இருந்து சையத் அலி ஷா கிலானி தனது வாழ்நாள் தலைவர் பதவியில் இருந்து  ராஜினாமா செய்தார். இந்த சூழலில், பாகிஸ்தானில் மருத்துவ படிப்புகளுக்கான இடங்களை காஷ்மிரில் செயல்பட்டு வரும் பிரிவினைவாத தலைவர்கள் விற்பனை செய்ததாக எழுந்த சர்ச்சை தற்போது மீண்டும் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. கிலானி தனது ராஜினாமா கடிதத்திலும் கூட  இதுகுறித்து வெளிப்படையாக எழுதியிருந்தார்.

Advertisment

மருத்துவக் கல்வியை காஷ்மீர் மாணவர்களுக்கு எப்படி வழங்குகிறது பாகிஸ்தான்?

இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக, பாகிஸ்தான் அரசு தனது அனைத்து தொழில்முறை பாடங்களிலும் (குறிப்பாக மருத்துவ மற்றும் பொறியியல் துறைகளில்) ஜம்மு-காஷ்மீர் மாணவர்களுக்கு இட ஒதுக்கீடை வழங்கிவருகிறது.

பாகிஸ்தானில் உயர் கல்வியைப் பெறும்  ஜம்மு-காஷ்மீர்  மாணவர்கள் இரண்டு பிரிவுகளாக வகைப்படுத்தப்படுகின்றனர்: முதலாவதாக, பாகிஸ்தான்    மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் வாயிலாக வெளிநாட்டு மாணவர்களுக்கான சேர்க்கைக்கு விண்ணப்பிப்பவர்கள்; இரண்டாவதாக பாகிஸ்தான் அரசின் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள்.

முதலாவது திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் மாணவர்கள், மற்ற வெளிநாட்டு மாணவர்கள் செலுத்தும் அதே கட்டணத்தை செலுத்த வேண்டும். ஆனால், இரண்டாவது  திட்டத்தின் கீழ் வரும் மாணவர்களின் 100 சதவீத கல்வி  உதவித்தொகையும்,  இலவச தங்குமிடமும் கொடுக்கப்படுகிறது. காஷ்மீரில்  இந்தியப் பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்ட (அ) பாதிக்கப்பட்ட பெற்றோர் மற்றும் நெருங்கிய உறவினர்களின் குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு இந்த உதவித்தொகை திட்டத்தில் முன்னுரிமை வழங்கப்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும், எம்.பி.பி.எஸ் படிப்பிற்கான  உதவித்தொகை திட்டத்தின் கீழ் சுமார் 50 மாணவர்கள் பாகிஸ்தானுக்கு பயணப்படுகின்றனர். மற்ற தொழில்முறை படிப்புகளிலும் அதே எண்ணிக்கையிலான மாணவர்கள்  சேர்கின்றனர்.

இந்த ஆண்டு, பாகிஸ்தான் அரசு காஷ்மீர் மாணவர்களுக்கு  உதவித்தொகை இடங்களின் எண்ணிக்கை 1,600 என்று அறிவித்தது. கூட்டாட்சி கல்வி மற்றும் நிபுணத்துவ பயிற்சிக்கான தேசிய பேரவை நிலைக்குழுவின் கூட்டத்தில் இந்த தகவலை பாகிஸ்தான் அரசு தெரிவித்தது. இருப்பினும், இந்த ஆண்டு ஏற்பட்ட  கொரோனா பெருந்தொற்று மற்றும் சர்வதேச பயணங்களுக்கான தடை போன்ற காரணங்களால் இதுவரை எந்த மாணவரும் பாகிஸ்தானுக்கு செல்லவில்லை.

மாணவர்களின் தகுதியை யார் தீர்மானிக்கிறார்கள்?

பல்வேறு தொழில்முறை படிப்புகளுக்கான கட்-ஆஃப்  சதவீதம் நிர்ணயிக்கப்பட்டிருந்தாலும், காஷ்மீரில் செயல்பட்டு வரும்  பிரிவினைவாத தலைவர்களின் பரிந்துரை மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. பல ஆண்டுகளாக  ஹுரியத் மாநாடு அமைப்பின் இரு பிரிவுகளை சேர்ந்த தலைவர்கள் பரிந்துரை கடிதங்களை வழங்கி வந்தன. இருப்பினும், ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்ததை அடுத்து, சையத் அலி ஷா கிலானி தலைமையிலான ஹுரியத்  அமைப்பு, கடந்த இரண்டு ஆண்டுகளாக பரிந்துரை கடிதங்களை வழங்குவதை முற்றிலும் நிறுத்தியது.

என்ன சர்ச்சை?

சில பிரிவினைவாத தலைவர்கள், பல ஆண்டுகளாக  மாணவர்களுக்கு பரிந்துரை கடிதங்களை கொடுப்பதற்கு கைமாறாக அதிகளவு பணம் கோருவதாகவும், பாகிஸ்தான் அரசு உதவித் தொகை திட்டத்துக்கு நிர்ணயித்த அடிப்படை அளவுகோல்களை மீறுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

வெளிநாடுகளில் மருத்துவக் கல்வி பயின்ற இந்திய மாணவர்கள், அங்கு மருத்துவப் படிப்பை முடித்ததற்கான சான்றிதழ் பெற்ற பின்னர் இந்தியாவில் மருத்துவராக பதிவு செய்து மருத்துவம் பார்ப்பதற்கு, (FMGE) எனப்படும் தணிக்கை பரிசோதனை தேர்வில் தகுதி பெற வேண்டும். இருப்பினும், 2019 ஆம் ஆண்டில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர்  மீர்பூரில் மருத்துவம் படித்த மாணவியை இந்த தணிக்கை பரிசோதனை தேர்வில் கலந்து கொள்ள இந்திய தேசிய தேர்வு வாரியம் அனுமதிக்கவில்லை. அப்போது, இது மிகப்பெரிய சர்ச்சையாக உருவெடுத்தது.

இந்தியாவின் வெளிவிவகார அமைச்சகம் தனது மருத்துவ படிப்பை அங்கீகரிக்க வேண்டும் என்று அந்த மாணவி  ஜம்மு-காஷ்மீர் உயர்நீதிமன்றத்தை அணுகினார். நீதிமன்றம்  "மருத்துவக் கல்லூரி அமைந்துள்ள பாகிஸ்தான் ஆக்கிரமைப்பு காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதியே என்றலும், தற்போது  பாகிஸ்தான்  இஸ்லாமிய குடியரசின் ஆக்கிரமிப்பு மற்றும் நிர்வாக கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வருகிறது  என்பதில் எந்தவிதமான சர்ச்சையும் இருக்கக்கூடாது" என்று தீர்ப்பளித்தது . மேலும், இக்கூற்றை நாம்  ஒப்புக் கொண்டால், இப்பகுதியில் இயங்கும் ஒரு மருத்துவ நிறுவனம் இந்திய மருத்துவ கவுன்சிலின் (எம்சிஐ) அங்கீகாரத்தை பெற வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது” என்றும் தெரிவித்தது.

தொழில்முறை படிப்புகளுக்கு காஷ்மீர் மாணவர்கள் பாகிஸ்தான் செல்ல ஏன் விரும்புகிறார்கள்?

காஷ்மீரில் உள்ள அநேக பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள், குறிப்பாக பெண் குழந்தைகள்  மருத்துவம் படிக்க விரும்புகின்றனர்.  மேலும், காஷ்மீரில் மிகக் குறைந்த அளவில் தொழில்முறை கல்லூரிகள் இயங்குவதால், மாணவர்கள் மருத்துவப் படிப்பிற்காக வெளிநாடுகளுக்குச் செல்ல வேண்டிய நிலைமை ஏற்படுகிறது.  ரஷ்யா அவர்களின் முதல் விருப்பமாக இருந்தாலும், தற்போது பங்களாதேஷ், பாகிஸ்தான் போன்ற நாடுகள் பிரபலமடிந்து வருகின்றன. ஒப்பீட்டளவில்  பாகிஸ்தானில் பயிற்றுவிக்கும் மருத்துவ படிப்புகள்  சிறந்தவையாகவும், மலிவானவையாக இருந்தாலும், இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் காஷ்மீர் மாணவர்கள் தாக்குதல்களை எதிர்கொண்ட பின்னர் பாகிஸ்தானில் மேற்படிப்பு செல்வோரின் எண்ணிக்கையும் கணிசமாக  அதிகரித்தது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
India Jammu And Kashmir Pakistan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment