Advertisment

கோவா தேர்தல்: பண்டாரி சமூகத்தின் அரசியல் பலம்

கோவா சட்டப்பேரவையில் பண்டாரி சமூகம் அதிகமுறை இடம்பெற்றிருந்தாலும், இதுவரை ரவி நாய்க் என்பவர் மட்டுமே அந்த சமூகத்திலிருந்து முதல்வராக பதவி வகித்துள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
கோவா தேர்தல்: பண்டாரி சமூகத்தின் அரசியல் பலம்

கோவா மாநிலத்திற்கான சட்டப்பேரவை தேர்தல் ஒரே கட்டமாக வரும் பிப்ரவரி 14 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில், பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி, திரிணமூல் காங்கிரஸ் என பலமுனைப் போட்டிகள் நிலவுகிறது.

Advertisment

இந்நிலையில், ஆம் ஆத்மியின் முதல்வர் வேட்பாளராக பண்டாரி சமூகத்தைச் சேர்ந்த அமித் பாலேகர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். வழக்கறிஞரான அமிக் பாலேகர், பண்டாரி சமூகத்தை சேர்ந்தவர் ஆவர். கோவாவில் அந்த சமூகத்தினர், மக்கள்தொகையில் குறிப்பிடத்தக்க சதவீதத்தை கொண்டுள்ளனர்.

இந்த தேர்வு குறித்து பேசிய ஆம் ஆத்மி தலைவரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால், "தனது கட்சி சாதி அரசியலை நாடவில்லை. கோவாவின் முக்கிய கட்சிகளால் பண்டாரி சமூகம் நீண்டகாலமாக அனுபவித்து வரும் அநீதியை சரிசெய்கிறது" என தெரிவித்திருந்தார்.

யார் இந்த பண்டாரி?

பண்டாரி சமூகத்தின் பாரம்பரிய தொழிலாக கள்-தட்டுதல் மற்றும் வடித்தல், பண்ணை உழுதல் மற்றும் பழத்தோட்டங்களில் வேலை செய்தல் ஆகியவை உள்ளன. இவர்கள் கோவாவில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC) பிரிவில் இடம் பெற்றுள்ளனர்.இந்த சமூகத்தினர், ரத்னகிரி, சிந்துதுர்க் பகுதிகள் உட்பட கோவா மற்றும் மகாராஷ்டிராவின் கொங்கன் பெல்ட் முழுவதும் வசித்து வருகின்றனர்.

பண்டாரி சதவீதம் எவ்வளவு?

கோமந்தக் பண்டாரி சமாஜ் (ஜிபிஎஸ்) தலைவர் அசோக் நாயக் கூறுகையில், "கோவாவில் பண்டாரி சமூகத்தின் உண்மையான மக்கள் தொகை கணக்கெடுப்பு எதுவும் இல்லை. அதே சமயம், கோவா அரசின் சமூக நலத்துறை பதிவு செய்த புள்ளிவிவரங்களும் சரியானவை அல்ல" என்றார்.

2021 அக்டோபரில் கோவா சட்டப்பேரவையில் சமூக நலத்துறை அமைச்சர் மிலிந்த் நாயக்கின் எழுத்துப்பூர்வ பதிலில், , 2014 ஆம் ஆண்டில் கோவா மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தால் ஓபிசிக்கள் பற்றிய கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதன்படி, OBC மக்கள் தொகை 3,58,517 ஆக இருந்தது. இது மொத்த மக்கள் தொகையில் 27% ஆகும். இந்த கணக்கெடுப்பின்படி, பண்டாரி சமூகத்தின் மொத்த எண்ணிக்கை 2,19,052 ஆகும், இது OBC களில் 61.10% ஆகும் என்றார்.

இதனை சுட்டிக்காட்டிய நாயக், பண்டாரிகள் சமூதாயத்தினர் பெரும்பான்மையான அளவில் ஓபிசிக்களில் மட்டுமல்ல, மாநிலத்தில் பெரும்பான்மையான இந்து மக்களிலும் உள்ளனர் என்றார்.

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, கோவாவின் மக்கள் தொகை 14.59 லட்சமாக இருந்தது. அதில் 66.08 சதவீதம் இந்துக்கள், 25.10 சதவீதம் கிறிஸ்தவர்கள், 3.66 சதவீதம் முஸ்லிம்கள், மீதமுள்ளவர்கள் பிற மதத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

மேலும் பேசிய நாயக், "மாநிலத்தில் வசிக்கும் பண்டாரி சமூகம் எண்ணிக்கை 2 லட்சம் என்று அரசு கூறுவது சரியல்ல. தற்போது இந்த எண்ணிக்கை 5.29 லட்சமாக இருக்க வேண்டும் என்று மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன, இது மாநிலத்தின் மக்கள்தொகையில் குறைந்தது 30 சதவீதமாக இருக்கும்" என்றார்.

பண்டாரி சமாஜ் அரசியல் கட்சிகளால் புறக்கணிக்கப்பட்டதா?

கோவாவின் அரசியல் கட்சிகள் எப்போதும் எண்ணிக்கையில் பலம் வாய்ந்த பண்டாரிகளை கவர்ந்திழுக்க முயற்சி செய்கின்றன. சிலர் சமூகத்திற்கான இடஒதுக்கீட்டை வழங்க முயன்றனர். சமூகத்தைச் சேர்ந்த வேட்பாளர்களுக்கு அதிகபட்ச தேர்தல் சீட் வழங்கும் கட்சிக்கு பண்டாரி சமாஜ் ஆதரவு அளிக்கும் என்று ஜிபிஎஸ் தலைவர் முன்பு கூறியிருந்தார்.

கோவா சட்டப்பேரவையில் பண்டாரி சமூகம் அதிகமுறை இடம்பெற்றிருந்தாலும், இதுவரை ரவி நாய்க் என்பவர் மட்டுமே அந்த சமூகத்திலிருந்து முதல்வராக பதவி வகித்துள்ளார். முன்பு காங்கிரஸிருந்த அவர், தற்போது பாஜகவில் உள்ளார். 40 உறுப்பினர்களைக் கொண்ட மாநில சட்டசபையில் பண்டாரி சமூகத்தைச் சேர்ந்த நான்கு எம்எல்ஏக்கள் உள்ளனர்.

அசோக் நாயக் கூறுகையில், "கல்வி மற்றும் ஓபிசி பிரிவில் சேர்க்கப்படுவதன் மூலம், பண்டாரி சமூகத்தினர் உயர் கல்வியில் சிறந்து விளங்கி, முக்கிய பதவிகளை ஏற்றனர். ஆனால், எங்கள் சமூகத்தில் 5 சதவீதம் பேர் பணக்காரர்களாக இருந்தால், 95 சதவீதம் பேர் இன்னும் ஏழைகளாகவே உள்ளனர். அவர்கள் இன்னும் வாழ்க்கையைச் சமாளிக்க போராடுகிறார்கள்" என்றார்.

பண்டாரி சமூகத்தினர் முதல்வர் வேட்பாளராக அறிவித்தது ஆம் ஆத்மிக்கு கூடுதல் பலம் சேர்க்குமா?

இதுகுறித்து பேசிய அசோக் நாயக், " 60 ஆண்டுகளில் முதன்முறையாக ஒரு கட்சி எங்களிடம் வந்து பண்டாரி சமூகத்தைச் சேர்ந்த முதல்வரைத் தருவதாகக் கூறியுள்ளது . அவர்கள் வெற்றி பெறுவார்களா இல்லையா என்பது வேறு கதை என்றாலும். எங்கள் சமூகத்திற்கு உரிய தகுதியை வழங்க வேண்டும் என்பதை அங்கீகரித்துள்ளனர். ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் வேட்பாளருக்காக சமூகத் தலைவர்கள் பரப்புரையில் ஈடுபடுவார்கள். செயின்ட் குரூஸ் தொகுதியில் பண்டாரி மக்கள் தொகை அதிகமாக இல்லை, எனவே, பாலேகர் அங்கிருந்து தனது தேர்தல் அறிமுகத்தை தொடங்கவுள்ளார்" என்றார்.

ஜிபிஎஸ் பலேகருக்கு சப்போர்ட் செய்தாலும், அந்த சமூகத்தை சேர்ந்த அனைவரும் பின்னால் நிற்பார்கள் என கூற முடியாது என அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர். ஏனென்றால், கடந்த 20 ஆண்டுகளாக பண்டாரி சமூகம் பாஜகவுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பதாக கூறுகின்றனர்.

பாரம்பரியமாக மதம் அல்லது சாதி அடிப்படையில் கோரப்படும் வாக்குகள் கோவா வாக்காளர்களிடம் சரியாகப் போகவில்லை என்பது தான் உண்மை.

அஜீப் கோவாவின் கஜப் அரசியல் என்ற புத்தகம் சமீபத்தில் வெளியிடப்பட்ட மூத்த பத்திரிகையாளரும் எழுத்தாளருமான சந்தேஷ் பிரபுதேசாய் கூறுகையில், "கோவா வாக்காளர்களை சாதியின் அடிப்படையில் கவர்ந்த முதல் நிகழ்வு 1972 இல் நடந்தது. ஆனால் அது எதிராக மாறியது. அப்போது எழுத்தறிவு சுமார் 30 சதவீதமாக இருந்தது. முன்னாள் முதல்வர்) பௌசாஹேப் (தயானந்த்) பந்தோத்கர் முதல் கிளர்ச்சியை எதிர்கொண்டார்.

கோவாவில் கோமாந்தக் நாளிதழ் மிகவும் செல்வாக்கு பெற்றதாகவும், அந்த நேரத்தில் இந்துக்களின் வீடுகளுக்குச் சென்ற ஒரே மராத்தி மொழி செய்தித்தாள் இதுவாகும்.

இதனை உபயோகிக்க திட்டமிட்ட கே பி நாயக் என்ற பண்டாரி தலைவர், நாளிதழுடன் சாதி அட்டையையும் சேர்த்து தேர்தல் வாக்குகளை பெற முயன்றார். முந்தைய இரண்டு தேர்தல்களில் பௌசாஹேப்பின் மகாராஷ்டிரவாதி கோமந்தக் கட்சி 16 இடங்களை வென்றது. அடுத்து, 1972 தேர்தலில் 18 இடங்களை வென்றது. அதன்பிறகு, கோவாவில் சாதி அரசியல் வேலை செய்யவில்லை என தெரிவித்தார்.

கோவாவின் பல்வேறு தொகுதிகளில் வெற்றி பெறும் வேட்பாளர்கள் பொதுவாக அவர்களது மக்கள்தொகையை பிரதிநிதித்துவப்படுத்துவதாக கல்வியாளர்கள் கூறுகின்றனர்.

உதாரணமாக, ஒரு கிறிஸ்தவ வேட்பாளர் கணிசமான கிறிஸ்தவ மக்கள்தொகை உள்ள தொகுதியிலும், பண்டாரி வேட்பாளர்கள் அதிக சதவீத பண்டாரி வாக்காளர்களைக் கொண்ட இடங்களிலும் வெற்றிபெறலாம். ஆனால் அந்த அடிப்படையில் வாக்குகள் சேகரிக்கப்படாது என கூறுகிறார்கள்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Assembly Election Goa Arvind Kejriwal Aam Aadmi Party
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment