பொருளாதாரா நெருக்கடியால் தவித்து வரும் இலங்கை மக்களின் போராட்டம் நேற்று பெரிதாக வெடித்தது. பல லட்சம் மக்கள் ஒன்றுகூடி இலங்கை அதிபர் மாளிகையை முற்றுகையிட்டனர். போராட்டக்காரர்களை இலங்கை ராணுவம் தடுக்க முயன்றாலும் முடியாத நிலை ஏற்பட்டது. அதிபர் மாளிகைக்குள் புகுந்த மக்கள், நீச்சல் குளத்தில் குளித்தும், சமையல் அறையில் உள்ள உணவுகளை சாப்பிட்டும், செல்ஃபி எடுத்து வெளியிட்டனர். மேலும் உடல் பயிற்சி கூடங்களில் உடல் பயிற்சியும் செய்தனர்.
நிலைமை மிகவும் மோசமடைந்ததால், அதிபர் கோத்தபயா ராஜபக்சே அவசரமாக கப்பலில் தப்பியோடினார். இந்த காட்சிகள் வெளியாகி மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதிபர் பதவியிலிருந்து ஜூலை 13ம் தேதி கோத்தபயா விலகுவதாக, சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். தற்போதைய இலங்கை சூழ்நிலையை வைத்து பார்க்கும்போது, மக்கள் 4 நாட்கள் வரை பொறுத்திருப்பார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.
அதிபர் மாளிகைக்குள் நுழைந்த போராட்டக்கார்கள், நேற்று இரவில் இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவின் வீட்டிற்கும் தீ வைத்தனர். இந்நிலையில் அவரும் தலைமறைவாகி இருக்கிறார். மேலும் இலங்கையின் தற்போதைய நிலை கருதியும், சர்வகட்சி ஆட்சி பொறுப்பேற்க வழிவகை செய்யவும் தான் பதவி விலகுவதாக ரணில் விக்கிரமசிங்கேவும் தெரிவித்துள்ளார். அதிபரும், பிரதமரும் மாறி மாறி பதவி விலகுவதாக தெரிவித்தாலும், தற்போதைய நிலையை சரி செய்ய என்ன செய்வது என்பது தொடர்பாக இருவரும் எந்த முடிவுகளையும் எடுக்கவில்லை. இலங்கையின் தலைநகரான கொழும்பு தற்போது அரசே இல்லாமல் இருக்கிறது. யார் தலைமையேற்பார்கள் என்றே தெரியாத நிலை நிலவுகிறது.
2009ம் ஆண்டு ஈழப்போரின்போது விடுதலை புலிகளை அழித்து ஒடுக்கிய இலங்கை ராணுவம் அதிபர் கோத்தபயாவின் செல்லக்குழந்தையாக கருதப்பட்டது. அப்படிபட்ட ராணுவமே, தற்போது இலங்கையில் நடைபெறும் போராட்டங்களை தடுத்து நிறுத்த இயலாமல் திணறுகிறது. சில இடங்களில் ராணுவ வீரர்களே போராட்டக்காரர்களுடன் சேர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. தற்போது வெளியான தகவலின் படி 8 முதல் 10 லட்சம் பேர் போராட்டங்களில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இலங்கையில் உள்ள 70 லட்சம் மக்கள், உணவு கிடைக்காத நிலைக்கு தள்ளப்படுள்ளனர். இலங்கையில் எரிபொருள் முற்றிலுமாக இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து வரவிருக்கும் எரிபொருள் உள்ள இரண்டு கப்பல்களை மட்டுமே இலங்கை நம்பி இருக்கிறது. தற்போது பொறுப்பேற்க உள்ள புதிய அரசு, சர்வதேச நாணய நிதியத்திடம், பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். மேலும் பல நடவடிக்கைகளை எடுத்தால் மட்டுமே இலங்கையின் தற்போதைய நிலை மாறும் என்று கூறப்படுகிறது.
எழுத்து: நிருபமா சுப்ரமணியன்