தி இந்தியன் எக்ஸ்பிரஸில் வியாழக்கிழமை (மே 4) வெளியிடப்பட்ட விசாரணை அறிக்கையில், இந்தியாவின் 30 தேசிய விளையாட்டு கூட்டமைப்புகளில் பாதிக்கும் மேற்பட்டவைகளில், அதாவது 16 கூட்டமைப்புகளில் பாலியல் துன்புறுத்தல் தடுப்பு (PoSH) சட்டம், 2013 இன் கீழ் சட்டப்பூர்வ தேவையான உள் புகார்கள் குழு (ICC) இல்லை என்று தெரியவந்துள்ளது.
இந்தியாவில் மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும் பா.ஜ.க எம்.பி.,யுமான பிரிஜ் பூஷன் சரண் சிங்கிற்கு எதிராக டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வரும் மல்யுத்த வீரர்களின் குற்றச்சாட்டுகளை ஆய்வு செய்த குத்துச்சண்டை வீராங்கனை எம்.சி மேரி கோம் தலைமையிலான அரசாங்க குழு, தனது "முக்கிய கண்டுபிடிப்பாக” இந்தியாவின் மல்யுத்த கூட்டமைப்பில் (WFI) உள் புகார்கள் குழு இல்லை எனச் சுட்டிக்காட்டியது.
இதையும் படியுங்கள்: மல்யுத்தம் உள்பட 16 தேசிய விளையாட்டு கூட்டமைப்புகளில் பாலியல் புகார்கள் குழு இல்லை; காற்றில் பறக்கும் விதிகள்
பணியிடத்தில் பெண்களுக்கு நிகழும் பாலியல் துன்புறுத்தலுக்கு எதிரான சட்டம் என்ன?
பணியிடத்தில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் துன்புறுத்தல் (தடுப்பு, தடை மற்றும் தீர்வு) சட்டம், பொதுவாக PoSH சட்டம் என்று அழைக்கப்படுகிறது, இது 2013 இல் நிறைவேற்றப்பட்டது. இது பாலியல் துன்புறுத்தலை வரையறுத்தது, புகார் மற்றும் விசாரணைக்கான நடைமுறைகள் மற்றும் பாலியல் துன்புறுத்தல் வழக்குகளில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் ஆகியவற்றை வகுத்தது.
PoSH சட்டம் எப்படி வந்தது?
1997 இல் வழங்கப்பட்ட தீர்ப்பில் உச்ச நீதிமன்றத்தால் வகுக்கப்பட்ட விதிமுறைகளைக் கொண்ட விசாகா கமிட்டி வழிகாட்டுதல்கள் என அழைக்கப்படும் வழிகாட்டுதல்கள் மூலம் 2013 ஆம் ஆண்டு PoSH சட்டம் விரிவுபடுத்தப்பட்டது மற்றும் சட்ட ஆதரவு வழங்கப்பட்டது.
ராஜஸ்தானைச் சேர்ந்த பன்வாரி தேவி என்ற சமூக சேவகர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், விஷாகா உள்ளிட்ட பெண்கள் உரிமைக் குழுக்கள் இந்த வழக்கை தாக்கல் செய்தன. பன்வாரி தேவி 1992 இல் ஒரு வயது பெண் குழந்தையின் திருமணத்திற்கு எதிராக போராடினார், இதற்கு பழிவாங்கும் விதமாக அவர் கும்பல் பலாத்காரம் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
விஷாகா கமிட்டி வழிகாட்டுதல்கள் பாலியல் துன்புறுத்தலை வரையறுத்து நிறுவனங்கள் மீது மூன்று முக்கிய கடமைகளை விதித்துள்ளன. அவை தடை, தடுப்பு, நிவாரணம். பணியிடங்களில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து விசாரிக்கும் புகார் குழுவை அமைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. உச்ச நீதிமன்றம் விசாகா கமிட்டி வழிகாட்டுதல்களை சட்டப்பூர்வமாக கட்டுப்படுத்தியது.
புகார்கள் குழுவைப் பற்றி PoSH சட்டம் என்ன சொல்கிறது?
10 அல்லது அதற்கு மேற்பட்ட ஊழியர்களைக் கொண்ட ஒவ்வொரு அலுவலகத்திலும் அல்லது கிளையிலும் ஒவ்வொரு நிறுவனமும் ஒரு உள் புகார்க் குழுவை (ICC) அமைக்க வேண்டும் என்று PoSH சட்டம் பின்னர் கட்டாயமாக்கியது. இது பாலியல் துன்புறுத்தலின் பல்வேறு அம்சங்களை வரையறுத்துள்ளது மற்றும் புகாரின் போது நடவடிக்கை எடுப்பதற்கான நடைமுறைகளை வகுத்தது.
இந்தச் சட்டத்தின் கீழ் துன்புறுத்தலுக்கு உள்ளான பாதிக்கப்பட்ட பெண் என்பவர் "<பணியிடத்தில்> பணிபுரிபவர் அல்லது பணிபுரியாதவர் என எந்த வயதினராக இருந்தாலும்", "எந்தவொரு பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாகக் குற்றம் சாட்டும்" பெண்ணாக இருக்கலாம். உண்மையில், இந்தச் சட்டம், பணிபுரியும் அல்லது பணியிடத்திற்குச் செல்லும் அனைத்துப் பெண்களின் உரிமைகளையும் பாதுகாக்கிறது.
PoSH சட்டத்தின் கீழ் பாலியல் துன்புறுத்தல் என்றால் என்ன?
2013 PoSH சட்டத்தின் கீழ், பாலியல் துன்புறுத்தல் என்பது நேரடியாகவோ அல்லது உட்பொருளாகவோ செய்யப்படும் பின்வரும் "விரும்பத்தகாத செயல்கள் அல்லது நடத்தைகளில்" "ஏதேனும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்டவை" ஆகியவை அடங்கும்:
- உடலை தொடுதல் மற்றும் எல்லை மீறுதல்
- பாலியல் உறவுக்கு அழைத்தல் அல்லது நிர்பந்தித்தல்
- பாலியல் ரீதியாக பேசுதல்
- ஆபாச படங்களை காட்டுவது
- வேறு எந்த விரும்பத்தகாத நேரடி தொடுதல், பேசுதல் அல்லது சைகை ரீதியான பாலியல் நடத்தை.
பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட 'பணியிடத்தில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் துன்புறுத்தல் பற்றிய கையேடு', பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தல்களை உருவாக்கும் நடத்தை பற்றிய விரிவான நிகழ்வுகளைக் கொண்டுள்ளது. இந்த சூழ்நிலைகளில், பரந்த அளவில் பின்வருவன அடங்கும்:
- பாலியல் ரீதியாக பரிந்துரைக்கும் கருத்துக்கள் அல்லது மறைமுகமான கருத்துக்கள்; கடுமையான அல்லது மீண்டும் மீண்டும் புண்படுத்தும் கருத்துக்கள்; ஒரு நபரின் பாலியல் வாழ்க்கையைப் பற்றிய பொருத்தமற்ற கேள்விகள் அல்லது கருத்துக்கள்;
- பாலியல் அல்லது புண்படுத்தும் படங்கள், சுவரொட்டிகள், MMS, SMS, WhatsApp அல்லது மின்னஞ்சல்களைக் காண்பித்தல்;
- மிரட்டல், அச்சுறுத்தல்கள், பாலியல் நன்மைகளைச் சுற்றி மிரட்டல்;
- இவற்றைப் பற்றி பேசும் ஒரு ஊழியருக்கு எதிராக மிரட்டல், அச்சுறுத்தல் அல்லது பழிவாங்குதல்;
- பொதுவாக ஆசையை வெளிப்படுத்துவது போல் (ஃபிளிர்ட்) காணப்படும் பாலியல் மேலோட்டத்துடன் கூடிய விரும்பத்தகாத இயல்பான அழைப்புகள்; மற்றும்
- விரும்பத்தகாத பாலியல் சீண்டல்கள்.
பாதிக்கப்பட்டவர் மோசமாகவோ அல்லது சக்தியற்றவராகவோ உணரும்போது, கோபம்/சோகம் அல்லது எதிர்மறையான சுயமரியாதையை ஏற்படுத்தும் போது "விரும்பத்தகாத நடத்தை" அனுபவிக்கப்படுகிறது என்று கையேடு கூறுகிறது. விரும்பத்தகாத நடத்தை "சட்டவிரோதமானது, இழிவானது, தாக்குதல் ரீதியானது, ஒருதலைப்பட்சமானது மற்றும் அதிகார அடிப்படையிலானது".
கூடுதலாக, PoSH சட்டம் பாலியல் துன்புறுத்தலுக்கு சமமான ஐந்து சூழ்நிலைகளைக் குறிப்பிடுகிறது:
- அவரது வேலைவாய்ப்பில் முன்னுரிமை நடவடிக்கையின் மறைமுகமான அல்லது வெளிப்படையான வாக்குறுதி;
- தீங்கு விளைவிக்கும் நடவடிக்கையின் மறைமுகமான அல்லது வெளிப்படையான அச்சுறுத்தல்;
- புகார்தாரரின் தற்போதைய அல்லது எதிர்கால வேலை நிலை பற்றிய மறைமுகமான அல்லது வெளிப்படையான அச்சுறுத்தல்;
- புகார்தாரரின் வேலையில் குறுக்கீடு செய்தல் அல்லது தாக்குதல் அல்லது விரோதமான பணிச்சூழலை உருவாக்குதல்;
- புகார்தாரரின் உடல்நலம் அல்லது பாதுகாப்பை பாதிக்கக்கூடிய அவமானகரமான நடவடிக்கை.
PoSH சட்டத்தின் கீழ் புகார் செய்வதற்கான நடைமுறை என்ன?
பாதிக்கப்பட்டவர் நடவடிக்கை எடுக்க கோரி உள் புகார்கள் குழுவிடம் புகார் அளிக்க வேண்டிய கட்டாயம் இல்லை. அவள் விருப்பப்பட்டால் புகார் "செய்யலாம்" என்று சட்டம் கூறுகிறது, மேலும் அவளால் முடியவில்லை என்றால், உள் புகார்கள் குழுவின் எந்த உறுப்பினரும் பாதிக்கப்பட்டவருக்கு எழுத்துப்பூர்வமாக புகார் செய்ய "எல்லா நியாயமான உதவிகளையும்" வழங்க வேண்டும்.
"உடல் அல்லது மன இயலாமை அல்லது இறப்பு அல்லது வேறு ஏதேனும்" காரணமாக பாதிக்கப்பட்ட பெண்ணால் புகார் செய்ய முடியாவிட்டால், அவரது சட்டப்பூர்வ வாரிசு புகார் செய்யலாம்.
சட்டத்தின் கீழ், "சம்பவம் நடந்த நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள்" புகார் செய்யப்பட வேண்டும். இருப்பினும், "குறிப்பிட்ட காலத்திற்குள் பாதிக்கப்பட்ட பெண் புகார் செய்வதைத் தடுக்கும் சூழ்நிலைகள் உள்ளன என்று கருதினால்" உள் புகார்கள் குழு "கால வரம்பை நீட்டிக்க" முடியும்.
உள் புகார்கள் குழு விசாரணைக்கு முன், மற்றும் "பாதிக்கப்பட்ட பெண்ணின் வேண்டுகோளின் பேரில், அவருக்கும் பிரதிவாதிக்கும் இடையேயான விவகாரத்தை சமரசத்தின் மூலம் தீர்த்து வைக்க நடவடிக்கை எடுக்கலாம்." ஆனால், "எந்தவொரு பண தீர்வையும் சமரசத்தின் அடிப்படையில் செய்யக்கூடாது".
உள் புகார்கள் குழு பாதிக்கப்பட்டவரின் புகாரை காவல்துறைக்கு அனுப்பலாம் அல்லது குழுவே விசாரணையைத் தொடங்கலாம், ஆனால் இந்த விசாரணையை 90 நாட்களுக்குள் முடிக்க வேண்டும். சம்மன் அனுப்பி எந்தவொரு நபரையும் வரவழைத்தல் மற்றும் விசாரணை செய்தல் மற்றும் ஆவணங்களைக் கண்டுபிடித்தல் மற்றும் சமர்ப்பித்தல் ஆகியவை தொடர்பாக சிவில் நீதிமன்றத்திற்கு இணையான அதிகாரங்களை உள் புகார்கள் குழு கொண்டுள்ளது.
விசாரணை முடிந்ததும், உள் புகார்கள் குழு அதன் கண்டுபிடிப்புகளின் அறிக்கையை 10 நாட்களுக்குள் நிறுவனத்திடம் வழங்க வேண்டும். அறிக்கை பாதிக்கப்பட்டவர் மற்றும் எதிர் தரப்பு என இரு தரப்பினருக்கும் கிடைக்க வேண்டும்.
பெண்ணின் அடையாளம், பிரதிவாதி, சாட்சி, விசாரணை, பரிந்துரை மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கை பற்றிய எந்தத் தகவலும் பகிரங்கப் படுத்தப்படக்கூடாது.
உள் புகார்கள் குழு தனது அறிக்கையை தாக்கல் செய்த பிறகு என்ன நடக்கிறது?
பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், நிறுவனத்தின் "சேவை விதிகளின்படி" நடவடிக்கை எடுக்க உள் புகார்கள் குழு நிறுவனத்திற்கு பரிந்துரைக்கும். இவை நிறுவனத்திற்கு நிறுவனம் மாறுபடலாம்.
உள் புகார்கள் குழு "பொருத்தமானதாகக் கருதினால்" குற்றவாளி எனக் கண்டறியப்பட்ட நபரின் சம்பளத்தை குறைக்க நிறுவனத்திற்கு பரிந்துரைக்கலாம். இழப்பீடு ஐந்து அம்சங்களின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது: பெண்ணுக்கு ஏற்படும் துன்பம் மற்றும் மன உளைச்சல்; தொழில் வாய்ப்பு இழப்பு; அவளுடைய மருத்துவ செலவுகள்; பிரதிவாதியின் வருமானம் மற்றும் நிதி நிலை; மற்றும் அத்தகைய கட்டணம் செலுத்துவதற்கான சாத்தியக்கூறுகள்.
பாதிக்கப்பட்ட பெண் அல்லது பிரதிவாதி திருப்தி அடையவில்லை என்றால், அவர்கள் 90 நாட்களுக்குள் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யலாம்.
பாலியல் துன்புறுத்தல் பற்றிய தவறான புகாருக்கு எதிராக சட்டத்தில் என்ன பாதுகாப்பு உள்ளது?
சட்டத்தின் பிரிவு 14 தவறான அல்லது தீங்கிழைக்கும் புகார் மற்றும் தவறான ஆதாரங்களுக்கான தண்டனையைக் குறிக்கிறது.
அத்தகைய சூழ்நிலையில், "சேவை விதிகளின்படி" பெண் அல்லது புகார் செய்த நபருக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு நிறுவனத்திடம் உள் புகார்கள் குழு "பரிந்துரை செய்யலாம்".
எவ்வாறாயினும், "புகாரை உறுதிப்படுத்தவோ அல்லது போதுமான ஆதாரத்தை வழங்கவோ" முடியாத நிலையில், "வெறும் இயலாமைக்காக" நடவடிக்கை எடுக்க முடியாது என்பதை சட்டம் தெளிவுபடுத்துகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.