ஜூலை 24 அன்று, மணிக்கு 48,000 கிலோமீட்டர் வேகத்தில் 170 மீட்டர் நீளமுள்ள “சிறுகோள் 2020 என்.டி” என்று பெயரிடப்பட்ட ஒரு பெரிய சிறுகோள் பூமியைக் கடக்கும் என்று நாசா எச்சரிக்கை விடுத்துள்ளது. பூமியில் இருந்து சுமார் 0.034 வானியல் அலகுகள் (அதாவது, 5,086,328 கிலோமீட்டர்) தொலைவில் கடந்து செல்வதால் "அபாயகரமான சிறுகோள்கள்" பிரிவின் கீழ் இது வகைப்படுத்தப்படுகிறது.
“பூமியை நெருங்கும் சிறுகோள்களின் மோதல் அபாயங்களை மதிப்பிடும் வகையில் அபாயகரமான சிறுகோள்கள் (PHA) வரையறுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, 0.05 au அல்லது அதற்கும் குறைந்தபட்ச சுற்றுப்பாதை வெட்டும் தூரம் (Minimum orbit intersection distance - MOID) கொண்ட அனைத்து சிறுகோள்களும் அபாயகரமானதாக கருதப்படுகின்றன” என்று நாசா சிறுகோள்களை வகைப்படுத்துகிறது.
நாசா இதுபோன்ற வானியல் பொருள்களை ‘பூமிக்கு அருகிலுள்ள பொருள்கள்’ (Near-Earth object -NEO) என வகைப்படுத்துகிறது. ஏனெனில் இத்தகைய பொருள்கள் மற்ற கிரகங்களின் ஈர்ப்பு விசைக்கு உந்தப்பட்டு, பூமியின் அருகாமையில் வருகின்றன.
எவ்வாறாயினும், PHA என வகைப்படுத்தப்பட்ட அனைத்து சிறுகோள்களும் பூமியை தாக்கும் என்று கருத தேவையில்லை. அச்சுறுத்தலுக்கான சாத்தியம் உள்ளது என்பதையே இது உணர்த்துகிறது. இத்தகைய சிறுகோள்களை கண்காணிப்பதன் மூலமும், அவற்றின் சுற்றுப்பாதைகளை அவ்வப்போது புதுப்பிப்பதன் மூலமும், நெருக்கமான அணுகுமுறை புள்ளிவிவரங்களையும் (close-approach statistics) அவற்றின் அச்சுறுத்தலையும் நாம் நன்கு கணிக்க முடியும், ”என்று நாசா கூறுகிறது.
அச்சுறுத்தலின் நிலை:
"1 மீட்டருக்கும் அதிகமான விட்டம் கொண்ட சுமார் 1 பில்லியன் சிறுகோள்கள் சூரியனைச் சுற்றிவருகின்றன.30 மீட்டருக்கும் அதிகமான விட்டத்தைக் கொண்ட சிறுகோள்கள் பூமியைத் தாக்கும்போது சேதங்கள் ஏற்படுகின்றன. ஒவ்வொரு ஆண்டும், 30க்கும் மேற்பட்ட சிறிய சிறுகோள்கள் பூமியைத் தாக்கினாலும்,பெரிய சேதங்கள் ஏற்படுவதில்லை என்று தி பிளானட்டரி சொசைட்டி தெரிவித்தது.
140 மீட்டர் அல்லது அதற்கு மேற்பட்ட நீளத்தை உடைய,90 சதவீதத்திற்கும் அதிகமான பூமிக்கு அருகிலுள்ள வானியல் பொருள்களை NASA’s Near-Earth Object Observations Program எனும் திட்டத்தின் மூலம் கண்டறிந்து, கண்காணிக்கின்றது .
எவ்வாறாயினும், 140 மீட்டருக்கும் அதிகமான ஒரு சிறுகோள் அடுத்த 100 ஆண்டுகளுக்கு பூமியைத் தாக்கும் "குறிப்பிடத்தக்க" வாய்ப்பைக் கொண்டிருக்கவில்லை என்பதையும் இங்கு நினைவில் கொள்ள வேண்டும்.
திசை திருப்பும் நடவடிக்கை :
அபாயகரமான சிறுகோள்கள் பூமியை அடைவதற்கு முன்னர் அதை சிதறடிப்பது (அ) பூமியை நோக்கிய பாதையில் இருந்து திசை திருப்புவது போன்ற பல்வேறு வழிகளை விஞ்ஞானிகள் பல ஆண்டுகளாக பரிந்துரைத்து வருகின்றனர்.
இதற்காக,மேற்கொள்ளப்பட்ட மிக முக்கிய நடவடிக்கைகளில் ஒன்றாக Asteroid Impact and Deflection Assessment (AIDA) உள்ளது. இதில், நாசாவின் இரட்டை- குறுங்கோள் திசைதிருப்பல் சோதனை (DART) பணி, ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தின் (ESA) ஹேரா ஆகியவை இதில் அடங்கும்.
பூமிக்கு அருகிலுள்ள டிட்டிமூன் அல்லது டிட்டிமாஸ்-பி என்று இரட்டை- குறுங்கோளை 2022-ல் திசை திருப்புவதை இந்த திட்டம் நோக்கமாக கொண்டுள்ளது.
2021 ஆம் ஆண்டில் தொடங்க திட்டமிடப்பட்ட DART இன் கட்டுமானத்தைத் தொடங்குவதாக 2018 ஆம் ஆண்டில் நாசா அறிவித்தது. 2022 ஆம் ஆண்டில் டிடிமோஸ் இரட்டை- குறுங்கோள் மீது விநாடிக்கு 6 கி.மீ வேகத்தில் மோதி திசை திருப்ப திட்டமிடப்பட்டுள்ளது . 2027-ல் டிடிமோஸ் குறுங்கோளில் தரையிறங்கும் ஹேரா, DART மோதலால் ஏற்பட்ட தாக்கத்தை அளவிடுவதற்கும், சிறுகோளின் சுற்றுப்பாதைப் பாதையில் ஏற்படும் மாற்றத்தைப் படிப்பதற்கும் 2024ல் ஹேரா விண்ணில் செலுத்தப்படுகிறது .
கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.