கர்ப்பிணிப் பெண்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. மேலும் தடுப்பூசி செலுத்துவது தொடர்பான வழிகாட்டுதல்களை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
தடுப்பூசி போட பரிந்துரைகள் ஏன்?
கர்ப்பிணிப் பெண்களுக்கு தடுப்பூசி போடுவதால் ஏற்படும் நன்மைகள் அதிகம் என நிபுணர்களின் கருத்து இருப்பதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொரோனா தொற்று பாதிக்கப்பட்டால் மற்ற பெண்களை விட கர்ப்பிணிகள் அதிகம் பாதிக்கப்படுவதாக சில சான்றுகள் சுட்டிக்காட்டுகின்றன. கொரோனாவால் குறைப்பிரசவத்திற்கு அதிக ஆபத்து உள்ளதாகவும், பிறந்த குழந்தைக்கு தொற்று ஏற்படவும், கர்ப்ப காலத்தில் பல பிரச்சனைகள் ஏற்படலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.
பெரும்பாலான கர்ப்பிணிப் பெண்கள் தொற்று அறிகுறியற்றவர்களாகவோ அல்லது லேசான அறிகுறி இருக்கும்போது, அவர்களின் உடல்நலம் விரைவாக மோசமடையக்கூடும். அது கருவின் வளர்ச்சியை பாதிக்கலாம். கர்ப்பிணிப் பெண்களுக்கு தடுப்பூசி போடுவதற்கான உலக சுகாதார அமைப்பின் பரிந்துரையை அமைச்சகம் மேற்கோள் காட்டியுள்ளது. கர்ப்பிணிப் பெண்கள் கொரோனா வைரஸ் தொற்றுக்கு அதிக ஆபத்து உள்ளவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.
தடுப்பூசியின் பக்க விளைவுகள்
தற்போது போடப்படும் கொரோனா தடுப்பூசிகள் பாதுகாப்பானவை மற்றும் பிற நபர்களைப் போலவே கர்ப்பிணிகளையும் பாதுகாப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தற்போதைய ஆய்வின் படி, கொரோனா தடுப்பூசிகள் கர்ப்பிணிகளுக்கோ, கருவுக்கோ ஆபத்தை ஏற்படுத்த வாய்ப்பில்லை என நிபுணர்கள் கூறுகின்றனர்.
இருப்பினும், கருவிற்கோ அல்லது குழந்தைக்கோ தடுப்பூசியால் ஏற்படும் நீண்ட கால விளைவுகள் மற்றும் பாதுகாப்பு இன்னும் கண்டறியப்படவில்லை. எந்தவொரு மருந்தையும் போலவே, ஒரு தடுப்பூசியும் பொதுவாக லேசான பக்க விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். லேசான காய்ச்சல், ஊசி போடும் இடத்தில் வலி அல்லது 1-3 நாட்கள் உடல்நிலை சரியில்லாமல் இருப்பது போன்றவை இருக்கும் என வழிகாட்டுதல்கள் கூறுகின்றன. தடுப்பூசி போட்டுக்கொண்ட 20 நாட்களுக்குள் இந்த விளைவுகள் ஏற்படலாம். அப்போது கூடுதல் கவனம் தேவை என கூறப்பட்டுள்ளது.
இந்த அரிய அறிகுறிகள் யாவை?
உடனடி மருத்துவ கவனிப்பு தேவைப்படும் சில அறிகுறிகளை அமைச்சகம் பட்டியலிட்டுள்ளது.
மூச்சு திணறல்
நெஞ்சு வலி
கைகால்களை அழுத்துவதில் வலி அல்லது கைகால்களில் வீக்கம்
தடுப்பூசி போடப்பட்ட இடத்தில் சிறிய புள்ளி ரத்தக்கசிவு அல்லது தோலில் சிராய்ப்பு
வாந்தியுடன் அல்லது தொடர் வயிற்று வலி
வலிப்பு ஏற்படுவது, வாந்தியுடன் அல்லது இல்லாமல் வலிப்புத்தாக்கங்கள்
கைகால்களின் பலவீனம் / முடக்கம் அல்லது உடலின் எந்த குறிப்பிட்ட பக்கமும்
தொடர்ந்து வாந்தி
மங்கலான பார்வை அல்லது கண்களில் வலி
கர்ப்பிணிப் பெண்களில் அனைவருக்கும் தடுப்பூசி போடலாமா?
கர்ப்பிணிப் பெண்களுக்கான முரண்பாடுகள் பொது மக்களை போன்றது. கொரோனா தடுப்பூசி முதல் டோஸ் போட்டபிறகு ஒவ்வாமை ஏற்பட்டாலோ தடுப்பூசிகள் அல்லது மருந்துகள், மருந்து பொருட்கள், உணவுப் பொருட்களால் ஒவ்வாமை இருப்பவர்களுக்கு மருத்துவர்களின் ஆலோசனை தேவை.
ஏற்கனவே கொரோனா பாதிப்பு இருந்தால் என்ன செய்வது?
கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டால் நோய் தொற்றியதிலிருந்து 12 வாரங்களுக்கு பிறகு அல்லது குணமடைந்த 4 முதல் 8 வாரங்களுக்கு பிறகு தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம். கர்ப்ப காலத்தில் ஒரு பெண்ணுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டால், பிரசவத்திற்குப் பிறகு அவருக்கு தடுப்பூசி போட வேண்டும்.
பக்கவிளைவுகள் எவ்வாறு கண்காணிக்கப்படும்?
தடுப்பூசி போட்டுக்கொண்ட பின்னர் உண்டாகும் பாதகமான விளைவுகள் (Adverse Effect Following Immunization -AEFI) என்னென்ன என்பது கோவின் தளத்தில் பதிவு செய்யப்படுகிறது. மேலும் சம்பந்தப்பட்ட மருத்துவ அதிகாரியிடம் தெரிவிக்கப்பட வேண்டும்.
கொரோனா கர்ப்பிணிப் பெண் மற்றும் குழந்தையை எவ்வாறு பாதிக்கிறது?
பெரும்பாலான பாதிக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண்கள் (> 90%) மருத்துவமனையில் அனுமதிக்கப்படாமல் மீண்டு வந்தாலும், அவர்களின் உடல் ஆரோக்கியத்தில் விரைவான சரிவு ஒரு சிலருக்கு ஏற்படக்கூடும் என்று அமைச்சகம் கூறியுள்ளது. "கொரோனா இல்லாத கர்ப்பிணிப் பெண்களுடன் ஒப்பிடும்போது, கொரோனா அறிகுறி உள்ளவர்கள் ஐ.சி.யுவில் சேருதல், ஈட்ரோஜெனிக் குறைப்பிரசவம், pre-eclampsia போன்ற அறிகுறிகள், சிசேரியன் மற்றும் இறப்பு உள்ளிட்ட பாதகமான கர்ப்ப விளைவுகளின் ஆபத்து அதிகம் என கூறப்பட்டுள்ளது.
கொரோனா பாதித்த தாய்மார்களுக்கு பிறந்த பெரும்பாலான குழந்தைகள்(95%) நல்ல உடல்நிலையில் இருக்கிறார்கள். இருப்பினும் கொரோனா தொற்று குறைப்பிரசவத்திற்கான வாய்ப்பை அதிகரிக்கிறது. மேலும் பிறந்த குழந்தைக்கு மருத்துவமனையில் சேர்க்கப்படுவதற்கான வாய்ப்பையும், சில சந்தர்ப்பங்களில் மரணத்தையும் கூட அதிகரிக்கிறது என்று கூறப்பட்டுள்ளது.
சில கர்ப்பிணிப் பெண்கள் மற்றவர்களை விட அதிக ஆபத்தில் உள்ளார்களா?
இணை நோய் உள்ளவர்கள் நீரிழிவு நோயாளிகள், உறுப்பு மாற்று சிகிச்சை பெற்றவர்கள், டாயாலிசிஸ் மற்றும் congenital அல்லது இதய நோய் போன்ற சில பிரிவுகள் மற்றும் நிபந்தனைகளும் கர்ப்பிணி பெண்களுக்கு கொரோனா தொற்றிலிருந்து கடுமையான நோய்க்கு அதிக ஆபத்தில் உள்ளன.
கோ-வின் செயலில் பதிவு செய்தோ அல்லது அருகில் உள்ள தடுப்பூசி மையங்களுக்கு நேரில் சென்றோ கர்ப்பிணி பெண்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம் என தெரிவித்துள்ள மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம், கர்ப்பிணி பெண்களுக்கு தடுப்பூசி செலுத்துவது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களோடு பகிர்ந்து கொள்ளப்படும் எனவும் கூறியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.