மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாகி 15 நாட்கள் கடந்தபின்னரும், எந்தவொரு கட்சியும் ஆட்சியமைக்க முன்வராததால், கவர்னர் கோஷ்யாரின் பரிந்துரையின்படி, அங்கு ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ஆட்சி எதனடிப்படையில் அமல்படுத்தப்படுகிறது?
மாநில அரசை கலைத்தோ அல்லது மத்திய அரசின் நேரடி பார்வையின் மூலமாகவோ மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்படுகிறது. மத்திய அமைச்சரவையின் பரிந்துரைக்குப்பின் ஜனாதிபதியின் ஒப்புதல் பெற்ற பிறகு, 356வது சட்டப்பிரிவின்படி, மாநிலங்களில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டு வருகிறது. கவர்னரின் பரிந்துரையின் பேரில், ஜனாதிபதி ஒப்புதலின்படி, பரிந்துரைக்கப்படும் மாநிலங்களில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்படும். இந்திய அரசியல் சட்டமைப்பின்படியான நடவடிக்கைகளை மேற்கொள்ளாத மாநிலங்களில், ஜனாதிபதியே நேரடியாக தலையிட்டு, அங்கு ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த செய்யமுடியும்.
மகாராஷ்டிரா சட்டசபை தற்போது முடக்கப்பட்டு அங்கு ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது.இருந்தபோதிலும், தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் புதிய ஆட்சியமைக்க தேர்தல் கமிஷனை அணுகும்போது, மீண்டும் அங்கு ஜனாதிபதி ஆட்சி அகற்றப்பட வாய்ப்பு ஏற்படும்.
ஜனாதிபதி ஆட்சியின் பதவிக்காலம் எவ்வளவு?
பெரும்பான்மையான எம்எல்ஏக்களின் ஆதரவுடன் ஒரு கட்சி ஆட்சி அமைக்க கவர்னரை நாடும்போது, அத்தகைய நடவடிக்கைகளில் முன்னேற்றம் ஏற்பட்டால், ஜனாதிபதி ஆட்சி தானாக நிறைவுக்கு வந்துவிடும். இதற்கு பார்லிமென்ட் ஒப்புதல் பெற தேவையில்லை.
மகாராஷ்டிராவில் ஆட்சி அமைய இதுமட்டும் காரணமாக இருந்துவிடமமுடியாது. ஏனெனில், அங்குள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் கூட்டணியின் பேரில் ஆட்சி அமைப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன. யார் கட்சி அமைய போகிறது என்பது மட்டும் யாருக்கும் தெரியாத ரகசியம்..
356வது சட்டப்பிரிவின்படி, ஜனாதிபதி ஆட்சிக்கு 6 மாதங்கள் தான் பதவிக்காலம். ஆனால், இந்த 6 மாத கால அளவை, 3 ஆண்டுகள் வரை நீட்டித்துக்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
இது முதல்முறையல்ல….
மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்படுவது இது ஒன்றும் முதல்முறையல்ல. இதற்குமுன், பல்வேறு மாநிலங்களில், பல்வேறு காலகட்டங்களில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது.
2002ம் ஆண்டில் நடந்த உத்தரபிரதேச சட்டசபை தேர்தலில், எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனையடுத்து அங்கு ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது. மார்ச் 3 முதல் மே 2 வரையிலான 56 நாட்கள் நீடித்த ஜனாதிபதி ஆட்சி, மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி – பா.ஜ., வுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தின் படி, மே 3ம் தேதி மாயாவதி முதல்வர் ஆனதை தொடர்ந்து அங்கு ஜனாதிபதி ஆட்சி முடிவுக்கு வந்தது.
பகுஜன் சமாஜ் கட்சி அதிருப்தி எம்எல்ஏக்கள், சமாஜ்வாடி கட்சியில் இணைந்ததால், பகுஜன் கட்சி பெரும்பான்மை இழந்தது. இதனையடுத்து 2003, ஆகஸ்ட் மாதம், மாயாவதி, முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.
2002ம் ஆண்டில் நடந்த ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தலில், யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காததால், அங்கு அக்டோபர் 18 முதல் நவம்பர் 2 வரையிலான 15 நாட்களுக்கு ஜனாதிபதி ஆட்சி அமலில் இருந்தது. தேசிய மாநாட்டு கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்றிருந்த போதிலும், பெரும்பான்மை இடங்களை பெற அக்கட்சி தவறிவிட்டது. இதனையடுத்து, பிடிபி எனப்படும் மக்கள் ஜனநாயக கட்சி மற்றும் காங்கிரஸ் கூட்டணியிலான ஆட்சி அங்கு அமைந்தது. ஆட்சிக்காலத்தின் முதல் 3 ஆண்டுகளுக்கு பிடிபி தலைவர் முப்தி முகம்மது சயீத்தும், அடுத்த 3 ஆண்டுகளுக்கு காங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆசாத்தும் முதல்வர் பதவியை அலங்கரித்தனர்.
2005ம் ஆண்டில் நடந்த பீகார் சட்டசபை தேர்தலில், எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. மேலும் கூட்டணி அமைத்து ஆட்சியமைக்க எந்த கட்சியும் விரும்பவில்லை. இதனையடுத்து, 2005, மார்ச் 7 முதல், நவம்பர் 24 வரையிலான 262 நாட்கள் கால அளவிற்கு அங்கு ஜனாதிபதி ஆட்சி அமலில் இருந்தது.
பின் அக்டோபர் – நவம்பர் மாதங்களில் அங்கு மீண்டும் தேர்தல் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.