Advertisment

சுப்ரீம் கோர்ட்: டி.ஒய் சந்திரசூட் கொலிஜியத்தில் இணையும் நீதிபதி கன்னா; 6-வது நபர் ஏன்?

நீதிபதி டி.ஒய். சந்திரசூட்டின் இரண்டு ஆண்டு பதவிக்காலத்தில், அவர் தலைமை வகிக்கும் கொலிஜியம், உச்ச நீதிமன்ற நீதிபதிகளை நியமிக்க 18 பரிந்துரைகளை அளிக்கும்.

author-image
WebDesk
New Update
Principle of seniority and next CJI Chandrachuds 5 plus 1 collegium

உச்ச நீதிமன்ற கொலீஜியம்: (இடமிருந்து) நீதிபதி கே.எம். ஜோசப், நீதிபதி டி.ஒய். சந்திரசூட், தலைமை நீதிபதி யூ.யூ., லலித், நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், நீதிபதி அப்துல் நஷீர்.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி யூ.யூ. லலித், அடுத்த தலைமை நீதிபதியாக நீதிபதி டி.ஒய். சந்திரசூட் பெயரை பரிந்துரைத்துள்ளார். டி.ஒய். சந்திரசூட் உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக வரும் நவம்பர் 9ஆம் தேதி பதவியேற்பார்.

நீதிபதி சந்திரசூட்டின் இரண்டு ஆண்டு பதவிக் காலத்தில், அவர் தலைமை வகிக்கும் கொலிஜியம், உச்ச நீதிமன்ற நீதிபதிகளை நியமிக்க 18 பரிந்துரைகளை அளிக்கும்.

Advertisment

மேலும், இது ஒரு அசாதாரண கொலிஜியமாக இருக்கும்: ஐந்து உறுப்பினர்களுக்குப் பதிலாக, அது ஆறு பேரைக் கொண்டிருக்கும்.

கொலிஜியம் என்றால் என்ன?

கொலிஜியம் என்பது நீதிபதிகளை நியமிக்கும் ஒரு சட்டப்பூர்வ அமைப்பு ஆகும். இது உச்ச நீதிமன்றத்தின் முதல், இரண்டு, மூன்று நீதிபதிகளின் வழக்குகளின் தீர்ப்புகள் மூலம் இது உருவானது.

எனினும், இந்திய அரசியலமைப்புச் சட்டம் கொலிஜியம் முறையைக் குறிப்பிடவில்லை. எவ்வாறாயினும், உயர் நீதித்துறைக்கு நீதிபதிகளை நியமிப்பதில் இந்திய தலைமை நீதிபதி தலைமையிலான கொலிஜியம் முதன்மையானது.

இந்தக் கொலிஜியம் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையில் உள்ளது மற்றும் நீதிமன்றத்தின் நான்கு மூத்த நீதிபதிகளை உள்ளடக்கியது.

இந்த அமைப்பு, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகளின் நியமனம் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகளை இடமாற்றம் செய்வதற்கான பரிந்துரைகளை அரசுக்கு வழங்குகிறது.

மேலும், உயர் நீதிமன்றங்களுக்கு நீதிபதிகளை நியமிப்பதற்கான பரிந்துரைகளை தலைமை நீதிபதி தலைமையில் மற்றும் உச்ச நீதிமன்றத்தின் இரு மூத்த நீதிபதிகள் அடங்கிய தனியான மூன்று உறுப்பினர் கொலிஜியம் வழங்குகிறது.

நீதிபதிகளின் வழக்குகள் என்ன?

முதல் நீதிபதிகள் வழக்கு:

இந்திய அரசுக்கு எதிராக 1981இல் முன்னாள் நீதிபதி எஸ் பி குப்தா தொடர்ந்த வழக்கில், ஏழு நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு, நீதிபதிகள் நியமனம் குறித்து அரசுடன் தலைமை நீதிபதி உடன்பட முடியாது எனத் தீர்ப்பளித்தது.

இரண்டாவது நீதிபதிகள் வழக்கு

1993 இல், ஒன்பது நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு 1981ஆம் ஆண்டு வழங்கப்பட்ட தீர்ப்பின் சரியான தன்மையை ஆராய்ந்து, அதை மாற்றியது.

"ஆலோசனை" என்ற வார்த்தை உண்மையில் தலைமை நீதிபதியின் "ஒப்புதல்" என்று பொருள் எனத் தீர்ப்பு கூறியது. கொலிஜியத்தை உருவாக்கும் இரண்டு மூத்த நீதிபதிகளுடன் தலைமை நீதிபதி முடிவெடுப்பார் என்றும் அது கூறியது.

மூன்றாவது நீதிபதிகள் வழக்கு

1998 ஆம் ஆண்டில், அப்போதைய ஜனாதிபதி கே.ஆர். நாராயணன், நீதிபதி நியமனங்களில் தலைமை நீதிபதிக்கு அளிக்கப்பட்ட முதன்மையானது சட்டப்பூர்வமாக சரியானதா என்பது குறித்து அதன் ஆலோசனை அதிகார வரம்பில் உச்ச நீதிமன்றத்தின் கருத்தைக் கோரினார்.

1993 இன் முடிவை உச்ச நீதிமன்றம் மீண்டும் வலியுறுத்தியது, ஆனால் கொலிஜியத்திற்கு அதிகமான மூத்த நீதிபதிகளைக் கொண்டு வந்தது, அதன் பலத்தை மூன்றிலிருந்து ஐந்து நீதிபதிகளாக அதிகரித்தது.

கொலிஜியத்தில் யாரெல்லாம் இருப்பார்?

மூன்றாவது நீதிபதிகள் வழக்கின் தீர்ப்பு, தற்போதைய நீதிபதிகள் நியமன முறைக்கு சட்டப்பூர்வ ஆதரவை அளித்து. தலைமை நீதிபதி மற்றும் நான்கு மூத்த நீதிபதிகளுடன் கொலிஜியத்தை உருவாக்கியது.

கொலிஜியத்தின் முக்கிய நோக்கம் திறமையான நீதிபதிகளை உச்ச நீதிமன்றத்துக்கு கொண்டு வருவது ஆகும். பொதுவாக, கொலிஜியத்தில் உள்ள 5 மூத்த நீதிபதிகளில் ஒருவர் தலைமை நீதிபதியாக இருப்பார்.

இருப்பினும், நீதிபதி சந்திரசூட் தலைமை நீதிபதியாக இரண்டு வருட பதவிக்காலத்தில், ஒரு சாத்தியமான CJI வேட்பாளர் மே 2023 வரை கொலிஜியத்தில் இருக்க வாய்ப்பில்லை.

சந்திரசூட் தலைமையிலான கொலிஜியம் எப்படி இருக்கும்?

நவம்பர் 9 ஆம் தேதி அவர் தலைமை நீதிபதியாக பதவியேற்கும் போது, நீதிபதி சந்திரசூட்டின் கொலிஜியத்தில் நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல், அப்துல் நசீர், கேஎம் ஜோசப் மற்றும் எம்ஆர் ஷா ஆகியோரும் இடம் பெறுவார்கள்.

ஜனவரி 4, 2023 அன்று நீதிபதி நசீர் ஓய்வு பெறும்போது இந்த கூட்டணி மாறும். தலைமை நீதிபதி சந்திரசூட்டைத் தவிர, நீதிபதிகள் கவுல், ஜோசப், ஷா மற்றும் அஜய் ரஸ்தோகி ஆகியோர் இருப்பார்கள்.

மே 15, 2023 அன்று, நீதிபதி ஷா ஓய்வு பெற்ற பிறகு, கொலிஜியத்தில் (அப்போதைய) தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதிகள் கவுல், ஜோசப், ரஸ்தோகி மற்றும் சஞ்சீவ் கண்ணா ஆகியோர் இருப்பார்கள்.

நீதிபதி சந்திரசூட்டைத் தொடர்ந்து நவம்பர் 11, 2024 அன்று நீதிபதி கன்னா தலைமை நீதிபதியாக வருவார்.

5 + 1 கொலிஜியம் என்றால் என்ன?

சீனியாரிட்டி வரிசைப்படி, நீதிபதி கன்னா நவம்பர் 9, 2022 முதல் கொலிஜியத்தின் ஆறாவது உறுப்பினராக இருப்பார்.

இது முன்னதாக 2007-ல் நடந்தது. அப்போதைய தலைமை நீதிபதி கே ஜி பாலகிருஷ்ணன் தலைமைப் பொறுப்பை ஏற்றபோது, அவர் தலைமையிலான கொலிஜியத்தில், அடுத்த தலைமை நீதிபதி போட்டியாளர் இருக்க வாய்ப்பு இல்லை.

தொடர்ந்து, தலைமை நீதிபதி பதவிக்கு அடுத்த இடத்தில் இருந்த நீதிபதி எஸ்.எச்.கபாடியா, ஆறாவது உறுப்பினராக கொலிஜியத்திற்கு அழைக்கப்பட்டார் என்பது நினைவு கூரத்தக்கது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Supreme Court Justice D Y Chandrachud
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment