/indian-express-tamil/media/media_files/2025/09/18/rahul-gandhi-attacks-ec-2025-09-18-17-15-27.jpg)
தேர்தல் ஆணையம் Vs ராகுல் காந்தி: கர்நாடகாவின் ஆலந்து தொகுதியில் நடந்தது என்ன?
செப்.18-ம் தேதி வியாழனன்று, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, தேர்தல் ஆணையத்தின் மீது மீண்டும் ஒரு கடுமையான குற்றச்சாட்டை வைத்தார். இந்தியாவின் ஜனநாயகத்தை அழிப்பவர்களுக்கு தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பாதுகாப்பு அளிப்பதாக அவர் குற்றம்சாட்டினார். இதற்கு பதிலளித்த தேர்தல் ஆணையம், அந்த குற்றச்சாட்டுகள் "தவறானவை மற்றும் அடிப்படை ஆதாரமற்றவை" என மறுத்தது.
ராகுல் காந்தி குறிப்பிட்ட பல குற்றச்சாட்டுகளில், கர்நாடகாவின் ஆலந்து தொகுதியிலும் நடந்ததாகக் குறிப்பிட்டார். தேர்தல் ஆணையமும் தங்கள் பதிலில், 2023-ல் ஆலந்து தொகுதியில் வாக்காளர் பட்டியலிலிருந்து பெயர்களை நீக்க சிலர் மேற்கொண்ட முயற்சி குறித்து குறிப்பிட்டது. இந்த விவகாரத்தை விசாரிக்க தாங்களே ஒரு FIR பதிவு செய்ததாகவும் ஆணையம் தெரிவித்தது. ஆலந்து தொகுதியில் என்ன நடந்தது? வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்களை நீக்க யார் மனு தாக்கல் செய்யலாம்? என்பதை இங்கே விரிவாகப் பார்ப்போம்.
ராகுல் காந்தி ஆலந்து தொகுதி பற்றி கூறியது என்ன?
ராகுல் காந்தி தனது குற்றச்சாட்டில், "கர்நாடகாவின் ஆலந்து தொகுதியில் 6 ஆயிரத்து 18 வாக்குகள் நீக்கப்பட்டுள்ளன. 2023 தேர்தலில் ஆலந்து தொகுதியில் மொத்தமாக எத்தனை வாக்குகள் நீக்கப்பட்டன என்பது நமக்குத் தெரியாது. அது 6 ஆயிரத்து 18-ஐ விட அதிகமாக இருக்க வாய்ப்பு உள்ளது. ஆனால், 6 ஆயிரத்து 18 வாக்குகளை நீக்க முயன்ற ஒருவர் கையும் களவுமாகப் பிடிபட்டார். இது ஒரு தற்செயலாக நடந்தது.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க
பூத் லெவல் அதிகாரியின் (BLO) மாமாவின் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதை அவர் கவனித்தார். தனது மாமாவின் பெயரை யார் நீக்கினார்கள்? என்று அவர் சோதித்தபோது, அது பக்கத்து வீட்டுக்காரர் என்பது தெரியவந்தது. ஆனால், பெயர் நீக்கப்பட்டவருக்கும் (அ) பெயர் நீக்க முயன்றவருக்கும் இதில் எந்த சம்பந்தமும் இல்லை. ஒரு வெளியிலிருந்து செயல்படும் சக்தி, இந்த வேலையைச் செய்திருக்கிறது," என்று ராகுல் காந்தி கூறினார். காங்கிரஸ் வாக்காளர்களின் பெயர்களை நீக்குவதற்கான விண்ணப்பங்கள், கர்நாடகாவுக்கு வெளியே உள்ள ஒரு சாப்ட்வேரை பயன்படுத்தி தாக்கல் செய்யப்பட்டன என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
ஆலந்து விவகாரம் இதற்கு முன்பு எப்போது எழுப்பப்பட்டது?
2023-ம் ஆண்டு, ஆலந்து தொகுதியில் இதுபோன்ற குற்றச்சாட்டுகள் எழுந்தன. ஒரு வாக்காளர், தனது சகோதரி ஒரு பி.எல்.ஒ ஆக இருப்பதாகவும், அவரது குடும்ப உறுப்பினர்கள் சிலர் வீட்டை விட்டு வெளியேறிவிட்டதாக, அவர்களது பெயர்களை நீக்குவதற்கான படிவம் 7 விண்ணப்பங்கள் வந்ததாகக் கூறினார். ஆனால், அவர்கள் வீட்டை விட்டு வெளியேறவில்லை. அப்போது, காங்கிரஸ் இந்த விவகாரத்தை தேர்தல் ஆணையத்திடம் புகாராகப் பதிவு செய்யப்போவதாகக் கூறியது. இதுதொடர்பாக காவல்துறையிலும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தேர்தல் ஆணையமும், தாங்களாகவே இந்த வழக்கில் புகார் தாக்கல் செய்ததாக தங்கள் பதிலில் கூறியது.
பூத் லெவல் அதிகாரி (BLO) மற்றும் படிவம் 7 என்றால் என்ன?
தேர்தல் ஆணையம் தனது பதிலில், "பொதுமக்கள் யாரும் ஆன்லைனில் வாக்காளரின் பெயரை நீக்க முடியாது. பாதிக்கப்பட்ட நபருக்கு வாய்ப்பு கொடுக்காமல் எந்தப் பெயரையும் நீக்க முடியாது," என்று கூறியுள்ளது. விதிகளின்படி, ஒரு வாக்காளர் இறந்துவிட்டால் அல்லது வேறு இடத்திற்கு குடிபெயர்ந்துவிட்டால், பி.எல்.ஓ-க்கள் வாக்காளர் பெயரை நீக்க விண்ணப்பிக்கலாம். ஆனால், பெயர் நீக்குவதற்கு முன்பு, ஒரு சரிபார்ப்பு சுற்று நடத்தப்பட வேண்டும்.
பூத் லெவல் அதிகாரி (BLO) என்பது பொதுவாக உள்ளூர் அரசு ஊழியர், அங்கன்வாடி ஊழியர், அரசுப் பள்ளி ஆசிரியர் போன்றவர்கள். அவர்கள் குறிப்பிட்ட பகுதியில் வசிப்பவர்கள், அந்தப் பகுதி பற்றி நன்கு அறிந்தவர்கள். தேர்தல் ஆணையத்தின் உள்ளூர் பிரதிநிதியாகச் செயல்படும் BLO, வாக்காளர் பட்டியலைப் புதுப்பிக்க உதவுகிறார்.
2018-ம் ஆண்டு தேர்தல் ஆணையத்தின் கையேடு, "பி.எல்.ஓ-க்கள் அடிக்கடி கிராமங்களுக்குச் சென்று உள்ளூர் மக்களுடன், குறிப்பாக கிராமப் பெரியவர்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுடன் உரையாடி, இறந்தவர்கள், குடிபெயர்ந்தவர்கள், இரட்டைப் பெயர்கள் உள்ள வாக்காளர்களை அடையாளம் காண்பார்கள்," என்று கூறுகிறது.
படிவம் 7 (Form 7) என்பது BLO அல்லது அந்தத் தொகுதியில் உள்ள எந்த வாக்காளரும் நிரப்பக்கூடிய படிவம் ஆகும். அதில், "நான் இந்த வாக்காளர் பட்டியலிலிருந்து இந்நபரின் பெயரை நீக்க ஆட்சேபிக்கிறேன். இந்தக் குறிப்பிட்ட நபரின் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என்று கோருகிறேன்," என்று குறிப்பிடப்பட்டிருக்கும்.
பி.எல்.ஓ-க்களின் கோரிக்கைகள் பின்னர் களச் சரிபார்ப்பு அதிகாரி (Field Level Verifying Officer) மூலம் சரிபார்க்கப்படும். தேர்தல் ஆணையம், "ஒரு பெயரை நீக்க, சம்பந்தப்பட்ட வாக்காளருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு, அவர் ஆட்சேபனை தெரிவிக்க வாய்ப்பும், விசாரணையும் வழங்கப்படும்" என்று மேலும் கூறியுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.