குஜராத்தில் உள்ள பல தெலி துணை சாதிகளில் ஒன்றான மோத்-காஞ்சி சாதி, வரலாற்று ரீதியாக சமையல் எண்ணெய்கள் பிரித்தெடுத்தல் மற்றும் எண்ணெய் வர்த்தகம் தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. தெலி சாதி குறித்து நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை எல்லாம் இங்கே.
ஆங்கிலத்தில் படிக்க: Rahul’s statement on PM Modi: All you need to know about Teli caste
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் நரேந்திர மோடி இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (.ஓபி.சி) பிரிவில் பிறக்கவில்லை என்றும், அவர் பொதுப் பிரிவு சாதியை சேர்ந்தவர் என்றும் வியாழக்கிழமை (பிப்ரவரி 8) கூறினார்.
“நரேந்திர மோடி ஓ.பி.சி-யாகப் பிறக்கவில்லை… [அவர்] குஜராத்தில் தெலி சாதியில் பிறந்தவர். பா.ஜ.க அரசு 2000-ம் ஆண்டில் மோடியின் சமூகத்தை ஓ.பி.சி பிரிவில் சேர்த்தது” என்று ராகுல் காந்தி கூறினார். குஜராத் மாநிலத்தில் பாரத் ஜோடோ நியாய யாத்திரையின் போது ஒடிசாவின் ஜார்சுகுடா மாவட்டத்தில் உள்ள பெல்பஹர் என்ற இடத்தில் ஒரு பேரணியில் ராகுல் காந்தி பேசினார்.
குஜராத்தில் தெலி சாதியின் ஓ.பி.சி அந்தஸ்து
பிரதமர் நரேந்திர மோடி குஜராத்தில் சமையல் எண்ணெய்கள் பிரித்தெடுத்தல் மற்றும் எண்ணெய் வர்த்தகம் தொடர்பான நடவடிக்கைகளில் வரலாற்று ரீதியாக ஈடுபட்டுள்ள பல தெலி துணை சாதிகளில் ஒன்றான மோத்-காஞ்சி சாதியைச் சேர்ந்தவர். ஆரம்பத்தில் 104 ஓ.பி.சி சாதிகளின் மத்திய பட்டியலில், குஜராத்தில் இருந்து காஞ்சி (முஸ்லிம்), தெலி, மோத் காஞ்சி, தெலி-சாஹு, தெலி-ரத்தோட், தெலி-ரத்தோர் உள்பட 23 சாதிகள் இடம்பெற்றிருந்தன.
முஸ்லிம் காஞ்சி சமூகம் 1999-ல் ஓ.பி.சி- சாதிகளின் மத்திய பட்டியலில் சேர்க்கப்பட்டது. ஏப்ரல் 4, 2000-ல் குஜராத்தில் இருந்து தெலி, மோத் காஞ்சி, தெலி சாஹு, தெலி ரத்தோட் மற்றும் தெலி ரத்தோர் போன்ற சமூகங்கள் குஜராத்தின் மத்திய ஓ.பி.சி பட்டியலில் சேர்க்கப்பட்டனர்.
தற்போது பிரதமராக இருக்கும் மோடி 2001-ம் ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி குஜராத் முதல்வராக பதவியேற்றார்.
குஜராத்திற்கு வெளியே தெலி சாதி
டெலி சாதி உறுப்பினர்கள் குஜராத்திற்கு வெளியே உள்ளனர். கிழக்கு உத்தரபிரதேசத்தில், அவர்கள் வழக்கமாக குப்தா என்ற குடும்பப்பெயரால் குறிப்பிடுகிறார்கள். இருப்பினும் சிலர் மோடி என்ற பெயரையும் பயன்படுத்துகிறார்கள்.
பீகாரில், ஓ.பி.சி சாதிகளின் மத்திய பட்டியலில் உள்ள 136 சமூகங்களில், 53-வது இடத்தில் தெலி சாதி இருப்பதாகக் கூறுகிறது. இதேபோல், ராஜஸ்தானின் மத்திய ஓ.பி.சி பட்டியலில், 51-வது இடத்தில் தெலி சாதி இருப்பதாகக் கூறுகிறது.
மோடி குடும்பப்பெயர் மற்றும் சாதி
வேலை மற்றும் கல்வியில் இடஒதுக்கீட்டிற்கான ஓ.பி.சி சாதிகளின் மத்திய பட்டியலில் மோடி என்ற பெயரில் எந்த சமூகமும் அல்லது சாதியும் இல்லை.
உண்மையில், பலர் மோடி என்ற குடும்பப்பெயரைப் பயன்படுத்துகிறார்கள். இது எந்தவொரு குறிப்பிட்ட சமூகத்தையும் சாதியையும் குறிக்கவில்லை. குஜராத்தில், மோடியின் குடும்பப் பெயரை இந்துக்கள், முஸ்லிம்கள் மற்றும் பார்சிகள் பயன்படுத்துகின்றனர். வைஷ்ணவர்கள் (பனியாக்கள்), கர்வாக்கள் (போர்பந்தரைச் சேர்ந்த மீனவர்கள்), மற்றும் லோஹானாக்கள் (வணிகர்கள் சமூகம்) மத்தியில் மோடி குடும்பப்பெயர் கொண்டவர்கள் உள்ளனர்.
பின்னர் சூரத்தின் மோத்வானிக் சமூகம் உள்ளது. இந்த சமூகத்தை சேர்ந்தவர்கள் மோதேஸ்வரி மாதாவை வழிபடுகின்றனர். மோதேஸ்வரி மாதா கோவில் மெஹ்சானா மாவட்டத்தில் உள்ள மோதேரா சூரியன் கோவிலுக்கு அருகில் உள்ளது. குஜராத்தில் சுமார் 10 லட்சம் மோத்வானியர்கள் உள்ளனர். அவர்கள் அம்மாநிலம் முழுவதும் குறிப்பாக மாநிலத்தின் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் வாழ்கின்றனர்.
இதர நன்கு அறியப்பட்ட மோடிகள்
மேலே கூறியது போல உ.பி.யிலும் பீகாரிலும் மோடிகள் இருக்கிறார்கள்.
ஹரியானா மாநிலம் ஹிசாரில் உள்ள அக்ரோஹாவைச் சேர்ந்த அகர்வால் சமூகத்தைச் சேர்ந்த மார்வாரிகளால் மோடி என்ற குடும்பப்பெயர் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. இந்த சமூகம் பின்னர் ஹரியானாவின் மகேந்திரகர், ராஜஸ்தானின் ஜுன்ஜுனு மற்றும் சிகார் போன்ற மாவட்டங்களில் பரவியது.
ஐ.பி.எல் முன்னாள் ஆணையர் லலித் மோடியின் தாத்தா, ராய் பகதூர் குஜர் மால் மோடி, மகேந்திரகரில் இருந்து மீரட் அருகே குடியேறினார். பின்னர் அந்த நகரம் மோடிநகர் என பெயர் மாற்றப்பட்டது.
தப்பியோடிய வைர வியாபாரி நிரவ் மோடி குஜராத்தின் ஜாம்நகரைச் சேர்ந்தவர், இவர் பாரம்பரியமாக வைர வியாபாரத்தில் ஈடுபட்டு வரும் சமூகத்தைச் சேர்ந்தவர்.
டாடா ஸ்டீல் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ரஸ்ஸி மோடி மற்றும் திரைப்பட ஆளுமை சொஹ்ராப் மோடி ஆகியோர் பம்பாயிலிருந்து (மும்பை) வந்த பார்சிகள் ஆவர்.
கடந்த ஆண்டு ராகுல் காந்திக்கு அவதூறு குற்றச்சாட்டில் இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு நாடாளுமன்றத்தில் இருந்து நீக்கப்பட்டபோது, மோடியின் குடும்பப் பெயரும் அதன் சாதியும் தீவிர விவாதத்திற்கு உள்ளானது. தப்பியோடிய நிரவ் மற்றும் லலித் மோடியை குறிப்பிட்டு பேசிய ராகுல், “எல்லா திருடர்களுக்கும் மோடி என்ற குடும்பப்பெயர் ஏன் இருக்கிறது?” என்ற சொல்லைப் பயன்படுத்தி கேட்டிருந்தார்.
இதனால், குஜராத் பா.ஜ.க எம்.எல்.ஏ பூர்ணேஷ் மோடி, “மோடி என்ற குடும்பப்பெயர் கொண்ட 13 கோடி பேர்களை சோர் (திருடர்கள்) என்று அழைத்து அவமதித்துவிட்டார்” என்று கூறி ராகுல் காந்தி மீது அவதூறு புகார் அளித்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“