மாநிலங்களவையில் கடந்த 20ம் தேதி வேளாண் தொடர்பான மசோதாக்கள் மீதான விவாதத்தின்போது, ரகளையில் ஈடுபட்டதாக 8 உறுப்பினர்களை அவைத்தலைவர் வெங்கையா நாயுடு ஒருவார காலத்திற்கு சஸ்பெண்ட் செய்தார். குரல் வாக்கெடுப்பின் மூலம் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
டெரிக் ஓ பிரியன், டோலா சென் (டி.எம்.சி), சஞ்சய் சிங் (ஆம் ஆத்மி), ராஜிவ் சதாவ் (காங்கிரஸ்), கே.ராகேஷ் , இளமாறன் கரீம் (சி.பி.எம்), ரிபுன் போரா, நசீர் ஹூசைன் (காங்கிரஸ்), ஆகியோரை சஸ்பென்ட் செய்யும் தீர்மானத்தை நடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் வி.முரளிதரன் அவையில் தாக்கல் செய்தார்.
தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின்னர், எட்டு உறுப்பினர்கள் சபையை விட்டு வெளியேறும்படி அவைத் தலைவர் எம்.வெங்கையா நாயுடு கேட்டுக்கொண்டார். இடைநீக்கம் செய்யப்பட்ட உறுப்பினர்கள் முதலில் வெளியேற மறுப்பு தெரிவித்தனர். பின்னர் பாராளுமன்றத்தில் உள்ள காந்தி சிலையின் முன்பாக தர்ணா போராட்டத்தில் இறங்கினர். இந்த இடைநீக்கத்தை அனைத்து எதிர்க்கட்சிகளும் கடுமையாக விமர்சித்தது.
உறுப்பினர்களை இடைநீக்கம் செய்வதற்கான காரணம் என்ன?
மக்களவை சபாநாயகர் மற்றும் மாநிலங்களவையின் தலைவர் - தலைமை அலுவலரின் பங்கு மற்றும் கடமை,
சபைக்கும் ஒழுங்கை பராமரித்து, சீராக செயல்பட வைப்பது அவைத்தலைவரின் கடமையாக கருதப்படுகிறது. வேளாண் தொடர்பான மசோதாக்கள் மீதான விவாதத்தின் போது ஏற்பட்ட ரகளை காரணமாக உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
அவை நடவடிக்கைகள் சரியான முறையில் நடைபெறுவதை உறுதி செய்ய, சபாநாயகர்/தலைவர் உறுப்பினரை சபையிலிருந்து வெளியேற்ற அதிகாரம் கொண்டவராக உள்ளார்.
அவையின் செயல்பாட்டு விதிகள் என்ன ?
மக்களவை நடைமுறை மற்றும் நடத்தை விதிகள் எண் 373-ல் “ எந்தவொரு உறுப்பினரின் செயல் பாடுகள் ஒழுங்கற்ற தன்மையில் இருப்பதாக அவைத் தலைவர் கருதுவாரானால், அத்தகைய உறுப்பினரை சபையிலிருந்து உடனடியாக விலகுமாறு அறிவிக்கலாம். அவ்வாறு, அறிவிக்கப்பட்ட உறுப்பினர் அவையில் இருந்து உடனடியாக வெளியேற வேண்டும். இந்த பெயரிடப்பட்ட உறுப்பினர் மீதமுள்ள கூட்டத் தொடரில் கலந்து கொள்ளதாவராக கருதப்படுவார் ” என்று தெரிவிக்கிறது.
சபாநாயகரின் கண்ணியத்தைக் குறைக்கும் உருப்பினர்களுக்கு, விதி 374 ன்: (1) சபாநாயகர் முக்கியம் என்று கருதுவாரானால் , சபாநாயகரின் அதிகாரத்தை புறக்கணிக்கும் (அல்லது) சபையின் விதிகளை துஷ்பிரயோகம் செய்யும் ஒரு உறுப்பினரின் பெயரை இந்த விதியின் கீழ் குறிப்பிடலாம்.
“(2) இந்த பெயரிடப்பட்ட உறுப்பினரை ( 374 (1)) மீதமுள்ள சபையின் கூட்டத் தொடரில் இருந்து முழுவதும் இடைநீக்கலாமா என்ற தீர்மானத்தை சபாநாயகர் கொண்டு வரவேண்டும். இருந்தாலும், ஒட்டுமொத்த சபைக்கும் சபாநாயகரின் இடைநீக்கத்தை முடித்து வைக்கும் அதிகாரம் உண்டு. அதற்கு சபை உறுப்பினர்கள் தனியாக ஒரு தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும்.
(3) இந்த விதியின் கீழ் இடைநீக்கம் செய்யப்பட்ட ஒரு உறுப்பினர் உடனடியாக சபையின் வளாகத்தில் இருந்து விலகல் வேண்டும்.
விதி 374 ஏ- ன் கீழ் : “(1) 373 மற்றும் 374 விதிகளில் என்ன சொல்லியிருந்தாலும் சரி, ஒரு உறுப்பினர் சபையின் மையப் பகுதிக்கு வந்தாலோ ( well of the house) சபையின் விதிகளை துஷ்பிரயோகம் செய்தாலோ, தொடர்ந்து கூச்சலிடுவதன் மூலம் அதன் செயல்பாடுகளை முடக்கினாலோ 374 ஏ விதியின் கீழ் சபாநாயகரால் பெயரிடப்படுவார். அவ்வாறு பெயரிடப்பட்டவர், தொடர்ச்சியாக ஐந்து அமர்வுகள் (அல்லது) எஞ்சியுள்ள அமர்வுகளில் சபையின் பணிகளில் இருந்தது இடைநீக்கப்படுவார். இருந்தாலும், அந்த சபைக்கு , சபாநாயகர் இடைநீக்கம் செய்யும் முடிவை முடித்து வைக்கும் அதிகாரம் உண்டு. அதற்கு அவர்கள் தனியாக ஒரு தீர்மானத்தை கொண்டு வரவேண்டும்.
சரி, மாநிலங்களவையில் எப்படி இடைநீக்கம் நடைபெறுகிறது ?
கிட்டத்தட்ட மக்களவை விதிகளை ஒத்திருந்தாலும், சிறு வித்தியாசம் இங்கு காணப்படுகிறது.
மாநிலங்களவை நடைமுறை மற்றும் நடத்தை விதிகள் எண் 255 ன் கீழ் “ ஒழுங்கற்ற முறையில் நடக்கும் எந்தவொரு உறுப்பினரையும் சபையிலிருந்து விலக அவைத்தலைவர் அனுமதிக்கலாம்" என்று கூறப்படுகிறது.
எவ்வாறாயினும் சபாநாயகரைப் போலல்லாமல், ஒரு உறுப்பினரை இடைநீக்கம் செய்ய மாநிலங்களவைத் தலைவருக்கு அதிகாரம் இல்லை. சபை உறுப்பினர்கள், மற்றொரு தீர்ம்னாத்தின் மூலம், அவைத்தலைவரின் இடைநீக்கத்தை தடுத்து நிறுத்தலாம்.
அவைத்தலைவர் முக்கியம் என்று கருதுவாரானால் , அவைத்தலைவரின் அதிகாரத்தை புறக்கணிக்கும் (அல்லது) சபையின் விதிகளை துஷ்பிரயோகம் செய்யும் ஒரு உறுப்பினரின் பெயரை அவைத்தலைவர் குறிப்பிடலாம். அத்தகைய சூழ்நிலையில், பெயரிடப்பட்ட உறுப்பினரை அமர்வின் எஞ்சிய கூட்டத் தொடர் வரை இடைநீக்கம் செய்யும் தீர்மானத்தை சபை கொண்டு வர வேண்டும்.
திங்களன்று (செப் 21) அவைத் தலைவர் வெங்கையா நாயுடு பேசுகையில், "இந்த 8 உறுப்பினர்களும் நேற்று (செப் 20) நடந்து கொண்ட விதம் ஏற்கமுடியாதது மற்றும் கண்டிக்கத்தக்கது என்றார். நேற்றைய தினம் மிக மோசமான நாள் என்றும், இந்த உறுப்பினர்களின் செயலால் மாநிலங்களவையின் கண்ணியம் பாதிக்கப்பட்டது. துணைத் தலைவர் (ஹரிவன்ஷ்) உடல் ரீதியாக அச்சுறுத்தப்பட்டார். அவரது உடல் நலனுக்காக நான் கவலைப்பட்டேன்” என்று தெரிவித்தார்.
இடைநீக்கம் ஒரு பொதுவான நடைமுறையா?
இது அதிகப்படியான செயல், ஆனால் அது அசாதாரணமானது அல்ல.
* இந்த ஆண்டு மார்ச் 5 ஆம் தேதி, நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில், காங்கிரஸ் உறுப்பினர்கள் சவுரவ் கோகாய், டி.என்.பிரதாபன், டீன் குரியாகோஷ், மாணிக்க தாகூர், ராஜ்மோகன் உன்னிதன், பென்னி பெஹ்னானன், குர்ஜீத் சிங் அவுஜ்லா ஆகியோர் கூட்டத்தொடர் முழுவதும் அவையிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
* 2019 நவம்பரில் சபாநாயகர் ஓம் பிர்லா இரண்டு காங்கிரஸ் உறுப்பினர்களை இடைநீக்கம் செய்தார்.
* ஜனவரி 2019 இல், முந்தைய சபாநாயகர் சுமித்ரா மகாஜன், தெலுங்கு தேசம் மற்றும் அதிமுகவைச் சேர்ந்த 45 உறுப்பினர்களை இடைநீக்கம் செய்தார்.
* பிப்ரவரி 13, 2014 அன்று, சபையில் ஏற்பட்ட அசாதாரண சூழலைத் தொடர்ந்து, பிரிக்கப்படாத ஆந்திராவின 18 எம்பி.க்களை சபாநாயகர் மீரா குமார் இடைநீக்கம் செய்தார்.
* அதற்கு முன், செப்டம்பர் 2, 2014 அன்று, ஒன்பது உறுப்பினர்கள் ஐந்து நாட்களுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
* ஆகஸ்ட் 23, 2013 அன்று, 12 உறுப்பினர்கள் ஐந்து நாட்களுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
* மேலும் ஏப்ரல் 24, 2012 அன்று எட்டு உறுப்பினர்கள் நான்கு நாட்களுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
* மார்ச் 15, 1989 அன்று, ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோது, 63 உறுப்பினர்கள் மக்களவையில் இருந்து மூன்று நாட்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
தாக்கங்கள் என்ன?
பொதுவாக, ஒரு சமநிலையை உருவாக்க வேண்டும். அவையை சீராக கொண்டு செல்ல அவைத்தலைவர் தனது அதிகாரத்தை செயல்படுத்த கடமைப்பட்டுள்ளார் என்பதில் சந்தேகம் இல்லை. எவ்வாறாயினும், சபையை நடத்துவது தான் அவைத்தலைவரின் பணியே தவிர, சபையை ஆளுவது அல்ல என்பதை அவர் நினைவில் கொள்ள வேண்டும்.
அவையின் செயல்பாட்டு விதிகள் மீறப்படுவதற்கு தீர்வு காண எடுக்கும் நடவடிக்கைகள் ஜனநாயக மாண்புகளோடு ஒத்துப்போக வேண்டும். விதிகளை மீறி நடந்து கொண்ட, அவைத்தலைவரின் வழிகாட்டுதல்களை மதிக்காத, அவையின் செயல்பாட்டிற்கு குந்தகம் விளைவிக்கும் உறுப்பினர்கள் பொதுவெளியில் தெரியப்படுத்த தொலைக்காட்சிகள் மூலம் தெரியப்படுத்த வேண்டும் என்று முந்தைய சபாநாயகர்கள் கருத்து தெரிவித்திருந்தார்.
ஆனால், தற்போது அவை நடவடிக்கைகள் ஒளிபரப்பப்படுவதை தலைவர் நிறுத்தியதாக எதிர்க்கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
மறுக்க முடியாதது என்னவென்றால்,
சபாநாயகர்/அவைத்தலைவரின் நடவடிக்கைகள் பெரும்பாலும் அவை விதிகளை நடைமுறைப்படுத்துவதோடு அல்லாமல், அவர் சார்ந்த கட்சியின் நிலைப்பாட்டினை பிரதிபலிப்பதாகவே உள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.