அயோத்தியில் ஒரு பிரமாண்ட கோயிலுக்கான ராம ஜென்மபூமி இயக்கம் இரண்டு நூற்றாண்டுகளுக்கும் மேலாக இயங்கும் காலவரிசையைக் கொண்டுள்ளது. இரத்தம் சிந்தியதற்கு மத்தியில் பல மைல்கற்கள் உள்ளன. கடந்த மூன்று தசாப்தங்களாக இந்திய அரசியலின் போக்கையே மாற்றிய இயக்கத்தின் சுருக்கமான வரலாறு இங்கே.
ஆங்கிலத்தில் படிக்க: Ram temple at Ayodhya: A 200-year journey, with many milestones
மராத்தியர்கள் 1751-ம் ஆண்டில், அயோத்தி, காசி மற்றும் மதுராவின் கட்டுப்பாட்டை தங்களுக்கு மாற்றுமாறு, தோவாப் பகுதியில் பதான் படைகளைத் தோற்கடிக்க உதவிய அவத் நவாப்பிடம் முறையிட்டனர் என்று பா.ஜ.க-வின் முன்னாள் ராஜ்யசபா எம்பி பல்பீர் பஞ்ச் தனது சமீபத்திய புத்தகமான ‘அயோத்தியில் முயற்சி’ (Tryst With Ayodhya) நூலில் கூறியுள்ளார். 1756-ல், நவாப் ஷுஜா-உத்-தௌலா உடனடி ஆப்கானிய படையெடுப்பிற்கு எதிராக அவர்களின் உதவியை நாடியபோது, மராத்தியர்கள் மூன்று தளங்களையும் தங்களுக்கு மாற்றுமாறு கோரினர். இருப்பினும், நவாப் பின்னர் பக்கம் மாறினார், மேலும் மராட்டியர்களின் கோரிக்கை பொருத்தமற்றதாக மாறியது. 1761-ம் ஆண்டு அகமது ஷா அப்தாலியிடம் அவர்கள் மூன்றாவது பானிபட் போரில் தோல்வியடைந்தனர்.
நீதித்துறை பதிவேடுகளில், அயோத்தி சர்ச்சை 1822-ம் ஆண்டிற்கு முன்பே பதிவாகி உள்ளது என்று பஞ்ச் கூறுகிறார். ஹபிசுல்லா என்ற நீதிமன்ற அதிகாரி 1822-ல் பைசாபாத் நீதிமன்றத்தில் சமர்பித்த அறிக்கை, அயோத்தியில் சீதா ரசோயிக்கு அருகாமையில் ராஜா தசரதரின் மகனான ராமர் பிறந்த இடத்தில் பாபரால் மசூதி கட்டப்பட்டது என்று கூறுகிறது.
ஜூலை 28, 1855-ல் பாபர் மசூதிக்கு அருகில் உள்ள ஹனுமான் கர்ஹி கோயிலில் இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே இரத்தக்களரி மோதல் ஏற்பட்டது. அந்த நாளின் முடிவில், இந்துக்கள் - நாக சாதுக்கள் மற்றும் பைராகிகளின் தலைமையில் - 70-75 முஸ்லிம்களைக் கொன்றனர். மேஜர் ஜெனரல் ஜிடி அவுட்ராம் நவாப் வாஜித் அலி ஷாவிடம் ஹனுமான் கர்ஹியை அழிக்க ஷா குலாம் ஹுசைன் ஒரு பெரிய படையைத் திரட்டியதாகவும், ஆனால் மோதலைத் தவிர்க்க முடியவில்லை என்றும் தெரிவித்தார். ஹனுமான் கர்ஹியில் பலப்படுத்தப்பட்ட இந்துக்கள், ஹனுமான் கர்ஹியை பாதுகாத்தது மட்டுமின்றி, அந்த ரத்தக்கறை படிந்த அந்த நாளில் முஸ்லிம்களிடமிருந்து ஜன்மஸ்தானத்தையும் (ராமர் பிறந்ததாக நம்பப்படும் இடம்) கைப்பற்றினர் என்று அயோத்தி உரிமை வழக்கு மீதான 2019-ம் ஆண்டு உச்ச நீதிமன்றத் தீர்ப்பு கூறுகிறது.
அந்தத் தீர்ப்பு மேலும் கூறுகிறது, “அந்தக் காலம் வரை இந்துக்களும் முகமதியர்களும் மசூதி-கோயில்களில் வழிபாடு செய்து வந்ததாகக் கூறப்படுகிறது. பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்து, தகராறுகளைத் தடுக்க ஒரு வேலி போடப்பட்டுள்ளது, அதற்குள் முகமதியர்கள் மசூதியில் பிரார்த்தனை செய்கிறார்கள், அதே நேரத்தில் வேலிக்கு வெளியே இந்துக்கள் தங்கள் படையல்களை வழங்கும் மேடையை எழுப்பினர்.
ஒரு மிர்சா ஜான் எழுதிய ஹதிகா I ஷுஹுடா-வில் (Hadiga-I-Shuhuda) அந்த எழுத்தாளர் 1856-ல் அமீர் அலி அமேதாவி ஒருவரால் ராம ஜென்மபூமி மீதான தாக்குதலை பதிவு செய்துள்ளார். ஆனால், தாக்கியவர் பிரிட்டிஷ் துருப்புக்களால் கொல்லப்பட்டார்.
நவம்பர் 30, 1858-ல், பாபர் மசூதிக்குள் ‘ராம்’ என்று எழுதி, நிஷான் சாஹிப்பை நிறுவி ஹவானா நடத்திய நிஹாங் சீக்கியர்களுக்கு எதிராக முகமது சலீம் என்ற நபர் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்தார்.
அதே நாளில், நவம்பர் 30, 1858-ல் பாபர் மசூதியின் முஅதின் முஹம்மது அஸ்கர் என்ற ஒருவர், முற்றத்தில் மேடையை உயர்த்திய பைராகிக்கு எதிராக நீதி விசாரணைக்கு அழைப்பு விடுத்தார். அஸ்கர் மேடையை கலைக்க அழைப்பு விடுத்தார்.
1885-ம் ஆண்டில், ஜென்மஸ்தானின் மஹந்த் ரகுபர் தாஸ், பாபர் மசூதிக்கு அருகாமையில் உள்ள ராம் சபுத்ராவில் ராமர் கோவில் கட்ட அனுமதி கோரி நீதிமன்றத்தை நாடினார். வரலாற்றாசிரியர் மீனாட்சி ஜெயின் இந்த வழக்கைப் பற்றிய விவரங்களை ராமனும் அயோத்தியும் என்ற புத்தகத்தில் வழங்குகிறார். நீண்ட நாட்களுக்குப் பிறகு, வரலாற்று நீதியை வழங்க முடியாது என்றும், தற்போதைய நிலை குலைந்தால் சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்றும் கூறி மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
அந்த இடத்தில் கோவில் கட்ட வேண்டும் என்று 1949 ஜூலையில் உ.பி. அரசாங்கத்திடம் மனு அளிக்கப்பட்டது. அரசாங்கம் கருத்துகளுக்காகவும் அறிக்கைக்காகவும் பைசாபாத் மாவட்ட நிர்வாகத்திற்கு அனுப்பியது. 1949 அக்டோபரில் பைசாபாத் நகர மாஜிஸ்திரேட் குரு தத் சிங், அந்த நிலம் அரசுக்குச் சொந்தமானது என்றும், மக்களுக்கு ராம் லல்லா மீது நம்பிக்கை இருப்பதாகவும், பிரமாண்டமான கோயில் வேண்டும் என்றும் மாவட்ட மாஜிஸ்திரேட்டிடம் அறிக்கை சமர்ப்பித்தார்.
ஆகஸ்ட் 14, 1949-ல் உத்தரப்பிரதேச இந்து மகாசபை அயோத்தியில் ராம ஜென்மபூமி, மதுராவில் கிருஷ்ண ஜென்மபூமி மற்றும் காசியில் விஸ்வநாதர் ஆகியோரின் ‘விடுதலை’க்கான தீர்மானத்தை நிறைவேற்றியது. குஜராத்தில் சோம்நாத் கோவிலை மத்திய அரசு கட்டியதை பின்பற்ற வேண்டிய உதாரணம் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அக்டோபர் 20, 1949 முதல், ராமசரிதமானஸின் ஒன்பது நாள் அகண்ட பாராயணம் (தொடர் பாராயணம்) அயோத்தியில் நடைபெற்றது. பைசாபாத் காங்கிரஸ் எம்.எல்.ஏ ராகவ் தாஸ் கடைசி நாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்து மகாசபையின் மஹந்த் திக்விஜயநாத் - மஹந்த் அவைத்யநாத்தின் குரு, அவரது சீடர் யோகி ஆதித்யநாத் இப்போது உ.பி.யின் முதல்வராக உள்ளார் - மற்றும் ராம ராஜ்ய பரிஷத்தின் சுவாமி கர்பாத்ரி ஆகியோருடன் மேடையைப் பகிர்ந்து கொண்டார்.
லிபர்ஹான் ஆணையம் குறிப்பிட்டுள்ளபடி, டிசம்பர் 22-23, 1949 இரவு, ராம் லல்லாவின் சிலை மசூதியில் அபிராம் தாஸால் வைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது, இவர் சந்நியாசியாக மாறுவதற்கு முன்பு அபிநந்தன் மிஸ்ரா என்று அழைக்கப்பட்டார். ராமர் கோயிலின் ஆதரவாளர்கள் சிலை தானாகவே தோன்றியதாகக் கூறினர். மேலும், பணியில் இருந்த முஸ்லீம் கான்ஸ்டபிள் அப்துல் பர்கத் மசூதியில் ஒரு ஒளியைக் கண்டு மயங்கி விழுந்ததாகக் கூறினார். அதில் சுமார் நான்கு அல்லது ஐந்து வயது கடவுள் போன்ற குழந்தையின் உருவம் தோன்றியது என்று கூறினார்.
அப்போது பிரதமர் ஜவஹர்லால் நேரு சிலையை அகற்றுமாறு உத்தரபிரதேச அரசுக்கு உத்தரவிட்டார். இருப்பினும், நகர மாஜிஸ்திரேட் குரு தத் சிங், முதல்வர் கோவிந்த் பல்லப் பந்தை பைசாபாத்-அயோத்தியில் நுழைய அனுமதிக்கவில்லை. பின்னர், இவர் தனது ராஜினாமாவை சமர்ப்பித்தார். பின்னர் இவரை வி.எச்.பி தலைவர் அசோக் சிங்கால் முதல் கர சேவகர் என்று பாராட்டினார். மாவட்ட நீதிபதி கே.கே. நாயரும் சட்டம் ஒழுங்கு பிரச்னையை காரணம் காட்டி சிலையை அகற்ற மறுத்துவிட்டார். சிலையை அகற்றினால் ராஜினாமா செய்வதாக பைசாபாத் காங்கிரஸ் எம்.எல்.ஏ ராகவ் தாஸ் மிரட்டல் விடுத்தார். பின்னர், நகராட்சி வாரியம் அந்த இடத்தை கையகப்படுத்தியது, சிலை உள்ளே இருந்தது. மாவட்ட மாஜிஸ்திரேட் கே.கே. நாயர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். ஆனால், அவரது மனைவி சகுந்தலா நாயர் 1952 மக்களவைத் தேர்தலில் கோண்டாவில் இருந்து இந்து மகாசபா சீட்டில் வெற்றி பெற்றார். குரு தத் சிங்கும் பின்னர் நகராட்சித் தலைவராகவும், ஜனசங்கத்தின் மாவட்டத் தலைவராகவும் ஆனார்.
அயோத்தி, காசி மற்றும் மதுராவை இந்துக்களுக்கு மீட்டுத் தரக் கோரி 1983 மே மாதம் அப்போதைய பிரதமர் இந்திரா காந்திக்கு கடிதம் எழுதிய முதல் அரசியல்வாதி காங்கிரஸ் தலைவரும், உ.பி.யின் முன்னாள் அமைச்சருமான தவ் தயாள் கண்ணா ஆவார். உ.பி.யைச் சேர்ந்த காங்கிரஸ் மூத்த தலைவரான மத்திய அமைச்சர் கமலாபதி திரிபாதி, கன்னா துப்பாக்கி குண்டுகளுடன் விளையாடுவதாகவும், இந்து-முஸ்லிம் ஒற்றுமைக்கான காங்கிரஸ் கொள்கையை அழித்து வருவதாகவும் எச்சரித்தார்.
1984 ஏப்ரல் 7, 8 தேதிகளில் டெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் ஆர்.எஸ்.எஸ்-ன் துணை அமைப்பான விஷ்வ ஹிந்து பரிஷத்தின் தர்ம சன்சத் கூட்டம், அயோத்தியில் ராம ஜென்மபூமி, மதுராவில் உள்ள ஸ்ரீ கிருஷ்ண ஜென்மபூமி, வாரணாசியில் உள்ள விஸ்வநாதர் சன்னதி ஆகியவற்றின் 'விடுதலை'க்கான இயக்கத்தைத் தொடங்குவதாக அந்த அமைப்பு அறிவித்தது. முன்னாள் இடைக்காலப் பிரதமர் குல்சாரிலால் நந்தா தர்ம சன்சத்தை ஆதரித்தார். மேலும், தௌ தயாள் கன்னா அயோத்தியின் விடுதலைக்காக ராம ஜென்மபூமி முக்தி யக்ஞ சமிதியின் ஒருங்கிணைப்பாளராக ஆனார்.
ஜூலை 1, 1984-ல் அயோத்தியில் நடந்த கூட்டத்தில், கோவில் போராட்டம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வி.எச்.பி முடிவு செய்தது என்று பஞ்ச் தனது புத்தகத்தில் கூறுகிறார். இது ராமர் ஜானகி யாத்திரைக்கு வழிவகுத்தது - இது 1984, செப்டம்பர் 25-ம் தேதி பீகாரில் உள்ள சீதாமர்ஹியில் தொடங்கி அக்டோபர் 6-ம் தேதி அயோத்தியில் முடிவடைந்தது.
1986 டிசம்பரில், பைசாபாத் மாவட்ட நீதிபதி கே.எம். பாண்டே, பாபர் மசூதியின் பூட்டைத் திறக்கவும், அதில் இந்துக்கள் பிரார்த்தனை செய்யவும் அனுமதித்தார். பின்னர் நீதிபதி தனது மனசாட்சியின் குரல் புத்தகத்தில், விசாரணை நடந்து கொண்டிருந்த போது, நீதிமன்ற அறையின் கூரையில் ஒரு கருங்குரங்கு அமர்ந்ததாகக் கூறினார். அவர் தீர்ப்பை அளித்து வீட்டிற்குச் சென்றபோது, அவரது புல்வெளியில் அதே குரங்கு இருப்பதைக் கண்டு, அதை ஏதோ தெய்வீக சக்தியாகக் கருதி அதற்கு வணக்கம் செலுத்தினார்.
1986 பிப்ரவரி நடுப்பகுதியில், அகில இந்திய முஸ்லிம் தனிநபர் வாரியம் டெல்லியில் கூடி, பாபர் மசூதியை முஸ்லிம்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஆதரிக்குமாறு அரசியல் கட்சிகளை வலியுறுத்தியது.
பிப்ரவரி 2, 1986-ல் அயோத்தியில் நடந்த பொதுக்கூட்டத்தில் வி.எச்.பி, அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோவில் கட்டுவதற்கு ஒரு அறக்கட்டளையை அமைக்க வேண்டும் எனக் கோரியது என்று பஞ்ச் கூறுகிறார்.
பிப்ரவரி 3, 1986-ல் சன்னி வக்ஃப் வாரியத்தின் சார்பாக டிசம்பர் 18, 1961-ல் பாபர் மசூதியை சொந்தமாக்கக் கோரி மனு தாக்கல் செய்த அசல் வழக்குரைஞர்களில் ஒருவரான ஹாஷிம் அன்சாரி - பைசாபாத் மாவட்ட நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். மறு உத்தரவு வரும் வரை அந்த சொத்தின் தன்மை மாறாது என நீதிமன்றம் கூறியது.
பிப்ரவரி 6, 1986-ல், லக்னோவில் பாபர் மசூதி நடவடிக்கைக் குழு அமைக்கப்பட்டது.
ஜூலை 10, 1989-ல் அலகாபாத் உயர்நீதிமன்றம் இந்த விவகாரம் தொடர்பான அனைத்து வழக்குகளையும் ஒருங்கிணைத்து தீர்ப்பு வழங்க முடிவு செய்தது. இந்த வழக்கை விசாரிக்க நீதிபதிகள் கே.வி. அகர்வால், யு.சி. ஸ்ரீவஸ்தவா, எஸ்.எச்.ஏ. ராசா ஆகியோர் அடங்கிய ஒரு சிறப்பு முழு அமர்வு அமைக்கப்பட்டது.
ஏப்ரல் 19 முதல் 21, 1986 வரை, வி.எச்.பி அயோத்தியில் ராம ஜென்மபூமி மஹோத்ஸவை ஏற்பாடு செய்தது, ஏராளமான பக்தர்கள் சரயுவில் நீராடினர் என்று பஞ்ச் எழுதியுள்ளார்.
டிசம்பர் 23-24, 1986-ல் சையத் ஷஹாபுதீன் தலைமையில் அகில இந்திய பாபர் மசூதி மாநாடு நடைபெற்றது. இது பாபர் மசூதி இயக்க ஒருங்கிணைப்புக் குழு (பி.எம்.எம்.சி.சி - BMMCC) உருவாக்கப்பட்டது. பி.எம்.எம்.சி.சி மார்ச் 30, 1987-ல் டெல்லியில் உள்ள போட் கிளப்பில் ஒரு பேரணியை ஏற்பாடு செய்தது.
செப்டம்பர், 1989-ல், வி.எச்.பி நாடு முழுவதிலும் இருந்து பிரதிஷ்டை செய்யப்பட்ட செங்கற்களை எடுத்து வந்து, அக்டோபர் 10, 1989-ல் அயோத்தியில் ராமர் கோவிலுக்கு ஷிலான்யாஸ் செய்யப்போவதாக அறிவித்தது. காங்கிரஸ் அரசாங்கம் அதை அனுமதித்தது. ராஜீவ் காந்தி 1989 லோக்சபா பிரச்சாரத்தை அயோத்தியில் இருந்து தொடங்கினார்.
வி.எ.ச்பி பிப்ரவரி 1, 1989-ல் அயோத்தியில் ஒரு சந்த் சம்மேளனை ஏற்பாடு செய்தது, அதில் நவம்பர் 10, 1989-ல் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு அடிக்கல் நாட்ட முடிவு செய்யப்பட்டது.
ஜூலை, 1989-ல், பா.ஜ.க தனது முதல் இயக்கத்தில் இறங்கியது, அதன் பாலம்பூர் தீர்மானத்தை நிறைவேற்றியது. அது பேச்சுவார்த்தை மூலம் தீர்வு அல்லது சட்ட ரீதியாக ராம ஜென்மபூமி இந்துக்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்று கூறியது. ராமர் மீது நீதிமன்றங்கள் தீர்ப்பளிக்க முடியாது என்று அந்த தீர்மானம் கூறியது.
ஜூலை 13, 1989-ல் அயோத்தியில் நடந்த பஜ்ரங் தள் மாநாட்டின் போது இந்தியா முழுவதிலும் இருந்து 6000-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் இயக்கத்தில் இணைந்தனர். விழாவில் சரயு நதியின் தண்ணீருடன் பிரதிஷ்டை செய்யப்பட்ட குடங்கள் பயன்படுத்தப்பட்டன என்று பஞ்ச் எழுதியுள்ளார்.
நவம்பர் 9, 1989-ல் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. ஒரு தலித் காமேஷ்வர் சௌபால் முதல் ராம் ஷிலாவை அடிக்கல் நாட்டினார்.
செப்டம்பர் 25, 1990-ல் அப்போதைய பா.ஜ.க தலைவர் எல்.கே. அத்வானி சோம்நாத்திலிருந்து அயோத்தி வரை ரத யாத்திரையைத் தொடங்கினார். யாத்ரா சென்ற இடத்தில் கலவரம் இல்லாத நிலையில், இந்தியாவின் பல பகுதிகளில் கலவரம் ஏற்பட்டு சுமார் 600 பேர் கொல்லப்பட்டனர். அக்டோபர் 23, 1990-ல் முதல்வர் லாலு பிரசாத்தின் உத்தரவின் பேரில் பீகாரில் உள்ள சமஸ்திபூரில் அத்வானி கைது செய்யப்பட்டார். வி.பி. சிங் அரசாங்கத்திற்கு பா.ஜ.க தனது ஆதரவை வாபஸ் பெற்றது. அக்டோபர் 30 மற்றும் நவம்பர் 2-ல் அயோத்தியில் கரசேவகர்கள் மீது போலீஸ் துப்பாக்கிச் சூடு நடந்தது. அப்போது முலாயம் சிங் யாதவ் உ.பி.யின் முதல்வராக இருந்தார். பிகானரில் இருந்து வந்த ஷரத் மற்றும் ராம்குமார் கோத்தாரி என்ற இரண்டு சகோதரர்கள் போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டனர்.
டிசம்பர் 6, 1992-ல் ஒரு கும்பல் பாபர் மசூதியை இடித்தது. அத்வானி, ஜோஷி, விஜயராஜே சிந்தியா, உமாபாரதி மற்றும் பிரமோத் மகாஜன் ஆகியோர், மசூதியின் குவிமாடங்கள் கீழே விழுந்தபோது அவர்கள் அருகில் உள்ள ஒரு கட்டிடத்தின் மேல் அமைக்கப்பட்டிருந்த மேடையில் இருந்தனர். உ.பி.-யில் கல்யாண் சிங் அரசு டிஸ்மிஸ் செய்யப்பட்டது, எதிர்க்கட்சித் தலைவர் பதவியை அத்வானி ராஜினாமா செய்தார்.
ஜனவரி 7, 1993 அன்று, அயோத்தியில் சில பகுதிகளை கையகப்படுத்தும் சட்டத்தை நாடாளுமன்றம் நிறைவேற்றியது. இது சர்ச்சைக்குரிய ராம ஜென்மபூமி-பாபர் மசூதி நிலத்தில் 67.03 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தும் அதிகாரத்தை அரசாங்கத்திற்கு வழங்கியது. மேலும், பாபர் மசூதி கட்டப்படுவதற்கு முன்பு அந்த இடத்தில் கோவில் இருந்ததா என்பதை தீர்மானிக்க அரசியலமைப்பின் 143 (1) வது பிரிவின் கீழ் குடியரசுத் தலைவரின் குறிப்பு மூலம் உச்ச நீதிமன்றத்தைக் கேட்டது.
நீதிபதி லிபர்ஹான் ஆணையம் அறிக்கை ஜூன் 30, 2009-ல் சமர்ப்பிக்கப்பட்டது. டிசம்பர் 1992 நிகழ்வுகள் தன்னிச்சையானவை அல்லது திட்டமிடப்படாதவை என்று அந்த அறிக்கை கூறியது. ஏப்ரல் 2017-ல், சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம் அத்வானி, ஜோஷி, உமாபாரதி, வினய் கதியார் மற்றும் பலர் மீது கிரிமினல் குற்றச்சாட்டுகளை முன்வைத்தது. செப்டம்பர் 30, 2020-ல் குற்றம் சாட்டப்பட்ட 32 பேரையும் நீதிமன்றம் உறுதியற்ற ஆதாரங்களின் அடிப்படையில் விடுவித்தது. நீதிபதி எஸ்.கே. யாதவ் பாபர் மசூதி இடிப்பு முன்கூட்டியே திட்டமிடப்படவில்லை என்று தீர்ப்பளித்தார்.
2010-ல் அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் சிறப்பு அமர்வு நீதிபதிகள் எஸ்.யு. கான், சுதிர் அகர்வால் மற்றும் தரம் வீர் சர்மா ஆகியோர் அடங்கிய அயோத்தி உரிமை வழக்கின் தீர்ப்பில் 2.77 ஏக்கரில் மூன்றில் இரண்டு பங்கு நிலத்தை 2:1 என்ற விகிதத்தில் பிரித்தது. கர்பா க்ரிஹா, ராமர் கோவிலுக்காக வழக்கு தொடுப்பவர்களிடம் செல்கிறது - ஸ்ரீ ராம் லாலா விரஜ்மான் மற்றும் நிர்மோஹி அகாரா ஆகியோருக்கு செல்கிறது. மூன்றில் ஒரு பங்கு நிலம் சன்னி மத்திய வக்பு வாரியத்திற்கு வழங்கப்பட்டது.
இந்த தீர்ப்பை எதிர்த்து இந்து மற்றும் முஸ்லீம் ஆகிய இரு தரப்பினரும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அலகாபாத் உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது. நவம்பர் 9, 2019-ல் உச்ச நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு, அயோத்தியில் ராமர் கோயிலுக்காக இந்து மனுதாரர்களுக்கு முழு சர்ச்சைக்குரிய நிலத்தையும் ஒருமனதாக வழங்கியது. மசூதி கட்டுவதற்கு வேறு இடத்தில் நிலம் வழங்கவும் முடிவு செய்யப்பட்டது.
ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை அமைக்கப்பட்டு, ராமர் கோவிலின் ஷிலான்யாவை பிரதமர் நரேந்திர மோடி ஆகஸ்ட் 5, 2020-ல் அயோத்தியில் அமைத்தார். தற்போது ஜனவரி 22-ம் தேதி கோவில் திறக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.