கடந்த 2018ஆம் ஆண்டு இந்தியாவில் செயல்படும் வங்கிகள் கிரிப்டோ கரன்சிகளோடு வணிகம் மேற்கொள்ளக்கூடாது என ஆர்பிஐ தடை விதித்து. இந்த தடையை 2020ல் உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. இந்நிலையில், கிரிப்டோ கரன்சிகளை பயன்படுத்துவதற்கு எதிராக சில முன்னணி வங்கிகள் மக்களை எச்சரித்த நிலையில், வங்கிகளுக்கு ஆர்பிஐ ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில் 2018 ல் வெளியான ஆர்பிஐ உத்தரவை மேற்கோள் காட்டி வாடிக்கையாளர்களை எச்சரிக்க கூடாது என்றும், உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு பிறகு அந்த சுற்றறிக்கை இனி செல்லுபடியாகாது என தெரிவித்துள்ளது.
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா மற்றும் எச்.டி.எஃப்.சி வங்கி தங்கள் வாடிக்கையாளர்களுக்கு ஆர்பிஐயின் 2018 உத்தரவை குறிப்பிட்டு கிரிப்டோ கரன்சி வணிகம் மேற்கொள்ளக்கூடாது என்றும் ஆலோசனையை கடைபிடிக்க தவறினால் கார்டுகள் ரத்து செய்யப்படும் எனவும் எச்சரித்தது. கடந்த ஆண்டு உச்சநீதிமன்றம் தடையை நீக்கி உத்தரவிட்ட பிறகு அதை அனுமதிப்பதை தவிர ரிசர்வ் வங்கிக்கு வேறு வழியில்லை. இதனால் ஆர்பிஐ தலையிட்டு வங்கிகளை இதுபோன்ற மோசமான நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது என கேட்டுக்கொண்டது. ஆனால் வங்கிகள் இதுபோன்ற ஒரு செயலை முதலில் ஏன் செய்தன என பதிலளிக்கப்படாத பல கேள்விகளை எழுப்புகிறது என கிரிப்டோ கரன்சி நிபுணர் ஹிடேஷ் மால்வியா கூறியுள்ளார்.
கிரிப்டோகரன்சி பயன்படுத்துவோருக்கு கொள்கை நிலையை இது தெளிவுபடுத்துகிறதா?
ஆர்பிஐயின் இந்த அறிக்கை கிரிப்டோ கரன்சி வர்த்தகத்தை மேற்கொள்பவர்களுக்கு சற்று நிம்மதியளித்துள்ளது. பல இந்தியர்கள் பிட்காயின், எத்திரியம் போன்ற கிரிப்டோ கரென்சிகளில் முதலீடு செய்துள்ளதால் ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கை அவர்களின் 10,000கோடி ரூபாய் பணம் பாதிக்கப்படாது என்ற நம்பிக்கையை அளித்துள்ளது.
ஆர்பிஐயின் 2018 சுற்றறிக்கையை மேற்கொள் காட்டி சில வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் விர்சுவல் கரென்சிகளை கையாள்வதில் தங்கள் வாடிக்கையாளர்களை எச்சரித்துள்ளன என ஊடகங்களின் மூலம் கவனத்திற்கு வந்தது என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. மேலும், இந்த 2018 சுற்றறிக்கையை உச்சநீமன்றம் 2020ஆம் ஆண்டே ரத்து செய்ததால் இனி அவற்றை கடைபிடிக்க கூடாது எனவும் கூறியுள்ளது.
வங்கிகள் என்ன செய்ய வேண்டும்?
கிரிப்டோ கரன்சி வர்த்தகத்தை மேற்கொள்பவர்களுக்கு ஆர்பிஐ உத்தரவு நிம்மதியளித்துள்ள நிலையில், இந்த பரிவர்த்தனைகள் மோசடி நடவடிக்கைகள் மற்றும் வரி ஏய்ப்புகளுக்கு பயன்படுத்தப்படுவதில்லை என்பதை வங்கிகள் மற்றும் கிரிப்டோ தளங்கள் உறுதி செய்ய வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது.
உங்கள் வாடிக்கையாளரை அறிந்து கொள்ளுங்கள் (KYC), பணமோசடி தடுப்பு (AML), பயங்கரவாதத்திற்கு நிதியளித்தல் (CFT) மற்றும் தடுப்பின் கீழ் ஒழுங்குபடுத்தப்பட்ட நிறுவனங்களின் கடமைகள் ஆகியவற்றுக்கான விதிமுறைகளை நிர்வகிக்கும் விதத்தில் தேவையான நடவடிக்கை எடுக்க வங்கிகளை ரிசர்வ் வங்கி கேட்டுக்கொண்டுள்ளது. பணமோசடி சட்டம், (பி.எம்.எல்.ஏ), 2002 வெளிநாட்டு பணம் அனுப்புவதற்கான அந்நிய செலாவணி மேலாண்மைச் சட்டத்தின் (ஃபெமா) கீழ் தொடர்புடைய விதிமுறைகளுக்கு இணங்குவதை உறுதி செய்யவும் வங்கிகள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.நீதிமன்றம் மற்றும் ரிசர்வ் வங்கியின் உத்தரவுகளைத் தொடர்ந்து விர்சுவல் கரன்சி முதலீட்டாளர்களுக்கு எதிராக வங்கிகளால் நடவடிக்கை எடுக்க முடியாது.
ரிசர்வ் வங்கியின் நிலைப்பாடு என்ன?
கடந்த ஏப்ரல் 2018 ஆம் ஆண்டு, ஆர்பிஐ கிரிப்டோகரன்சி குறித்து கெடுபிடியான சட்டத் திட்டங்களைக் கொண்டு வந்தது. அதன் மூலம் வங்கிகள் மற்றும் நிதி சார்ந்த துறைகள் கிரிப்டோகரன்சி தொடர்பாக எந்த வித சேவையிலும் ஈடுபட முடியாதபடி செய்யப்பட்டது.
க்ரிப்டோ கரன்சி வர்த்தகம் மூலம் அனுப்பப்படும் பணம் யாரால் யாருக்கு கொடுக்கப்படுகிறது என்பதைக் கண்டுபிடிக்க முடியாது என்பதால் இதை ரிசர்வ் வங்கி அதிகாரப்பூர்வமாக ஏற்கவில்லை. இதன் பரிவர்த்தனைகளை ரிசர்வ் வங்கியால் கண்காணிக்க இயலாது. இதுபோன்ற பல்வேறு காரணங்களால் இந்தியாவில் பிட்காயின் உள்ளிட்ட கிரிப்டோ கரன்சிகளைத் தடை செய்ய ரிசர்வ் வங்கி முடிவு செய்தது.
2018 ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி, ரிசர்வ் வங்கியின் நாணயக் கொள்கையை வெளியிட்டபோது, பிட் காயின் உள்ளிட்ட கிரிப்டோ கரன்ஸிகளுக்கு தடை விதிப்பதாக அறிவித்தது. பிட்காயின் உள்ளிட்ட கிரிப்டோ கரன்சி வணிகத்தில் ஈடுபடும் அமைப்புகளோடு வங்கி உள்ளிட்ட நிதிநிறுவனங்கள் எந்த உறவும் வைத்துக்கொள்ளக்கூடாது எனவும், ரிசர்வ் வங்கியின் கீழ் இயங்கும் வங்கிகள், ஆன்லைன் பணப்பரிமாற்ற நிறுவனங்கள் பிட்காயின்களை விற்பனை செய்யவோ, வாங்கவோ அனுமதிக்கப்படக்கூடாது என்று ரிசர்வ் வங்கி உத்தரவிட்டது. 3 மாதத்திற்குள் கிரிப்டோகரன்சி தொடர்பாக தனி நபரிடமோ, தனிப்பட்ட நிறுவனத்திடமோ மேற்கொண்டு வரும் அனைத்து வித வர்த்தகங்களையும் நிறுத்தச் சொல்லி உத்தரவிட்டது.
ரிசர்வ் வங்கி அதன் சொந்த டிஜிட்டல் நாணயத்தை தொடங்க தயாராகி வருகிறது.மத்திய வங்கியின் சார்பிலேயே டிஜிட்டல் கரன்சி ஒன்றை உருவாக்க திட்டமிட்டுள்ளது. புதிதாக டிஜிட்டல் கரன்சியை உருவாக்கும் பணியில் ஆர்பிஐ குழு இறங்கியுள்ளது. மத்திய வங்கியின் டிஜிட்டல் கரென்சி எவ்வாறு தொடங்கப்பட்டு வெளியிடப்படும் என்பது குறித்தும் தொழில்நுட்ப மற்றும் நடைமுறைகள் குறித்து ஆர்பிஐ குழு ஆய்வு செய்து வருகிறது. விரைவில் டிஜிட்டல் கரன்சி குறித்து முடிவுகளை அறிவிக்கப்படும் என ஆளுநர் சக்தி காந்த தாஸ் சமீபத்தில் கூறியிருந்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”