Advertisment

இனி லோன் பெறுவது ஈஸி; ஒருங்கிணைந்த கடன் வசதியை அறிமுகப்படுத்தும் ஆர்.பி.ஐ; முழு விபரம் இங்கே

யு.பி.ஐ போல ஒருங்கிணைந்த கடன் இடைமுக வசதியை அறிமுகப்படுத்தும் ரிசர்வ் வங்கி; யு.எல்.ஐ என்பது என்ன? கடன் வாங்குபவர்களுக்கு அது எப்படி உதவும்?

author-image
WebDesk
New Update
rbi shakthi

ஆகஸ்ட் 26, 2024 திங்கட்கிழமை, பெங்களூருவில், ‘டி.பி.ஐ மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் குறித்த உலகளாவிய மாநாட்டின்’ தொடக்க அமர்வில் ஆர்.பி.ஐ ஆளுநர் சக்திகாந்த தாஸ் உரையாற்றுகிறார். (பி.டி.ஐ புகைப்படம்)

Hitesh Vyas

Advertisment

இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) கவர்னர் சக்திகாந்த தாஸ் திங்களன்று, நாடு முழுவதும் ஒருங்கிணைந்த கடன் வழங்கும் இடைமுகம் (ULI) விரைவில் தொடங்கப்படும் என்று கூறினார். நாட்டில் சில்லறை கட்டண முறையில் புரட்சியை ஏற்படுத்திய யுனிஃபைட் பேமென்ட் இன்டர்ஃபேஸ் (UPI) போன்றே, யு.எல்.ஐ ஆனது கடன் வழங்கும் களத்தை மாற்றும்.

ஆங்கிலத்தில் படிக்க: RBI to launch Unified Lending Interface: What is it and how will it benefit borrowers

ரிசர்வ் வங்கி கவர்னர் அறிவித்தது என்ன?

கடந்த ஆண்டு ஆகஸ்டில், ஆர்.பி.ஐ ஆனது எளிமையாக கடன் வழங்குவதற்கான பொது தொழில்நுட்ப தளத்திற்கான ஒரு முன்னோடித் திட்டத்தை அறிமுகப்படுத்தியது, இது அறிவிக்கப்பட்டபடி, செலவுகளைக் குறைத்தல், விரைவான விநியோகம் மற்றும் அளவிடுதல் ஆகியவற்றின் அடிப்படையில் கடன் வழங்கும் செயல்பாட்டில் செயல்திறனைக் கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

எளிமையாக கடன் வழங்குவதற்கான தொழில்நுட்ப தளத்தை யுனிஃபைட் லெண்டிங் இன்டர்ஃபேஸ் (ULI) என அழைக்க ஆர்.பி.ஐ கவர்னர் திங்களன்று முன்மொழிந்தார். யு.பி.ஐ பணம் செலுத்தும் சூழலை மாற்றியமைத்தது போல், நாட்டில் கடன் வழங்கும் தளத்தை மாற்றுவதில் யு.எல்.ஐ முக்கிய பங்கு வகிக்கும் என்று எதிர்பார்க்கிறேன் என்றார்.

ஒருங்கிணைந்த கடன் இடைமுகம் என்றால் என்ன?

டிஜிட்டல் மயமாக்கலில் விரைவான முன்னேற்றத்துடன், வங்கிகள், நிதி நிறுவனங்கள் (NBFC), நிதி தொழில்நுட்ப (fintech) நிறுவனங்கள் மற்றும் ஸ்டார்ட்-அப்களை பணம் செலுத்துதல், கடன் மற்றும் பிற நிதி நடவடிக்கைகளில் புதுமையான தீர்வுகளை உருவாக்க மற்றும் வழங்க ஊக்குவிக்கும் டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு என்ற கருத்தை இந்தியா ஏற்றுக்கொண்டது.

டிஜிட்டல் கிரெடிட் டெலிவரிக்கு, மத்திய மற்றும் மாநில அரசுகள், கணக்கு ஒருங்கிணைப்பாளர்கள், வங்கிகள், கடன் தகவல் நிறுவனங்கள் மற்றும் டிஜிட்டல் அடையாள அதிகாரிகள் போன்ற பல்வேறு நிறுவனங்களில் கடன் மதிப்பீட்டிற்குத் தேவையான தரவு கிடைக்கிறது. இருப்பினும், இந்தத் தரவுத் தொகுப்புகள் தனித்தனி அமைப்புகளில் உள்ளன, விதி அடிப்படையிலான கடனை எளிதாக மற்றும் சரியான நேரத்தில் வழங்குவதில் தடையை உருவாக்குகின்றன.

பல தரவு சேவை வழங்குநர்கள் முதல் கடன் வழங்குபவர்கள் வரை பல்வேறு மாநிலங்களின் நிலப் பதிவுகள் உட்பட டிஜிட்டல் தகவல்களின் தடையற்ற மற்றும் ஒப்புதல் அடிப்படையிலான ஓட்டத்தை யு.எல்.ஐ இயங்குதளம் எளிதாக்கும் என்று ஆர்.பி.ஐ கவர்னர் கூறினார். இது கடன் மதிப்பீட்டிற்கான நேரத்தைக் குறைக்கும், குறிப்பாக சிறிய மற்றும் கிராமப்புற கடன் வாங்குபவர்களுக்கு நேரம் மிச்சமாகும்.

யு.எல்.ஐ கட்டமைப்பில் பொதுவான மற்றும் தரப்படுத்தப்பட்ட ஏ.பி.ஐ.,க்கள் (API - அப்ளிகேஷன் புரோகிராமிங் இன்டர்ஃபேஸ்) உள்ளது, இது பல்வேறு ஆதாரங்களில் இருந்து தகவல்களின் டிஜிட்டல் அணுகலை உறுதி செய்வதற்கான ‘பிளக் அண்ட் பிளே’ (எளிதான, விரைவான) அணுகுமுறைக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த தளமானது பல தொழில்நுட்ப ஒருங்கிணைப்புகளின் சிக்கலைக் குறைக்கும், மேலும் கடன் வாங்குபவர்கள் தடையில்லாமல் கடன் கிடைப்பதன் பலனைப் பெறவும், விரிவான ஆவணங்கள் தேவையில்லாமல் விரைவான கடன் பெறும் நேரத்தைப் பெறவும் உதவும்.

"ஒட்டுமொத்தமாக, வேறுபட்ட அடுக்குகளில் வசிக்கும் வாடிக்கையாளரின் நிதி மற்றும் நிதி அல்லாத தரவுகளுக்கான அணுகலை டிஜிட்டல் மயமாக்குவதன் மூலம், யு.எல்.ஐ பல்வேறு துறைகளில், குறிப்பாக விவசாய மற்றும் சிறுகுறு தொழில் நிறுவனங்கள் (MSME) போன்ற கடன் வாங்குபவர்களுக்கு, கடனுக்கான பெரிய தேவையை பூர்த்தி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது," என்று சக்திகாந்த் தாஸ் வலியுறுத்தினார்.

"JAM-UPI-ULI இன் 'புதிய மும்மைத்துவம்' இந்தியாவின் டிஜிட்டல் உள்கட்டமைப்பு பயணத்தில் ஒரு புரட்சிகரமான படியாக இருக்கும்," என்று ஆர்.பி.ஐ கவர்னர் கூறினார்.

JAM (ஜன் தன், ஆதார் மற்றும் மொபைல்) மும்மைத்துவம் என்பது பயனாளியின் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணப் பலன்களை மாற்றுவதற்கு அரசாங்கத்தால் பயன்படுத்தப்படும் ஒரு கருவியாகும்.

ஒருங்கிணைந்த கட்டண இடைமுகம் என்றால் என்ன?

யுனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் அல்லது யு.பி.ஐ என்பது 2016 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இந்தியாவில் நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (NPCI) மூலம் தொடங்கப்பட்ட நிகழ்நேர கட்டண முறை ஆகும். இது பல வங்கிக் கணக்குகளை ஒரே மொபைல் பயன்பாட்டில் (பங்கேற்கும் வங்கி) பல வங்கி அம்சங்கள், தடையற்ற நிதி ரூட்டிங் & வணிகர்களுக்கு பணம் செலுத்துதல் ஆகியவற்றை ஒன்றிணைக்கும் அமைப்பாகும்.

யு.பி.ஐ ஆனது "இருவருக்கு இடையேயான" சேகரிப்பு கோரிக்கையையும் வழங்குகிறது, இது தேவை மற்றும் வசதிக்கு ஏற்ப திட்டமிடப்பட்டு செலுத்தப்படலாம். 24 மணி நேரமும் மொபைல் சாதனம் மூலம் உடனடி பணப் பரிமாற்றத்திற்கு இது உதவுகிறது. வெவ்வேறு வங்கிக் கணக்குகளை அணுகுவதற்கு ஒரே மொபைல் பயன்பாட்டை இது அனுமதிக்கிறது.

நாட்டில் சில்லறை டிஜிட்டல் கட்டணங்களின் வளர்ச்சியில் யு.பி.ஐ குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டுள்ளது. யு.பி.ஐ இயங்குதளத்தில் ஆரம்ப பங்கேற்பாளர்கள் வங்கிகளாக இருந்தாலும், வங்கி அல்லாத மூன்றாம் தரப்பு ஆப்ஸ் வழங்குநர்கள் மற்றும் க்யூ.ஆர் (QR) குறியீடுகளின் பயன்பாடு அனைத்தும் யு.பி.ஐ வசதியை பிரபலப்படுத்துவதில் இணைந்துள்ளன.

இது ஒரு வலுவான, செலவு குறைந்த மற்றும் கையடக்க சில்லறை கட்டண முறைமையாக உருவெடுத்துள்ளது மற்றும் உலகம் முழுவதும் ஆர்வத்தை ஈர்த்து வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Rbi Reserve Bank Of India
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment