Reforming death penalty: 2021ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் மரண தண்டனை மேல் முறையீடு வழக்குகளை விசாரிக்கும் போது, மிகவும் குறைவான தகவல்களின் அடிப்படையில் தண்டனையை விசாரணை நீதிமன்றங்கள் மற்றும் உயர்நீதிமன்றங்கள் வழங்குவது குறித்து கவலையை பலமுறை தெரிவித்துள்ளது.
நீதிபதி எல் நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வு, கீழ்மை நீதிமன்றங்கள் செய்த தவறுகளை காரணம் காட்டி தூக்கு தண்டனையை குறைத்துள்ள நிலையில், நீதிபதி யு.யு.லலித் தலைமையிலான அமர்வு, பிழைகளை சரிசெய்யும் முயற்சியில் நன்னடத்தை அதிகாரிகள், சிறை கண்காணிப்பாளர்கள் மற்றும் மனநல நிபுணர்களிடமிருந்து அறிக்கைகளை கோரியது. இந்த வாரம் லலீத் தலைமையிலான அமர்வு மரண தண்டனை வழக்குகளின் நடைமுறைகளை விரிவாக ஆய்வு செய்ய ஒப்புக்கொண்டது. மரண தண்டனைக்கும் ஆயுள் தண்டனைக்கும் இடையே மரண தண்டனையை நீதிபதிகள் தேர்வு செய்ய தேவையான காரணங்களை கொண்டுள்ளனரா என்பதை இந்த அமர்வு உறுதி செய்யும்.
மரண தண்டனை நடைமுறைகளை உச்ச நீதிமன்றம் ஆய்வுக்கு உட்படுத்தக் காரணம் என்ன?
மரணதண்டனை வழக்கில் தேவையான தகவல்களை நீதிமன்றத்தின் முன் கொண்டு வருவதற்கான நடைமுறைகளை சீர்திருத்துவதற்கான முயற்சியை நீதிமன்றம் மேற்கொண்டு வருகிறது. இப்படி செய்யும் போது உச்ச நீதிமன்றம், மரண தண்டனை நிறைவேற்றப்படும் விதம் குறித்த கவலைகளை வெளிப்படுத்தியுள்ளது.மரணதண்டனை அரசியலமைப்பிற்கு உட்பட்டது என்று கருதப்பட்டாலும், அது நடைமுறைப்படுத்தப்பட்ட விதம் நியாயமற்றது மற்றும் தன்னிச்சையானது என்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது நீதிமன்றம்.
1980ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் பச்சன் சிங் வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பில் அரசியல் அமைப்பின் தன்மையை உறுதி செய்த போது, எதிர்வரும் காலங்களில் நீதிபதி ஆயுள் தண்டனைக்கும் மரணதண்டனைக்கும் இடையே எதை தேர்வு செய்ய வேண்டும் என்பதை முடிவு செய்வதற்கான கட்டமைப்பை உருவாக்கியது. அந்த கட்டமைப்பின் மையத்தில், குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவுகளின் படி ஆயுள் தண்டனை இயல்பான தண்டனையாக கருத்தில் கொள்ளப்படுகிறது. நீதிபதி ஒருவருக்கு மரண தண்டனை அளிக்கின்றார் என்கிற பட்சத்தில் அதற்கான சிறப்பு காரணங்களை முன்வைக்க வேண்டும்.
1980ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த கட்டமைப்பு, அரிதினும் அரிதான ஆனால் பிரபலமான கட்டமைப்பாக கருதப்படுகிறது. மரண தண்டனை விதிக்கப்பட வேண்டுமா என்பதை தீர்மானிக்கும் போது நீதிபதிகள் குற்றம் மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர் தொடர்பான மோசமான காரணங்களையும் மற்றும் மிட்டிகேஷன் காரணிகளையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியது.
நீதிபதிகள் மரண தண்டனையை வழங்குவதற்கு முன் ஆயுள் தண்டனையை சந்தேகத்திற்கு இடமற்ற தண்டனையாக கருத்தில் கொள்ள வேண்டும் என்று தீர்ப்பில் கூறப்பட்டது. மேலும் தீர்ப்புக்கு பொருத்தமான காரணங்களை உள்ளடக்கிய பட்டியல் இருக்கலாம். ஆனாலும் அது மட்டுமே ஒரு முழுமையான பட்டியலாக இருக்கக் கூடாது என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
பச்சன் சிங் கட்டமைப்பின் இன்றைய நிலை என்ன?
முறையாக இதனை செயல்படுத்தவில்லை என்று உச்ச நீதிமன்றம் தொடர்ந்து கூறி வருகிறது. சட்ட ஆணையத்தின் 252வது அறிக்கையும் இதையே முன்மொழிந்தது. தண்டனைக்கான குற்றத்தை மட்டுமே அடிப்படையாக கொண்டு வழக்குகள் நகர்வது முக்கியமான கவலைகளில் ஒன்றாகும். குற்றம் மற்றும் குற்றம் சாட்டப்பட்ட நபர் குறித்த காரணிகளையும் ஆய்வு செய்ய வேண்டும் என்ற பச்சன் சிங்கின் ஆணையை பெரும்பாலும் மீறும் வகையிலேயே தண்டனைகள் வழங்கப்படுகிறது. தன்னிச்சையாக மரண தண்டனைகள் வழங்கப்படுகின்றன என்பதும் ஒரு கவலையாக இருக்கிறது. கடந்த 15 ஆண்டுகளில், வழக்குகளை முதன்முறையாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளும் நீதிமன்றங்களில் பச்சன் சிங் கட்டமைப்பின் விதிகள் சரியாக பின்பற்றப்படவில்லை என்பதை கூறுகிறது ப்ராஜெக்ட் 39ஏ என்ற ஆராய்ச்சி முடிவுகள். இதற்கு தேவையற்ற பல காரணிகளை நீதிபதிகள் முன்வைக்கின்றனர். கடந்த 5 ஆண்டுகளில் வழங்கப்பட்டுள்ள 595 மரண தண்டனைகள் இந்த கவலையை தீவிரப்படுத்துகிறது என்று சுட்டிக்காட்டுகிறது இந்த ஆய்வு.
காரணங்கள் என்ன?
இத்தகைய நிகழ்வுகளுக்கு முக்கிய காரணமாக அமைவது நீதிபதிகள் முன்பு கொண்டு வரப்படும் மிகக் குறைவான தகவல்கள். பச்சன் சிங் வழக்கின் தீர்ப்பு ஒரு கட்டமைப்பை உருவாக்கும் போது அந்த கட்டமைப்பு நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் உருவாக்கபப்ட்டது. ஆனால் அந்த கட்டமைப்பில் தகவல்கள் முறையாக பெறப்பட்டதா என்பதை உறுதி செய்வதற்கும், எத்தகைய தகவல்களை நீதிபதிகள் முன்பு சமர்பிக்க வேண்டும் என்பதையும் தெளிவுப்படுத்தவில்லை.
இதனால் குற்றம்சாட்டப்பட்டவர் குறித்து கிடைக்கும் குறைந்தபட்ச தகவல்கள் அடிப்படையில் தண்டனை வழக்கும் செயல்பாடுகள் ஆரம்பமாகிறது. தற்போது மரணதண்டனைக்காக காத்திருக்கும் குற்றவாளிகளில் பெரும்பான்மையானோர் பொருளாதார ரீதியாக பின்னடைவு கொண்டவர்கள் அல்லது மோசமான சட்ட பிரதிநிதிகள் மூலம் வழக்கை எதிர்கொண்டவர்களாக இருக்கிறார்கள் என்று கூறுகிறது ப்ராஜெக்ட் டெத் பேனல்டி இந்தியா ரிப்போர்ட் 2016. இதனால் தங்களுக்கு தேவையான தகவல்களை பெறுவதற்காக, பயிற்சி மற்றும் திறன் கொண்ட சட்ட வல்லுநர்கள்/நிபுணர்களை அவர்களால் அணுக முடிவதில்லை.
சட்டத்தில் இதற்கான வழி இல்லாத போதும் கூட, பல நேரங்களில் நிகழ்ந்த குற்றத்தின் மீதான தங்களின் கண்ணோட்டத்தின் அடிப்படையில் இதர காரணங்களை நீதிபதிகள் புறக்கணிக்கின்றனர். ஒரு குற்றவாளிக்கான சாதக பாதக சூழல்களையும் காரணங்க்ளையும் எப்படி ஒரு நீதிபதி அணுக வேண்டும் என்பதற்கும் ஒரு காரணத்தை மற்றொரு காரணத்திற்கு எதிராக எப்படி எடை போட வேண்டும் என்பது குறித்த வழிகாட்டுதல்கள் இல்லை.
தடுப்பு (Mitigation) மற்றும் தடுப்பு காரணங்கள் என்றால் என்ன?
குற்றவியல் விசாரணைகளில் இரண்டு கட்டங்கள் உள்ளன. ஒன்று ஒருவர் குற்றம் செய்தாரா என்பதை நிரூபிக்கும் கட்டம். மற்றொன்று தண்டனை வழங்கும் கட்டம். குற்றம் சாட்டப்பட்ட நபர் மீதான குற்றம் நிரூபிக்கப்படும் பட்சத்தில் அடுத்தக் கட்டம் நோக்கி விசாரணை நகரும். அங்கே தான் அவருக்கு என்ன தண்டனை வழங்கலாம் என்பது முடிவு செய்யப்படுகிறது. தண்டனை வழங்கும் கட்டத்தில் திரட்டப்படும் எந்த தரவுகளும் அதற்கு முந்தைய கட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளில் மாற்றத்தை வழங்காது.
தண்டனை தனிப்பட்டதாக இருக்க வேண்டும் என்பது குற்றவியல் சட்டத்தின் அடிப்படைக் கொள்கையாகும், அதாவது தண்டனையை நிர்ணயிக்கும் போது, குற்றம் சாட்டப்பட்டவரின் தனிப்பட்ட சூழ்நிலைகளை நீதிபதி கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். நமது எல்லா முடிவுகளும் செயல்களும் நம் வாழ்வில் உள்ள பல்வேறு காரணிகளின் சிக்கலான இடையீட்டால் விளைகின்றன என்ற உணர்வை இது பேசுகிறது. மேலும் ஒவ்வொரு தனிநபருக்கும் அத்தகைய செயல்கள் வேறுபட்டது என்பதையும் வலியுறுத்துகிறது. ஒரு தனிநபரின் முடிவுகள் மற்றும் செயல்பாடுகளுக்கு காரணமாக இருக்கும் சிக்கலான தன்மை மற்றும் பல்வேறு காரணங்களை பரிசீலிக்க இயலாது என்றால் வழங்கப்படும் நீதி முழுமையற்றதாக இருக்கும்.
யாரால் இத்தகைய தகவல்களை எல்லாம் சேமிக்க இயலும்?
உச்ச நீதிமன்றம் அனைத்து சிக்கலான தகவல்களையும் சேமிப்பது தண்டனை வழங்கும் போது இன்றியமையாதது என்று கருதுகிறது. சாந்தா சிங் (1976) மற்றும் முகமது மன்னன் (2019) தீர்ப்புகள் இத்தகைய பயிற்சியின் இடைநிலைத் தன்மையை அங்கீகரித்துள்ளன, மேலும் இதுபோன்ற தகவல்களைச் சேகரிக்க வழக்கறிஞர்களைத் தவிர வேறு வல்லுநர்கள் தேவைப்படுகிறார்கள்.
வழக்கறிஞர்கள் இந்த பணியை செய்வதற்காக பயிற்றுவிக்கப்படவில்லை. அதனால் தான் அமெரிக்க பார் அசோசியேஷன் 2003 மரண தண்டனையில் பாதுகாப்பு ஆலோசகரின் நியமனம் மற்றும் செயல்திறனுக்கான வழிகாட்டுதலை வெளியிட்டது.
இந்தியா நீதித்துறையில் இது சாத்தியமா?
தனிநபர்களுக்கு மரண தண்டனை வழங்கும் ஒரு அமைப்பில், சட்டத்தின் மூலம் உயிர்களை பறிக்கும் ஒரு அமைப்பில் உயர்ந்த பட்ச நியாயங்கள் வேண்டும். இதனை துவக்கமாக கொண்டு குற்றவியல் நீதி அமைப்பு, உயர்ந்த பட்ச நியாயத்தை வழங்கும் அமைப்புகள் உருவாக்கப்படுவதை உறுதிசெய்ய தன்னால் முடிந்த அனைத்தையும் செய்ய வேண்டும்.
மரண தண்டனை வழக்குகளில் நியாயம் மற்றும் தனிநபர் காரணங்களின் தேவை என்ன என்ற கேள்வியுடன் துவங்க வேண்டும். நடைமுறையை கேள்வியாக கொண்டு பிறகு நியாயம் மற்றும் தனிநபருக்கான நீதியை அதற்கேற்ற வகையில் வரையறுக்க இயலாது.
நடைமுறைச் சீர்திருத்தங்கள் மரண தண்டனையுடன் தொடர்புடைய இதர பிரச்சனைகளை தீர்க்க முடியுமா?
அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் 24 ஆண்டுகள் (1970-94)பணியாற்றிய நீதிபதி ஹாரி பிளாக்முன் மரண தண்டனைக்கு வலுவான ஆதரவை வழங்கினார். மேலும் அமெரிக்காவில் மரண தண்டனையை மீட்டெடுத்ததில் முக்கிய பங்காற்றினார். அமர்வில் இருந்த காலத்தில், அமெரிக்க மரண தண்ட அமைப்பு நியாயமாக செயல்படுவதை உறுதி செய்வதில் தன்னுடைய நேரத்தை பயன்படுத்தினார்.
மரண தண்டனையை சீர்திருத்த முயற்சிகள் தோல்வியடைந்துவிட்டதாகவும், தேவையான நியாயத்தை அடைய முடியாது என்றும் நீதிமன்றத்தில் அவர் பணியாற்றிய இறுதி ஆண்டில் அறிவித்தார். “இனி மரணத்தின் இயந்திரத்தை பழுதுபார்க்க என்னால் இயலாது” என்று கூறினார்.
மரண தண்டனையை சீர்திருத்துதல் ஒருபுறம் என்றால் அதை ஒழிப்பதற்கான பாதை மறுபுறம் என்று மிக நீண்ட தூரம் ஒன்றோடு ஒன்று சேர்ந்து பயணிக்கின்றன. நம்முடைய நாட்டில் இருப்பது போன்ற ஒரு நீதி அமைப்பில் மரண தண்டனையை சீர்திருத்துவதில் ஈடுபடும் ஒவ்வொரு நிகழ்வும் மரண தண்டனையைப் பயன்படுத்துவதில் உள்ள நியாயமற்ற தன்மையை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil