Rise and fall of Gujarat ABG Shipyard now under probe for fraud | Indian Express Tamil

குஜராத் ஏபிஜி ஷிப்யார்டின் வளர்ச்சியும், வீழ்ச்சியும்… ரூ22,842 கோடி வங்கி கடன் மோசடி!

குஜராத்தின் ஏபிஜி கப்பல் கட்டும் நிறுவனம், ஒரு காலத்தில் 107 கோடி ரூபாய் நிகர லாபத்துடன் வளம் வந்த நிலையில், எப்படி வளர்ச்சியில் சரிவை சரிந்தது? தற்போது ஏன் வங்கி மோசடியில் சிக்கியுள்ளது?

குஜராத் ஏபிஜி ஷிப்யார்டின் வளர்ச்சியும், வீழ்ச்சியும்… ரூ22,842 கோடி வங்கி கடன் மோசடி!

ஒரு காலத்தில் 16,600 கோடி ரூபாய் வருவாயுடன் கப்பல் கட்டுமானத்தில் அதிகார வர்கமாக திகழ்ந்த குஜராத்தின் ஏபிஜி ஷிப் யார்டு நிறுவனம், தற்போது மோசடி புகார் விசாரணையில் சிக்கியுள்ளது. எஸ்பிஐ வங்கி அளித்த புகாரின் பேரில், 28 வங்கிகளின் கூட்டமைப்பிடமிருந்து ரூ.22,842 கோடி கடன் பெற்று ஏமாற்றியதாக ஏபிஜி ஷிப்யார்டு நிறுவனம், அதன் இயக்குநர்கள் மற்றும் ஏபிஜி இன்டர்நேஷனல் பிரைவேட் லிமிடெட் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.

தொடர் நஷ்டம்

2012-13 இறுதி வரை, ABG ஷிப்யார்ட் 107 கோடி ரூபாய் நிகர லாபத்துடன், வளமாக இருந்து வந்தது. ஆனால் அடுத்த ஆண்டே, ரூ199 கோடி நஷ்டத்துடன் சரிவை நோக்கி சென்றது. 2014-15ல் ரூ.897 கோடியாக இருந்த அதன் நிகர இழப்பு மார்ச் 2016க்குள் ரூ.3,704 கோடியாக உயர்ந்தது. கடந்த ஆண்டு ரூ.401 கோடியாக இருந்த வருவாய் ரூ.37 கோடியாக குறைந்துள்ளது.

அந்நிறுவனம் 2013-14 இல் கடன் மறுசீரமைப்புப் பணியை மேற்கொண்டது. அந்தாண்டின் வருடாந்திர அறிக்கையில், புதிய கப்பல் ஆர்டர்களை ரத்து செய்தல், வங்கிகளிடமிருந்து கடன் வழங்குதலை குறைத்தல், அதிக கடன் வாங்குதல், சூரத்தில் உள்ள தஹேஜ் கப்பல் கட்டும் தளத்தின் திறன் குறைந்த பயன்பாடு, 2007 இல் மையத்தின் கப்பல் கட்டும் மானியத் திட்டம் முடிவடைந்தது போன்றவை குறிப்பிடப்பட்டிருந்தது.

ABG ஷிப்யார்டின் 2015-16 ஆண்டு அறிக்கையுடன் இணைக்கப்பட்ட சுயாதீன தணிக்கையாளர் அறிக்கையில், சில கடனாளிகளின் சட்ட நடவடிக்கைகளும், ABG ஊழியர்களால் மோசடி செய்ததாகக் கூறப்படும் மும்பை வருவாய் புலனாய்வு இயக்குநரகத்தின் ஷோகாஸ் நோட்டீஸூம் இடம்பெற்றுள்ளது. தணிக்கையாளரும் நிர்வாகமும் எந்த மோசடியையும் கவனிக்கவில்லை அல்லது புகாரளிக்கவில்லை என்று அறிக்கை கூறுகிறது.

வளர்ச்சி பாதை

ஏபிஜி ஷிப்யார்ட் லிமிடெட் நிறுவனம் மார்ச் 1985 இல் மக்தல்லா ஷிப்யார்ட் பிரைவேட் லிமிடெட் ஆக இணைக்கப்பட்டது. பின்னர், மே 1995 இல் ஏபிஜி ஷிப்யார்ட் பிரைவேட் லிமிடெட் ஆகவும், ஜூன் 1995 இல் ஏபிஜி ஷிப்யார்ட் லிமிடெட் ஆகவும் மாறியது.

1990 காலக்கட்டத்தில் முதல் கப்பலை ஏபிஜி டெலிவர் செய்த நிலையில், 2013க்குள் 165 கப்பல்களை உருவாக்கியது. அவற்றில் 80 சதவீதம் சர்வதேச வாடிக்கையாளர்களுக்காக உருவாக்கப்பட்டவை.

2000 ஆம் ஆண்டில், கடலோர காவல்படைக்கு இரண்டு இன்செப்டர் படகுகளை உருவாக்குவதற்கான முதல் அரசாங்க உத்தரவைப் பெற்றது. தொடர்ந்து, 2011 இல், நீர்மூழ்கிக் கப்பல்கள் உட்பட பாதுகாப்புக் கப்பல்களை உருவாக்குவதற்கான உரிமத்தை பெற்றது.

பிப்ரவரி 2012 இல், ஏபிஜி ஷிப்யார்டு ரூ.16,600 கோடி மதிப்பிலான ஆர்டர்களை கைசவம் வைத்திருந்தது. அதன், முக்கிய கப்பல் கட்டும் தளம் சூரத்தின் மக்தல்லாவில் உள்ள தபி நதிக்கரையில் 35 ஏக்கர் பரப்பளவில் உள்ளது.

குஜராத் கடல்சார் வாரியத்துடன் நீண்ட கால குத்தகைக்கு நிலம் மற்றும் நீர்முனைப் பயன்பாட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, மக்தல்லாவிலிருந்து 150 கிமீ தொலைவில் உள்ள பருச்சில் உள்ள தஹேஜில் இரண்டாவது கப்பல் கட்டும் தளத்தை அமைத்தது.

இந்நிறுவனம் வைப்ரன்ட் குஜராத் உச்சிமாநாட்டில், ரூ2500 மதிப்பில் மூன்றாவது கப்பல் கட்டும் தளம் அமைக்கும் திட்டம் உள்பட பல பெரிய திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டது.

விரிவாக்கம் பணி

ஜனவரி 22, 2006 இல், ABG ஷிப்யார்ட், Fujairah-வில் ஐக்கிய அரபு அமீரத்தை அடிப்படையாகக் கொண்ட Crossocean Ship Repair Limited நிறுவனத்தை வாங்கியது. ஆனால் மார்ச் 2008 இல் அதனை விற்பனை செய்தது. பின்னர், 2007-08 இல், மக்தல்லா கப்பல் கட்டும் தளத்திற்கு அருகில் உள்ள விபுல் ஷிப்யார்டை வாங்கியது.

ஐசிஐசிஐ வங்கி மற்றும் பிற கடன் வழங்குநர்களுடன் ஒப்பந்தம் மூலம் கோவாவின் வெஸ்டர்ன் இந்தியா ஷிப்யார்ட் லிமிடெட் (WISL) கையகப்படுத்தியதை தான் நிறுவனத்தின் முக்கிய மைல்கல் ஆகும்.

மேலும், கடற்படை, கடலோர காவல்படை மற்றும் தனியாரின் கப்பல்களை பழுதுபார்க்கும் WISL இல் 60.15% கட்டுப்பாட்டு பங்குகளை ABG வைத்திருந்தது. இதன் மூலம், 2010-11 காலக்கட்டத்தில், 114 கோடி ரூபாய் வருவாய் பெற்றது. ஆனால், 2012-13இல் அதன் மூலம் கிடைக்கும் வருவாயில் சரிவு ஏற்பட்டது.

அந்நிறுவனம் 2016 இல் கப்பல் பழுதுபார்க்கும் நடவடிக்கைகளை நிறுத்தியது. 2015-16 ஆம் ஆண்டில், அதன் விளம்பரதாரர்கள் அதிலிருந்து விலக முடிவு செய்தனர்.

லெவன்த் லேண்ட் டெவலப்பர்ஸ் பிரைவேட் லிமிடெட், ஏபிஜி எஃப்பிஎஸ்ஓ பிரைவேட் மற்றும் விபுல் ஷிப்யார்ட் ஆகியவற்றில் கட்டுப்பாட்டுப் பங்கைக் பிஜி ஷிப்யார்ட் வைத்திருந்தது. சொல்லப்போனால், ஏபிஜி 55 க்கும் மேற்பட்ட துணை நிறுவனங்களைக் கொண்டிருந்தது.

சொத்து கலைப்பு

2007 ஆம் ஆண்டில், ABG நிறுவனம் கடல்சார் பல்கலைக்கழகத்திற்காக ரூ.50 கோடி புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

ஆனால், குஜராத் தொழில் வளர்ச்சிக் கழகம் (ஜிஐடிசி) சூரத்தின் இச்சாப்பூரில் பல்கலைக்கழகத்திற்காக ஒதுக்கப்பட்ட 1.21 லட்சம் சதுர மீட்டர் நிலத்தை கையகப்படுத்தியது.

ஏனென்றால், நிறுவனத்திற்கு ஒதுக்கப்பட்ட நோக்கத்திற்காக நிலம் பயன்படுத்தப்படாததால் அதை திரும்பப் பெற்றுள்ளோம்” என்று ஜிஐடிசி துணைத் தலைவர் எம் தென்னரசன் கூறினார்.

2014ல் சட்டசபையில் சி.ஏ.ஜி. தாக்கல் செய்த அறிக்கையில், அந்த நிலம் ஒதுக்கப்பட்டது, தற்போதைய பிரீமியம் விலையான Rs 1,400/ sq m என்பதில் 50% சலுகையுடன் Rs 700/ sq m என வழங்கப்பட்டது தெரியவந்துள்ளது. மேலும், குத்தகை வாடகையை செலுத்தாததற்காக கப்பல் கட்டுபவர் மீது வாரியம் (ஜிஎம்பி) நடவடிக்கை எடுக்கவில்லை என்பதையும் சிஏஜி கண்டறிந்தது. ABG ஷிப்யார்டிலிருந்து வர வேண்டிய தொகை இன்னும் நிலுவையில் உள்ளதை GMB அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.

ஏப்ரல் 25, 2019 அன்று ஐசிஐசிஐ வங்கி, ஏபிஜி ஷிப்யார்டு எதிராக அளித்த புகாரில் தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம் (என்சிஎல்டி) திவால் மற்றும் திவால் கோட் பிரிவு 33 இன் கீழ் நிறுவனத்தை கலைக்க உத்தரவிட்டது.

பின்னர், டிசம்பர் 2020 இல், NCLT இன் அகமதாபாத் பெஞ்ச், ஏலதாரர்கள் கிடைக்காததால், சொத்துக்களை தனிப்பட்ட முறையில் விற்பனை செய்ய கலைப்பாளருக்கு அனுமதித்தது.

ஐந்து கப்பல்களைத் தவிர, பருச் மற்றும் கவியாரில் உள்ள 92,000 சதுர மீட்டர் குடியிருப்பு நிலம், மக்தல்லா துறைமுகத்திற்கு அருகில் 4.14 லட்சம் சதுர மீட்டர் தொழில்துறை நிலம் மற்றும் கொல்கத்தாவின் டயமண்ட் ஹார்பரில் உள்ள 27 ஏக்கர் விவசாய நிலம் ஆகியவை கலைக்கப்பட்டன.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Explained news download Indian Express Tamil App.

Web Title: Rise and fall of gujarat abg shipyard now under probe for fraud