scorecardresearch

Explained : பிரிக்ஸ் கூட்டமைப்பு இந்தியாவுக்கு ஏன் மிக முக்கியமானது?

செவ்வாயன்று, பிரதமர் நரேந்திர மோடி 11 வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரேசில் புறப்பட்டார். இந்த பிரிக்ஸ் கூட்டமைப்பின் நோக்கம் என்ன ? தற்காலிக அரசியல் சூழ்நிலைகளில் அதன் முக்கியத்துவம் என்ன ?

Explained: Why BRICS matters for India
Explained: Why BRICS matters for India

சுபாஜித் ராய்

செவ்வாயன்று, பிரதமர் நரேந்திர மோடி 11 வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரேசில் புறப்பட்டார். இந்த பிரிக்ஸ் கூட்டமைப்பின் நோக்கம் என்ன ? தற்காலிக அரசியல் சூழ்நிலைகளில் அதன் முக்கியத்துவம் என்ன ? என்பதை இக்கட்டுரையில் காணலாம்.

பிரிக்ஸ் சர்வதேச கூட்டமைப்பு : எதனால், எப்போது உருவானது-   

நவம்பர் 30, 2001 அன்று, கோல்ட்மேன் சாச்ஸ் அசெட் மேனேஜ்மென்ட்டின் தலைவராக இருந்த பிரிட்டிஷ் பொருளாதார நிபுணர் ஜிம் ஓ’நீல் – பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா ஆகிய நான்கு வளர்ந்து வரும் பொருளாதாரங்களை உள்ளடக்கி ‘பிரிக்’ என்ற வார்த்தையை உருவாக்கினார். டேவிட் கேமரூன் மற்றும் தெரசா மே தலைமையிலான அரசாங்கங்களில் 2015- 16 ஆண்டுகளில் பிரிட்டிஷ் அரசாங்க கருவூலத்தின் வணிக செயலாளராக பணியாற்றியவர் இந்த ஜிம் ஓ’நீல் என்பது குறிபிடத்தக்கது.

கோல்ட்மேன் சாச்ஸின் ‘குளோபல் எகனாமிக் பேப்பர்’ தொடருக்காக எழுதப்பட்ட ‘தி வேர்ல்ட் நீட்ஸ் பெட்டர் எகனாமிக் பிரிக்ஸ்’ என்ற ஒரு ஆய்வறிக்கையில், அடுத்த 50 ஆண்டுகளில்  பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா (பி.ர.இ.சி ) ஆகிய நான்கு பொருளாதாரங்கள் தனித்தனியாகவோ அல்லது ஒரு கூட்டமைப்பாகவோ மிகப் பெரிய பொருளாதார இடத்தை ஆக்கிரமிக்கும் என்ற கருத்தை முன்வைத்தார்.

அந்த ஆய்வறிக்கையில் ஜிம் ஓ’நீல் இது குறித்து விவரமாக கூறுகையில் , ” 2000ம் ஆண்டு இறுதியில் மட்டும், பொருள் வாங்குதிறன் சமநிலை ( பர்சேஸிங் பவர் பேரிட்டி) அடிப்படையில் இந்த நான்கு நாட்டின்  பொருளாதார  மொத்த உள்நாட்டு உற்பத்தி(டாலர் கணக்கில்) உலகளாவிய ஜி.டி.பி யில் 23.3 சதவீதமாகும். வரும் 2001- 02 ஆண்டுகளில், இந்த நான்கு நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி (ரியல் ) G7-ஐ விட அதிகமாகும். நடப்பு ஜி.டி.பி அளவில் பார்த்தல், உலகளாவிய ஜி.டி.பி யில் இந்த நான்கு நாடுகளின் பங்கு 8% சதவீதமாக உள்ளது. எனவே, அடுத்த 10 வருடங்களில் உலகப் பொருளாதாரத்தில் இந்த நான்கு நாடுகளின் வளர்ச்சியும் , அதிலும் குறிப்பாக சீனாவின் பொருளாதார வேகமும்  அதிகரிக்க கூடும். இந்த நான்கு நாடுகளில் (பி.ர.இ.சி) கடைபிடிக்க்கப்படும் நிதிக் கொள்கை(பிஸ்கல் பாலிசி ), பணக் கொள்கை ( மானிட்டரி பாலிசி) ஆகையவைகள் எவ்வாறு உலகளாவிய பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற கேள்வி தற்போதே முக்கியத்துவம் அடைகிறது. இந்த முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு தற்போது இயங்கி வரும் G-7 அமைப்பு, பி.ர.இ.சி நாடுகளையும் பிரதிபலிக்க வேண்டும்” என்று கூறினார்.

G7 அமைப்பை G9  என்று மாற்ற வேண்டுமா?” என்ற கேள்விக்கு – உலகளாவிய பொருளாதார கொள்கையை  மேம்படுத்த இந்த நான்கு நாடுகளையும் உள்ளடக்க வேண்டும்  என்பதே  ஜிம் ஓ’நீல் பதிலாய் இருந்தது.

இந்த ஆய்வறிக்கையில், இந்தியாவின் பங்கைப் பற்றி அவர் எழுதுகையில், “இந்த புது கிளப்பில் சேர இந்தியா நிச்சயமாக ஆர்வமாக இருக்கும்.  மற்ற நாடுகளின்  எந்தவொரு வற்புறுத்தல் களையும் அவர்கள் விரும்புவதில்லை , இதனால் மற்ற நாடுகளுக்கு அறிவுரை கொடுப்பதிலும் அவர்கள் ஆர்வம் காட்டுவதில்லை. இருப்பினும், இந்தியாவின் சந்தை அளவு, மக்கள் தொகை, மனித ஆற்றல் (குறிப்பாக  புவியியல் இருப்பிடம்) ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, இந்தியாவைச் சேர்ப்பது கவர்ச்சிகரமானதாக இருக்கும்” என்று எடுத்துரைத்தார்.

இந்த ஆய்வறிக்கை வெளியிட்டு பதினெட்டு ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தியா பல்வேறு  சர்வதேச பொருளாதார கூட்டமைப்பில் ( குறிப்பாக G 20) வளர்ந்து வரும் பொருளாதார நாடாக  தன்னை அடையாளப் படுத்தி கொள்கிறது.  உலக மக்கள்தொகையில் 42%, உலக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 23% ,  உலக வர்த்தகத்தில் சுமார் 17% பங்கைக் கொண்ட ஐந்து பொருளாதாரங்களை தற்போது பிரிக்ஸ் என்ற கட்டமைப்பிற்குள்  ஒன்றாக செயல்பட்டு வருகின்றன.

2006ம் ஆண்டு  செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் நடைபெற்ற  ஜி 8-அவுட்ரீச் உச்சிமாநாட்டில், தனியொரு நிகழ்வாக ரஷ்யா, இந்தியா மற்றும் சீனா தலைவர்கள் சந்திப்பு நடைபெற்றது. முதன் முதலில் இங்கு தான் நாட்டுத் தலைவர்கள் சந்தித்து பிரிக் என்ற அமைப்பு உருவாக்கம் செய்யப்பட்டது. 2006 ம் ஆண்டு நியூ யார்க் நகரில்  நடந்த ஐக்கிய நாடுகள் பொதுசபை கூட்டத்தின் போது, இந்த பிரிக் நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களின் கூட்டமும் நடைபெற்றது . இதில் தான் பிரிக் சர்வேதச கூட்டமைப்பின் நெறிமுறைகள் வகுக்கப்பட்டது.  பிரிக் கூட்டமைப்பின் முதல் உச்சி மாநாடு ஜூன் 16, 2009 அன்று ரஷ்யாவின் யெகாடெரின்பர்க்கில் நடைபெற்றது.

செப்டம்பர் 2010 இல் நியூயார்க்கில் நடந்த பிரிக்ஸ் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில், தென்னாப்பிரிக்கா இந்த கூட்டமைப்பில் சேர்க்கப்பட்டது. அன்றிலிருந்து, இந்த கூட்டமைப்பு பிரிக்ஸ் என்று அழைக்கப்படுகிறது. ஏப்ரல் 14, 2011 அன்று சான்யாவில் நடந்த மூன்றாவது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் தென்னாப்பிரிக்காவும் கலந்து கொண்டது. பிரக்ஸ் உச்சி மாநாட்டின் 10வது ஆண்டு நிறைவு கடந்த ஆண்டு தென்னாப்பிரிக்காவின்   ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவும், பிரிக்ஸ் உச்சி மாநாடும்: 

இந்திய கண்ணோட்டத்தில், வளரும் நாடுகளின் அல்லது உலகளாவிய தெற்கத்திய நாடுகளின் குரலை பிரிக்ஸ் கூட்டமைப்பு வெளிப்படுத்திகிறது. உலக வர்த்தக அமைப்பில் தொடங்கி  காலநிலை மாற்றம் வரையிலான பிரச்சினைகளில் வளர்ந்த நாடுகள் தங்களுக்குள் ஒரு குழுவாக இணைந்து குரலை உயர்த்தும் சூழ்நிலையில், வளரும் நாடுகளின் உரிமைகளை பிரிக்ஸ் போன்ற சர்வேதச கூட்டமைப்பு பாதுகாக்கும் என்று புது தில்லி நம்புகிறது. ஐந்து பிரிக்ஸ் நாடுகளும் ஜி -20 உறுப்பினர்களாக உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும், ஒருபுறம் ரஷ்யா-சீனாவுக்கும், மறுபுறம் அமெரிக்காவுக்கும் இடையிலான சமநிலைப்படுத்தும் செயலை இந்தியா பராமரிக்க வேண்டும். கடந்த பத்தாண்டுகளில் இந்தியா உலகளாவிய விவகாரங்களில் தனது பங்கைக் அதிகபடுத்திக்  கொண்டிருந்தாலும், பிரிக்ஸ் கூட்டமைப்பில் இருக்கும் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்,  ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர், பிரேசிலின் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோ போன்ற தலைவர்கள் தேசியவாதத்தின் மூலம் தங்களது ஆளுமையை வெளிபடுத்துகின்றன. தெற்கில் இருக்கும் மற்ற நாடுகள் இதை சாத்தியமாகவும், நம்பிக்கையாகவும் காண்கின்றனர். ஏனெனில், இந்த தலைவர்கள் தங்கள் முன்னோடிகளை விட ஒருமித்த கருத்துடன் இருக்கின்றனர். கடந்த சில ஆண்டுகளில், பயங்கரவாதத்திற்கு எதிராக ஒரு வலுவான நிலைப்பாட்டை எடுக்கவும், பயங்கரவாதம் தொடர்பான குறிப்பிட்ட அம்சங்கள் குறித்து கவனம் செலுத்தும் ஆலோசனைகளை கொண்டுவரவும் முன்னிலை வகித்ததாக புது தில்லியும் நம்புகிறது.

இந்தியாவின் தற்போதைய எதிர்பார்ப்பு: 

இந்த ஆண்டு, பயங்கரவாத எதிர்ப்பு தொடர்பான கூட்டு செயற்குழுவின் கீழ் பயங்கரவாத நிதி; பயங்கரவாத நோக்கங்களுக்காக இணையத்தைப் பயன்படுத்துதல்; தீவிரமயமாக்கலை எதிர்கொள்வது; வெளிநாட்டு பயங்கரவாத போராளிகளின் பிரச்சினை; பயங்கரவாதத்திற்கு எதிரான  திறன் மேம்பாடு  போன்ற ஐந்து பகுதிகளில் துணை செயற்குழுக்களை அமைக்க முடிவு செய்துள்ளது. பயங்கரவாத நோக்கங்களுக்காக இணையத்தைப் பயன்படுத்துவது தொடர்பான துணைக்குழுவுக்கு இந்தியா தலைமை தாங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.கடந்த மாதம், பிரிக்ஸ் அமைப்பின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் கூட்டம் நடைபெற்ற போது , என்எஸ்ஏ அஜித் டோவல் இந்தியாவில் டிஜிட்டல் தடயவியல் ஒர்க்ஷாப் நடத்த முன்மொழிந்தார். பிரேசில் ஜனாதிபதியும் பயங்கரவாதம் தொடர்பான கருத்துகளுக்கு  முன்னுரிமை கொடுத்து வருகிறார்.

பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பயங்கரவாதத்தை பற்றிய கருத்துகளுக்கு முன்னிரிமைக் கொடுத்து விவாதிப்பது  இந்தியாவுக்கு கிடைத்த ஒரு வெற்றியாகும்.2017 ம் ஆண்டு  செப்டம்பர் மாதத்தில், சீனா தலைமையேற்று நடந்த  ஜியாமென் பிரிக்ஸ் உச்சிமாநாட்டில்  இது தெளிவாகத் தெரிந்தது. டோக்லாம் எல்லையில் பதட்டமான சூழ் நிலையில் இரு நாடுகள் இருந்த போதிலும், பயங்கரவாதத்திற்கு எதிராக ஒருமித்த கருத்து  அடையப்பட்டது என்பது பெய்ஜிங்கும்,புதுடெல்லியும் பிரிக்ஸ் போன்ற கட்டமைப்பின் தேவையை உணர்ந்துள்ளனர் என்பது தெளிவாகிறது.

இந்தியாவில் நடைபெறவுள்ள 2021 உச்சி மாநாட்டை நடத்துவதற்கான அடித்தளத்தை அமைப்பதற்கான ஒரு வாய்ப்பாக இந்த உச்சிமாநாடு அமையும். கடைசியாக இந்தியாவில் பிரிக்ஸ் உச்சிமாநாடு கோவாவில் 2016 ல் நடந்தது. இந்தியாவில் நடத்தப்படவுள்ள ஜி 20 உச்சி மாநாடு 2022 ஆம் ஆண்டில் நடைபெறும் என்பதையும் இந்தியா கவனத்தில் கொள்கிறது . மேலும் , இந்த  இரண்டு நிகழ்வின்  நோக்கங்களையும் இந்தியாவிற்கு சாதகமாய் மாற்ற ஒரு வாய்ப்பாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது .

Stay updated with the latest news headlines and all the latest Explained news download Indian Express Tamil App.

Web Title: Role of brics in new multilateralism india the 11 brics summit