ராஷ்டீரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் (ஆர்.எஸ்.எஸ்) பழைய சீருடையைக் குறிக்கும் வகையில், காக்கி டவுசரின் விளக்கத்துடன் காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ ட்வீட் ஒன்று திங்கள்கிழமை (செப்டம்பர் 12) பாஜக உறுப்பினர்களின் கோபத்தைத் தூண்டியது
“நாட்டை வெறுப்பின் தளைகளிலிருந்து விடுவிப்பதற்கும், பாஜக-ஆர்எஸ்எஸ் செய்த கேடுகளை நீக்குவதற்கும். படிப்படியாக, இலக்கை அடைவோம். #இந்திய ஒற்றுமை யாத்திரை” என்று காங்கிரஸ் ட்வீட் செய்துள்ளது. பாஜக செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா, இந்த படத்தை வன்முறையைத் தூண்டுகிறது என்று அந்த ட்வீட்டை அகற்ற வேண்டும் என்று கூறினார்.
காக்கி டவுசர் பாரம்பரியமாக ஆர்.எஸ்.எஸ் உடன் தொடர்புடையது. காக்கி டவுசர் 90 ஆண்டுகளுக்கும் மேலாக அந்த அமைப்பின் அதிகாரப்பூர்வ சீருடையில் ஒரு பகுதியாக இருந்தது. 2016 ஆண்டு மட்டுமே காக்கி நிற பாண்ட்டாக மாறியது.
ஆர்.எஸ்.எஸ் சீருடை அணிந்ததற்கான காரணம் என்ன?
ஆர்.எஸ்.எஸ் இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளபடி, தினசரி ஷாகா பயிற்சிகளுக்கு அல்லது உறுப்பினர்களின் ஒரு மணிநேரக் கூட்டங்களுக்கு சீருடை முக்கியமானது. அவர்கள் உடற்பயிற்சி, தேசபக்தி பாடல்கள், பல்வேறு தலைப்புகளில் குழு விவாதங்கள், நல்ல இலக்கியங்களைப் படித்தல் மற்றும் நமது தாய்நாட்டிற்கு பிரார்த்தனை” போன்றவற்றில் பங்கேற்கிறார்கள். . இந்தியா முழுவதும் சுமார் 50,000 ஷாகாக்கள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் அதில், “ஆர்.எஸ்.எஸ் உடற்பயிற்சி மூலம் ஸ்வயம்சேவகர்களிடையே ஒற்றுமை மற்றும் சகோதரத்துவ உணர்வு ஆகியவற்றை உருவாகிறது. இந்த நோக்கத்திற்காக ஒரு சீருடை எப்போதும் மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இருப்பினும், சிறப்பு விழாக்களுக்கு மட்டுமே சீருடை கட்டாயம் என்று ஆர்.எஸ்.எஸ் இணையதளம் கூறுகிறது, மேலும், தினசரி ஷாகாக்களுக்கு அதை அணிய வேண்டுமா என்பது தனிப்பட்ட உறுப்பினர்களைப் பொறுத்தது. அவர்கள் அதைத் தேர்ந்தெடுக்கும்போது, அவர்கள் அதைத் தயாரித்து, அதற்குத் தாங்களே பணம் செலுத்துகிறார்கள். இந்த எளிமைக்காக, சீருடையின் மலிவு மற்றும் அணுகல் ஆகியவை அடிக்கடி குறிப்பிடப்படுகின்றன.
ஆர்.எஸ்.எஸ் தளத்தில் அடிக்கடி கேட்கப்படும் கேள்வி பிரிவில், “ஏன் ஆர்.எஸ்.எஸ் சீருடையில் அரை பாண்ட்டையும் தினசரி ஷாகாக்களை வலியுறுத்துகிறது” என்று ஒரு கேள்வி உள்ளது. அதற்கு பின்வருமாறு பதிலளிக்கப்பட்டுள்ளது: “இது வற்புறுத்தற்கானது அல்ல, ஆனால், வசதிக்கானது. தினசரி ஷாகா திட்டத்தில் உடற்பயிற்சிகள் உள்ளன. இந்த நோக்கத்திற்காக, ஒரு அரை பாண்ட் அனைவருக்கும் ஏற்றது. மலிவு விலையில் கிடைக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளது.
அப்படியானால், ஆ.எஸ்.எஸ் டவுசர் வேண்டாம் எனக் கூறி சீருடையை மாற்றியது ஏன்?
ஆர்.எஸ்.எஸ் காலத்துக்கு ஏற்ப சீருடையில் மாற்றம் செய்வது குறித்து பரிசீலிபதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் 2015 ஆம் ஆண்டு முதன்முதலில் செய்தி வெளியிட்டது. சில பழைய ஆர்.எஸ்.எஸ் ஊழியர்கள், குறிப்பாக மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர்கள், சீருடை மாற்றும் யோசனையை எதிர்த்தாலும், காக்கி டவுசர் இளைஞர்களை ஆர்.எஸ்.எஸ்.ஸில் சேரவிடாமல் தடுப்பதாகப் பல பிரச்சாரகர்கள் கருதினர்.
“சர்சங்சாலக் (மோகன் பகவத்) மற்றும் சர்கார்யாவா (பையாஜி ஜோஷி) இருவரும் புதிய சீருடைக்கு ஆதரவாக உள்ளனர். மேலும், காலத்திற்கு ஏற்ப நாம் மாற வேண்டும் என்று நினைக்கிறார்கள். ஆனால், சிலர் இந்த யோசனையை எதிர்க்கின்றனர்” என்று ஒரு மூத்த ஆர்.எஸ்.எஸ் பிரசாரக் அந்த நேரத்தில் இந்தியன் எக்ஸ்பிரஸிடம் கூறினார்.
சீருடை மாற்றம் 2016-இல் நடந்தது. அந்த ஆண்டு மார்ச் மாதம் நாகூரில் சங்கத்தின் மிக உயர்மட்ட முடிவெடுக்கும் அமைப்பான அகில பாரதிய பிரதிநிதி சபா கூட்டத்தில் ஆர்.எஸ்.எஸ்.ஸின் முத்திரையான காக்கி டவுசருக்கு பதிலாக டார்க் காக்கி பாண்ட்டாக மாற்ற முடிவு எடுக்கப்பட்டது.
ஆர்.எஸ்.எஸ் சீருடையின் மற்ற கூறுகள் எவை?
1925ல் உருவான காலத்திலிருந்து 1939 வரை ஆர்.எஸ்.எஸ்., காக்கி சீருடையில் இருந்தது. அடுத்தடுத்த ஆண்டுகளில் சீருடையில் மாற்றங்கள் ஏற்பட்டன. 1940 இல், வெள்ளை சட்டைகள் அறிமுகப்படுத்தப்பட்டன. 1973-இல் தோல் காலணிகளை நீண்ட பூட்களாக மாற்றியது. பின்னர், ரெக்சின் காலணிகளும் அனுமதிக்கப்பட்டன. இருப்பினும், காக்கி டவுடர் 2016 வரை தொடர்ந்து அப்படியே இருந்தது.
“அன்றாட வாழ்க்கையில், முழு நீள கால்ச்சட்டை (பாண்ட்) அணிவது சாதாரணமானது. எனவே, நாங்கள் அதை ஏற்றுக்கொண்டோம். நாங்கள் காலத்துக்கு ஏற்ப மாறிக் கொண்டிருகிறோம். அதில் எந்தத் தயக்கமும் இல்லை” என்று அப்போதைய சர்கார்யாவா அல்லது பொதுச் செயலாளர் பையாஜி ஜோஷி ஒரு செய்தியாளர் சந்திப்பில் சீருடை மாற்றம் குறித்து கூறியிருந்தார். அப்போது அவர், பழுப்பு நிற காக்கி டவுசரை மாற்றுவதற்கு குறிப்பிட்ட காரணங்கள் எதுவும் இல்லை என்று கூறினார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.