/indian-express-tamil/media/media_files/2025/10/03/rss-ramnath-kovind-mohan-bhagwat-2025-10-03-21-12-06.jpeg)
RSS 100th anniversary: நாக்பூரில் உள்ள ரெஷிம்பாக்கில் நடந்த ஆர்.எஸ்.எஸ்-ன் நூற்றாண்டு விழாவில், இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத். Photograph: (Express photo: Deepak Joshi)
RSS 100th anniversary: ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் (ஆர்.எஸ்.எஸ்.) நூற்றாண்டு விழாவில் தலைமை விருந்தினராகக் கலந்துகொண்ட இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், 2001-ம் ஆண்டு அப்போதைய பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் “நாங்கள் அம்பேத்கரியர்கள்” என்று கூறியதை வியாழக்கிழமை நினைவுகூர்ந்தார்.
“2001-ம் ஆண்டு செங்கோட்டை வளாகத்தில் நடந்த தலித் சங்கமப் பேரணியை நான் குறிப்பிட விரும்புகிறேன். அப்போது நான் பா.ஜ.க-வின் பட்டியல் இன மோர்ச்சாவின் தலைவராக இருந்தேன், அடல் பிஹாரி வாஜ்பாய் பிரதமராக இருந்தார். சங்கப் பரிவாரமும், அடல் பிஹாரி வாஜ்பாயும் தலித் எதிர்ப்பாளர்கள் என்று பலர் தவறான பிரசாரத்தில் ஈடுபட்டனர். அப்போது பேரணியில் உரையாற்றிய அடல் பிஹாரி வாஜ்பாய், ‘நமது அரசாங்கம் தலித்துகள், இதர பிற்படுத்தப்பட்டோர் மற்றும் ஏழைகளின் நலனுக்காக உள்ளது’ என்று கூறினார்” என்று ராம்நாத் கோவிந்த் தெரிவித்தார்.
அவர் மேலும் வாஜ்பாயின் முக்கிய வாசகத்தைக் கோடிட்டுக் காட்டினார்: “‘நமது அரசாங்கம் மனு ஸ்மிருதியின் (Manu Smriti) அடிப்படையில் அல்ல, மாறாக பீம் ஸ்மிருதியின் (Bhim Smriti) அடிப்படையில் செயல்படும். பீம் ஸ்மிருதி என்பது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தைக் குறிக்கும். நாங்கள் பீம்வாதிகள், அதாவது அம்பேத்கரியர்கள் என்றும் அவர் கூறியிருந்தார்.” என்றார்.
சங்கத்திற்கு எதிரான தவறான பிரசாரத்தால் உருவான தவறான எண்ணங்களை நீக்குவதில் அடல் பிஹாரி வாஜ்பாயின் அந்த உரை வரலாற்றுப் பங்கைக் கொண்டிருந்ததாக ராம்நாத் கோவிந்த் குறிப்பிட்டார். மேலும், சங்கம் சமூக ஒற்றுமை மற்றும் சீர்திருத்தத்தின் ஆதரவாளராக இருந்து வருகிறது என்றும் வலியுறுத்தினார்.
காங்கிரஸ் கட்சி சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் இட ஒதுக்கீட்டின் உச்ச வரம்பை மீறுதல் குறித்து கோரிக்கை விடுத்த பிறகு, சாதி தேசிய அரசியலில் பிரதான விவாதமாக உருவெடுத்தது. இந்தச் சூழலில், ஆர்.எஸ்.எஸ்-ன் 100-வது ஆண்டு விஜயதசமி விழாவில், தலைமை விருந்தினர் ராம்நாத் கோவிந்த்தின் உரையில் சமூக நீதிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தது, இது இந்த விவாதத்திற்கு சங்கம் அளிக்கும் ஒரு பிரதிபலிப்பாகக் கருதப்படுகிறது.
சமீபத்தில், ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் டெல்லியில் ஆற்றிய உரைகளில், வரலாற்றில் பாகுபாடு காட்டப்பட்டவர்கள் இனி இட ஒதுக்கீடு தேவையில்லை என்று சொல்லும் வரை அது தொடரும் என்று கூறியிருந்தார். மேலும், மோடி அரசாங்கம் விரைவில் நடைபெறவிருக்கும் அடுத்த மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் சாதி விவரங்களைச் சேகரிக்க ஒப்புக் கொண்டுள்ளது.
ராம்நாத் கோவிந்த்தின் உரையில் அம்பேத்கர் மற்றும் பிற தலித்-பகுஜன் ஆளுமைகள் குறித்துப் பல குறிப்புகள் இருந்தன. ஆர்.எஸ்.எஸ். சாதி வேறுபாடுகளைக் கடந்ததற்காக அவர் பாராட்டு மழை பொழிந்தார்.
“நாக்பூரைச் சேர்ந்த இரண்டு மருத்துவர்கள் என் வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தினர் – டாக்டர் ஹெட்கேவர் மற்றும் டாக்டர் அம்பேத்கர். பாபாசாகிப்பின் அரசியலமைப்பில் பொறிக்கப்பட்டுள்ள சமூக நீதியின் காரணமாக, என்னைப் போன்ற ஒரு சாதாரண சமூக மற்றும் பொருளாதாரப் பின்னணியைக் கொண்ட நபரால் உச்ச அரசியலமைப்புப் பதவியை அடைய முடிந்தது. டாக்டர் ஹெட்கேவரின் கருத்துகளில் இருந்து சமுதாயத்தையும் தேசத்தையும் புரிந்துகொள்ளும் ஒரு பார்வையை நான் பெற்றேன். தேசிய ஒற்றுமை மற்றும் சமூக நல்லிணக்கம் பற்றிய தீவிர உணர்வுடன் பொதுச் சேவை செய்ய எனக்கு உத்வேகம் அங்கிருந்து வருகிறது” என்று அவர் கூறினார்.
காணொளியில் சங்கம் குறித்து தவறான எண்ணங்கள் கொண்டவர்கள் மத்தியில், சங்கத்திற்குள் தீண்டாமை மற்றும் சாதிப் பாகுபாடு இல்லை என்பது இன்றும் பலருக்குத் தெரியவில்லை என்றும், இந்தத் தவறான எண்ணங்கள் நீக்கப்பட வேண்டும் என்றும் கோவிந்த் வலியுறுத்தினார்.
ஆர்.எஸ்.எஸ்-ன் ஏகாத்மதா ஸ்தோத்திரத்தில் (தேசிய ஒற்றுமைப் பாடல்) வால்மீகி, ஏகலைவன், ரவிதாஸ், கபீர், துக்காராம், பிர்சா முண்டா, மகாத்மா புலே, ஸ்ரீ நாராயண குரு, பாபாசாகேப் பீம்ராவ் அம்பேத்கர் போன்ற பல்வேறு சாதி மற்றும் பழங்குடித் தலைவர்கள் குறிப்பிடப்பட்டிருப்பது, அதன் அனைவரையும் சென்றடையும் தன்மைக்கு சான்றாகும் என்று கோவிந்த் சுட்டிக்காட்டினார். இந்த உண்மை சமூக ஊடகங்கள் உட்பட டிஜிட்டல் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி பரவலாகப் பிரச்சாரம் செய்யப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். இந்த ஒவ்வொரு பெயரும் ஒரு தலித் - பகுஜன் அல்லது பழங்குடியினரின் அடையாளமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
சாதி மற்றும் படிநிலையின் அடிப்படையில் பாகுபாடு இல்லாமல் மக்கள் சகோதரர்களாக வாழும் சமூகமே இலட்சிய சமூகம் என்று நாராயண குருவின் வார்த்தைகளை அவர் மேற்கோள் காட்டினார். ஸ்வயம் சேவகர்கள் தினமும் அவரை நினைவு கூர்கிறார்கள் என்பதை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் மேலும் கூறினார்.
அரசியலமைப்பு விழுமியங்களுக்குத் தாம் எப்போதுமே முன்னுரிமை அளித்ததாகக் குறிப்பிட்ட ராம்நாத் கோவிந்த், இந்த விழுமியங்களைப் புரிந்துகொள்வதில் அம்பேத்கரின் கருத்துகள் தனக்கு கலங்கரை விளக்கமாக இருந்ததாகக் கூறினார்.
“பாபாசாகேப் அரசியலமைப்பில் தேசிய ஒற்றுமைக்கு உச்ச முக்கியத்துவம் அளித்தார். தேசியவாத உணர்வு நமது அரசியலமைப்பின் மையத்தில் உள்ளது. எனக்கு முன் குடியரசுத் தலைவராக இருந்த பிரணாப் முகர்ஜி இங்கு ‘அரசியலமைப்பு தேசபக்தி’ இந்திய தேசியவாதத்தின் வேர் என்று கூறியிருந்தார். ஒருமுறை அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்துவிட்டால், ஒவ்வொரு பிரச்னையும் அதன் கட்டமைப்புக்குள் தீர்க்கப்பட வேண்டும் என்று டாக்டர் அம்பேத்கரும் கூறுவார். நமது தேசிய லட்சியங்களை நாம் அரசியலமைப்பிற்குள்ளேயே தேட வேண்டும்” என்று ராம்நாத் கோவிந்த் கூறினார்.
“1949 நவம்பர் 25-ல் அரசியலமைப்புச் சபையில் ஆற்றிய உரையில், பாபாசாகேப் அம்பேத்கர் சில கவலைகளை வெளிப்படுத்தியிருந்தார், அவை சங்கத்திற்கும் இருந்தன. ஆங்கிலப் பழமொழியான ‘ஒன்றிணைந்தால் நிற்போம், பிரிந்தால் வீழ்வோம்’ (United we stand, divided we fall) என்பதைக் குறித்து அவர் பேசியிருந்தார். பிரிவுகள் வீழ்ச்சிக்கு வழிவகுக்கும். நாம் பிரிந்து நின்றதால்தான் வெளிநாட்டினர் லாபம் அடைந்தனர் என்று டாக்டர் ஹெட்கேவரும் கூறினார். சங்கம் ஒற்றுமை மற்றும் அமைப்பின் சின்னமாகும்.” என்றார்.
கடந்த ஆண்டு பிரதமர் மோடி எழுப்பிய ‘ஒன்றிணைந்தால் பாதுகாப்பாக இருப்போம்’ என்ற முழக்கத்தை ராம்நாத் கோவிந்த்தின் மேற்கோள் நினைவுபடுத்துகிறது. இதன் மூலம் சங்கத்தின் பாரம்பரியமான இந்து சங்காதன் கருத்தை சமூக நீதியுடன் இணைக்கிறது.
சமூக ஒற்றுமைக்கான சங்கத்தின் முயற்சிகள் மற்றும் சாதிப் பிரிவுகளைக் கடந்து செல்வதால் மகாத்மா காந்தியும் “மிகவும் ஈர்க்கப்பட்டார்” என்று ராம்நாத் கோவிந்த் கூறினார். செப்டம்பர் 16, 1947-ல் டெல்லியில் நடந்த ஒரு பேரணியில், ஹெட்கேவர் இருந்த காலத்தில் தான் சங்கத்தின் தலைமையகத்திற்குச் சென்றதாகவும், அங்கு சாதிப் பிரிவுகள் முற்றிலுமாக இல்லாததைக் கண்டு தான் ஈர்க்கப்பட்டதாகவும் காந்தி நினைவு கூர்ந்திருந்தார் என்றும் அவர் தெரிவித்தார்.
டாக்டர் அம்பேத்கர் கூட 1940 ஜனவரியில் மகாராஷ்டிராவின் சதாராவில் உள்ள கராடில் ஒரு சாகாவிற்குச் (RSS Shakha) சென்று, அதேபோல் ஈர்க்கப்பட்டார் என்றும் அவர் கூறினார். சில வேறுபாடுகள் இருந்தபோதிலும், சங்கம் மீது தனக்கு ஒரு நெருக்கமான உணர்வு இருந்தது என்று அம்பேத்கர் மராத்தியில் ‘கேசரி’ செய்தித்தாளில் எழுதியிருந்ததாகவும் ராம்நாத் கோவிந்த் உறுதிபடக் கூறினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.