அமெரிக்கா, கனடாவில் புதிய தொற்றுக்கு காரணியாக இருக்கும் வெங்காயம்

அமெரிக்காவிலும் கனடாவிலும் உள்ள சுகாதார அதிகாரிகள் சால்மோனெல்லா பாக்டீரியா தொற்றுக்கும் வெங்காயத்திற்கும் இடையே ஒரு தொடர்பைக் கண்டறிந்துள்ளனர். சால்மோனெல்லா தொற்று என்றால் என்ன, அது வெங்காயம் மூலம் எவ்வாறு பரவுகிறது?

By: Updated: August 13, 2020, 09:58:19 PM

அமெரிக்காவிலும் கனடாவிலும் வெங்காயம் கவலைக்குரிய ஒரு காரணியாக மாறியுள்ளது. கடந்த ஒரு வாரமாக, இரு நாடுகளிலும் உள்ள சுகாதார நிறுவனங்கள் கலிபோர்னியாவைச் சேர்ந்த தாம்சன் இன்டர்நேஷனல் நிறுவனம் வழங்கிய வெங்காயத்தை நிராகரிக்குமாறு அந்நாட்டு குடிமக்களைக் கேட்டு எச்சரிக்கைகளை வெளியிட்டுள்ளன. அது சால்மோனெல்லா பாக்டீரியா தொற்றுடன் தொடர்புடையது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சால்மோனெல்லா பாக்டீரியா தொற்று என்றால் என்ன என்றும் அது வெங்காயம் வழியாக எவ்வாறு பரவுகிறது? என்பதையும் விரிவாக காணலாம்.

சால்மோனெல்லோசிஸ் என்றால் என்ன?

சால்மோனெல்லா பாக்டீரியா விலங்குகளில் வாழ்கிறது. இது ஒரு மனித உடலில் நுழையும் போது அது குடலைத் தாக்கும் சால்மோனெல்லோசிஸ் என்ற தொற்றுநோயை ஏற்படுத்துகிறது. மேலும், இது வயிற்றுப்போக்கு, வயிற்று வலி, காய்ச்சல், வாந்தி, மலத்தில் இரத்தப்போக்கு மற்றும் குமட்டல் போன்றவற்றை ஏற்படுத்தும். இந்த நோய்த்தொற்றின் அறிகுறிகள் 2 முதல் 7 நாட்களுக்கு நீடிக்கும். இருப்பினும், குடல் செயல்பாடு சில நேரங்களில் இயல்பு நிலைக்கு வருவதற்கு சில மாதங்கள் ஆகும். சில சந்தர்ப்பங்களில், இது குடலில் இருந்து இரத்த ஓட்டத்திற்கு தொற்றுநோயை பரப்புகிறது.

இந்த தொற்று ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளையும், மூத்த குடிமக்களையும் மிக மோசமாக பாதிக்கிறது. பாதிக்கப்பட்டவர்களில் 1 சதவீதத்திற்கும் குறைவானவர்கள் இந்த நோய்த்தொற்றுக்கு உயிரிழந்துள்ளனர்.

சால்மோனெல்லா அசுத்தமான நீர் அல்லது உணவு மூலம் மனிதர்களுக்கு பரவுகிறது. இந்த முறை தாம்சன் இன்டர்நேஷனல் பயிரிட்ட அசுத்தமான வெங்காயம் வழியாக இந்த பாக்டீரியா பரவுகிறது.

தொற்று பரவலின் அளவு என்ன?

அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் ஆகஸ்ட் 1, 2020 அன்று தாம்சன் இன்டர்நேஷனல் நிறுவனம், மே 1 முதல் அனுப்பப்பட்ட சிவப்பு, மஞ்சள், வெள்ளை மற்றும் இனிப்பு மஞ்சள் வெங்காயங்களை திரும்ப பெறுவதாக அறிவித்ததை தெரிவித்துள்ளது.

அமெரிக்காவில் உள்ள 50 அனைத்து மாநிலங்களிலும் கனடா மற்றும் கொலம்பிய பகுதிகளிலும் உள்ள விநியோகஸ்தர்கள், மொத்த விற்பனையாளர்கள், முக்கிய விநியோகங்களுக்கு வெங்காயம் விநியோகம் வழங்கப்பட்டது. இதில், வால்மார்ட் மற்றும் க்ரோகர் ஆகிய சில பெரிய பெரிய விநியோக சங்கிலிகளும் அடங்கும்.

தாம்சன் இன்டர்நேஷனல் நிறுவனம் வெங்காயத்தை வலை சாக்குகளிலும் அட்டைப்பெட்டிகளிலும் விற்பனை செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது. அவர்கள் பல மூலப்பொருள் உணவு உற்பத்தியின் ஒரு பகுதியாக இருந்துள்ளதால், எந்த தொகுப்புகள் மாசுபட்டுள்ளன என்பதை மதிப்பிடுவது கடினம். ஆரம்பத்தில், சிவப்பு வெங்காயம் மட்டுமே தொற்று இருப்பதாக சந்தேகிக்கப்பட்டது, ஆனால், பிற வகைகளிலும் தொற்று ஏற்படுமோ என்ற அச்சத்தில், நிறுவனம் கலிபோர்னியாவிலிருந்து முழு உற்பத்தியையும் திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது.

அமெரிக்காவில், ஆகஸ்ட் 6, 2020 வரை 43 மாநிலங்களில் 640 தொற்றுகள் இருப்பதாக நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் (சி.டி.சி) உறுதிப்படுத்தியுள்ளன. அதிகபட்சமாக அமெரிக்காவில் உள்ள உட்டா மாகாணத்தில் 90 தொற்றுகள், ஓரிகான் – 85, கலிபோர்னியா 76 தொற்றுகள் ஏற்பட்டுள்ளன. குறைந்தது 85 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், உயிரிழப்புகள் எதுவும் இல்லை.

கனடாவில், உறுதிப்படுத்தப்பட்ட 239 தொற்றுகள் பொது சுகாதார நிறுவனத்தில் பதிவாகியுள்ளன. ஜூன் நடுப்பகுதி முதல் ஜூலை வரை மக்கள் நோய்வாய்ப்பட்டதாக தெரிவித்துள்ளனர். நாட்டில் குறைந்தது 29 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டும் என்று அந்நாட்டின் பொது சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

சால்மோனெல்லோசிஸ் பரவல்: என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?

கனடா அரசாங்கம் உணவகங்கள், சில்லறை விற்பனையாளர்கள், ஹோட்டல்கள் மற்றும் பொது மக்களுக்கு ஒரு ஆலோசனையை வழங்கியுள்ளது. “அமெரிக்காவின் கலிபோர்னியா பேக்கர்ஸ்ஃபீல்டில் உள்ள தாம்சன் இன்டர்நேஷனல் நிறுவனம் விளைவித்த சிவப்பு, மஞ்சள், வெள்ளை மற்றும் இனிப்பு மஞ்சள் வெங்காயங்களை சாப்பிடவோ, பயன்படுத்தவோ, விற்கவோ அல்லது பரிமாறவோ கூடாது.” என்று அறிவுறுத்தியுள்ளது.

அமெரிக்காவில், வெங்காயம் எங்கு தயாரிக்கப்படுகிறது என்று தெரியாவிட்டால் அதைத் தூக்கி எறியுமாறு சி.டி.சி மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. தாம்சன் இன்டர்நேஷனலுடன் நிறுவனத்தின் பிராண்ட் லேபிள்கள் ஒட்டப்பட்ட வெங்காயம் வழங்கப்படவில்லை என்பதை உறுதி செய்ய உணவகங்கள், ஹோட்டல்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்களை சி.டி.சி கேட்டுக்கொண்டுள்ளது.

அமெரிக்க உணவு பாதுகாப்பு மற்றும் தொற்று சேவை (FSIS) குறிப்பிடுகையில், “சில உற்பத்திகள்(வெங்காயம்) நுகர்வோரின் குளிர்சாதன பெட்டிகளில் இருக்கலாம் என்று கவலை கொண்டுள்ளது. இந்த உற்பத்திகளை வாங்கிய நுகர்வோர் அவற்றை உட்கொள்ள வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இந்த உற்பத்திகள் தூக்கி எறியப்பட வேண்டும் அல்லது வாங்கிய இடத்திலேயே திரும்ப தர வேண்டும்.” என்று தெரிவித்துள்ளது.

தாம்சன் இன்டர்நேஷனல் நிறுவனம் என்றால் என்ன?

இந்நிறுவனம் வட அமெரிக்காவில் சில்லறை விற்பனையாளர்கள், மொத்த விற்பனையாளர்கள் மற்றும் உணவு சேவை ஆபரேட்டர்களுக்கு வெங்காயம், முட்டைக்கோஸ், தர்பூசணிகள் மற்றும் பெல் பெப்பர் ஆகியவற்றை பயிரிட்டு அட்டைப் பெட்டிகளில் பேக் செய்து வழங்குகிறது. இந்நிறுவனம் மற்ற நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்கிறது. அதன் பெரும்பாலான விவசாய நிலங்கள் பேக்கர்ஃபீல்ட், கலிபோர்னியா மற்றும் மெக்சிகோவில் அமைந்துள்ளன. தாம்சன் அதன் விளைபொருட்களை விளைவிக்க பல்வேறு விதைகளையும் கலப்பின தாவரங்களையும் பயன்படுத்துகிறது. இந்நிறுவனத்தின் உற்பத்திகள் தாம்சன் பிரீமியம், டி.எல்.சி தாம்சன் இன்டர்நேஷனல், டெண்டர் லவ்விங் கேர், எல் காம்பிடீட்டர், ஹார்ட்லிஸ் பெஸ்ட், வெங்காயம் 52, மெஜஸ்டிக், இம்பீரியல் ஃப்ரெஷ், க்ரோகர், உட்டா வெங்காயம் மற்றும் ஃபுட் லயன் என பல்வேறு பிராண்ட் பெயர்களில் விற்கப்படுகின்றன.

நோய்த்தொற்றுகள் மேலும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அறிகுறிகள் வெளிப்பட ஒன்று முதல் ஆறு நாட்கள் ஆகும். கனடாவின் பொது சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளபடி, அமெரிக்காவின் சி.டி.சி மற்றும் கனடாவின் உணவு ஆய்வு நிறுவனம் வெங்காயத்தில் மாசுபடுவதற்கான மூல காரணத்தை அடையாளம் காண பொதுவான தன்மைகளை ஆராய்ந்து வருகின்றன.

அமெரிக்காவின் எஃப்.டி.ஏ கூறுகையில், “இது குறித்து விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. மேலும் விசாரணையில் தகவல்கள் கிடைக்கும்போது கூடுதல் தகவல்கள் தெரிவிக்கப்படும்” என்று தெரிவித்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil” 

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Explained News by following us on Twitter and Facebook

Web Title:Salmonella infection why onions are a new cause of concern in the us and canada

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X