Advertisment

உயிர் பிரியும் வரை துரத்திய கொலை வழக்கு: சரவண பவன் அதிபரின் க்ரைம் ஸ்டோரி

Saravana bhavan p rajagopal death: சரவணபவன் ஓட்டல் உரிமையாளர் ராஜகோபால் சிகிச்சை பலனின்றி தனது 71வது வயதில் இன்று காலமானார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil Nadu news today live updates

Tamil Nadu news today live updates

Saravanabhavan rajagopal passed away: பல உலக நாடுகளில் கிளை பரப்பி உள்ள சரவணபவன் ஓட்டல் உரிமையாளர் ராஜகோபால், பிரின்ஸ் சாந்தகுமார் கொலைவழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற நிலையில், அவர் உடல்நலக் குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இன்று (ஜூலை 18) காலமானார். பிரபல ஓட்டல் உரிமையாளரான ராஜகோபால் பற்றியும், ஜீவஜோதி கணவர் பிரின்ஸ் சாந்தகுமார் கொலை வழக்கு பற்றியும் கொஞ்சம் திரும்பி பார்ப்போம்.

Advertisment

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் வட்டம் புன்னையடியைச் சேர்ந்தவர் பி.ராஜகோபால். இவர் 1981 ஆம் ஆண்டு டிசம்பர் 14 ஆம் தேதி சென்னை, கே.கே. நகர் பகுதியில் சரவணபவன் எனும் பெயரில் முதல் ஓட்டலைத் தொடங்கினார். படிப்படியாக முன்னேறி இன்று சென்னை, காஞ்சிபுரம், வேலூர் போன்ற மாவட்டங்களிலும், தலைநகர் டெல்லியிலும், ஐக்கிய அரபு நாடுகளிலும், மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா, கனடா, பிரான்ஸ் உள்ளிட்ட வெளிநாடுகளிலும் கிளை பரப்பி பெரிய ஓட்டலாக விளங்குகிறது சரவணபவன் ஓட்டல்.

இப்படி உலக நாடுகளில் கிளை பரப்பியுள்ள சரவணபவன் ஓட்டல் உரிமையாளர் ராஜகோபாலின் வாழ்க்கையில், பிரின்ஸ் சாந்தகுமார் கொலை சம்பவம் ஒரு மோசமான பகுதி. தமிழக ஊடகங்களில் 18 ஆண்டுகளுக்கு முன்பு பிரின்ஸ் சாந்தகுமார் கொலை வழக்கு பரபரப்பாக பேசப்பட்டது. இதில், ராஜகோபால் குற்றம்சாட்டப்பட்டார்.

சரவணபவன் ஓட்டலில் ஜீவஜோதியின் தந்தை உதவி மேலாளராக பணிபுரிந்துவந்தார். சரவணபவன் ஓட்டல் உரிமையாளர் ராஜகோபாலுக்கும் ஜீவஜோதியின் குடும்பத்திற்கும் தொடர்பு ஏற்பட்டது. ஏற்கனவே இரண்டு மனைவிகளைக் கொண்ட ராஜகோபாலுக்கு தனது ஓட்டல் மேலாளர் மகள் ஜீவஜோதியின் மீது ஈர்ப்பு ஏற்பட்டது. அவரை மூன்றாம் தாரமாக திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டார். ஆனால், ஜீவஜோதி பிரின்ஸ் சாந்தகுமார் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

ராஜகோபாலுக்கு ஜீவஜோதி மீது இருந்த ஆசையை மேலும் தூண்டும் விதமாக அவருடைய ஆசைக்கு ஜோதிடர்களும் தூபம் போட்டனர். அதனால், ராஜகோபால் பிரின்ஸ் சாந்தகுமாரை ஜீவஜோதியை விட்டு விலகும்படி மிரட்டினார். சென்னை வேளசேரியில் ஜீவஜோதியும் அவருடைய கணவர் பிரின்ஸ் சாந்தகுமாரும் வசித்துவந்த நிலையில், 2001 ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் தேதி பிரின்ஸ் சாந்தகுமார் மாயமானார்.

2001 ஆம் ஆண்டு ஜனவரி 31 ஆம் தேதி தனது கணவர் பிரின்ஸ் சாந்தகுமார் காணவில்லை என்றும் சரவணபவன் ஓட்டல் உரிமையாளர் ராஜகோபால் தனது கணவரை கடத்தி சென்றிருக்கலாம் என்று ஜீவஜோதி வேளச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரின்ஸ் சாந்தகுமாரை தேடி வந்தனர்.

இதையடுத்து, கொடைக்கானல் மலைப்பகுதியில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட நிலையில் பிரின்ஸ் சாந்தகுமார் உடல் கண்டெடுக்கப்பட்டது. போலீசார் நடத்திய விசாரணையில், இந்த வழக்கில் தொடர்புடைய சரவணபவன் ஓட்டல் உரிமையாளர் ராஜகோபால், கொலைக்கு உடந்தையாக இருந்த டே‌னிய‌ல், கா‌‌ர்மேக‌ம், ஹூசை‌ன், கா‌சி ‌விஸ்வநாத‌ன், த‌மி‌ழ்செ‌ல்வ‌ன், முருகான‌ந்த‌ம், சேது, ப‌ட்டுர‌ங்க‌ம் உள்ளிட்ட 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர். இந்த கொலை வழக்கு விசாரணை பூந்தமல்லி நீதிமன்றத்தில் நடைபெற்றது.

ஜீவஜோதி மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை (அப்போது முதலமைச்சராக இருக்கவில்லை) சந்தித்து தனக்கு நேர்ந்ததை முறையிட்டார். அதற்கு ஜெயலலிதா ஆதரவு தெரிவித்தார் என ஜீவஜோதி கூறியுள்ளார்.

இந்த வழக்கில் 2004 ஆம் ஆண்டு பூந்தமல்லி நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், குற்றம் நிரூபிக்கப்பட்டதால் ராஜகோபாலுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.55,00,000 அபராதமும் மற்ற 8 பேருக்கு 9 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது. மேலும், ராஜகோபாலுக்கு ஆள் கடத்தல் வழக்கில் தனியாக 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் மற்றவர்கலுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் வழங்கப்பட்டது.

தண்டனை பெற்ற அனைவரும் இதனை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். தண்டனை காலத்தை குறைக்க வேண்டும் என முறையிட்டனர். ஆனால், இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் பி.கே.மிஸ்ரா, பானுமதி அமர்வு குற்றவாளிகளுக்கு கீழமை நீதிமன்றம் தண்டனை குறைவாக விதித்துள்ளதாகக் கூறி ராஜகோபால் உள்ளிட்ட 6 பேருக்கு ஆயுள் தண்டனையும் மற்ற 3 பேருக்கு கீழமை நீதிமன்றம் அளித்த தண்டனையை உறுதி செய்து திர்ப்பளித்தனர். இதையடுத்து, சில காலம் ராஜகோபால் சிறையிலிருந்தார்.

உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ராஜகோபால் உள்ளிட்ட அனைவரும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். 10 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த மேல்முறையீட்டு வழக்கு விசாரணையில், அரசு தரப்பு வழக்கறிஞர்கள் ஆதாரங்களை வலுவாக முன்வைத்தனர். இதையடுத்து, கடந்த மார்ச் மாதம் உச்ச நீதிமன்றம் ராஜகோபால் உள்ளிட்ட குற்றவாளிகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அளித்த ஆயுள் தண்டனையை உறுதி செய்து தீர்ப்பளித்தது.

இதனிடையே ஜீவஜோதி 2006 ஆம் ஆண்டு தனது நண்பர் தண்டாயுதபாணியை திருமணம் செய்துகொண்டார். தற்போது தஞ்சாவூரில் ஓட்டல் நடத்தி வரும் ஜீவஜோதி இந்த தீர்ப்பு மகிழ்ச்சி அளிப்பதாகவும் இறுதியில் நீதி வென்றுள்ளதாகவும் தெரிவித்தார்.

குற்றவாளிகள் சென்னையில் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். ஆனால், சரவணபவன் ஓட்டல் உரிமையாளர் ராஜகோபால், உடல் நலக்குறைவு காரணமாக சிறை தண்டனை அனுபவிக்க நீதிமன்றத்தில் சரணடைவதற்கு கால அவகாசம் கோரினார். ஆனால், நீதிமன்ற மறுத்துவிட்டது. இதையடுத்து, அவர் கடந்த 9 ஆம் தேதி நீதிமன்றத்தில் சரணைடைந்தார்.

ஆனால், தனக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறி மருத்துவமனையில் சிகிச்சை பெற அனுமதிக்க வேண்டும் என கோரினார். இதற்கு, நீதிபதிகள் தங்களால் ஒரு நாள்கூட சிறையில் இருக்க முடியாதா? என்று கேள்வி எழுப்பினர். இதையடுத்து, ராஜகோபால், சென்னை ஸ்டேன்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கே ராஜகோபாலுக்கு உயர் சிகிச்சை அளிப்பதற்கு தேவையான கருவிகள் இல்லாததால் தனியார் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்க அனுமதி அளிக்க வேண்டும் என ராஜகோபாலின் மகன் உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் அனுமதி அளித்து உத்தரவிட்டனர்.

இதையடுத்து, ராஜகோபாலுக்கு நெஞ்சுவலியும் முச்சுத்திணறலும் ஏற்பட்டதால், வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சரவணபவன் ஓட்டல் உரிமையாளர் ராஜகோபால் சிகிச்சை பலனின்றி தனது 71வது வயதில் இன்று காலமானார்.

 

Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment