Sandeep Singh :
SBI rate cuts : மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ தனது சேமிப்பு மற்றும் வைப்பு கணக்கிற்கான வட்டி வீதத்தைக் குறைப்பதாக அறிவித்துள்ளது. இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட கால வைப்பு அல்லது நிலையான வைப்புகள் (fixed deposit) மீதான வட்டி விகிதங்களும் அடங்கும்.
எஸ்பிஐ வட்டி விகிதங்கள் இந்திய ரிசர்வ் வங்கியின் 135 அடிப்படை புள்ளிகள் ரெப்போ விகிதங்கள் அளவில் குறைக்கப்பட்டுள்ளது. எஸ்.பி.ஐ சேமிப்பு கணக்கிற்கு ரூ. 1லட்சம் வரை வட்டி வீதம் 3.5 சதவீதத்திலிருந்து 3.25 சதவீதமாக குறைத்துள்ளது. எஸ்பிஐ வங்கியின் இந்த புதிய அறிவிப்பானது இன்று (10.10.19) முதல் அமலுக்கு வந்தது.
3.50 சதவீதமாக இருந்த எஸ்பிஐ சேமிப்பு கணக்குகள் மீதான வட்டி விகிதம் 3.25 சதவீதமாக குறைந்துள்ளது. வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது எஸ்பிஐ சேமிப்பு வாடிக்கையாளர்களுக்கு சோகச் செய்தியாக அமைந்துள்ளது.சில்லறை கால வைப்பு மற்றும் மொத்த கால வைப்புத்தொகைகளுக்கு பொருந்தக்கூடிய வட்டி விகிதங்களை எஸ்பிஐ முறையே 10 மற்றும் 30 அடிப்படை புள்ளிகளால் குறைத்துள்ளது.
மறுபக்கம், ஆர்பிஐ ரெப்போ வட்டி விகிதத்தை குறத்ததை அடுத்து எஸ்பிஐ வங்கி MCLR வட்டி விகிதத்தை 8.15 சதவீதத்திலிருந்து 0.10 சதவீதம் குறைத்து 8.05 சதவீதமாக அறிவித்துள்ளது.எனவே வீட்டுக் கடன், வாகன கடன் மீதான ஈஎம்ஐ வரும் மாதம் முதல் குறையும் என்பதால் எஸ்பிஐ வங்கியில் கடன் வாங்கிய வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நிபுணர்கள் கருத்து:
இரண்டு முடிவுகளும் பொருளாதாரத்தில் நுகர்வுக்கு தள்ளப்படுவதை நோக்கமாகக் கொண்டவை என்று நிபுணர்கள் கூறுகின்றனர், இது தற்போது வாடிக்கையாளர்களுக்கு மட்டுமில்லை முதலீட்டாளர்களுக்கும் மிகப்பெரிய கவலையாக மாறியுள்ளது. கடன் விகிதத்தில் மிகப்பெரிய மாற்றம் ஒருபக்கம் கடன் வாங்குவதை தூண்டிவிட்டு, மறுபுறம் சேமிப்பு கணக்குகளில் கைவைத்திருப்பது புரிந்துக் கொள்ளும் வகையில் இல்லை என்பது அவர்க்ளின் கருத்தாக உள்ளது.
இதன் மூலம் வாடிக்கையாளர்களின் செலவினங்கள் அதிகரிக்கவும் வாய்ப்புண்டு.
வீட்டுகடனில் என்ன மாற்றம் நிகழும்?
எஸ்பிஐ வங்கி ரெப்போ ரேட் வட்டி விகிதமான 5.15 சதவிகிதத்துடன் 2.65 % வட்டியை ஸ்பிரட் என்கிற பெயரில் கூடுதலாகும். அதன் பிறகு பிரீமியம் என்கிற பெயரில் 0.15 சதவிகித வட்டிய. ஆக மொத்தம் 7.95 சதவிகித வட்டிக்கு 30 லட்சம் ரூபாய் வீட்டுக் கடன் வாங்கலாம். இதே போல் ஒவ்வொரு தொகைக்கு வட்டி விகிதம் மாறுபடும்.
சேமிப்பு கணக்குகளின் நிலைமை:
சில சேமிப்பு மற்றும் பிக்சட் டெபாசிட் கணக்குகளுக்கும் வட்டி மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. ஒரு லட்சம் ரூபாய்க்குள் இருப்புத் தொகை கொண்ட சேமிப்புக் கணக்குகளுக்கு வழங்கப்படும் வட்டி 3.50 சதவீதத்தில் இருந்து 3.25 சதவீதமாக குறைகிறது. இது நவம்பர் 1, 2019 முதல் நடைமுறைக்கு வரும்.
1 ஆண்டு முதல் இரு ஆண்டுகளுக்கு உட்பட்ட முதிர்வுக் காலம் கொண்ட பிக்சட் டெபாசிட்களின் வட்டி 0.30 சதவீதமும் இன்னும் சில டெபாசிட் கணக்குகளின் வட்டி 0.10 சதவீதமும் குறைகின்றன. இது அக்டோபர் 10ஆம் தேதி முதலே அமலாகிறது.