கோவிட்-19 பூஸ்டர் தடுப்பூசியை தேர்ந்தெடுப்பது எப்படி? நிபுணர்கள் விளக்கம்

கோவிட்-19 பூஸ்டர் டோஸ்: பயனாளிகளுக்கு முன்பு வழங்கப்பட்ட அதே தடுப்பூசியை, மீண்டும் முன் எச்சரிக்கை டோஸாக வழங்கப்படுகிறது. ஆனால், ஒரே தடுப்பூசி பயன்படுத்துவதன் காரணங்கள், கலவை தடுப்பூசிக்கு நோ சொல்வது ஏன் போன்ற பல தகவல்கள் இச்செய்தி தொகுப்பில் காணலாம்

கோவிட்-19 பூஸ்டர் டோஸ்: பயனாளிகளுக்கு முன்பு வழங்கப்பட்ட அதே தடுப்பூசியை, மீண்டும் முன் எச்சரிக்கை டோஸாக வழங்கப்படுகிறது. ஆனால், ஒரே தடுப்பூசி பயன்படுத்துவதன் காரணங்கள், கலவை தடுப்பூசிக்கு நோ சொல்வது ஏன் போன்ற பல தகவல்கள் இச்செய்தி தொகுப்பில் காணலாம்

author-image
WebDesk
New Update
கோவிட்-19 பூஸ்டர் தடுப்பூசியை தேர்ந்தெடுப்பது எப்படி? நிபுணர்கள் விளக்கம்

முன்கள பணியாளர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களுக்கு கொரோனா முன்னெச்சரிக்கை தடுப்பூசி செலுத்தும் பணி நேற்று (ஜனவரி 10) தொடங்கியது.

Advertisment

முன் எச்சரிக்கை டோஸாக கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிக்கு செலுத்திட மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்தியாவில் இதுவரை 150 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. அதில், 63 கோடி இந்தியர்கள் முழுமையாக தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் ஆவர்.

பூஸ்டர் டோஸூக்கு தகுதியானவர்களுக்கு, தற்போது தடுப்பூசி கலந்து செலுத்திட மத்திய அரசு அனுமதி வழங்கவில்லை. கோவிஷீல்டு இரண்டு டோஸ் பெற்றிருந்தால், முன் எச்சரிக்கை டோஸூம் கோவிஷீல்டாக தான் இருக்க வேண்டும். கோவாக்சினுக்கும் இதே வழிமுறை தான். வரும் நாள்களில் தடுப்பூசியை கலந்து வழங்குவது குறித்து தரவுகள் கிடைக்கும் பட்சத்தில், அதனை குறித்து பரீசிலப்போம் என மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பூஸ்டர்கள் என்ன நோக்கத்திற்காக வழங்கப்படுகிறது?

Advertisment
Advertisements

வழக்கமான தடுப்பூசிகளால் உடலில் உருவாகும் நோய் எதிர்ப்பு சக்தி காலப்போக்கில் குறைகிறது. இந்தியா உட்பட பல நாடுகளில் நடத்தப்பட்ட பல்வேறு ஆய்வுகளிலும், கடைசி டோஸூக்கு பிறகு ஆன்டிபாடிகள் குறைந்துவிட்டதாக மக்கள் புகாரளிப்பதாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சரிவு ஆன்டிபாடிகள் மட்டுமல்ல, டி-செல்களிலும் நிகழ்கிறது.

பூஸ்டர் டோஸ் மூலம் மக்கள் நோய் எதிர்ப்பு சக்தியை நீண்ட காலத்திற்கு பராமரிக்க முடியும். கடந்த காலத்தில், பெரியம்மை தடுப்புக்காக மூன்று முதல் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை பூஸ்டர்கள் பரிந்துரைக்கப்பட்டன. குழந்தை பருவ தடுப்பூசிக்குப் பிறகு பெரியவர்கள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கு டெட்டானஸ் டாக்ஸாய்டு பூஸ்டர்கள் இன்று பரிந்துரைக்கப்படுகின்றன.

அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (எஃப்.டி.ஏ) மற்றும் யுனைடெட் கிங்டமின் மருந்துகள் மற்றும் ஹெல்த்கேர் தயாரிப்புகள் ஒழுங்குமுறை நிறுவனம் (எம்.ஹெச்.டி.ஏ) போன்ற சில நாடுகளில் உள்ள கட்டுப்பாட்டாளர்கள், பூஸ்டர் டோஸ் தரவைப் பார்த்து, அதன் அடிப்படையில் ஒப்புதல்களை வழங்கியுள்ளன.

இந்தியாவில் நடத்தப்பட்ட சமீபத்திய ஆய்வில், கோவாக்சின் இரண்டாவது டோஸ் போட்டு ஆறு மாதங்களுக்கு பிறகு, பூஸ்டர் டோஸ் செலுத்துவது மூலம் டி செல் மற்றும் பி செல் ரெஸ்பான்ஸை நடுநிலையாக்க வழிவகுக்கிறது தெரியவந்துள்ளது. குறிப்பாக, கடுமையான நோயிலிருந்து நீண்டகால பாதுகாப்பை பரிந்துரைக்கிறது என்று அதன் உற்பத்தியாளர் பாரத் பயோடேக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

முன் எச்சரிக்கை டோஸூக்கு ஒரே தடுப்பூசியை ஏன் பயன்படுத்த வேண்டும்?

இந்தியாவின் சிறந்த தடுப்பூசி நிபுணர்களில் ஒருவரான டாக்டர் ககன்தீப் காங்கின் கூற்றுப்படி, மாறுபட்ட தடுப்பூசியை பயன்படுத்துவது குறித்து முடிவெடுப்பதற்கு போதுமான தரவு கிடைக்கும் வரை, முந்தைய தடுப்பூசிகளின் டோஸை மீண்டும் செலுத்துவது தான் சரியாக இருக்கும். அதேபோல், இழப்பீடு பிரச்சினையையும் நாம் பரிசீலிக்க வேண்டும். மற்றொரு தடுப்பூசியைப் பயன்படுத்தும்போது ஏதேனும் தவறு நடந்தால் என்ன செய்வது: அதற்கு யார் பொறுப்பு?" என கேள்வி எழுப்பினார்.

இதுகுறித்து முன்னணி வைராலஜிஸ்ட் டாக்டர் வி ரவி கூறுகையில், "அதே தடுப்பூசியை மீண்டும் செலுத்தும் போது நினைவாற்றல் அதிகரிக்கும். மேலும், ஹோமோலோகஸ் தடுப்பூசியை <முன்பு கொடுக்கப்பட்ட அதே தடுப்பூசி முன் எச்சரிக்கை டோஸாக செலுத்தும் போது நல்ல ரெஸ்பான்ஸை பெற முடியும்" என்றார்.

publive-image

நோயெதிர்ப்பு நிபுணர் டாக்டர் வினீதா பால் கூறுகையில், "பாரம்பரிய தடுப்பூசிகள் முதன்மை தடுப்பூசிக்கு பிறகு இரண்டாவது அல்லது மூன்றாவது டோஸாகப் பயன்படுத்தப்படுகின்றன, அதைத் தொடர்ந்து சில மாதங்கள் அல்லது ஆண்டுகளுக்குப் பிறகு பூஸ்டர் வழங்கப்படுகிறது. உதாரணமாக, டெட்டனஸ் டாக்ஸாய்டு குழந்தை பருவ தடுப்பூசி திட்டத்தின் ஒரு பகுதியாகும். இது கர்ப்பிணிப் பெண்கள் உட்பட வயதான நபர்களுக்கு பரிந்துரைக்கப்படுகிறது" என தெரிவித்தார்.

கோவிட்-19 தடுப்பூசிகளின் கலவை ஆய்வுகள் சொல்வது என்ன?

இந்தியாவில், கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் ஆகிய இரண்டு தடுப்பூசிகளையும் கலந்து செலுத்துவது குறித்த தெளிவான தகவல்கள் எதுவும் இல்லை. அதற்கான பணிகள் நடைபெற்றுகொண்டிருக்கின்றன.

ஏசியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் காஸ்ட்ரோஎன்டாலஜி (ஏஐஜி) நடத்திய பைலட் ஆய்வில், கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் கலவையின் பாதுகாப்பு அம்சம் குறித்தும், சிறிய ஹோமோலோகஸ் மற்றும் ஹெட்டோரோலஜஸ் தடுப்பூசி குழுக்களை ஒப்பிடுவதன் மூலம் ஏற்படும் ஆன்டிபாடி ரெஸ்பான்ஸையும் ஆய்வு செய்தது. அதில், தடுப்பூசிகளின் கலவை பாதுகாப்பானது என கண்டறியப்பட்டது.

ஏஐஜி மருத்துவமனைகளின் தலைவர் டாக்டர் டி நாகேஷ்வர் ரெட்டி கூறுகையில், "ஆய்வின் மிக முக்கியமான கண்டுபிடிப்பு என்னவென்றால், கொரோனா வைரஸ் ஸ்பைக் புரதத்தை நடுநிலையாக்கும் ஆன்டிபாடிகள் ஒரே தடுப்பூசி குழுக்களை விட கலப்பு தடுப்பூசியில் கணிசமாக உள்ளன. இந்த ஆய்வின் விவரங்களை ஐசிஎம்ஆருக்கு தெரிவித்துள்ளாம்" என்றார்.

பூஸ்டர் டோஸுக்கு தேவை அதிகரித்துள்ளதை கருத்தில் கொண்டு, வேலூரில் உள்ள கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியில் கோவிட்-19 தடுப்பூசி டோஸ் கலப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்த ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. இந்த ஆண்டு பிப்ரவரிக்குள் முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

publive-image

தடுப்பூசி கலவை பாதுகாப்பானதாக இருந்தாலும், நீண்டகால பாதுகாப்பு குறித்த தரவு இன்னும் கிடைத்திடவில்லை.

ஏன் தடுப்பூசி கலவை ஆப்ஷனாக பார்க்கப்படுகிறது?

உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, கணிசமான பாதுகாப்பு, நோயெதிர்ப்புத் திறன் மற்றும் செயல்திறன் தரவுகளின் அடிப்படையில் ஹோமோலோகஸ் தடுப்பூசி நிலையான நடைமுறையாகும்.

நோய்த்தடுப்பு மற்றும் கட்டுப்பாடுக்கான ஐரோப்பிய மையம், தடுப்பூசி பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும், தடுப்பூசி இருப்பை உறுதிசெய்வதற்கும் ஒரு மாற்று உத்தியாக கலவை டோஸ் பூஸ்டராக பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டது.

ஐசிஎம்ஆர் தேசிய கோவிட்-19 பணிக்குழுவின் உறுப்பினரான டாக்டர் சஞ்சய் பூஜாரி, "கலவை தடுப்பூசியில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் இருப்பதாக கூறப்பட்டாலும், அவை குறுகிய கால தரவுகளால் வரையறுக்கப்பட்டுள்ளன.முழுமையான பாதுகாப்பிற்கான நோயெதிர்ப்பு தொடர்புகள் இன்னும் தெளிவாக இல்லை" என்றார்.

பொதுவான பல சூழல்களில் தடுப்பூசிகள் மிக்ஸ் அண்ட் மேட்ச் உத்தி தான் பயன்படுத்தப்படும். உதாரணமாக, டிஎன்ஏ தடுப்பூசிகளுக்கு, புரத அடிப்படையிலான தடுப்பூசிகள் முதன்மை-பூஸ்ட் சூழ்நிலைகளில் கருதப்பட்டன என டாக்டர் பால் குறிப்பிட்டார்.

விநியோகத்தில் சிக்கல்கள் இருக்குமா?

மிக்ஸ் அண்ட் மேட்ச் தடுப்பூசி எவ்வாறு பயனளிக்கும் என்பது பற்றிய இந்திய தரவு பொது களத்தில் இல்லாதது, விநியோக சங்கிலி, தடுப்பூசி கிடைப்பதில் சிக்கல்களை ஏற்படுத்தலாம் என டாக்டர் பால் கூறினார்.

ஞாயிற்றுக்கிழமை வரை செலுத்தப்பட்ட 150 கோடி தடுப்பூசி டோஸ்களில், 130 கோடிக்கும் அதிகமானவை கோவிஷீல்டு தடுப்பூசியாகும். 19 கோடி மட்டுமே கோவாக்சின் செலுத்தப்பட்டுள்ளது. மேலும், தற்போது 18 வயதுக்குட்பட்டோருக்கான தடுப்பூசிகளுக்கு கோவாக்சின் மட்டுமே பயன்பாட்டில் உள்ளதால், வயது வந்தோருக்கு பூஸ்டர் டோஸூக்கு கலவையாக பயன்படுத்தினால் தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளது என்று நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Covid 19 Vaccine Precautionary Dose Corona Virus Covid 19

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: