Shubhajit Roy
ஆப்கானிஸ்தானில் அரசு அமைப்பது தொடர்பாக பாகிஸ்தானின் உள்நாட்டு உளவுத்துறையின் தலைவர் லெஃப்டினன்ட் ஜெனரல் ஃபைஸ் ஹமீது காபூல் வந்தடைந்த மூன்று நாட்களுக்கு பிறகு தாலிபான்கள் தங்கள் அமைச்சரவை உறுப்பினர்கள் குறித்து நேற்று (செப்டம்பர் மாதம் 7ம் தேதி) மாலை வெளியிட்டனர்.
அமைக்கப்பட்ட புதிய அரசின் கட்டமைப்புகளோடு ஒப்பிடுகையில் இது டெஹ்ரானில் நடப்பில் இருக்கும் ஆட்சியை ஒத்துள்ளது. தாலிபானின் தலைமை மதத்தலைவர் முல்லா ஹைபத்துலா அகுண்ட்ஸாடா, அரசின் ஒரு அங்கமாக இல்லாவிட்டாலும் கூட ஆப்கானிஸ்தானின் தலைமை தலைவராக செயல்படுவார்.
அமைச்சரவை உறுப்பினர்கள் நியமனம் முடிந்த பிறகு வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், முல்லா, ஆப்கானிஸ்தானில் ஷரியத் சட்டங்கள் மற்றும் இஸ்லாமிய விதிகளை அரசு அமல்படுத்த வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளார் என்று குறிப்பிட்டிருந்தது.
நாட்டில் நீடித்த அமைதி, செழிப்பு மற்றும் மேம்பாட்டினை உறுதிப்படுத்துமாறும், நாட்டின் உயரிய நலன்களை பாதுகாக்க வேண்டும் என்று முல்லா, பொறுப்பாளர்களிடம் கூறியுள்ளதாக ஆங்கிலத்தில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது. புதிய ஆப்கான் அரசு குறித்து நாம் கவனிக்க வேண்டிய 7 முக்கியமான விசயங்கள் இங்கே
பாகிஸ்தானின் முத்திரை
ஹக்கானி தீவிரவாத அமைப்பில் இடம் பெற்றிருந்த நபர்களும், காந்தஹாரை அடிப்படையாக கொண்டு செயல்படும் தாலிபான் குழுக்களின் தலைவர்களும் புதிதாக உருவாக்கப்பட்டிருக்கும் அமைச்சரவையில் இடம் பெற்றிருப்பதில் ராவல்பிண்டியின் முத்திரை தெரிகிறது.
சர்வதேச சமூகத்துடன் பேச்சுவார்த்தை நடத்திய, இந்தியாவுடன் தொடர்புகளை உருவாக்கிய, தோஹாவை அடிப்படையாக கொண்டு செயல்படும் தாலிபான் குழு ஓரங்கட்டப்பட்டதாக தெரிகிறது.
இடைக்கால அமைச்சரவையில் இடம் பெற்ற சில ஹக்கானி அமைச்சர்கள் மற்றும் புதிய பிரதமராக முல்லா முகமது ஹசன் அகுந்த் நியக்கப்பட்டதில் பாகிஸ்தானின் தலையீடு இருப்பது தெளிவாக தெரிகிறது. தங்களின் பிரதிநிதிகளுக்கு அதிக அளவில் இடங்கள் அமைச்சரவையில் கிடைப்பதை உறுதி செய்ய ஐ.எஸ்.ஐ. தலைவர் மூன்று நாட்களுக்கு காபூலை அடைந்தார்.
இந்தியாவைப் பொறுத்தவரை, ஹக்கானிகளுக்கு ஆப்கானிஸ்தான் அரசுப் பதவி கிடைப்பது கெட்ட செய்தி தான். புதிய அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள 33 நபர்களில் 20 பேர் காந்தஹாரை தளமாக கொண்டு செயல்படும் தாலிபான் குழு மற்றும் ஹக்கானி குழுவை சார்ந்தவர்கள் என்று இந்தியா மதிப்பீடு செய்துள்ளது.
பெரிய வெற்றியாளர் ஹக்கானி
புதுடெல்லியின் கண்ணோட்டத்தில், சிராஜூதின் ஹக்கானி ஆப்கானிஸ்தானின் உள்துறை அமைச்சராக தேர்வு செய்யப்பட்டது, ஐ.எஸ்.ஐ, அமைச்சர்கள் தேர்வில் எவ்வாறு செயல்பட்டது என்பதை காட்டும் முக்கியமான சமிக்ஞ்சை ஆகும்.
2018ம் ஆண்டு செப்டம்பர் மாதம் மரணம் அடைந்ததாக அறிவிக்கப்பட்ட முஜாஹிதீன் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் மற்றும் சி.ஐ.ஏவின் சொத்தாக இருந்த ஜலாலூதீன் ஹக்கானியின் மகன் சிராஜூதீன் ஹக்கானி பாகிஸ்தானின் வடக்கு வசிரிஸ்தானை தளமாகக் கொண்ட அல்-காய்தாவுடன் நெருக்கமான தொடர்புகளைக் கொண்ட பரந்த இஸ்லாமிய பயங்கரவாத மாஃபியாவான ஹக்கானி நெட்வொர்க்கின் தலைவர் ஆவார்.
2008ம் ஆண்டு காபூலில் உள்ள இந்திய தூதரகத்தின் மீது தாக்குதல் நடத்தி 58 அப்பாவி மக்கள் உயிரிழந்தற்கு காரணமாக இருந்தனர் ஹக்கானி அமைப்பினர். 2009 மற்றும் 2010 ஆண்டுகளில் இந்தியாவுக்கும், இந்தியாவின் நலன்களுக்கும் எதிராக ஹக்கானியினர் தாக்குதல்கள் நடத்தினர்.
உள்துறை அமைச்சராக ஹக்கானி சட்டம் மற்றும் ஒழுங்கு மட்டுமில்லாமல் உள்ளூர் நிர்வாகம் என்ற பெயரில் ஆளுநர்களையும் இனி நியமிக்க முடியும்.
நாட்டின் அனைத்து மாகாணங்களையும் இவரும், ஐ.எஸ்.ஐயால் தேர்வு செய்யப்பட்ட அவரது நபர்களும் ஆள முடியும் என்பதே இதன் பொருள். சவுத் பிளாக்கில் உள்ள உணர்வு என்னவென்றால், இது இந்தியாவிற்கும், ஒட்டுமொத்த பிராந்தியத்திற்கும் ஆழமான மூலோபாய விளைவுகளை ஏற்படுத்தும்.
சிராஜூதீன் ஹக்கானியும் உலகளாவிய தீவிரவாதி தான். அவரை கைது செய்ய துப்பு தரும் நபர்களுக்கு 10 மில்லியன் அமெரிக்க டாலர்களை சன்மானமாக அறிவித்திருந்தது அமெரிக்காவின் நீதித்துறை.
2008ம் ஆண்டு காபூலில் உள்ள ஹோட்டல் ஒன்றில் நடைபெற்ற தாக்குதலில் அமெரிக்கர் ஒருவர் உள்ளிட்ட 6 நபர்களை கொன்ற வழக்கில் தேடப்பட்டு வரும் குற்றவாளியாவார் ஹக்கானி. ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா மற்றும் கூட்டணிப் படைகளுக்கு எதிரான எல்லை தாண்டிய தாக்குதல்களில் அவர் ஒருங்கிணைந்து பங்கேற்றதாக நம்பப்படுகிறது. 2008ம் ஆண்டு, அன்றைய ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமீது கர்சாயை கொலை செய்ய முயன்றதாக அவர் மீது மற்றொரு குற்றச்சாட்டும் உள்ளது.
ஹக்கானிகளில் மற்றொருவரான கலீல் ஹக்கானி அகதிகளுக்கான புதிய அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். அல் கொய்தாவுடன் நெருக்கமான தொடர்பில் இருந்த அவரும் சர்வதேச தீவிரவாதி ஆவார். அல்கொய்தாவின் ராணுவத்திற்கு சார்பாக அவர் செயல்பட்டார்.
கடந்த சில வாரங்களாக ஆப்கானிஸ்தானில் இருந்து பல புகைப்படங்களில் தோன்றிய கலீல் ஹக்கானி, ஜலாலுதீன் ஹக்கானியின் சகோதரர் மற்றும் சிராஜுதீனின் சித்தப்பா ஆவார். கலீல் ஹக்கானி குறித்து துப்பு வழங்கும் நபர்களுக்கு 5 மில்லியன் அமெரிக்க டாலர்கள் சன்மானம் அறிவித்தார்.
ஹக்கானிகளின் நம்பிக்கைக்குரிய மனிதர்களில் ஒருவர் முல்லா தாஜ் மிர் ஜவாத், அவர் புதிய அரசாங்கத்தின் துணை உளவுத் தலைவராக இருப்பார். காபூல் மற்றும் அதைச் சுற்றியுள்ள அல்-கொய்தா உட்பட பல்வேறு இஸ்லாமிய ஜிஹாதிஸ்ட் குழுக்களை ஏற்பாடு செய்த காபூல் தாக்குதல் நெட்வொர்க்கிற்கு ஜவாத் தலைமை தாங்கினார்.
மூன்றாவது தாலிபான்கள் தலைவர்கள் பலரும் இருக்கின்றனர்
முல்லா முகமது உமர் தலைமையில் 1996 மற்றும் 2001ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட தாலிபான் ஆட்சியில் இருந்தவர்களுக்கும் அமைச்சரவையில் இடம் வழங்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகளின் தீவிரவாதிகள் பட்டியலில் பலர் உள்ளனர். இவர்கள் அனைவரும் ஐ.எஸ்.ஐ. குழுவுக்கு மிகவும் நெருக்கமாக உள்ளனர் என்று கருதப்படுகின்றனர்.
முல்லா முகமது ஹசன் அகுந்த், முடிவெடுக்கும் 'ரெஹ்பரி ஷுரா' தலைவர்களின் கவுன்சிலின் தலைவர் ஆவார். 2001ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11ம் தேதி அன்று தலிபான்கள் பலர் அமெரிக்கா தலைமையிலான படையெடுப்புக்குப் பிறகு பாகிஸ்தானின் குவெட்டா ஷூரா என்ற நகரத்திற்கு சென்றதால் அவர்கள் ஷூரா என்று அழைக்கப்படுகின்றனர்.
ஆறாம் நூற்றாண்டில் பாமியன் பள்ளத்தாக்கில் ஒரு குன்றின் ஓரத்தில் செதுக்கப்பட்ட பிரம்மாண்டமான புத்தர் சிலைகளை அழிக்க உத்தரவிட்டவர் அகுந்த் ஆவார்.
ஐநா பயங்கரவாத பட்டியலில் உள்ள அகுந்த், தலிபான்களின் பிறப்பிடமான கந்தஹாரைச் சேர்ந்தவர் மற்றும் இஸ்லாமிய இயக்கத்தின் நிறுவனர்களில் ஒருவர். அவர் ரெஹ்பரி ஷூராவின் தலைவராக 20 ஆண்டுகள் பணியாற்றினார், மேலும் தலிபான்களின் உச்ச தலைவர் முல்லா ஹைபத்துல்லா அகுந்த்ஸடாவுடன் நெருக்கமாக இருந்தார்.
96 முதல் 2001 வரை நடைபெற்ற தாலிபான்களின் முதல் ஆட்சியில் வெளியுறவுத்துறை அமைச்சர் மற்றும் துணை பிரதமராக பதவி வகுத்தார். காந்தஹாரின் ஆளுநராகவும், 2001ம் ஆண்டில் அமைச்சரவையின் துணை தலைவராகவும் பணியாற்றினார்.
ஐ.நாவின் படி, அகுந்த் 30 உண்மையான தாலிபான்களில் ஒருவராவர். ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் தேசிய பாதுகாப்பு காப்பகம், அகுந்த் மேற்கத்தியர்கள் மற்றும் முஜாஹதீன்கள் இருவருக்கும் எதிராக பாரபட்சம் காட்டுகிறார். மிகவும் பயனுள்ள தளபதிகளில் ஒருவராக கருதப்படுகிறார். பாகிஸ்தானின் பல்வேறு மதரஸாக்களில் படித்தவர் என்று கூறியுள்ளது.
பொதுப்பணித்துறை செயல் அமைச்சர் முல்லா அப்துல் மனன் ஓமாரி, தாலிபான் நிறுவர்களில் ஒருவரான முல்லா ஒமரின் தம்பி ஆவார். பாதுகாப்புத்துறை செயல் அமைச்சர் முல்லா யக்கூப்பின் சித்தப்பா இவர். முல்லா யாகூப் முல்லா ஹைபத்துல்லா அகுந்த்ஸடாவின் மாணவர் ஆவார், அவர் முன்பு அவரை சக்திவாய்ந்த தாலிபான் இராணுவ ஆணையத்தின் தலைவராக நியமித்தார்.
நான்காவது, முல்லா பராதர் ஓரங்கட்டப்பட்டார்
தாலிபான்களை நிறுவியவர்களில் ஒருவரான முல்லா அப்துல் கானி, பராதர் என்று அழைக்கப்படுகிறார். அவர்கள் கத்தார் தலைநகர் தோஹாவில் அமைந்துள்ள தாலிபான்களின் அரசு அலுவலகத்தின் தலைவராக செயல்பட்டு வந்தார். உலக நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தும் தாலின்பான்களின் முகமாகவும் அவர் செயல்பட்டார்.
அமெரிக்காவுடனான தோஹா உடன்படுக்கையில் கையிழுத்திட்ட அவர் தாலிபான்களின் புதிய அரசுக்கு தலைமை தாங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் முல்லா ஹசன் அகுந்தால் ஓரங்கட்டப்பட்டு தற்போது துணை பிரதமராக பொறுப்பேற்றுள்ளார். தோஹா பேச்சுவார்த்தைக் குழுவின் உறுப்பினராக செயல்பட்ட உஸ்பெக் இனத்தை சேர்ந்த அப்துல் சலாம் ஹனாஃபி இரண்டாவது துணை பிரதமராக பொறுப்பேற்றார்.
முல்லா பராதர் 2010ம் ஆண்டு பிப்ரவரி மாதம் கராச்சியில் சிறைபிடிக்கப்பட்டார். பாகிஸ்தான் உளவுத்துறை அவர் அப்போதைய அதிபர் ஹமீத் கர்சாயுடன் தொடர்பு கொள்ளும் ஒரு சேனலைத் திறந்தார் என்பதைக் கண்டறிந்தார்.
டிரம்ப் நிர்வாகத்தின் உத்தரவின் பேரில் பாகிஸ்தானியர்கள் அவரை 2018இல் விடுவித்தனர், மேலும் 2019 முதல், பராதர் ஆப்கானிஸ்தான் நல்லிணக்கத்துக்கான வெளியுறவுத் துறையின் சிறப்புப் பிரதிநிதியான ஜல்மே கலீல்சாத்துடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
மார்ச் மாதம் 2020ம் ஆண்டு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரெம்புடன் நேரடியாக பேசிய முதல் தாலிபான் தலைவரானார். அவரை முழுமையாக நம்பாத ஐஎஸ்ஐ மூலம் அவரது வாய்ப்புகள் பறிக்கப்பட்டதாக தெரிகிறது.
ஐந்தாவது, முன்னதாக அளித்த அனைத்து வாக்குறுதிகளுக்கும், தாலிபான் அமைச்சரவைக்கும் எந்த சொந்தமும் இல்லை
எதிர்பார்த்தபடியே அமைச்சரவையில் பெண்கள் யாரும் இடம் பெறவில்லை. பஷ்தூனை சாராதவர்கள் குறைவானவர்களே. 33 நபர்களில் வெறும் 3 பேர் மட்டுமே. முழு தாலிபான்களை உள்ளடக்கிய பிரதிநிதிகளாக அமைச்சரவையாக இது இருக்கும் என்ற சர்வதேச சமூகத்தின் எதிர்பார்ப்பை பொய்யாக்கியுள்ளது.
பஸ்தூன் அல்லாத, சிறுபான்மை உறுப்பினர்கள், அரசாங்கத்தின் இரண்டாவது துணைத் தலைவர் அப்துல் சலாம் ஹனாபி; இராணுவத் தலைவர் காரி பாசிஹுதீன்; மற்றும் பொருளாதார அமைச்சர் காரி தீன் ஹனிஃப் ஆகியோர் ஆவார்கள்.
ஹனாஃபி உஸ்பெக் இனத்தை சேர்ந்தவர். பாசிஹூதீன் மற்றும் ஹனீஃப் ஆகியோர் தஜிக்கியர்கள். வடகிழக்கு ஆப்கானிஸ்தானில் படாக்ஷானில் தாலிபான்களின் முன்னேற்றத்திற்கு பாசிஹுதீன் மிக முக்கிய பங்காற்றினார். மேலும் அவரை இராணுவத் தலைவராக பெயரிடுவது ஒரு வெகுமதி என்று கூறப்படுகிறது. தோஹாவில் நடந்த ஆப்கானிஸ்தான் பேச்சுவார்த்தையில் பெண்கள் பேச்சுவார்த்தை நடத்தினர், ஆனால் அவர்கள் யாரும் அமைச்சரவையில் இடம் பெறவில்லை.
ஆறாவது, சாத்தியமான இந்திய தொடர்பு மறுக்கப்பட்டது
வெளியுறவுத்துறை அமைச்சருக்கான போட்டியாளர்களாக கருதப்பட்ட ஷேர் முகமது அப்பாஸ் ஸ்டானெக்ஸாயை இந்தியா அணுகியது. ஆனால் அவர் பந்தயத்தில் தோற்றார்.
தாலிபான் அலுவலகத்தின் துணைத் தலைவராக தோஹாவில் பல சர்வதேச உரையாசிரியர்களுடன் ஈடுபட்டிருந்த ஸ்டானெக்ஸாய் ஒதுக்கி வைக்கப்பட்டார் - துணை வெளியுறவு அமைச்சர் துணை சுகாதார அமைச்சராக மாற்றப்படுவதற்கு முன்பு அவர் 1996இல் வகித்த அதே பதவி தற்போது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
ஸ்டானெக்ஸாய், கத்தார் நாட்டுக்கான இந்திய தூதர் தீபக் மிட்டலை ஆகஸ்ட் 31 அன்று சந்தித்தார், இந்தியாவிற்கும் ஆப்கானிஸ்தானின் புதிய ஆட்சியாளர்களுக்கும் இடையிலான முதல் அதிகாரப்பூர்வ தொடர்பு பகிரங்கப்படுத்தப்பட்டது.
ஸ்டானெக்ஸாயின் முதலாளி அமீர் கான் முத்தாகி, அவர் வெளியுறவு அமைச்சராக அறிவிக்கப்பட்டார். முத்தாகி முதல் தாலிபான் ஆட்சியில் தகவல் மற்றும் கலாச்சார அமைச்சராக பணியாற்றினார். ஐ.நாவின் பயங்கரவாதிகள் பட்டியலில் இடம் பெற்றிருக்கும் இவர் முந்தைய தலிபான் ஆட்சியில் ஐக்கிய நாடுகள் தலைமையிலான பேச்சுவார்த்தையில் தாலிபான் பிரதிநிதியாக பணியாற்றினார்.
பராதர் தலைமையிலான தோஹா குழுவின் உறுப்பினர்களில் ஒருவர் முத்தாகி.
ஏழாவதாக, அமைச்சரவையில் சில குவாண்டனமோ பே (Guantanamo Bay) கைதிகள் உள்ளனர்
குவாண்டனமோ வளைகுடா பகுதியில் அமெரிக்கர்களால் நெடுங்காலம் சிறை வைக்கப்பட்ட பலர் தாலிபான்கள் அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளனர்.
தகவல் மற்றும் கலாச்சாரத்துறை அமைச்சர் கைரலுஹ்ஹா கைர்க்வா, உளவுத்துறை தலைவர் பதவிக்கு அப்துல் ஹக் வசீக், எல்லை மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் முல்லா நூருல்லா நூரி ஆகியோர் கிட்மோ சிறையில் ஒன்றாக இருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.