ZEESHAN SHAIKH
மகாராஷ்டிராவில் அமைந்துள்ள புதிய அரசில், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவார் துணை முதல்வராக பதவியேற்றுள்ள நிகழ்வு, தேசியவாத காங்கிரஸ் கட்சிக்குள் பிளவை ஏற்படுத்தியுள்ளது.
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாரின் மூத்த சகோதரர் ஆனந்த்ராவின் மகன் தான் இந்த அஜித் பவார். 1991-92 காலத்தில் இருந்தே, சரத் பவார் உடனேயே தொடர்ந்து பயணித்து வந்துள்ளார். சரத் பவாருக்கு பிறகு கட்சி தலைமை பொறுப்பு அஜித் பவாருக்கே வழங்கப்படும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக இருந்தபோதே, கட்சியில் அவரது பங்களிப்பை தெரிந்து கொள்ளலாம்.
சரத் பவார், கட்சியின் அடுத்த தலைவராக அஜித் பவார் பெயரை அறிவிப்பார் என்று அறிவித்த நிலையில், 2009 நாடாளுமன்ற தேர்தலின்போது சரத்பவார் தனது மகள் சுப்ரியா சூலேவை தேர்தல் களத்தில் இறக்கினார். இதனால், அஜித் பவார் தரப்பு சற்று அதிர்ச்சியடைந்தது. இந்நிலையில், அஜித் பவாருக்கும், சுப்ரியா சூலேவுக்கும் இடையே அதிகாரப் போராட்டம் இல்லை என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதால், அஜித் பவார் சற்று நிம்மதியடைந்தார். ஆனால், இந்த நிம்மதி அதிக காலம் நீடிக்கவில்லை. சரத் பவார், தனது பெரிய மருமகன் ரோகித் பவாரை கட்சியில் அறிமுகப்படுத்தினார். ரோகித் பவாருக்கு கட்சியினர் அதிக மதிப்பு அளிக்க துவங்கினர், இந்நிலையில், நடந்து முடிந்த மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில், ரோகித் பவாருக்கு போட்டியிட வாய்ப்பு அளித்தால், அஜித் பவார் பெருத்த அதிர்ச்சி அடைந்தார்.
2012ம் ஆண்டில் அசோக் சவான் தலைமையிலான காங்கிரஸ் அமைச்சரவையில், அஜித் பவார், நீர் ஆதாரத்துறை அமைச்சராக பதவி வகித்தார். பாசன திட்டங்களில் முறைகேடு செய்ததாக கூறி, முதல்வர் அசோக் சவான், அஜித் பவாரை, அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வலியுறுத்தினார். இதற்கு அஜித் பவாரின் ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கவே, அந்த ஆட்சி கவிழும் நிலை ஏற்பட்டது. இந்த விவகாரத்தில், சரத் பவார் தலையிட்டு, சவான் அரசை காப்பாற்றினார்.
2019 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட போவதில்லை என்று சரத் பவார் முடிவு எடுத்திருந்த நிலையில், அஜித் பவார் தனது மகன் பார்த்தை, மாவல் தொகுதியில் வேட்பாளராக களமிறக்கினார். இது சரத் பவார் உள்ளிட்டோரை பெரும்அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அதேபோல், பா.ஜ. கட்சியுடன் அஜித் பவார் மறைமுகமாக உறவு பேணிவந்தார். தேசியவாத காங்கிரஸ் கூட்டங்களிலேயே ஆங்காங்கே காவி கொடிகளும் பறந்ததை யாரும் மறந்துவிட முடியாது.
மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கியில் பல்லாயிரம் கோடிகள் அளவிற்கு பண மோசடி செய்ததாக அமலாக்கத்துறை, அஜித் பவார் மீது தொடுத்த குற்றச்சாட்டு காரணமாக, சரத் பவாரின் வேண்டுகோளுக்கிணங்க, கடந்த செப்டம்பர் மாதம், அஜித் பவார், பாரமதி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார்.
"தாமரை இலை நீர் போலவே" கட்சியில் இருந்த அஜித் பவார்...
2004ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில், தேசியவாத காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்றிருந்த போதிலும், சரத் பவார், முதல்வர் பதவியை காங்கிரஸ் கட்சிக்கு வழங்கினார். இதனால் மனம் நொந்த அஜித் பவார், பொதுஇடங்களிலேயே கட்சிக்கு எதிராக பேசிவந்தார்.
2012ம் ஆண்டில் பிருத்விராஜ் சவான் தலைமையிலான அரசில் துணை முதல்வராக அஜித் பவார் பதவி வகித்தார். அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், துணை முதல்வர் பதவியை ராஜினாமா செய்து, ஆட்சியை கவிழ்க்கும் முயற்சியில் ஈடுபட்டார். சரத் பவாரின் தலையீட்டால், பிருத்விராஜ் சவான் ஆட்சி தப்பித்தது.
2013ம் ஆண்டில் மகாராஷ்டிராவில், கடுமையான தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டிருந்த நிலையில், அனைவரும் அணைக்கு சென்று சிறுநீர் கழித்து அதை நிரப்புங்கள் என்று கருத்து தெரிவித்திருந்தார். அஜித் பவாரின் இந்த கருத்து பூதாகரமாக பல இடங்களில் வெடித்தது. பின்னர் அவர் இந்த கருத்துக்கு மன்னிப்பும் கேட்டார். 2014 நடைபெற்ற தேர்தலில், பாரதிய ஜனதா உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இந்த விசயத்தை பூதாகாரமாக்கி தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு எதிர்வினையாக்கினர்.
தமிழில் : டி. கே. குமரன்பாபு
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.