கொரோனா வைரஸ் பீதி காரணமாக, ஷேக் முஜிபுர் ரஹ்மானின் 100வது பிறந்தநாள் கொண்டாட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ
வங்கேதேசம் நாட்டின் நிறுவனரும், அந்நாட்டின் முதல் பிரதமருமான பங்கபந்து ஷேக் முஜிபுர் ரஹ்மானின் (1920 -1975) பிறந்தநாளை (மார்ச் 17), வங்கதேசம் ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடி வருகிறது. இந்தாண்டு (2020) அவரின் நூறாவது பிறந்தநாளை உற்சாகமாக கொண்டாட திட்டமிடப்பட்டிந்த நிலையில், கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, கொண்டாட்டங்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
ஷேக் முஜிபுர் ரஹ்மான், ஷேக் முஜிப் என்றும், முஜிப் என்றும் அழைக்கப்பட்டு வரப்பட்டுள்ளார். அவரது பெயருக்கு முன்னால் உள்ள பங்கபந்து என்ற அடைமொழிக்கு, வங்காளத்தின் நண்பர் என்று அர்த்தம்.
இந்தாண்டு முஜிபுர் ரஹ்மானின் 100வது பிறந்தநாளை வெகுவிமரிசையாக கொண்டாட வங்கதேச அரசு திட்டமிட்டிருந்தது. இந்தகொண்டாட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடியும் கலந்துகொள்வதாக இருந்தது. இந்நிலையில், கொரோனா வைரஸ் பீதி காரணமாக, இந்த கொண்டாட்டங்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
முஜிபுர் ரஹ்மான், சட்டம் மற்றும் அரசியல் அறிவியல் படிப்பை கோல்கட்டா மற்றும் டாக்காவில் நிறைவு செய்தார். மாணவ பருவத்திலேயே, இந்தியாவின் சுதந்திர போராட்டங்களில் தனது பங்களிப்பை செலுத்தியிருந்தார். 1949ம் ஆண்டு அவாமி லீக் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார். பின் கிழக்கு பாகிஸ்தான் விடுதலை என்பதே அவரின் உயிர்மூச்சாக இருந்தது.
6 அம்ச இயக்கம் மற்றும் அயூப்புக்கு எதிரான திட்டங்களில், முஜிபுரின் பங்கு அளப்பரியது. 1970ம் ஆண்டு நடைபெற்ற பாகிஸ்தான் பொதுத்தேர்தலில், அதிக இடங்களை வென்று சாதனை படைத்தார். தேர்தலில் வெற்றி பெற்றதை பெரிய விஷயமாக நினைக்காத முஜிபுர், பாகிஸ்தானிடமிந்து சுதந்திரம் பெறுவதே குறிக்கோளாக கொண்டிருந்தார். பெரும்போராட்டங்கள் நடைபெற்ற நிலையில், 1971ம் ஆண்டு மார்ச் 26ம் தேதி, வங்கதேசம், பாகிஸ்தானிடம் இருந்து விடுதலை பெற்றது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, வங்கதேசத்தின் டாக்கா நகர தெருக்களில் பாகிஸ்தான் ராணுவம் அதிரடி தாக்குதலை நடத்தியது. இதில் 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பலியாயினர். 4 லட்சம் பெண்கள் வரை அவர்களால் கற்பழிக்கப்பட்டனர்.
இந்தியாவின் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியின் ஆதரவு, முஜிபுர் ரஹ்மானிற்கு முழுமையாக இருந்தநிலையில், வங்கதேசம், பாகிஸ்தானிடம் இருந்து 1971ம் ஆண்டில் விடுதலை அடைந்தது.
மேற்கு பாகிஸ்தானில் இருந்த நிலையில், முஜிபுர் ரஹ்மான் கைது செய்யப்பட்டார். பின் 1972ம் ஆண்டில் அவர் விடுதலை செய்யப்பட்டார். பின் வங்கதேசம் வந்த அவர் பிரதமர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்று, வங்கதேச நாட்டின் முதல் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார். வங்கதேச நாட்டின் ஐகானாக அவர் கொண்டாடப்பட்டு வருகிறார். இவரது பேச்சுகளை கேட்போர் ஒவ்வொருவருக்ககும் சுதந்திர உணர்வு கொப்பளிக்கும் என்பது மறுக்க இயலாதது.
1975ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி ராணுவம் நடத்திய தாக்குதலில், முஜிபுர் ரஹ்மான் கொல்லப்பட்டார். இந்த தாக்குதலில், முஜிபுர் உடன், மனைவி, 3 மகன்கள் பலியாயினர். மகள்களான தற்போதைய பிரதமர் ஷேக் ஹசீனா, அவரது சகோதரி ஷேக் ரெஹானா உயிர் தப்பினர்.
முஜிபுர் படுகொலைக்கு காரணமான ராணுவ அதிகாரிகள் 5 பேருக்கு 2010ம் ஆண்டில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil