உணவுப் பொருட்களின் விலை உயர்வின் தாக்கத்தை சுட்டிக்காட்டும் வகையில், 2023-24 ஆம் ஆண்டில் கிராமப்புற மற்றும் நகர்ப்புற குடும்பங்களின் நுகர்வில் உணவுப் பொருட்களுக்கான செலவினத்தின் பங்கு அதிகரித்தது. புள்ளிவிவரங்கள் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் (MoSPI) கடந்த வெள்ளிக்கிழமை குடும்ப நுகர்வு செலவினத்திற்கான 2023-24 இன் அறிக்கையை வெளியிட்டது. இதில், கிராமப்புற செலவினங்கள் நகர்ப்புறங்களை விட வேகமாக அதிகரித்து வருவது தெரிய வந்தது.
ஆங்கிலத்தில் படிக்கவும்: Sugar and salt prices decline; beverages rise: What Household Consumption Expenditure Survey 2023-24 shows
மேற்கு, வடக்கு மற்றும் தென் மாநிலங்களான மகாராஷ்டிரா, பஞ்சாப், தமிழ்நாடு, தெலங்கானா, கேரளா, கர்நாடகா, ஹரியானா, குஜராத், ஆந்திர பிரதேசம் போன்ற மாநிலங்களில் தனிநபர் மாதாந்திர நுகர்வு செலவு தேசிய அளவிலான சராசரியை விட அதிகமாக உள்ளது. அதே சமயம், கிழக்கில் உள்ள மாநிலங்களில் குறைந்த செலவினம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மொத்த நுகர்வு செலவு:
ஒரு நபரின் கிராமப்புற சராசரி மாதாந்திர நுகர்வு செலவு 2022-23ல் ரூ.3,773ல் இருந்து 9.3 சதவீதம் அதிகரித்து, 2023-24ல் ரூ.4,122 ஆக அதிகரித்துள்ளது. இது 2011-12ல் ரூ.1,430 ஆக இருந்தது. நகர்ப்புற சராசரி மாதாந்திர நுகர்வு செலவினம் ஒரு நபருக்கு ரூ.6,996 ஆக இருந்தது. இது 2022-23ல் ரூ.6,459லிருந்து 8.3 சதவீதம் அதிகரித்துள்ளது. நகர்ப்புற சராசரி மாதாந்திர தனிநபர் நுகர்வுச் செலவு 2011-12ல் ஒரு நபருக்கு ரூ.2,630 ஆக இருந்தது.
கிராமப்புற மற்றும் நகர்ப்புற குடும்பங்களுக்கிடையேயான சராசரி மாதாந்திர நுகர்வுச் செலவினங்களின் வித்தியாசம் 2022-23ல் 71.2 சதவீதத்திலிருந்து, 2023-24ல் 69.7 சதவீதமாக உள்ளது.
நகர்ப்புற மக்கள் தொகையுடன் ஒப்பிடுகையில், கிராமப்புற இந்தியாவில் செலவினத்தின் அளவு அதிகமாக உள்ளது என்று இந்த முடிவுகள் கூறுகின்றன. இது வருமான அளவுகளில் சரிவு அல்லது வருமான வளர்ச்சியின் மெதுவான வேகத்தின் பிரதிபலிப்பாகவும் இருக்கலாம்,
உணவுக்கான செலவினத்தின் பங்கு 2022-23ல் 46.38 சதவீதமாக இருந்ததில் இருந்து, 2023-24ல் 47.04 சதவீதமாக அதிகரித்துள்ளது. நகர்ப்புறக் குடும்பங்களைப் பொறுத்தவரை, உணவுக்கான செலவு முந்தைய ஆண்டில் 39.17 சதவீதத்திலிருந்து 2023-24ல் 39.68 சதவீதமாக உயர்ந்துள்ளது.
முந்தைய 2022-23 ஆம் ஆண்டில், கிராமப்புறங்களில் ஒரு நபரின் உணவுக்கான செலவினத்தின் பங்கு ஒரு மாதத்தில் அவரது மொத்த நுகர்வுச் செலவில் 50 சதவீதத்திற்கும் கீழே சரிந்தது. உணவுக்கான செலவு 1999-2000ல் 48.06 சதவீதத்திலிருந்து 2011-12ல் 42.62 சதவீதமாகவும், 2022-23ல் 39.17 சதவீதமாகவும் குறைந்துள்ளது.
முழுமையான வகையில், ஒரு கிராமப்புற குடும்பத்தில் ஒரு நபரின் உணவுக்கான சராசரி மாதச் செலவு ரூ.1,939 ஆகவும், நகர்ப்புறங்களில் ரூ.2,776 ஆகவும் இருந்தது. உணவு அல்லாத பொருட்களுக்கு, கிராமப்புறங்களில் உள்ள ஒருவர் ஒரு மாதத்தில் 2,183 ரூபாய் செலவிட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது, அதே நேரத்தில் நகர்ப்புறங்களில் ஒரு நபர் 4,220 ரூபாய் செலவு செய்துள்ளார்.
எந்தெந்த உணவுப் பொருட்களுக்கு மக்கள் செலவு செய்தார்கள்?
2023-24 ஆம் ஆண்டில் கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் 'குளிர்பானங்கள், பதப்படுத்தப்பட்ட உணவு' ஆகியவற்றிற்காக அதிகமாக செலவிடப்பட்டது. கிராமப்புற மக்கள் 11.09 சதவீதத்தை 'குளிர்பானங்கள், பதப்படுத்தப்பட்ட உணவு' ஆகியவற்றிற்காகச் செலவிட்டாலும், நகர்ப்புறங்களின் பங்கு 9.84 சதவீதமாக உள்ளது. இதைத் தொடர்ந்து, கிராமப்புற குடும்பத்தில் உள்ள ஒருவரது, மொத்த மாதாந்திர செலவில் 8.44 சதவீதத்தை 'பால் மற்றும் பால் பொருட்களுக்கு' செலவு செய்கின்றனர். நகர்ப்புறத்தில் உள்ள ஒருவர் 7.19 சதவீதத்தையும் இதற்காக செலவிடுகிறார். கிராமப்புற (6.03 சதவீதம்) மற்றும் நகர்ப்புற (4.12 சதவீதம்) ஆகிய இரண்டிலும் காய்கறிகள் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளன. இதற்குப் பிறகு, கிராமப்புறங்களில் தானியங்களுக்கு (4.99 சதவீதம்) அதிகப் பங்கைச் செலவிட்டாலும், நகர்ப்புறங்களில் பழங்களுக்காக (3.87 சதவீதம்) அதிகச் செலவு செய்கின்றனர். ஐந்தாவது இடத்தில் கிராமப்புறங்களில் 'முட்டை, மீன் மற்றும் இறைச்சி' (4.92 சதவீதம்), மற்றும் நகர்ப்புறங்களில் 'தானியங்கள்' (3.76 சதவீதம்) உள்ளன.
முந்தைய 2011-12 மற்றும் 2022-23 ஆண்டுகளுடன் ஒப்பிடும் போது, ஒரு சில உணவுப் பொருட்கள் சுவாரஸ்யமான போக்கைக் காட்டின. உதாரணமாக, சர்க்கரை மற்றும் உப்புக்கான செலவுகள் கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் குறைத்து வருகின்றன, அதே நேரத்தில் 'பானங்கள், பதப்படுத்தப்பட்ட உணவு' ஆகியவை நாடு முழுவதும் செலவழிப்பதில் அதிகரித்து வரும் போக்கைக் காட்டுகின்றன. 'முட்டை, மீன் & இறைச்சி' மற்றும் சமையல் எண்ணெய் ஆகியவற்றிற்கான செலவினம் கடந்த பத்தாண்டுகளில் நகர்ப்புற குடும்பங்களுக்கான மாதாந்திர செலவினங்களில் ஒரு நிலையான சரிவைக் காட்டுகிறது.
காய்கறிகள், மசாலாப் பொருட்கள், பருப்பு வகைகள் ஆகியவற்றுக்கான செலவுகள் கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறங்களில் சரிவைக் காட்டின, ஆனால் இது 2023-24ல் அதிகரித்துள்ளது.
உணவு அல்லாத பொருள்களுக்கான செலவு?
2023-24ல் உணவு அல்லாத பொருள்களுக்கு கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் முறையே 53.62 சதவீதம் மற்றும் 60.83 சதவீதம் செலவு செய்யப்பட்டுள்ளது. கிராமப்புறங்களில் மருந்துகளுக்காக 6.83 சதவீதமும், ஆடை போன்ற பொருள்களுக்காக 6.63 சதவீதமும், இதர செலவுகள் மற்றும் பொழுதுபோக்குக்கிற்காக 6.22 சதவீதமும் செலவு செய்யப்பட்டுள்ளது. நகர்ப்புறங்களில் பொழுதுபோக்குக்கிற்காக 6.92 சதவீதமும், வாடகை போன்றவைகளுக்கு 6.87 சதவீதமும், கல்விக்காக 5.97 சதவீதமும் செலவு செய்யப்பட்டதாக அறியப்படுகிறது.
- Aanchal Magazin
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.