Advertisment

கொரோனா பாதித்த தாய்மார்கள், பிறந்த குழந்தையிடம் இருந்து விலகி இருக்க வேண்டுமா?

தாய்க்கு கோவிட் பாசிட்டிவ் என்றாலும் கூட தாய்ப்பால் கொடுப்பதையும், கங்காரு பராமரிப்பையும் நிறுத்தக்கூடாது என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

author-image
WebDesk
New Update
new born baby, corona

கொரோனா பாதித்த தாய்மார்கள் பிறந்த குழந்தைகளை தங்களுடன் வைத்திருக்கக்கூடாது என்பது ஒரு கட்டுக்கதை என பச்சிளம் குழந்தை நிபுணர்கள் கூறுகின்றனர். ஒரு குழந்தைக்கு தாய்ப்பால் மட்டுமே கொரோனா மற்றும் பிற நோய்தொற்றிலிருந்து போராட தேவையான எதிர்ப்பு சக்தியை வழங்குகிறது. தொற்றுநோய்களின்போது கூட புதிதாக பிறந்த குழந்தைகளையும் தாய்மார்களையும் ஏன் பிரிக்கக்கூடாது என்பதை பார்க்கலாம்.

Advertisment

கங்காரு மதர் கேர் என்றால் என்ன?

கங்காரு தாய் பராமரிப்பு என்பது புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கு வழங்கப்படும் ஒரு சிறப்பு வகையான கவனிப்பு. இதில் குழந்தையைத் தாயின் மார்பின் நடுவில் வைத்து அணைத்தவாறு கட்டிக்கொள்வதை கங்காரு மதர் கேர் என்கிறோம். கர்ப்பக்காலம் முழுமையாகப் பூர்த்தியடையாமல் முன்கூட்டியே பிறக்கும் குழந்தைகள் மற்றும் ஒரு கிலோ முதல் அதிகபட்சம் 2 கிலோ வரை எடையுள்ள குழந்தைகளுக்கு இந்த சிகிச்சை அளிக்கலாம்.

இதனால் குழந்தையின் வெப்பநிலை தாய்க்கும் தாயின் வெப்பநிலை குழந்தைக்கும் கடத்தப்படுவதால் வெப்பநிலை சமன் செய்யப்படுகிறது. தாயின் மார்பகத்தின் அருகில் இருப்பதால் குழந்தை தாய்ப்பாலின் வாசம் அறிந்து தேடிச் சென்று பாலை அருந்தும். இதன் மூலம் கொரோனா உள்ளிட்ட நோய்களுக்கு எதிராக போராட எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். 2 கிலோவிற்கும் குறைவான எடையுள்ள அனைத்து குழந்தைகளுக்கும் கங்காரு பராமரிப்பு செய்ய உலக சுகாதார நிறுவனம் (WHO) பரிந்துரைக்கிறது.

கோவிட் காலத்தில் கூட புதிதாகப் பிறந்த குழந்தைகளை ஏன் தாயிடம் இருந்து பிரிக்கக்கூடாது?

தாய்ப்பால் மற்றும் கங்காரு பராமரிப்பு வழங்காவிட்டால், ஒரு குழந்தைக்கு உயிருக்கு ஆபத்தான தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. ஒவ்வொரு தொற்றுநோயையும் எதிர்த்துப் போராட ஒரு குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அளிப்பது தாயின் பால் மட்டுமே என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

WHO இணையதளத்தில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வு அறிக்கையில், 'லான்செட் எக்லினிகல் மெடிசினில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வு, பிறந்த குழந்தை தாயின் நெருங்கிய தொடர்பில் இருப்பதை உறுதி செய்வதன் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது. குறிப்பாக முன்கூட்டியே பிறந்த குழந்தை மற்றும் எடை குறைவான குழந்தைகள் என கூறப்பட்டுள்ளது.

இருப்பினும், பல நாடுகளில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால் புதிதாக பிறந்த குழந்தைகள் அவர்களது தாயிடம் இருந்து பிரிக்கப்படுகிறார்கள். இதனால் உயிரிழப்பு மற்றும் வேறு உடல்நிலை பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

குழந்தை பிறந்தது முதல் தாயுடன் அறையை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றும் கொரோனா இருப்பதாக சந்தேகிக்கப்பட்டாலும் அல்லது உறுதி செய்யப்பட்டாலும் கூட தாய்ப்பால் கொடுக்கவும் குழந்தையுடன் தொடர்பு கொள்ளவும் முடியும் என WHO அறிவுறுத்துகிறது. மேலும் முறையான தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என கூறியுள்ளது.

சிறு குழந்தைகள் மற்றும் நோய் பாதித்து பிறக்கும் குழந்தைகளை பாதுகாப்பதற்கான செலவு குறைந்த வழிகள் கங்காரு தாய் பராமரிப்பு மற்றும் தாய்ப்பால். கொரோனா காலத்தில் பிறந்த குழந்தைகளுக்கு இந்த இரண்டு முறைகளும் தொடர்ந்தால் நிறைய உயிர்களை காப்பாற்ற முடியும் என WHO கூறுகிறது.

கொரோனா பாதித்த தாயிடமிருந்து பிறந்த குழந்தைகளுக்கு தொற்று ஏற்படுவதற்கான ஆபத்து எவ்வளவு கடுமையானது?

பச்சிளம் குழந்தை நிபுணர்கள் கூறுகையில், தாய்க்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டாலும் குழந்தைக்கு தொற்று ஏற்படுவதற்கான ஆபத்து மிகவும் அரிதானது என கூறுகின்றனர். தாய் கோவிட் பாசிட்டிவ் என்றாலும் கூட தாய்ப்பால் மற்றும் கங்காரு பராமரிப்பு நிறுத்தப்படக்கூடாது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். ஏனென்றால் குழந்தைக்கு கொரோனாவை விட மற்ற உயிருக்கு ஆபத்தான தொற்றுநோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. தாய்ப்பால் மட்டுமே கொரோனா போன்ற தொற்று நோய்களுக்கு எதிராக போராட ஊட்டச்சத்துக்கள், நோய் எதிர்ப்பு சக்திகளை அதிகரிக்க உதவுகிறது.

லூதியானாவின் தயானந்த் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை (DMCH), நியோனாட்டாலஜி துறையின் இணை பேராசிரியர் டாக்டர் கமல்தீப் அரோரா கூறுகையில், கொரோனா பாதித்த தாய்க்கு பிறக்கும் குழந்தைக்கு பரிசோதனையில் கொரோனா பாசிட்டிவ் வந்தால் இது கருப்பை தொற்றுநோய்களின் 'வெர்டிகல் டிரான்ஸ்மிஷன்' அல்லது ‘நஞ்சுக்கொடி பரவுதல்’ என்று அழைக்கப்படுகிறது. இருப்பினும், இது மிகவும் அரிதானவை.

டாக்டர் அரோரா கூறுகையில், கடந்த ஆண்டு தொற்றுநோய் பரவ தொடங்கியதில் இருந்து கொரோனா பாதித்த தாய்மார்கள் 100க்கும் மேற்பட்டவர்களுக்கு பிரசவங்கள் நடந்துள்ளன. கொரோனா இரண்டாவது அலையின்போதுதான், 4 பிறந்த குழந்தைகளுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. தாய்க்கு கொரோனா பாதித்திருந்தாலும் மற்ற குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படவில்லை. தொற்று ஏற்பட்ட 4 குழந்தைகளுக்கும் தாய்ப்பால் கொடுக்கப்பட்டது. நேரடியாக கொடுக்காமல் பாலை சேமித்து கரண்டியால் தரப்பட்டது. சில வாரங்களிலேயே குழந்தைகளுக்கு பரிசோதனையில் நெகட்டிவ் வந்தது என கூறியுள்ளார். மேலும், தாய் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தாலும் குழந்தைக்கு பரவும் வாய்ப்பு அரிதானது என்பதால் இருவரையும் பிரிக்கக்கூடாது. இதுவரை கொரோனா பாதித்து புதிதாக பிறந்த குழந்தை எதுவும் இறக்கவில்லை. தந்தையும் பிறந்த குழந்தைகளுக்கு கங்காரு பராமரிப்பு அளிக்க முடியும் என்றார்.

PGIMER சண்டிகரின் குழந்தை மருத்துவத்துறையின் பேராசிரியர் டாக்டர் கன்யா முகோபாத்யாய் கூறுகையில், குழந்தைகளுக்கு கொரோனா தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைவு. தாய் கோவிட் பாசிட்டிவ் என்றாலும், தாய்ப்பால் கொடுப்பதைத் தொடர வேண்டும். மாஸ்க் அணிந்தும், கைகளை சுத்தமாக கழுவியும், கொரோனா விதிகளை பின்பற்ற வேண்டும். கொரோனா உச்சத்தில் இருந்தபோது, அறிகுறியற்ற தாய்மார்கள் மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்பட்டதால் சில குழந்தைகளுக்கு தாய்ப்பால் ஏற்பாடு செய்வதில் சிக்கல்கள் இருந்தன. வளரும் நாடுகளில் தாய்ப்பால் இல்லாததால் கூட குழந்தைகள் இறக்கின்றனர் என்கிறார்.

கொரோனா பாதித்த தாய் குழந்தைகளை வைத்திருக்க குடும்பங்கள் ஒப்புக்கொள்கிறதா?

டாக்டர் அரோரா கூறுகையில், சம்பந்தப்பட்ட தாயின் உறவினர்களை சமாதானப்படுத்த நிறைய ஆலோசனைகள் தேவைப்படுகிறது. ஏனெனில் தாய்க்கு கொரோனா பாதித்திருந்தால் குழந்தைக்கும் பரவும் என்ற கட்டுக்கதையை பலர் பெரும்பாலும் நம்புகிறார்கள். கொரோனா பாதித்த தாயுடன் குழந்தை இருப்பதற்கான முடிவை எடுப்பது குடும்பத்தை சேர்ந்தவர்கள்தான். சில சமயங்களில் தனக்கு நெகட்டிவ் வரும் வரை குழந்தையிடம் இருந்து பிரிந்திருக்கவே தாய் விரும்புகிறார். ஆனால் தாயையும் குழந்தையையும் பிரிப்பது பரிந்துரைக்கப்படவில்லை. மருத்துவர்கள் ஆலோசனை வழங்கிய பின் சில உறவினர்கள் ஒப்புக்கொள்கிறார்கள். குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பது கண்டிப்பாக தொடர வேண்டும் என்றார்.

கொரோனா பாதித்த பாலுட்டும் தாய்மார்கள் பின்பற்ற வேண்டியது என்ன?

குழந்தைகளை தொடுவதற்கு முன்பும் பின்பும் கைகளை கழுவ வேண்டும்.
மற்றவர்கள் பகிர்ந்த பம்பைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.
தாய்ப்பால் கொடுக்கும்போதும் பம்ப் செய்யும்போதும் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும்.
ஒவ்வொரு முறை பயன்படுத்திய பிறகும் பம்ப் பாகங்களை சுத்தம் செய்ய வேண்டும்.

குறைப்பிரசவ மற்றும் எடை குறைந்த குழந்தைகளின் உயிரைக் காப்பாற்ற கங்காரு தாய் பராமரிப்பு எவ்வாறு உதவும்?

குழந்தைகளையும் தாய்மார்களையும் ஒன்றாக வைத்திருப்பது 125000 க்கும் மேற்பட்ட உயிர்களைக் காப்பாற்றும் என்று WHO கூறுகிறது. குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தைகளுக்கு அல்லது எடை குறைந்த குழந்தைகளுக்கு கங்காரு தாய் பராமரிப்பு முக்கியமானது.

கங்காரு தாய் பராமரிப்பு குழந்தைகள் இறப்பு விதிதங்களை 40%ஆகவும், hypothermia 70%ஆகவும், கடுமையான நோய் தொற்றுகளை 65% ஆகவும் குறைக்கும் என நிரூபிக்கப்பட்டுள்ளது என WHO கூறுகிறது. கொரோனா வைரஸ் புதிதாக பிறந்த குழந்தைகள் பராமரிக்கப்படும் தரத்தை மிகவும் பாதிக்கிறது. இதனால் தேவையற்ற பாதிப்புகள் மற்றும் இறப்புகள் ஏற்படுகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Coronavirus Covid 19
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment