அனைத்து எம்ஆர்என்ஏ கொரோனா தடுப்பூசிகளின் முதல் மற்றும் இரண்டாவது டோஸ் என ஒவ்வொரு டோஸையும் பெற்றபின், ஒரு வாரத்திற்கு கடுமையான உடற்பயிற்சியைத் தவிர்க்குமாறு சிங்கப்பூரின் சுகாதார அமைச்சகம் அந்த நாட்டு மக்களை வலியுறுத்தியுள்ளது. சிங்கப்பூர் அரசாங்கம், தடுப்பூசி பயனாளிகளுக்கான சுகாதார வழிகாட்டுதல்களை புதுப்பித்துள்ளது. அந்த அரசாங்கம் இதற்கு முன்னர் தடுப்பூசி பெற்ற 12-24 மணிநேரம் வரை உடற்பயிற்சியை தவிர்க்குமாறு அறிவுறுத்தியது.
முன்னதாக, அரசின் வழிகாட்டுதல்கள் தடுப்பூசியின் இரண்டு அளவுகளையும் பெற்ற பின்னர் குறுகிய இடைவெளியை மட்டுமே உடற்பயிற்சியில் இருந்து தவிர்ப்பதற்காக பரிந்துரைத்தன.
தடுப்பூசி தேடும் அனைவருக்கும் இந்த ஆலோசனை பொருந்தும் அதே வேளையில், குறிப்பாக இளம் பருவத்தினர் மற்றும் 30 வயதிற்குட்பட்ட ஆண்கள் மீது அரசு கவனம் செலுத்தியது. “ஒவ்வொருவரும், குறிப்பாக இளம் பருவத்தினர் மற்றும் 30 வயதிற்கு குறைவான இளைஞர்கள், முதல் மற்றும் இரண்டாவது அளவுகளுக்குப் பிறகு ஒரு வாரம் தீவிர உடற்பயிற்சி போன்ற கடுமையான உடல் செயல்பாடுகளைத் தவிர்க்குமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம்,” என்று சுகாதார அமைச்சகத்தின் புதுப்பிக்கப்பட்ட வழிகாட்டுதல்கள் கூறுகின்றன.
கொரோனா தடுப்பூசிக்குப் பிறகு உடற்பயிற்சியைத் தவிர்க்குமாறு சிங்கப்பூர் அரசு ஏன் மக்களை வலியுறுத்துகிறது?
தடுப்பூசி பெற்ற பிறகு இளைஞர்கள் இதய பிரச்சினைகளை சந்திக்கும் அறிக்கைகளின் அடிப்படையில், புதுப்பிக்கப்பட்ட வழிகாட்டுதல்கள் அமைந்துள்ளது. மிக சமீபத்தில், ஃபைசர்-பயோஎன்டெக் தடுப்பூசியின் முதல் அளவைப் பெற்ற 16 வயது சிறுவன், சில நாட்களுக்குப் பிறகு, ஜூலை 3 ஆம் தேதி அன்று எடையைத் தூக்கும் போது மாரடைப்பால் அவதிப்பட்டான்.
"சிறுவனுக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக, மருத்துவமனைக்கு வெளியேயான முதற்கட்ட தகவல்கள் கூறுகின்றன. அடிப்படை காரணத்தை புரிந்து கொள்ள மருத்துவ மற்றும் ஆய்வக சோதனைகள் நடந்து வருகின்றன ”என்று சுகாதார அமைச்சகம் திங்களன்று விளக்கியது. "கடுமையான தீவிர மயோர்கார்டிடிஸ் இருந்ததா என்பது பற்றிய முழுமையான ஆய்வை இந்த சோதனைகள் உள்ளடக்கும். மயோர்கார்டிடிஸ் என்பது இதய செயல்பாட்டை பாதிக்கும் இதய தசைகளின் கடுமையான அழற்சி நோயாகும், ஆனால் இது குணப்படுத்தக் கூடியதுதான்." என்றும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஃபைசர்-பயோஎன்டெக் தடுப்பூசி தவிர, சிங்கப்பூர் மாடர்னா உருவாக்கிய தடுப்பூசிகளையும் வழங்குகிறது.
ஜூன் 30 வரை, சிங்கப்பூரின் சுகாதார அறிவியல் ஆணையம் தடுப்பூசிகளை பெற்ற பின்னர் இதய பிரச்சினைகளை அனுபவித்த குறைந்தது 12 பேர் குறித்த அறிக்கைகளைப் பெற்றுள்ளது. இந்த பாதிப்புகளில் பெரும்பாலானவை 30 மற்றும் அதற்கும் குறைவான வயதுடைய ஆண்கள் சம்பந்தப்பட்டவை என்று ப்ளூம்பெர்க் தெரிவித்துள்ளது.
கொரோனா தடுப்பூசிகளுடன் தொடர்புடைய சிறிய ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய மயோர்கார்டிடிஸ் (இதய தசையின் வீக்கம்) மற்றும் பெரிகார்டிடிஸ் (இதயத்தைச் சுற்றியுள்ள சவ்வு வீக்கம்) ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த தரவுகளின் அடிப்படையில் இந்த அறிவுறுத்தல் வந்துள்ளது.
“இந்த நேரத்தில், தடுப்பூசி போடப்பட்ட நபர்கள் மார்பு வலி, மூச்சுத் திணறல் அல்லது அசாதாரண இதயத் துடிப்பு ஏற்பட்டால் உடனடியாக மருத்துவ சிகிச்சை பெற வேண்டும். தடுப்பூசிக்குப் பிறகு இதுபோன்ற மருத்துவ பிரச்சனைகளில் அனைத்து மருத்துவர்களும் விழிப்புடன் இருக்க வேண்டும், ”என்று ஆலோசகர் கூறினார்.
சிங்கப்பூரின் சுகாதார அமைச்சகத்தின் படி என்ன வகையான உடற்பயிற்சிகளை தவிர்க்க வேண்டும்?
அதன் சமீபத்திய ஆலோசனையின்படி, தடுப்பூசியின் முதல் மற்றும் இரண்டாவது அளவுகளுக்குப் பிறகு ஒரு வாரம் நீச்சல், சைக்கிள் ஓட்டுதல் மற்றும் ஓட்டப்பயிற்சி போன்ற செயல்களைத் தவிர்க்க வேண்டும். தவிர்க்கக்கூடிய செயல்பாடுகளின் பட்டியலில் அதிக எடை தூக்குதல், ஜாகிங், போட்டி விளையாட்டுகள், பேட்மிட்டன் போன்ற விளையாட்டுகளும் அடங்கும்.
பள்ளிகளில் உடற்கல்வி வகுப்புகள் தவிர்க்கப்பட வேண்டும் என்றும் அது கூறுகிறது. நடைபயிற்சி, இலகுவாக்கல் பயிற்சி மற்றும் வீட்டு வேலைகள் ஆகியவை ஒரு வாரத்திற்குப் பிறகு செய்யக்கூடிய உடல் செயல்பாடுகளில் அடங்கும்.
இது போன்ற ஒரு ஆலோசனை சிங்கப்பூரில் மட்டுமே வழங்கப்பட்டுள்ளதா?
இல்லை. அமெரிக்காவும் இஸ்ரேலும் தடுப்பூசி பெற்ற பிறகு உடற்பயிற்சியில் இதேபோன்ற நிலைப்பாட்டை எடுத்துள்ளன. ஃபைசர் தடுப்பூசி பெற்ற பின்னர் இளைஞர்களிடையே மயோர்கார்டிடிஸ் நோயால் பாதிக்கப்பட்ட சில சம்பவங்கள் இதற்குக் காரணம்.
கடந்த மாதம், அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம், ஃபைசர் மற்றும் மாடர்னா கொரோனா தடுப்பூசிகளைப் பற்றிய அனைத்து உண்மை அறிக்கைகளிலும் இளம் பருவத்தினர் மற்றும் இளைஞர்களிடையே இதய அழற்சியின் அரிதான நிகழ்வுகளைப் பற்றிய எச்சரிக்கையை சேர்ப்பதாக அறிவித்தது.
இதற்கிடையில், இஸ்ரேலிய சுகாதார அமைச்சகத்திற்கு சமர்ப்பித்த அறிக்கையில், ஃபைசர் மற்றும் பயோஎன்டெக் தயாரித்த தடுப்பூசி இளைஞர்களுக்கு மயோர்கார்டிடிஸ் உருவாக்கும் அபாயத்தில் இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
ஆனால் தடுப்பூசி இயக்கத்தில் சிங்கப்பூர் அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்கும் நிபுணர் குழு, கொடிய வைரஸுக்கு எதிராக தடுப்பூசி போடுவதை தொடர்ந்து பரிந்துரைத்து வருகிறது, இதனால் நன்மைகள் சாத்தியமான அபாயங்களை விட அதிகமாக இருக்கும் என்று வாதிடுகின்றனர். இந்த தடுப்பூசிகள் தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதில் ஒருங்கிணைந்தவை என்பதை இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இரண்டும் தக்க வைத்துக் கொண்டுள்ளன.
உலகெங்கிலும் வேறு என்ன தடுப்பூசி ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன?
தடுப்பூசி பெற்ற பிறகு சில நடவடிக்கைகளைத் தவிர்க்குமாறு குடிமக்களை வலியுறுத்தி உலகம் முழுவதும் பல ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.
கடந்த ஆண்டு பிற்பகுதியில், ரஷ்ய சுகாதார அதிகாரிகள் குடிமக்களுக்கு தடுப்பூசி கிடைத்த பின்னர் சுமார் இரண்டு மாதங்களுக்கு மதுவைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தினர். வேண்டுகோள் நியாயமற்றது என்று நம்புகின்ற ரஷ்யாவின் பல பகுதிகளில் இந்த எச்சரிக்கை சரியாகப் போகவில்லை. இருப்பினும், விரைவில், ஸ்பூட்னிக் வி தடுப்பூசியின் டெவலப்பர் கூற்றுக்கு இது முரணானதாக ஆனது.
இதற்கிடையில், கொரோனா தடுப்பூசிகளை செயல்திறன் அடிப்படையில் கலந்து அளிக்க ஜெர்மனி ஒரு வலுவான பரிந்துரையை வெளியிட்டு வருகிறது. உண்மையில், ஜெர்மன் சான்ஸ்லர் ஏஞ்சலா மேர்க்கெல் மாடர்னாவை முதன்முதலில் பெற்ற பிறகு, அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியை தனது இரண்டாவது டோஸாக எடுத்துக் கொண்டார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.