கொரோனா பெருந்தொற்றை ஏற்படுத்தும் சார்ஸ்-கோவ்-2 வைரஸ், 2020 இலையுதிர் காலத்தில் இருந்து பல வகைகளாக உருமாறிஇருப்பது உலகெங்கிலும் உள்ள விஞ்ஞானிகளை கவலைக்குலாக்கியது.
இந்த புதிய மாற்று வடிவ வைரஸ் மோசமான தொற்றாக இருப்பதால், தடுப்பு மருந்து மற்றும் ஆன்டிபாடி பாதுகாப்பு செயல்திறனை குறைக்கும் தன்மை கொண்டவை. இதன் மூலம் குறுகிய காலத்தில் அதிகப்படியான நாடுகளில் பாதிப்பு அதிகரிக்கும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்தது.
இங்கிலாந்து, பிரேசில், தென்னாப்பிரிக்கா ஆகிய மூன்று நாடுகளில் ‘சார்ஸ்-கோவிட் – 2’ வைரஸில் மரபணு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக அந்த அமைப்பு அடையாளம் கண்டுள்ளது.
20H / 501Y.V2 அல்லது B.1.351 என அழைக்கப்படும் உருமாறிய கொரோனா வைரஸ் தென்னாப்பிரிக்காவில் காணப்படுகிறது. இது இங்கிலாந்தின் உருமாறிய கொரோனா வைரஸ் வகையை விட வேறுபட்டது என்றும் மோசமான நோய்த் தொற்றாகவும் கருதப்படுகிறது.
கடந்த ஆண்டு டிசம்பர் 22 முதல் அமெரிக்கா உட்பட 40 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த தொற்று, இங்கிலாந்து வகை கொரோனா வைரஸில் (பி .1.1.7) இருந்து சுயாதீனமாக உருவாகியுள்ளது. இருப்பினும், சில பிறழ்வுகளைப் பகிர்ந்து கொள்வதாகவும் தெரிவிக்கப்படுகிறது .
ஸ்பைக் புரதத்தில் உள்ள என்501ஒய் மாற்றம். வைரசை மனிதர்களிடையே அதிகமாகவும், மிக எளிதாகவும் பரவச் செய்யலாம் என தி நியூயார்க் டைம்ஸ் வெளியிட்ட செய்தியில் தெரிவிக்கப்பட்டது.
தி வால் ஸ்ட்ரீட் நாளிதழ், " தென்னாப்பிரிக்கா வகை முந்தைய வகைகளை விட 50 சதவீதம் அதிகம் பரவக் கூடியதாக உள்ளது என்ற தென்னாப்பிரிக்க ஆராய்ச்சியாளர்களின் கருத்தை சுட்டிக் காட்டியது.
தென்னாப்பிரிக்கா சார்ஸ்-கோவிட்-2 வைரசின் புதிய மாறுபாட்டின் தாக்கத்தை குறித்து மேலதிக ஆய்வுகளுக்கு உலக சுகாதார அமைப்பு அழைப்பு விடுத்த போதிலும், அடுத்தக்கட்ட மோசமான அபயாங்கள் தென்னாப்பிரிக்காவில் காணப்படவில்லை என்றும் தெரிவித்தது.
வழக்கத்திற்கு மாறாக அதிக எண்ணிக்கையிலான பிறழ்வுகள் இருப்பதும், குறிப்பாக ஸ்பைக் புரதத்தில் உள்ள என்501ஒய் மாற்றம் விஞ்ஞானிகள் கவலையடைய வைத்துள்ளது. ஏனெனில், கொரோனா வைரஸ் அதன் ஸ்பைக் புரதங்களின் உதவியுடன் மனித உயிரணுக்களை பாதிக்கிறது. கொரோனா வைரசின் ஸ்பைக் புரதத்தைச் செயலிழக்கச் செய்தால் மட்டுமே தொற்றுநோய்ப் பரவலைத் தடுக்க முடியும். இதனால் ஸ்பைக் புரதத்தில் உள்ள ஆன்டிஜென், தடுப்பூசிக்கு ஒரு முக்கியமான இலக்காகும்
இங்கிலாந்தில் கண்டறியப்பட்ட வைரசின் புதிய மாறுபாட்டிலும் என்501ஒய் மாற்றம் காணப்பட்டாலும், இரண்டிற்கும் சில வேறுபாடுகள் உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெளிவுபடுத்துகிறது.
தென்னாப்பிரிக்க மாறுபாட்டில் காணப்படும் E484K என்ற மாற்றம், இங்கிலாந்தின் புதிய வைரஸில் காணப்படவில்லை. இந்த மாற்றம் கொரோனா தடுப்பூசியின் செயல்திறனை கடுமையாக பாதிக்கிறது.
இருப்பினும், தற்போது ஒப்புதல் அளிக்கப்பட்ட கோவிட் -19 தடுப்பூசிகள் புதிய வகை கொரோனா வைரஸுக்கு எதிராக செயல்படாது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.
இருப்பினும் தென்னாப்பிரிக்கா மேற்கொள்ளப்பட்ட தடுப்பூசிகளுக்கான மனிதப் பரிசோதனையில், புதிய வகை கொரோனா நோய்த் தொற்றுக்கு எதிராக தடுப்பூசிகளின் செயல்திறன் ஒப்பீட்டளவில் குறைவாக இருப்பதாக காட்டுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.