டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் வெளிநாட்டு பயணத்திற்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் ஒப்புதல் கிடைக்காததால், இங்கிருந்தபடியே, வீடியோகான்பரன்சிங் மூலம் டென்மார்க் நாட்டில் நடந்த கருத்தரங்கில் பங்கேற்றார். இந்த விவகாரம், அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
கெஜ்ரிவால் விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், மத்திய வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் ரவீஷ் குமார் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார். அவர் தெரிவித்துள்ளதாவது, அமைச்சர்கள், செயலாளர்கள் என மாதந்தோறும் நூற்றுக்கணக்கான விண்ணப்பங்கள் தங்களது துறைக்கு வந்தவண்ணம் உள்ளன. வெளிநாட்டு பயணம். அதில் பங்கேற்கும் மற்ற நாடுகள், அதன் பிரதிநிதிகள், அதன் முக்கியத்துவம் என பல கோணங்களில் ஆராய்ந்தபின்னரே, முடிவுகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன்பிறகே, வெளிநாட்டு பயணங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டு வருவதாகவும், இதன் பின்னணியில் எவ்வித அரசியல் காரணமும் இல்லை என ரவீஷ் குமார் தெரிவித்துள்ளார்.
அசோக் லாவாசாவுக்கு ஏமாற்றம் : இந்த நடைமுறைகளில் மாற்றம் கொண்டுவர கோரி, 2014ம் ஆண்டில் சிவில் விமான போக்குவரத்துத்துறை செயலாளராக ( தற்போது தேர்தல் ஆணையர்) இருந்த அசோக் லவாசா, மத்திய அமைச்சரவை செயலாளர் அஜித் சேத்திற்கு கடிதம் எழுதினார்.. சேத், அந்த கடிதத்தை, வெளியுறவுத்துறை செயலாளர் சுஜாதா சிங்கிற்கு அப்போது அனுப்பினார். இந்த நடைமுறையில் மாற்றம் இல்லை என்ற பதிலே, அசோக் லவாசாவிற்கு கிடைத்தது.
யார், யார் யாரிடமெல்லாம் அனுமதி பெற வேண்டும்
மாநில முதல்வர்கள், அமைச்சர்கள் வெளிநாடு பயணம் மேற்கொள்ள வேண்டுமெனில், அவர்கள் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் ஒப்புதலை முதலில் பெற்றாக வேண்டும். பின் மற்ற துறைகளின் ஒப்புதல்களையும் அவர்கள் பெற வேண்டியது அவசியமாகிறது. அதுயாதெனில்,
மாநில முதல்வர்கள், அமைச்சர்கள், அதிகாரிகள் - பொருளாதார விவகாரத்துறையின் ஒப்புதலை பெற வேண்டும். அதுமட்டுமல்லாது, இந்த பயணம் அலுவலக சம்பந்தமானதா அல்லது பெர்சனல் விஷயங்களுக்கா என்பதை குறிப்பிட்டு பிரதமரின் ஒப்புதலை பெற வேண்டும்.
மக்களவை எம்பிக்கள் - மக்களவை சபாநாயகரின் ஒப்புதலை பெற வேண்டும்
மாநிலங்களவை எம்பிக்கள் - துணை ஜனாதிபதி (மாநிலங்களவை சபாநாயகரின்) ஒப்புதலை பெற்றிருக்க வேண்டும்.
துறை அதிகாரிகள் முதல் இணை செயலாளர்கள் வரையிலான அதிகாரிகள் - அந்தந்த துறை அமைச்சர்களின் ஒப்புதலை பெற வேண்டும்.
மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் ஒப்புதலை பெறும்போது, பயணத்தின் கால அளவு, எந்த நாட்டிற்கு பயணம், பயணம் மேற்கொள்ள பிரதிநிதிகளின் எண்ணிக்கை, அங்கு வழங்கப்பட உள்ள சேவைகள், ஐக்கிய நாடுகள், எப்சிஆர்ஏ உள்ளிட்ட அமைப்புகளிடமிருந்து ஒப்புதல் போன்றவை பெறுவதற்காக, விதிகளில் அவ்வப்போது தளர்வு மேற்கொள்ளப்படும்.
2016ம் ஆண்டு முதல், மாநில முதல்வர்கள் உள்ளிட்டோர்களுக்கான வெளிநாட்டு பயணங்கள் குறித்த விண்ணப்ப மனுக்கள் ஆன்லைன் போர்டல் முறையில் பெறப்பட்டு, அதற்குரிய அமைச்சகங்களின் ஒப்புதலை ஒரேநேரத்தில் பெறும்வகையில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளதாக ரவீஷ் குமார் மேலும் தெரிவித்துள்ளார்.
அனுமதி மறுக்கப்பட்ட முதல்வர்கள் : காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக்காலத்தில், அசாம் முதல்வர் தருண் கோகோய் (காங்கிரஸ்) அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகளுக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டது.
ஜார்க்கண்ட் முதல்வர் அர்ஜூன் முண்டா ( பாரதிய ஜனதா), தாய்லாந்து நாட்டுக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.
தமிழக முதல்வருக்கு லக் : தமிழக முதல்வர் பழனிசாமி, சமீபத்தில் அமெரிக்கா, பிரிட்டன், துபாய் உள்ளிட்ட சர்வதேச நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த நிலையில், நீர் மேலாண்மை குறித்து ஆராய, அவர் விரைவில் இஸ்ரேல் நாட்டிற்கு பயணம் மேற்கொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.