13 மாநிலப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை நியமிக்கும் ஆளுனரின் அதிகாரத்தை மாநில அரசுக்கு மாற்றும் இரண்டு மசோதாக்கள் தமிழக சட்டப்பேரவையில் திங்கள்கிழமை நிறைவேற்றப்பட்டுள்ளன. துணைவேந்தர் நியமனத்தில் மாநில அரசின் கருத்தை ஆளுனர் புறக்கணிப்பதால், மசோதாக்கள் தேவை என முதல்வர் ஸ்டாலின் கூறினார். கடந்த காலங்களில் மகாராஷ்டிரா, மேற்கு வங்க மாநிலங்களிலும் இத்தகைய வாக்குவாதம் பரபரப்பாக பேசப்பட்டது
மாநிலங்களில் துணைவேந்தர்கள் நியமனம் செய்யும் விதிகளில் மாறுபாடுகள் இருப்பதை காண முடிகிறது. குறிப்பாக, மாநில அரசுக்கும் மத்திய அரசுக்கும் மோதல் நிலவும் மாநிலங்களில், துணைவேந்தர்களை நியமிப்பதில் கருத்து மோதல் நிலவுகிறது.
இரண்டு மசோதாக்களின் சிறப்பம்சங்கள் என்ன?
தமிழ்நாட்டில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் படி, 'ஒவ்வொரு துணைவேந்தரின் நியமனமும், தேடல் மற்றும் தேர்வுக் குழுவால் பரிந்துரைக்கப்பட்ட மூன்று பெயர்களைக் கொண்ட குழுவிலிருந்து அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படும்' என்பதை வலியுறுத்துகிறது. தற்போது, மாநிலப் பல்கலைக் கழகங்களின் வேந்தராக இருக்கும் ஆளுனருக்கு, தேர்ந்தெடுக்கப்பட்ட பெயர்களில் இருந்து துணைவேந்தரை தேர்ந்தெடுக்கும் அதிகாரம் உள்ளது. தேவைப்பட்டால் துணைவேந்தர்களை நீக்குவதற்கான இறுதி முடிவை மாநில அரசு எடுக்கும் வகையில் மசோதா தயார் செய்யப்பட்டுள்ளது. ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி அல்லது குறைந்தபட்சம் தலைமைச் செயலாளராகப் பணியாற்றிய ஒரு அதிகாரியின் விசாரணையின் அடிப்படையில் நீக்கம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
துணைவேந்தர்களை நியமிப்பதில் மற்ற மாநிலங்கள் எடுத்த முயற்சிகள்?
மகாராஷ்டிரா சட்டப்பேரவை, மகாராஷ்டிரா பொது பல்கலைக்கழகங்கள் சட்டம் 2016 ஐ திருத்தும் மசோதாவை நிறைவேற்றியது. ஒரிஜினல் சட்டத்தில், துணைவேந்தர்களை நியமிப்பதில் மகாராஷ்டிரா அரசுக்கு எந்த பங்கும் இல்லை. ஒருவேளை திருத்தப்பட்ட மசோதா அமலுக்கு வந்தால், குழுவின் பரிந்துரைகளைப் பின்பற்றி, தற்போது சிவசேனா-என்சிபி-காங்கிரஸால் ஆளப்படும் மாநில அரசுபரிந்துரைக்கும் இரண்டு பெயர்களில் இருந்து ஒன்றை ஆளுனர் தேர்ந்தெடுக்க வேண்டும்.
2019 ஆம் ஆண்டில், திரிணாமுல் காங்கிரஸ் தலைமையிலான மேற்கு வங்க அரசு, மாநிலப் பல்கலைக்கழகங்களுக்கு துணை வேந்தர்களை நியமிக்கும் ஆளுனரின் அதிகாரத்தைப் பறித்தது. பல்கலைக்கழகங்களின் வேந்தர் பதவியில் இருந்து ஆளுனரை நீக்குவது குறித்தும் மறைமுகமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடதுசாரிகள் ஆளும் கேரளாவில், கண்ணூர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் நியமனம் தனது விருப்பத்திற்கு மாறாக நடந்ததாக ஆளுனர் குற்றம் சாட்டினார்.ஒடிசாவில் உள்ள பிஜேடி அரசும் மாநிலப் பல்கலைக்கழகங்களுக்கான நியமனங்களைத் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர முயன்றது.
மாநிலங்களிடையே மாற்றங்களுக்கான காரணம் என்ன?
மேற்கு வங்கம், மகாராஷ்டிரா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில், தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகள், கல்வி உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில், மத்திய அரசின் கட்டளைப்படி, ஆளுனர்கள் செயல்படுவதாக, பலமுறை குற்றம் சாட்டி வருகின்றனர். மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடும் விதிமுறைகள், பல நேரங்களில் சர்ச்சையை ஏற்படுத்துகின்றன.
சொல்லப்போனால், தமிழ்நாடு மசோதாக்கள் குஜராத் மற்றும் தெலங்கானாவின் உதாரணங்களை மேற்கோள் காட்டி, துணைவேந்தர் நியமன நடைமுறையில் மாநில அரசுக்கு அதிகாரம் வழங்குவதற்கான சாத்தியக்கூறுகளை கூறுகிறது. குஜராத், தெலுங்கானா மாநிலப் பல்கலைக்கழகச் சட்டங்களுக்கு இணங்க, மாநிலப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை நியமிக்க தமிழக அரசுக்கு அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என மசோதாக்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.
அதேசமயம், கர்நாடகா, ஜார்கண்ட், ராஜஸ்தானில் ஆகிய மாநிலங்களின் சட்டங்கள், மாநில மற்றும் ஆளுனருக்கு இடையே இணக்கம் தேவை என்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. "ஒப்புதல்" அல்லது "ஆலோசனை" என்ற சொற்கள் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் மாநில சட்டத்தில் இல்லை.
யுஜிசியின் பங்கு என்ன?
கல்வியானது ஒருங்கிணைந்த பட்டியலின் கீழ் வருகிறது, ஆனால் யூனியன் பட்டியலின் நுழைவு 66 இன்படி உயர் கல்வி அல்லது ஆராய்ச்சி மற்றும் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கான நிறுவனங்களில் தரங்களை ஒருங்கிணைத்தல் மற்றும் நிர்ணயித்தல் ஆகியவை உயர் கல்வியின் மீது மையத்திற்கு கணிசமான அதிகாரத்தை வழங்குகிறது. பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் பணிநியமனம் செய்யும் விஷயத்தில் கூட UGC முக்கிய பாத்திரத்தை வகிக்கிறது.
யுஜிசி கூற்றுப்படி, 2018 இன் படி மாநிலங்களில் வேந்தர் பொறுப்பை வகிக்கும் ஆளுனர்கள், தேடல் மற்றும் தேர்வுக் குழுக்களால் பரிந்துரைக்கப்பட்ட பெயர்கள் குழுவில் இருந்து துணைவேந்தர்களை நியமிக்க வேண்டும். உயர் கல்வி நிறுவனங்கள், குறிப்பாக UGC நிதியைப் பெறும் நிறுவனங்கள், அதன் விதிமுறைகளைப் பின்பற்றுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த விதிமுறை மத்திய பல்கலைக்கழகங்களில் எதிர்ப்பு இல்லாமல் பின்பற்றப்படுகின்றன. ஆனால் சில சமயங்களில் மாநில பல்கலைக்கழகங்களில் மாநில அரசால் எதிர்க்கப்படுகிறது.
குஜராத், தெலங்கானா விதிமுறை என்ன?
குஜராத் பல்கலைக்கழகச் சட்டம், 1949, தேடல் மற்றும் தேர்வு குழுவால் பரிந்துரைக்கப்படும் மூன்று நபர்களில் இருந்து துணைவேந்தர் மாநில அரசால் நியமிக்கப்படுவார் என்று கூறுகிறது. தெலங்கானா பல்கலைக்கழகங்கள் சட்டம், 1991, தேடல் குழு மூன்று பேர் கொண்டு குழுவை மாநில அரசிடம் சமர்ப்பிக்கும். அந்த குழுவில் இருந்து துணைவேந்தரை அரசாங்கம் நியமிக்கும் என கூறப்படுகிறது.
கடந்த மாதம், குஜராத்தின் எஸ்பி பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரை மாநில அரசு நியமித்ததை ஒதுக்கி வைத்த விவகாரத்தில், உச்ச நீதிமன்றம் சில முக்கிய கருத்துகளை தெரிவித்தது.
என்ன கருத்துகள்?
நீதிபதிகள் எம்.ஆர்.ஷா மற்றும் பி.வி.நாகரத்னா ஆகியோர் அடங்கிய அமர்வு, யுஜிசி விதிமுறைகளின் விதிகளுக்கு மாறாக துணைவேந்தர் நியமனம் செய்யப்பட்டால் அது சட்ட விதிகளை மீறுவதாகக் கூறலாம், இது க்வோ வாரண்டோ உத்தரவுக்கு வழிவகுக்கிறது.
UGC இன் ஒவ்வொரு துணைச் சட்டமும், UGC சட்டம் 1956இன் கீழ் தான் வருகிறது. எனவே, இது துணைச் சட்டமாக இருப்பதால், UGC விதிமுறைகள் சட்டத்தின் ஒரு பகுதியாக மாறும். மாநில சட்டத்திற்கும் மத்திய சட்டத்திற்கும் இடையில் ஏதேனும் முரண்பாடுகள் ஏற்பட்டால், அரசியலமைப்பின் ஏழாவது அட்டவணையின் ஒருங்கிணைந்த பட்டியலில் 'கல்வி' என்ற பாடம் இருப்பதால், மத்திய சட்டமே மேலோங்கும் என தீர்ப்பளிக்கப்பட்டது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.