மகாராஷ்டிரத்தில், நாக்பூர் அருகிலுள்ள கொரேவாடா மீட்புமையத்திலிருந்து சுல்தான் எனும் புலி, கடந்த செவ்வாயன்று அதன் புது வசிப்பிடமான மும்பை போரிவலியிலுள்ள சஞ்சய் காந்தி தேசியப் பூங்காவுக்கு அனுப்பப்பட்டது என லோக்சத்தா தெரிவித்துள்ளது.
சுல்தானின் இடமாற்றத்துக்கு மைய உயிரியல்பூங்கா ஆணையம் அனுமதி வழங்கியதன் மூலம், ச.கா.தே. உயிரியல்பூங்காவில் புலிகள் அருகிவருவதைத் தடுக்கமுடியும் என வனத்துறையினர் நம்புகின்றனர்.
சுல்தான் புலிக்கு ச.கா.தே. உயிரியல்பூங்காவில் ஏன் இவ்வளவு முக்கியத்துவம்?
மகாராஷ்டிர மாநிலம் சந்திரபூர் மாவட்டத்தில் உள்ள பிரம்மபுரியில் கடந்த ஆண்டு கிராமவாசிகள் இருவரை இந்த சுல்தான் புலி தாக்கிக் கொன்றுவிட்டது. அதையடுத்து வனத்துறையினர் இதைப் பிடித்து, கோரேவாடா மீட்புமையத்தில் கொண்டுபோய்விட்டனர். அங்குவைத்து அது பராமரிக்கப்பட்டுவந்தது.
ச.கா.தே. உயிரியல்பூங்காவில் இப்போது ஆண் ஒன்றும் பெண் நான்குமாக ஐந்து புலிகள் உள்ளன. பெண் புலிகளில் ஒன்று மறுஉற்பத்தி வயதைத் தாண்டிவிட்டது; மற்ற மூன்று புலிகளும் சேர்க்கை இணைக்காகக் காத்துக்கொண்டிருக்கின்றன. இதனால் கோரேவாடா மையத்திலிருந்த ஆண் புலியை வழங்குமாறு ச.கா.தே. உயிரியல்பூங்கா அதிகாரிகள் வேண்டுகோள்விடுத்தனர்.
சுல்தானைத் தவிர , கோரேவாடா மையத்தில் இராஜ்குமார் எனும் புலியும் பராமரிக்கப்படுகிறது. இதுதான், 2017-ல் தும்சாரில் ஒரு திருமண விழா நடந்துகொண்டிருந்த இடத்தில் நுழைந்து, அந்தக் காட்சி, இணையத்தில் தீயாகப் பரவியது. சுல்தான் புலியை ச.கா.தே. உயிரியல்பூங்காவுக்கு அனுப்புவது குறித்து மகாராஷ்டிர உயிரியல்பூங்கா ஆணையத்துக்கும் கோரேவாடா மையத்துக்கும் கருத்துமாறுபாடு ஏற்பட்டது. ஒருவழியாக, மைய உயிரியல்பூங்கா ஆணையம் சுல்தானை இடமாற்றம்செய்வதற்கு ஒப்புக்கொண்டதை அடுத்து, அதை இடம்மாற்றுவதென கடந்த 12-ம் தேதியன்று வனத்துறை அதிகாரிகள் முடிவுசெய்தனர்.
இடமாற்றத்துக்கு முன்னர், ச.கா.தே. உயிரியல்பூங்கா அதிகாரிகள் சுல்தானுக்கு பரிசோதனை செய்தனர். முன்னதாக,அந்த உயிரியல்பூங்காவில் இருந்த 12 வயது யாஷ் எனும் புலி, அரிதான புற்றுநோயால் பாதிக்கப்பட்டு கடந்த மே மாதம் இறந்துபோனதால் அதிகாரிகள் இதில் கவனமாக இருந்தனர்.
மும்பை ச.கா.தே. உயிரியல்பூங்கா
நூறு ச.கி.மீ.க்கு மேற்பட்ட பரப்பில் விரிந்திருக்கும் ச.கா.தே. உயிரியல்பூங்கா, பல்வேறு மலர்கள், விலங்கினங்களின் வாழிடமாக இருக்கிறது. இதற்கு மேற்கில், மும்பை புறநகர்ப் பகுதிகளான போரிவலி, கோரேகான், மலாடு, காண்டிவளி, தகிசர் ஆகிய பகுதிகளும் கிழக்கில் பண்டுப், முலுண்ட் ஆகிய பகுதிகளும் தெற்கில் ஆரே பால் குடியிருப்பு மற்றும் மும்பை ஐஐடி ஆகியவையும் வடக்கில் தானேவும் அமைந்துள்ளன.
உலகத்தின் எந்தப் பகுதியிலும் முற்றிலும் நகர்ப்புறத்தால் சூழப்பட்ட பெரிய வெப்பமண்டலக் காட்டைக் கொண்டதாக, இந்த உயிரியல்பூங்கா தனித்தன்மையைக் கொண்டுள்ளது. உலகிலேயே அதிகம் பேர் பார்வையிடக்கூடிய உயிரியல்பூங்காக்களில் இதுவும் ஒன்று. இங்கு, ஆண்டுக்கு 20 இலட்சம் பேர் வந்து பார்வையிட்டுச் செல்கின்றனர்.
தமிழில்: இர.இரா. தமிழ்க்கனல்