காப்புரிமையை மீறியதாகக் கூறப்படும் வழக்கில், கூகுள் நிறுவனத்தின் சி.இ.ஓ சுந்தர் பிச்சை, கூகுள் நிறுவனத்திற்குச் சொந்தமான யூடியூப்பின் நிர்வாக இயக்குநர் கவுதம் ஆனந்த் உள்ளிட்ட நான்கு நிர்வாகிகள் மீது மும்பை போலீஸார் புதன்கிழமை (ஜனவரி 26) எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளனர்.
திரைப்படத் தயாரிப்பாளர் சுனில் தர்ஷன், 2017ம் ஆண்டு வெளியான தனது ‘ஏக் ஹசீனா தி ஏக் தீவானா தா’ திரைப்படம் யூடியூப்பில் சட்டவிரோதமாக பதிவேற்றம் செய்யப்பட்டதாகக் கூறி அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அக்ஷய் குமார், பிரியங்கா சோப்ரா, லாரா தத்தா நடித்த அந்தாஸ் (2003), அக்ஷய் குமார், கரிஷ்மா கபூர், ஷில்பா ஷெட்டி நடித்த ஜான்வர் (1999) உள்ளிட்ட வெற்றிகரமான படங்களை சுனில் தர்ஷன் தயாரித்துள்ளார்.
யூடியூப்பில் வீடியோக்களைப் பதிவேற்றுவது, காப்புரிமைச் சிக்கல்கள் தொடர்பான சட்டங்கள், விதிமுறைகள் என்ன?
சுந்தர் பிச்சை உள்ளிட்டவர்களுக்கு எதிரான எஃப்ஐஆர் சொல்வது என்ன?
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அந்தேரி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இயக்குனரும் தயாரிப்பாளருமான தர்ஷன் தனிப்பட்ட முறையில் புகார் அளித்ததையடுத்து, மும்பை காவல்துறை எஃப்ஐஆர் பதிவு செய்தது.
போலீசார் முதலில் எப்ஐஆர் பதிவு செய்யவில்லை. காவல்துறை எஃப்ஐஆர் பதிவு செய்ய மறுத்தால், சட்டப்படி, ஒருவர் தனிப்பட்ட புகாருடன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தை அணுகலாம்.
குற்றவியல் நடைமுறைச் சட்டம் 1973, பிரிவு 156(3)-ன் கீழ் எஃப்ஐஆர் பதிவு செய்யக் கோரிய புகாரில் நீதிமன்றம் முகாந்திரத்தைக் கண்டறிந்து அதில் “எந்தவொரு மாஜிஸ்திரேட்டுக்கும் 190வது பிரிவின்கீழ் ( நீதிபதிகளால் குற்றங்களை அறிந்துகொள்வது) மேலே குறிப்பிட்டது போன்ற விசாரணைக்கு உத்தரவிட அதிகாரம் உள்ளது.”
“பல்வேறு படைப்புகளின் காப்புரிமையை மீறும் முதன்மை வழக்கு உள்ளது… தற்போது திருட்டு, காப்புரிமை மீறல் ஒரு அச்சுறுத்தலாக மாறியுள்ளது…” என்று கூடுதல் தலைமை பெருநகர மாஜிஸ்திரேட் ஏ ஏ பஞ்சபாய் குறிப்பிட்டார்.
“இதுபோன்ற குற்றத்தை காவல்துறை விசாரிக்க வேண்டியது அவசியம். எம்.ஐ.டி.சி காவல் நிலையத்திற்கு சி.ஆர்.பி.சி.-யின் 156(3) பிரிவின்கீழ் விசாரணைக்கு அனுப்பப்படும்… சம்பந்தப்பட்ட காவல் நிலையம் முதலில் எஃப்ஐஆர்பதிவு செய்ய வேண்டும். பின்னர், விசாரணையை முடித்து இந்த வழக்கில் இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்” என்று நீதிமன்றம் கூறியது.
பின்னர் எம்.ஐ.டி.சி போலீசார் கூகுள், யூடியூப், கூகுள் இந்தியா, சுந்தர் பிச்சை, ஆனந்த் மற்றும் நான்கு பேருக்கு எதிராக இந்திய காப்புரிமைச் சட்டம், 1957 பிரிவு 51, 63, 69-ன் கீழ் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்தனர்.
திரைப்படத் தயாரிப்பாளர் சுனில் தர்ஷன் அளித்துள்ள புகாரில் கூறியிருப்பதாவது: அவருடைய ‘ஏக் ஹசீனா தி ஏக் தீவானா தா’ படம் யூடியூப்பில் பதிவேற்றப்பட்ட பிறகு “பில்லியன் கணக்கான பார்வைகளை” பெற்றது. அதற்காக, அவருக்கு பணப் பலன் கிடைக்கவில்லை. படத்தின் காப்புரிமை தர்ஷனிடம் உள்ளது. எனவே, படத்தை வேறொருவர் பதிவேற்றம் செய்து வருமானம் ஈட்டுவது சட்டவிரோதமானது என்று குறிப்பிட்டுள்ளார்.
காப்புரிமை பெற்ற வீடியோவை வழங்கும் யூடியூப் போன்ற இடைத்தரகர்கள் குறித்து சட்டம் என்ன சொல்கிறது?
சைபர் வழக்குகள் தொடர்பான வழக்கறிஞர் விக்கி ஷா கூறுகையில், சட்டத்தின் கீழ், காப்புரிமை மீறல் புகார் உட்பட தளத்தில் பதிவேற்றப்பட்ட உள்ளடக்கம் குறித்து புகார் அளிக்கப்பட்டால், இடைத்தரகர் தளம் 72 மணி நேரத்திற்குள் உள்ளடக்கத்தை நீக்க வேண்டும்.
தற்போதைய வழக்கில், யூடியூப் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், “அங்கீகரிக்கப்படாத பதிவேற்றங்கள், நிர்வகிக்கும் மேலாண்மைக் கருவி உரிமைகளை வழங்க நாங்கள் காப்புரிமை உரிமையாளர்களை நம்பியுள்ளோம். யூடியூப்-ன் உள்ளடக்க ஐடி அமைப்பு (Content ID system) போன்றவை உரிமைகளை வைத்திருப்பவர்கள் தங்கள் உள்ளடக்கத்தைப் பதிவேற்றுவதன் மூலம் அடையாளம் காண, தடுக்க, விளம்பரப்படுத்த, பணம் சம்பாதிப்பதற்கான தானியங்கு வழியை வழங்குகிறது. ஒரு காப்புரிமைதாரர் தனது காப்புரிமையை மீறும் வீடியோவை எங்களுக்குத் தெரிவிக்கும்போது, சட்டத்தின்படி உள்ளடக்கத்தை (வீடியோ) உடனடியாக அகற்றி, பல காப்புரிமை எதிர்ப்புகளைப் பெற்ற பயனர்களின் கணக்குகளை நீக்குவோம்.
இருப்பினும், தனது திரைப்படத்தை வேறு யாரோ பதிவேற்றியதாகவும் யூடியூப் உடன் பலமுறை தொடர்பு கொண்டதாகவும், ஆனால் யூடியூப் இடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை என்றும் தயாரிப்பாளர் சுனில் தர்ஷன் கூறுகிறார். எனவே, அவர் எப்ஐஆர் பதிவு செய்ய நீதிமன்றத்தை அணுக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
ஆன்லைனில் காப்புரிமை மீறல் தொடர்பான புகார்கள் பொதுவானதா?
அறிவுசார் சொத்துரிமை (IRP) வழக்கறிஞர் மானஸ் மொகாஷி கூறுகையில், பலர் இதுபோன்ற புகார்களை கூறுகின்றனர். இருப்பினும், இந்த வழக்குகளில் பெரும்பாலானவை நீதிமன்ற விசாரணைக்கு பட்டியலிடப்படுகிற கட்டத்தில் தீர்க்கப்படுகின்றன. தளங்கள் தங்கள் தளத்திலிருந்து உள்ளடக்கத்தை அகற்ற ஒப்புக்கொண்ட பிறகு, சில சமயங்களில் பண இழப்பீடும் வழங்கப்படுகின்றன.
புகார்தாரர் பண இழப்புக்கான ஆதாரங்களை வழங்க வேண்டும். மொகாஷி கூறுகையில், “உதாரணமாக, யாரோ ஒருவர் ஏற்கனவே சட்டவிரோதமாக பதிவேற்றியதால், மற்றொரு தளத்தை செயல்படுத்த முடியவில்லை என்ற ஒப்பந்தத்தைக் காட்ட வேண்டியிருக்கும்” என்று மானஸ் மொகாஷி கூறினார்.
குற்றம் சாட்டப்பட்ட நிறுவனம் முடிவெடுத்தால், அவர்கள் உயர் நீதிமன்றங்களில் நிவாரணம் பெறலாம். நிறுவனம் சட்டப் போராட்டத்தை நடத்த முடிவு செய்தால் இந்த விவகாரம் உச்ச நீதிமன்றத்திற்குச் செல்லலாம் என்றும் அவர் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“