தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு அமர்வு, நேற்று( நவம்பர் 14 ) இந்திய தலைமை நீதிபதியின் அலுவலகம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (ஆர்டிஐ) கீழ் வரும் பொது அதிகாரம் என்று தீர்ப்பு அளித்திருந்தது. நீதிபதிகள் என்.வி.ரமணா, டி.ஒய் சந்திரசூட், தீபக் குப்தா, சஞ்சீவ் கன்னா ஆகியோரும் அடங்கிய இந்த அரசியலமைப்பு அமர்வு , 2010ம் ஆண்டு தில்லி உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உறுதிசெய்தும், உச்ச நீதிமன்றத்தின் பொதுச்செயலாளர் மற்றும் பொது தகவல் அலுவலர் தாக்கல் செய்த மூன்று மேல்முறையீடுகளை தள்ளுபடி செய்துள்ளது.
எதற்காக இந்த தீர்ப்பு :
டெல்லியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சுபாஷ் அகர்வால் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் நீதித்துறையில் சில தகவல்களை கேட்டிருந்தார். இந்த சுபாஷ் அகர்வாலின் கேள்விகள் மூன்று வழக்காக உருவெடுத்தன. அதில் மிக முக்கியமாக உணரப்பட்டது, அனைத்து உச்சநீதிமன்ற நீதிபதிகளும் தங்கள் சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் மதிபீட்டை உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியிடம் அறிவித்திருக்கிறார்களா ? என்பதாகும். 1997ம் ஆண்டில் உச்சசநீதிமன்ற கொண்டு வந்த தீர்மானத்தின் படி அனைத்து உச்ச நீதிமன்ற நீதிபதிகளும் தங்கள் சொத்து விவரங்களை தலைமை நீதிபதியிடம் சமர்பித்திருக்க வேண்டும்.

தகவல் அறியும் சட்டத்தின் கீழ் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி அலுவலகம் ஒரு பொது அதிகாரம் (பப்ளிக் அத்தாரிட்டி) இல்லை, அதனால் தலைமை நீதிபதி அலுவலகம் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்று உச்சநீதிமன்ற பொது தகவல் அதிகாரி சுபாஷ் அகர்வால் பதில் கொடுத்திருந்தார் . இதனை அடுத்து, இந்த விஷயம் முதன்மை தகவல் ஆணையரிடம் (சிஐசி) சென்றடைந்தது. ஜனவரி 6, 2009 அன்று அப்போதைய சிஐசி வஜாஹத் ஹபீபுல்லா தலைமையிலான முழு அமர்வு, ‘சுபாஷ் அகர்வால் கேட்கும் தகவல்களை வெளியிட வேண்டும்’ என்று ஆணை பிறப்பித்திருந்தது .
சி.ஐ.சி உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றம் டெல்லி உயர் நீதிமன்றத்தை அணுகியது. உயர்நீதிமன்ற நீதிபதி ரவீந்திர பட் (பின்னர் உச்சநீதிமன்ற நீதிபதியாக உயர்த்தப்பட்டார்) செப்டம்பர் 2, 2009 அன்று “இந்திய தலைமை நீதிபதியின் அலுவலகம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வரும் ஒரு பொது அதிகாரம் தான் என்றும், அந்த அலுவலகம் சட்டத்திற்கு உட்பட்டது தான்” என்று தீர்பளித்தார். அப்போதைய டெல்லி உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அஜித் பிரகாஷ் ஷா, நீதிபதி விக்ரம்ஜித் சென், நீதிபதி எஸ். முரளிதர் ஆகியோர் அடங்கிய ஒரு பெரிய அமர்வின் முன் ரவீந்திர பட் தீர்ப்பை மேல்முறையீடு செய்தது உச்சநீதிமன்றம். இந்த அமர்வு ஜனவரி 13, 2010 அன்று நீதிபதி பட்டின் தீர்ப்பு “சரியானது தான், அந்த தீர்ப்பை குறுக்கீடு செய்ய தேவையில்லை ” என்ற தீர்ப்பைக் கொடுத்தது.
உச்ச நீதிமன்றம், உச்ச நீதிமன்றத்திற்காக உச்ச நீதிமன்றத்திடமே மனுக் கொடுத்தல் :
டெல்லி உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றம் 2010 ல் உச்ச நீதிமன்றத்திலே மனுத்தாக்கல் செய்தது. இந்த விவகாரம் முதலில் டிவிஷன் பெஞ்ச் முன் வைக்கப்பட்டாலும், பிறகு அரசியலமைப்பு அமர்வுக்கு மாற்ற வேண்டும் என்று முடிவை எடுத்தது உச்சநீதிமன்றம். அரசியலமைப்பு அமர்வு அமைப்பது நிலுவையில் இருக்கும் போது கூட, அகர்வால் மற்றொரு தகவல் அறியும் விண்ணப்பத்தை தாக்கல் செய்தார். அரசியலமைப்பு அமர்வு அமைப்பதற்கான உத்தரவுகள் இன்னும் வழங்கப்படவில்லை என்று ஜூன் 2, 2011 அன்று அகர்வாலுக்கு பதில் கூறியது.
தலைமை நீதிபதிகள் கே ஜி பாலகிருஷ்ணன், எஸ்.எச் கபாடியா, அல்தாமாஸ் கபீர், பி.சதாசிவம், ஆர்.எம் லோதா, எச்.எல் தத்து, டி.எஸ் தாக்கூர், ஜே.எஸ் கெஹர், தீபக் மிஸ்ரா ஆகியோரின் பதவிக்காலங்களில் அரசியலமைப்பு அமர்வு தொடர்பான எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை. தற்போதைய தலைமை நீதிபதி சி.ஜே.ஐ கோகோய் கடந்த ஆண்டு இந்த அமரவை அமைத்தார். வழக்கை விசாரித்த அரசியலமைப்பு அமர்வு இந்த ஆண்டு ஏப்ரல் 4ம் தேதியன்று வழக்கு முடிக்கப்பட்டு தீர்ப்பு பிறகு அறிவிக்கப்படும் என்று அறிவித்திருந்தது. அந்த தீர்ப்பு தான் கடந்த புதன்கிழமை அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்றைய தீர்ப்பில், “தலைமை நீதிபதி அலுவலகம் ஒரு பொது அதிகாரம் தான் என்று தீர்ப்பளிக்கும் அதே வேளையில், தகவல் அறியும் உரிமை சட்டத்தை வைத்து, நீதித் துறையை கண்காணிக்கும் ஒரு கருவியாக மட்டும் பயன்படுத்த முடியாது என்றும், வெளிப்படைத்தன்மையைக் கையாளும் போது நீதித்துறை சுதந்திரத்தை மனதில் கொள்ள வேண்டும்”என்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்த வழக்கில், சி.ஜே.ஐ கோகோய், நீதிபதி குப்தா, நீதிபதி கன்னா ஆகியோர் இனைந்து ஒரே ஒரு தீர்ப்பை எழுதினர். நீதிபதிகள் ரமணா, சந்திரசூட் ஆகியோர் தனித்தனியான தீர்ப்புகளை எழுதினர்.
தனியுரிமைக்கான உரிமை ஒரு முக்கியமான அம்சம் என்றும், இந்திய தலைமை நீதிபதி அலுவலகத்தில் இருந்து தகவல்களை வழங்க முடிவு செய்யும் போது வெளிப்படைத்தன்மையுடன் சமப்படுத்தப்பட வேண்டும் என்றும் நீதிபதி ரமணா குறிப்பிட்டார். நீதிபதிகள் சந்திரசூட் தனது தனித் தீர்ப்பில், “நீதிபதிகள் ஒரு அரசியலமைப்பு பதவியில் இருந்து மக்கள் கடமையை நிறைவேற்றுவதால் நீதித்துறை ஒரு மறைவான இடத்திற்குள் ஒளிந்து கொள்ள முடியாது”என்று எழுதியுள்ளார்.
வேறு இரண்டு விஷயங்கள்.
சுபாஷ் அகர்வால் விண்ணபித்த மற்ற இரண்டு தகவல் அறியும் மனுவில், மிகவும் முக்கியமாக கருதப்படுவது நீதிபதிகளின் நியமனங்கள் பற்றியது . நீதிபதி ஏ.பி. ஷா, நீதிபதி ஏ.கே. பட்நாயக் , நீதிபதி வி.கே. குப்தா சீனியாரிட்டி அடிப்படையில் நியமிக்கபடாமல் நீதிபதி எச்.எல். தட்டு, நீதிபதி ஏ.கே. கங்குலி , நீதிபதி ஆர்.எம். லோதா உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டனர். இந்த நியமனம் தொடர்பாக மத்திய அரசுக்கும், உச்ச நீதிமன்றத்திற்கும் நடந்த அனைத்து உரையாடல்களைகளையும், கோப்புகளையும் சுபாஷ் அகர்வால் தகவல் அறியும் உரிமை சட்டத்தை பயன்படுத்தி கேட்டிருந்தார். நீதிபதிகள் நீதிபதி எச்.எல். தட்டு, ஆர்.எம். லோதா ஆகியோர் பிற்காலத்தில் இந்தியாவின் தலைமை நீதிபதிகளாக மாறினர் என்பது குறிப்பிடத்தக்கது.
சுபாஷ் அகர்வாலின் இன்னொரு தவகல் அறியும் உரிமை மனு, நீதிமன்ற வளாகத்திற்குள் நீதிபதி ஆர். ரகுபதி வெளியிட்ட கருத்தை பற்றியது. சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கின் போது ,” சில மத்திய அமைச்சர்கள் தன்னை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு, வழக்கை தனக்கு சாதகமாக வழங்க வேண்டும் என்று கூறியதாக நீதிபதி ஆர். ரகுபதி வெளிப்படையாக தெரிவித்தார். அந்த மத்திய அமைச்சர் பெயர் என்ன ? எந்த வழக்கு ? போன்ற கேள்விகளுடன் சுபாஷ் அகர்வால் மத்திய தகவல் ஆணையத்தை அணுகினார்.
இருந்தாலும், தற்போது வந்த தீர்ப்பில் , சி.ஜே.ஐ அலுவலகம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் உள்ளதா? இல்லையா என்பது மட்டும் விசாரிக்கப்பட்டு தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இந்த தீர்ப்பு என்ன சொல்ல வருகிறது :
உச்ச நீதிமன்ற தீர்ப்பால், சி.ஜே.ஐ அலுவலகம் வரும் காலங்களில் தகவல் அறியும் விண்ணப்பங்களை ஏற்க வேண்டும். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் பிரிவு 2 (எஃப்) இன் கீழ், தகவல் என்றால் “பதிவுகள், ஆவணங்கள், குறிப்புகள், மின்னஞ்சல்கள், கருத்துகள், ஆலோசனைகள், செய்தி வெளியீடுகள், சுற்றறிக்கைகள், ஆர்டர்கள், பதிவு புத்தகங்கள், ஒப்பந்தங்கள், அறிக்கைகள், ஆவணங்கள், மாதிரிகள், மின்னணு வடிவத்திலும் வைத்திருக்கும் அணைத்து வகையான டேட்டாக்கள், சட்டத் திட்டங்கள் நடைமுறையோடு, பொது அதிகாரத்தால் (பப்ளிக் அத்தாரிட்டி) அணுகக்கூடிய தனியார் நிறுவனம் தொடர்பான எந்தவொரு டேட்டாகளும்,” தகவல்களாக கருதப்படும்.
பிரதமர், ஜனாதிபதி அலுவலகங்களும் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் இயங்கும் பொது அதிகாரங்கள் தான். எவ்வாறாயினும், பப்ளிக் அத்தாரிட்டி கோரிய தகவல்களை வெளியிடுகிறதா ? இல்லையா ? என்பது வேறு விஷயம். 2011ம் ஆண்டில் உச்சநீதிமன்றம் அளித்த சில வாதங்களை மேற்கோள் காட்டி பொதுத் தகவல் அதிகாரிகள் பெரும்பாலும் தகவல் அறியும் விண்ணப்பத்தை மறுக்கின்றனர். உதாரணமாக உச்சநீதிமன்றம் ஒரு வழக்கில்,”அதிகாரிகள் ஏற்கனவே இருக்கும், பொது அதிகாரத்தால் வைத்திருக்கும் டேட்டாக்களை மட்டும் கொடுத்தால் போதும். தகவல்களை உருவாக்கவோ, இணைக்கவோ தேவையில்லை என்று கூறியிருந்தது . மேலும், நாட்டில் 75% ஊழியர்கள் தங்களது வழக்கமான கடமைகளை நிறைவேற்றுவதற்கு பதிலாக, விண்ணப்பதாரர்களுக்கு தகவல்களை சேகரித்து வழங்குவதில் 75% நேரத்தை செலவிடும் ஒரு சூழ்நிலையை நாடு விரும்பவில்லை” என்று கருத்து தெரிவித்திருந்தது.
இதற்கு நேர்மாறாக, டிசம்பர் 16, 2015 அன்று (ரிசர்வ் வங்கி மற்றும் ஜெயந்திலால் என் மிஸ்திரி மற்றும் பிறர்), உச்சநீதிமன்றம் தகவல் அறியும் உரிமை சட்டத்தை பற்றி குறிப்பிடும்போது, “தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் பிரிவு 8 ன் கீழ் கொடுக்கப்பட்ட விதிவிலக்கை பயன்படுத்தி , பொது தகவல் அதிகாரிகள் மக்களுக்கு கிடைக்க வேண்டிய நியாமான தகவல்களை கொடுக்க மறுக்கின்றனர்” என்று குறிப்பிட்டிருந்தது.
சிபிஐ இன்னும் தகவல் அறியும் உரிமை சட்டத்திற்குள் கொண்டு வரப்படவில்லை :
சி.ஜே.ஐ அலுவலகம் இப்போது தகவல் அறியும் உரிமை கோட்டின் கீழ் கொண்டு வரப்பட்டாலும், நடுவண் புலனாய்வுச் செயலகத்திற்கு (சிபிஐ) விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 12, 2005 அன்று ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தகவல் அறியும் சட்டத்தை கொண்டுவந்தபோது, சிபிஐ செயலகமும், ஆர்டிஐ சட்டத்தின் கீழ் தான் இருந்தது. ஆனால், சட்டத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட வேண்டும் என்று இந்த அமைப்பின் கோரிக்கைக்கு, யுபிஏ அரசாங்கத்தில் சட்ட அமைச்சராக இருந்த எம்.வீரப்பா மொய்லி ஒப்புதல் அளித்தார். முன்னதாக, மொய்லி தலைமையிலான நிர்வாக சீர்திருத்த கமிஷன் தகவல் அறியும் உரிமைச் சட்டத்திலிருந்து ஆயுதப் படைகளுக்கு மட்டும் தான் விலக்க பரிந்துரைத்திருந்ததே தவிர, சிபிஐக்கு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது .
சிபிஐக்கு விலக்கு அளிக்கும் முடிவுக்கு எதிரான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதற்கான எந்த விசாரணை தேதியும் இன்னும் நிர்ணயிக்கப்படவில்லை.