ஒரு நாட்டையே கைப்பற்ற தேவையான நிதியை தாலிபான்கள் எப்படி பெற்றனர்?

ஒவ்வொரு மாவட்டத்திலும் கடத்தல்காரர்கள், அம்மாவட்ட தாலிபான் தளபதிகளுக்கு ஒரு கிலோ ஹெராயினுக்கு பாகிஸ்தான் ரூபாய் 200 (1.5 டாலர்) அல்லது அதற்கு இணையான ஆப்கானிஸை வரியாக வழங்கினார்கள்.

Krishn Kaushik 

The Taliban war chest : கடந்த வார இறுதியில் காபூலை கைப்பற்றிய தாலிபான் படைகள் இரண்டு முக்கிய வெற்றிகளை நிரூபித்துள்ளது. ஒன்று ஆப்கான் அரசுக்கு எதிரானது, மற்றொன்று, உலகின் மாபெரும் ராணுவ சக்தியாக இருக்கும் நாட்டினை 20 ஆண்டுகளாக போரில் வென்று அதன் பின்னடைவை உறுதி செய்துள்ளது தாலிபான்.

2001ம் ஆண்டு காபூலை விட்டு வெளியேறிய போது தாலிபான்கள் ஐந்து ஆண்டுகளுக்கும் சற்று கூடுதலாக ஆப்கானை ஆட்சி செய்தது. மேலும் அந்த அமைப்பு உருவாகி 7 ஆண்டுகளே இருந்தது. அமெரிக்காவுடனான நீண்ட போரில் அமெரிக்காவையே விஞ்சி, அமெரிக்காவிடம் இருந்து 80 பில்லியன் டாலர்கள் மதிப்புள்ள ஆயுதங்கள் மற்றும் பயிற்சியை பெற்ற ஆப்கான் ராணுவத்தினரையும் தோற்கடிக்கும் சக்தியாக தாலிபான்கள் மாறியது எப்படி? கிட்டத்தட்ட வரம்பற்ற வளங்களைக் கொண்ட ஒரு எதிரியுடன் இரண்டு தசாப்த கால யுத்தத்தில் தங்களைத் தக்கவைத்துக்கொள்ள தாலிபான்களுக்கு நிதி எங்கே கிடைத்தது?

போதைப் பொருள் வர்த்தகம்

2020ம் ஆண்டு மே மாதம், ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சில், ஒட்டுமொத்த தாலிபான்களின் வருடாந்திர வருவாய் 300 மில்லியன் அமெரிக்க டாலர்களில் இருந்து 1.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை என்று குறிப்பிட்டிருந்தது. 2019 ஆம் ஆண்டிற்கான புள்ளிவிவரங்கள் குறைவாக இருந்தபோதிலும், அதிகாரிகள் “தாலிபான்கள் வளங்களை திறம்பட பயன்படுத்தினர் மேலும் பணப்பற்றாக் குறையை அவர்கள் எதிர்கொள்ளவில்லை என்பதை கவனத்தில் கொள்ளா வேண்டும் என்று கூறியது.

தாலிபான்களின் முதன்மை நிதி ஆதாரமாக போதைப்பொருள் வர்த்தகம் அமைந்துள்ளது. ஆனால் சமீபத்தில் பாப்பி சாகுபடி மற்றும் வருவாய் குறைவு போன்ற காரணங்களால் அவர்களின் வருவாய் பாதிக்கப்பட்டுள்ளது. உதவி மற்றும் மேம்பாட்டு திட்டங்களிலிருந்து குறைந்த வரிக்கு உட்பட்ட வருமானம் மற்றும் ஆளுகை திட்டங்களுக்கான செலவினங்கள் அதிகரித்ததன் காரணமாக அவர்களின் வருமானம் பாதிக்கப்பட்டது, UNSC அறிக்கை கூறுகிறது.

எவ்வாறாயினும் ஹெராயின் சாகுபடி மற்றும் உற்பத்தி அவர்களுக்கு தேவையான வருவாயை பல ஆண்டுகளாக வழங்கி வந்தாலும், ஆப்கானிஸ்தானில் மெத்தாம்பேட்டமைன் குறிப்பிடத்தக்க புதிய லாப வரம்புகளுடன் போதைப் பொருள் வர்த்தகத்திற்கு வழி வகை செய்தது என்று அந்த அறிக்கை குறிப்பிட்டது.

மெத்தாம்பேட்டமைனின் தடையை முதன்முதலில் ஐக்கிய நாடுகள் சபை போதைப்பொருள் மற்றும் குற்றம் (UNODC) 2014 இல் பதிவு செய்தது (9 கிலோ). ஆனாலும் அதன் வர்த்தகம் அதிகரிக்க துவங்கியது. 2019ம் ஆண்டின் முதல் பாதியில் 650 கிலோ மெத்தாம்பேட்டமைன் கைப்பற்றப்பட்டது. இதனை உற்பத்தி செய்வதற்கான பொருட்களின் விலை குறைவாக இருப்பதாலும், இதனை உற்பத்தி செய்ய பெரிய ஆய்வகம் ஏதும் தேவை இல்லை என்பதாலும் ஹெராயினைவிட கூடுதல் லாபம் ஈட்டக் கூடியதாக இது இருந்தது என்று இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

முக்கிய உற்பத்தி மாகாணங்களான ஃபாரா மற்றும் நிம்ரூஸில் உள்ள 60 சதவிகித மெத்தாம்பேட்டமைன் ஆய்வகங்களின் கட்டுப்பாட்டில் இருப்பதாக தாலிபான் அறிவித்தது. தாலிபான்களால் ஏற்பாடு செய்யப்பட்ட ஹெராயின் கடத்தல் மற்றும் வரிவிதிப்பு முறை … பாகிஸ்தானின் எல்லையில் உள்ள ஹிசராக் முதல் துர் பாபா வரை, நங்கர்ஹாரின் தெற்கு மாவட்டங்களில் நீடித்திருப்பதாக அதிகாரிகள் கூறியதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஒவ்வொரு மாவட்டத்திலும் கடத்தல்காரர்கள், அம்மாவட்ட தாலிபான் தளபதிகளுக்கு ஒரு கிலோ ஹெராயினுக்கு பாகிஸ்தான் ரூபாய் 200 (1.5 டாலர்) அல்லது அதற்கு இணையான ஆப்கானிஸை வரியாக வழங்கினார்கள். கடத்தல்காரர்கள் ஒவ்வொரு தாலிபான் தளபதியாலும் அடுத்த மாவட்டத்திற்குச் செல்வதற்கு முன் வரி செலுத்தியதை உறுதிசெய்து அதே செயல்முறையை மீண்டும் செய்வதற்கான ஆவணங்களை வழங்கினர். ஒவ்வொரு மாவட்ட தாலிபான் தளபதிகளையும், கடத்தல் வழிகள், நிதி ரீதியாக மேம்படுத்தியது என்று ஆப்கான் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

ஆப்கானிஸ்தான், அதிக அபின் உற்பத்தி செய்யப்படும் நாடு, இது கடந்த ஐந்து ஆண்டுகளில் உலகளாவிய அபின் உற்பத்தியில் ஏறக்குறைய 84 சதவிகிதத்தைக் கொண்டுள்ளது, அண்டை நாடுகள், ஐரோப்பா, மத்திய கிழக்கு, தெற்கு ஆசிய நாடுகள், ஆப்பிரிக்கா, மற்றும் குறைந்த அளவில் வடக்கு அமெரிக்கா (கனடா) மற்றும் ஓசினியா நாடுகளுக்கு இதனை விநியோகம் செய்தது என்று கடந்த ஆண்டு UNODC வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

சுரங்கம், வரிகள் மற்றும் நன்கொடைகள்

நேட்டோவால் நியமிக்கப்பட்ட ஒரு இரகசிய அறிக்கையைப் பற்றிய அறிக்கை ஒன்றை செப்டம்பர் மாதம் 2020ம் ஆண்டு வெளியிட்டது ரேடியோ ஃப்ரீ ஈரோப். அதில் தாலிபான்கள் போதுமான நிதி மற்றும் ராணுவ சுதந்திரத்தை அடைந்துவிட்டனர் அல்லது அடையும் நிலையில் உள்ளனர். இது அரசாங்கங்கள் அல்லது பிற நாடுகளின் குடிமக்களிடமிருந்து ஆதாரங்களை பெறாமல் இயங்க வழி வகை செய்கிறது என்று அதில் குறிப்பிட்டிருந்தது.

தாலிபான் இயக்கத்தை நிறுவிய முல்லா முகமது ஒமரின் மகன் முல்லா முகமது யக்கூப் மேற்பார்வையிட்ட சட்டத்திற்கு புறம்பான போதைப் பொருள் வர்த்தகம் மட்டுமின்றி, சமீபத்திய ஆண்டுகளில் அதன் நிதி அதிகாரத்தை அதிகரித்தது சட்டவிரோத சுரங்கம் மற்றும் ஏற்றுமதியால் கிடைக்கும் லாபம் என்றும் குறிப்பிட்டிருந்தது அந்த அறிக்கை. முல்லா முகமது யக்கூப் புதிய அரசாங்கத்தில் முக்கிய பங்கு வகிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த இயக்கம் 2020ம் ஆண்டு மார்ச் மாதத்துடன் முடிந்த நிதி ஆண்டில் 1.6 பில்லியன் அமெரிக்க டாலர்களை வருவாயாக ஈட்டியுள்ளது. அதில் 416 மில்லியன் டாலர்கள் போதைப் பொருள் வர்த்தகத்தில் இருந்து வந்தது. 450 மில்லியன் டாலர்கள் சட்டத்திற்கு புறம்பாக இரும்பு தாது, பளிங்கு, தாமிரம், தங்கம், துத்தநாகம் மற்றும் அரிய உலோகங்களை வெட்டி எடுத்ததன் மூலம் வந்தது. 160 மில்லியன் டாலர்கள் மிரட்டி பணம் பறித்தல் மற்றும் வரிகள் மற்றும் அது கட்டுப்படுத்தும் நெடுஞ்சாலைகளில் இருந்து பெறப்பட்டது. இது பாரசீக வளைகுடா நாடுகளில் இருந்து $ 240 மில்லியன் நன்கொடைகளையும் பெற்றது. சம்பாதித்த பணத்தை வெள்ளையாக்க, அது 240 மில்லியன் டாலர் மதிப்புள்ள நுகர்வோர் பொருட்களை இறக்குமதி செய்து ஏற்றுமதி செய்தது. ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானில் 80 மில்லியன் டாலர் மதிப்புள்ள சொத்துக்களை தாலிபான்கள் வைத்திருப்பதாக அறிக்கை கூறுகிறது.

பாகிஸ்தானில் இருந்து ஆயுதங்கள் மற்றும் கொள்ளை

அமெரிக்க மற்றும் ஆப்கான் ராணுவத்தினரை எதிர்த்து போரிட ஆயுத பற்றாக்குறையுடன் தாலிபான்கள் இருந்ததாக தெரியவில்லை. பாகிஸ்தான் ஒரு முக்கிய பங்காற்றியது. ஆனால் தாலிபான்கள் ஆயுதங்களுக்காக ஒரே ஒரு ஆதாரத்தை மட்டும் நம்பி இருக்கவில்லை.

நேரடியாகவும், மறைமுகமாகவும் ஹக்கானி வலையில் இருந்து தாலிபான்களுக்கு ஐ.எஸ்.ஐ. மற்றும் பாகிஸ்தான் ராணுவம் மூலம் ஆதரவு கிடைத்தது என்று பத்திரிக்கையாளர்கள் க்ரெட்சென் பீட்டர்ஸ், ஸ்டீவ் கோல் மற்ற்ம் இதர நபர்கள் தெரிவித்துள்ளனர். இந்த ஹக்கானி வலையானது ஆப்கான் மற்றும் பாகிஸ்தானில் உள்ள பழங்குடி மக்கள் வாழும் பகுதியை அடிப்படையாக கொண்ட கொள்ளை கும்பல் ஆகும். தீவிரவாத மதப் பள்ளிகள், மற்றும் வளைகுடா மற்றும் பாகிஸ்தானில் உள்ள அரபு நாடுகளுடன் சக்திவாய்ந்த தொடர்புகளைக் கொண்ட வணிக ஸ்தாபனங்கள், போராட்டக் காரர்கள் ஆகியோரை உள்ளடக்கியதாகும். அடிப்படைவாத இயக்கத்திற்கு எதிராக போராட பாகிஸ்தான் பெற்ற நிதியை தாலிபான்களுக்கு திருப்பிவிடுவதாக பகிரங்கமான குற்றச்சாட்டை முன்வைத்தது அமெரிக்கா.

செப்டம்பர் 2017 இல், அப்போதைய ஆப்கானிஸ்தான் இராணுவத் தளபதி ஜெனரல் ஷெரீப் யஃப்தாலி பிபிசியிடம், மேற்கு ஆப்கானிஸ்தானில் செயல்பட்டு வர்ம் தாலிபான்களுக்க் ஆயுதங்களை ஈரான் வழங்குகிறது என்பதை நிரூபிப்பதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளது என்று அவர் கூறினார்.

அமெரிக்க பாதுகாப்பு புலனாய்வு ஏஜென்சியின் நவம்பர் 2019 அறிக்கையில், 2007ம் ஆண்டு, ஈரான் தாலிபான்களுக்கு, ஆப்கானில் அமெரிக்காவை எதிர்க்க ஆயுதங்கள், பயிற்சி மற்றும் நிதியை வழங்கியது. மேற்கத்திய செல்வாக்கை எதிர்கொள்ளவும், ஐஎஸ்ஐஎஸ்-கோரசனை எதிர்க்கவும், எந்த ஆட்சி அமைந்தாலும், டெஹ்ரானின் செல்வாக்கை அதிகரிக்கவும் ஆதரவை வழங்கியது. ரஷ்யாவும் தாலிபானை ஆதரிப்பதாக அமெரிக்கா குற்றச்சாட்டை முன்வைத்தது. ஆனால் அதற்கு போதுமான ஆதாரங்கள் இல்லை.

இது போன்ற வெளித்தொடர்புகள் இல்லாமலும், அமெரிக்கா, ஆப்கானுக்கு வழங்கிய ஆயுதங்களை வைத்தும் போரில் இறங்க முடிந்தது.

ஆப்கானிஸ்தான் மறுசீரமைப்பிற்கான அமெரிக்காவின் சிறப்பு இன்ஸ்பெக்டர் ஜெனரல் (SIGAR), காங்கிரஸ் ஆதரவு பெற்ற கண்காணிப்பு அமைப்பு, 2013 ஆம் ஆண்டு வெளியிட்ட ஒரு பகுப்பாய்வில் ஆப்கானியப் படைகளுக்கு வழங்கப்பட்ட கிட்டத்தட்ட 43 சதவீத துப்பாக்கிகள்-2,03,888 முதல் 4,74,823 கணக்கிடப்படவில்லை என்று குறிப்பிட்டது. ஆப்கானிஸ்தான் அரசாங்கம் இந்த ஆயுதங்களைக் கணக்கிடுவதற்கு அல்லது முறையாக அகற்றுவதற்கான வரையறுக்கப்பட்ட திறனைக் கருத்தில் கொண்டு, இந்த ஆயுதங்கள் கிளர்ச்சியாளர்களின் கைகளில் விழுவதற்கான உண்மையான சாத்தியக்கூறு உள்ளது, இது அமெரிக்க பணியாளர்கள், ANSF மற்றும் ஆப்கானிய குடிமக்களுக்கு கூடுதல் ஆபத்தை ஏற்படுத்தும் என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

தாலிபான்களில் கையில் உள்ள அமெரிக்க சொத்துகள்

அமெரிக்காவின் ராணுவ உடமைகள் எவ்வளவு தாலிபானிடம் இருக்கிறது என்பதை கூறுவதற்கான முறையான தரவுகள் இல்லை. அமெரிக்க அரசு பொறுப்பு அலுவலகம் 2017 ல் ஒரு அறிக்கையில் 2003 மற்றும் 2016 க்கு இடையில் அமெரிக்கா 75,898 வாகனங்கள், 5,99,690 ஆயுதங்கள், 208 விமானங்கள் மற்றும் ஆப்கானிஸ்தான் படைகளுக்கு 16,191 நுண்ணறிவு, கண்காணிப்பு மற்றும் உளவு உபகரணங்களுக்கு நிதியளித்தது என்று கூறியுள்ளது. கடந்த சில ஆண்டுகளில், 7,000 இயந்திர துப்பாக்கிகள், 4,700 ஹம்வீஸ் மற்றும் 20,000 க்கும் மேற்பட்ட கையெறி குண்டுகள் ஆப்கானியப் படைகளுக்கு வழங்கப்பட்டதாக, சிகார் தரவு காட்டுகிறது.

SIGAR இன் ஜூலை காலாண்டு அறிக்கையில், ஆப்கானிஸ்தான் விமானப்படையில் ஜெட் மற்றும் ஹெலிகாப்டர்கள் உட்பட மொத்தம் 167 விமானங்கள் உள்ளன, அவை ஜூன் 30 நிலவரப்படி பயன்படுத்தப்படுகின்றன/உள்நாட்டில் இருந்தன. , 32 எம்ஐ -17, 43 எம்.டி.-530 மற்றும் 33 யுஎச் -60 ஹெலிகாப்டர்கள் தவிர இதில் 23 A-19 விமானம், 10 AC-208 விமானம், 23 சி -208 விமானம் மற்றும் மூன்று சி -130 விமானங்களும் இதில் அடங்கும்.

ஆகஸ்ட் 17 அன்று, தாலிபான்கள் காபூலைக் கைப்பற்றிய இரண்டு நாட்களுக்குப் பிறகு, வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன், எங்களின் அனைத்து ராணுவ ஆயுதங்களும் எங்கே சென்றன என்று தெரியவில்லை. ஆனால் நிச்சயமாக அது தாலிபான்களின் கைகளுக்கு சென்றிருக்கும் என்று அவர் கூறினார்.

ஜேன்ஸ், பெலிங்க்காட் மற்றும் என்.கே. நியூஸ் போன்ற வலைத்தளங்களில் பணிபுரிந்த நவீன கால ஆயுத மற்றும் இராணுவ தந்திரங்களில் நிபுணத்துவம் பெற்ற ஆய்வாளர்களான ஸ்டிஜ்ன் மிட்சர் மற்றும் ஜூஸ்ட் ஒலிமன்ஸ் ஆகியோர் தாலிபான்களில் கைகளில் விழுந்ததாக நிரூபிக்கப்பட்ட கருவிகளைக் கண்காணிக்க திறந்த மூல நுண்ணறிவைப் பயன்படுத்தியுள்ளனர்.

தாலிபான்கள் இப்போது இரண்டு போர் விமானங்கள், 24 ஹெலிகாப்டர்கள் மற்றும் ஏழு போயிங் இன்சிட்டு ஸ்கேன் ஈகிள் ஆளில்லா வாகனங்களை கைப்பற்றியுள்ளனர். முன்பு இதனை ஆப்கான் ராணுவம் பயன்படுத்தி வந்தது. கூடுதலாக, ஜூன் மற்றும் ஆகஸ்ட் 14 க்கு இடையில், தாலிபான்கள் 12 டாங்கிகள், 51 கவச சண்டை வாகனங்கள், 61 பீரங்கிகள் மற்றும் மோட்டார், எட்டு விமான எதிர்ப்பு துப்பாக்கிகள் மற்றும் 1,980 லாரிகள், ஜீப்புகள் மற்றும் 700 ஹம்வீஸ் உட்பட வாகனங்களை கைப்பற்றினர் என்று கூறியுள்ளனர்.

இவை அனைத்திற்கும் மேலாக, முன்னாள் ஆப்கான் அரசாங்கத்தின் வீரர்கள் அனைவரும் சரணடைந்துள்ளனர். பழைய நார்தன் அலையன்ஸ் தற்போது நிழலாக செயல்பட்டு தாலிபானை மேலும் வலிமை மிக்கதாக மாற்றியுள்ளது. இது இப்போது “இராணுவ ரீதியாக மிகவும் சக்தி வாய்ந்தது” வர்ஜீனியாவின் ஆர்லிங்டனில் உள்ள , இலாப நோக்கமற்ற, சார்பற்ற ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு அமைப்பு சிஎன்ஏ கார்ப்பரேஷனில் எதிர் அச்சுறுத்தல்கள் மற்றும் சவால்கள் திட்டத்தை இயக்கும் ஒரு இராணுவ செயல்பாட்டு ஆய்வாளர் ஜொனாதன் ஷ்ரோடன் இந்தியன் எக்ஸ்பிரஸிடம் கூறினார்.லேசான ஆயுதமேந்திய கெரில்லா இயக்கத்திலிருந்து போலி-பாரம்பரிய இராணுவமாக அது அவர்களை திறம்பட மாற்றியுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

டி -30 ஹோவிட்சர்கள் என்ற ராணுவ உபகரணம் தற்போது தாலிபான்கள் வைத்திருக்கும் ஆயுதங்களிலேயே அதிக பயங்கரமானது என்று குறிப்பிட்டார். அமெரிக்க வரி செலுத்துவோரின் பணத்தை இது வீணடிப்பது மட்டும் இல்லாமல், தாலிபான்களுடன் தொடர்புகளைக் கொண்ட எண்ணற்ற பயங்கரவாதக் குழுக்களுக்கான ஆயுத ஆதாரமாக உள்ளது” என்று அவர் கூறினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Explained news here. You can also read all the Explained news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Taliban opium trade afghanistan government

Next Story
பாகிஸ்தான் : சீக்கிய மன்னர் சிலை சேதம் ; கண்டனம் தெரிவித்த இந்தியா! காரணம் என்ன?Maharaja-Ranjeet-Singh-2
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com