10 வருடங்களாக எதிர்க்கட்சியாக இருக்கும் திமுக இன்னொரு தேர்தல் தோல்வியை தாங்காது என்ற நிலையில், இந்தத் தேர்தலில் திமுகவின் வெற்றிக்கான காரணங்களை இப்போது பார்ப்போம்.
திமுக 10 ஆண்டுகளில் கற்றுக்கொண்ட பாடங்கள்
தமிழகத்தில் திமுக, அதிமுக என கடந்த 40 வருடங்களாக ஆட்சிக்கு வந்தாலும், 2011 முதல் 2021 வரை தொடர்ந்து 10 ஆண்டு காலமாக திமுக எதிர்கட்சியாக உள்ளது. இதற்கு முன்னர் 1980 களில், கிட்டத்தட்ட ஒரு தசாப்த காலமாக, ஆட்சியிலிருந்த அதிமுக நிறுவனர் எம்.ஜி.ராமச்சந்திரன் 1987 இல் இறக்கும் வரை திமுக எதிர்கட்சியாக இருந்தது. 2011 ல் திமுக தோல்விக்குப் பின்னர், ஸ்டாலின் கட்சியின் பிரச்சாரத்திற்கு தலைமை தாங்கினார். 2016 தேர்தல்களில் தேர்தல் வியூகங்களை ஸ்டாலின் வகுத்தார். ஆனால் 2016 தேர்தலில் தனியாக போட்டியிடுவது என அவர் எடுத்த முடிவு தவறாகி போனது. இடதுசாரி கட்சிகள், மதிமுக, விடுதலை சிறுத்தைகள் மூன்றாவது அணியை உருவாக்கி தேர்தலில் போட்டியிட்டதால், அரசாங்கத்திற்கு எதிரான வாக்குகள் சிதறியது.
2019 மக்களவைத் வெற்றி என்பது ஸ்டாலினின் அதிகாரத்திற்கான பாதையின் தொடக்கமாகும். 2021 தேர்தல்களுக்கு முன்னதாக, ஸ்டாலின் மட்டுமல்ல, ஒட்டுமொத்த கட்சியும் வலுவான ஆட்சிக்கு எதிரான அறிகுறிகள் எதுவும் இல்லை என்று தோன்றினாலும் நம்பிக்கையுடன் இருந்தன. 10 ஆண்டுகால ஆட்சிக்கெதிரான வாக்குகளை திமுக பெற்றுள்ளது. குறிப்பாக அதிமுகவில் மறைந்த ஜெ.ஜெயலலிதாவின் அந்தஸ்துடன் பொருந்தக்கூடிய ஒரு கவர்ந்திழுக்கும் தலைவர் இல்லாத நிலையில் இந்த வெற்றி பெறப்பட்டுள்ளது.
சிறுபான்மையினர் வாக்குகள்
தமிழ்நாட்டின் இரு முக்கிய கட்சிகளான திமுக மற்றும் அதிமுக மதச்சார்பற்ற கொள்கைகளை கொண்டுள்ளன. திமுகவை விட, உண்மையில், ஜெயலலிதா சிறுபான்மை சமூகங்களுடன் வலுவான நட்புறவைக் கொண்டிருந்தார். பாஜகவின் இந்துத்துவ அரசியலை எதிர்ப்பதிலும் அவர் உறுதியாக இருந்தார்.
இந்தத் தேர்தலில், திமுக வெற்றியை எளிதாக்கியது என்னவென்றால் பாஜகவுடன் அதிமுக அமைத்த கூட்டணி. பல சிறுபான்மை பிரச்சினைகளில் AIADMK இன் மௌனமும், டெல்லியில் CAA சட்டத்திற்கு அதிமுக பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவும், ஜெயலலிதாவின் காலத்தில் AIADMK க்கு வாக்களித்த சிறுபான்மையினரில் ஒரு பகுதியை அந்நியப்படுத்தியது.
ஓபிசி வன்னியர் ஒதுக்கீடு
வன்னியர்களிடையே வலுவான வாக்கு வங்கியைக் கொண்ட பாமகவின் அழுத்தத்தால் ஓபிசி வன்னியர் சமூகத்திற்காக 10.5% இடஒதுக்கீடை அதிமுக அறிவித்தது. கூட்டணி கட்சியான பாமகவின் உதவியால் வடக்கு மற்றும் மேற்கு தமிழகத்தின் சில பகுதிகளில் அதிமுகவிற்கு நிறைய வாக்குகள் கிடைத்துள்ளது.
எவ்வாறாயினும், தேர்தல்களுக்கு சற்று முன்னர் ஒரு சமூகத்திற்கான இடஒதுக்கீடு குறித்த அவசர முடிவு மற்ற அனைத்து ஓபிசி சமூகங்களிலும் அதிருப்தியை ஏற்படுத்தியது. குறிப்பாக தேவர் சமூகத்தினரிடையே எதிர்ப்பு கிளம்பியது. மேலும், டி.டி.வி. தினகரனின் அமமுகவால் டெல்டா மற்றும் தெற்கு மாவட்டங்களில் அதிமுகவின் வாக்கு வங்கி பாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஆளும் ஆட்சிக்கு எதிராக மற்ற ஓபிசிக்களின் ஒருங்கிணைப்பு தினகரனை விட திமுகவிற்கே உதவியுள்ளது என தேர்தல் முடிவுகள் மூலம் தெரிகிறது. தினகரன் உள்ளிட்ட அனைத்து அமமுக வேட்பாளர்களும் தோல்வியை தழுவியுள்ளனர்.
இருப்பினும், வரவிருக்கும் நாட்களில், தற்போதுள்ள இடஒதுக்கீடு முறையை மறுசீரமைக்க சாதி வாரியான கணக்கெடுப்பை நடத்துவது புதிய திமுக ஆட்சிக்கு பெரும் தலைவலியாக இருக்கும்.
கூட்டணிகள்
பண பலம், எடப்பாடி பழனிசாமியின் நிர்வாகத்தைப் பற்றிய ஒரு நல்ல கருத்து, கோவிட் -19 முதல் அலையை திறம்பட கையாளுதல் மற்றும் வன்னியர் ஒதுக்கீட்டை அறிவித்தல் ஆகியவை AIADMK இன் வெற்றிக்கான வழிகளாக கருதப்பட்டது. ஆனால் ஒரு வலுவான கூட்டணியை உருவாக்குவதில் அதிமுகவிடம் பெரும் குறைபாடுகள் இருந்தன.
மறுபுறம், காங்கிரஸ், சிபிஎம், சிபிஐ, விடுதலை சிறுத்தைகள் மற்றும் தமிழ் தேசியவாத தலைவர் வைகோவின் மதிமுக ஆகியோருடன் திமுக வலுவான கூட்டணியை உருவாக்க முடிந்தது. அவர்களிடம் இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் (ஐ.யூ.எம்.எல்) மற்றும் மற்றொரு முஸ்லீம் கட்சியான மனித நேயமக்கள் கட்சி (எம்.எம்.கே) ஆகியோரும் இருந்தனர். பல்வேறு மாவட்டங்களில் சிறுபான்மையினர் ஆதிக்கம் செலுத்தும் பகுதிகளில், கிறிஸ்தவ மற்றும் முஸ்லீம் வாக்காளர்களின் பாஜக எதிர்ப்பு உணர்வுகளை திமுகவுக்கு ஆதரவாக மாற்றுவதற்கு இந்தக் கூட்டணி உதவியது.
இதற்கிடையில், ஏற்கனவே உட்கட்சி போட்டிகளையும், தினகரன்-சசிகலா பிரிவையும் எதிர்த்துப் போராடும் அதிமுக, தேர்தலுக்கு முன்னதாக இன்னும் பல தோழமை கட்சிகளை இழந்தது. கேப்டன் விஜயகாந்தின் தேமுதிக, கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம் (எஸ்சி சமூகங்களிடையே வாக்கு வங்கியைக் கொண்ட ஒரு அமைப்பு),.கருணாஸின் முக்குலத்தோர் புலிப்படை, தெற்கு தமிழ்நாட்டின் இந்து நாடார் சமூகத்தினரிடையே வாக்கு வங்கியைக் கொண்ட நடிகர் சரத்குமாரின் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி, போன்ற கட்சிகள் தேர்தலுக்கு முன் அதிமுகவை விட்டு விலகின.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.