6 மாதங்களில் 3 புதிய மாவட்டங்கள்: ஏன்? எதற்கு? எப்படி?

CM Edappadi K Palaniswami: தென்காசி மற்றும் செங்கல்பட்டு என 2 புதிய மாவட்டங்கள் உருவாக்கப்படும்

அருண் ஜனார்தனன்

தமிழக சட்டமன்றத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பல்வேறு மக்கள் குழுக்களின் கோரிக்கைகளின் அடிப்படையில் தென்காசி, செங்கல்பட்டு ஆகியவற்றை மாநிலத்தின் புதிய மாவட்டங்களாக அறிவித்தார். தமிழக அரசு தென்காசி, செங்கல்பட்டு ஆகிய 2 புதிய மாவட்டங்களை அறிவித்திருப்பதன் மூலம் தமிழகத்தில் மாவட்டங்களின் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து தென்காசியும், தென் சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களிலிருந்து செங்கல்பட்டும் பிரிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, ஜனவரி மாதம், விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து பிரித்து கள்ளக்குறிச்சி 33-வது புதிய மாவட்டமாக அறிவிக்கப்பட்டது. அப்போது, தென் சென்னையும் பிரிக்கப்படும் என்று கூறப்பட்டது.

 Tamil Nadu Districts List, Tamil Nadu Total Districts 35, தமிழ்நாடு புதிய மாவட்டங்கள், தமிழ்நாடு

புதிய மாவட்டங்கள் உருவாக்கப்படுவது ஏன்?

தமிழக சட்டமன்றத்தில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பல்வேறு மக்கள் குழுக்களின் கோரிக்கையின் அடிப்படையில் தென்காசி மற்றும் செங்கல்பட்டு என 2 புதிய மாவட்டங்கள் உருவாக்கப்படும் என்று அறிவித்தார்.

முதலமைச்சர் பழனிசாமி ஜனவரி 8 ஆம் தேதி கள்ளக்குறிச்சியை புதிய மாவட்டமாக அறிவிக்கும்போதும் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் அறிவிப்பதாக கூறினார். மேலும், அவர் கூறுகையில், விழுப்புரம் தொகுதி எம்.எல்.ஏ-வும் சட்டத்துறை அமைச்சருமான சி.வி.சண்முகமும், உளுந்தூர்பேட்டை எம்.எல்.ஏ ஆர்.குமரகுரு ஆகிய இருவரும் மாவட்டத்தின் உள்ளடங்கிய பகுதிகளில் இருந்து மாவட்டத் தலைமை அலுவலகம் அமைந்துள்ள விழுப்புரத்திற்கு செல்ல மக்கள் சிரமப்படுவதாக தன்னிடம் தெரிவித்ததாகக் கூறினார்.

புதிய கள்ளக்குறிச்சி மாவட்டத்தை உருவாக்குவதற்கான நிர்வாகப் பணிகளை கண்காணிக்கும் ஒரு உயர் அதிகாரி கூறுகையில், விழுப்புரம் மாவட்டத்தின் பரப்பளவு 7,200 சதுர கி.மீ.க்கு மேல். இது மாநிலத்தின் மிகப் பெரிய மாவட்டங்களில் ஒன்றாகும். இந்த முடிவு தர்க்க ரீதியாகவும் அரசின் நிர்வாகத்தை மேம்படுத்துவதற்காகவும் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

கள்ளக்குறிச்சி மாவட்டமும் ஒரு பகுதியாக இருந்த விழுப்புரம் மாவட்டம் 1993 ஆம் ஆண்டு ஜெயலலிதா அரசால் உருவாக்கப்பட்டது. அது தென் ஆற்காடு மாவட்டத்தை விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டம் என நிர்வாக வசதிக்காக இரண்டாக பிரிப்பதாக காரணங்களை மேற்கோள் காட்டியது. ஆக, நல்ல நிர்வாக வசதி, வரலாற்று ரீதியாக மக்களின் கோரிக்கை ஆகியன தமிழகத்தில் மாவட்டங்களின் எண்ணிக்கையை பெருக்குவதற்கு காரணிகளாக இருந்தன.

தற்போதைய நிலை

கடந்த வாரம் முதலமைச்சர் பழனிசாமி சட்டமன்றத்தில் கூறுகையில், தென்காசி, செங்கல்பட்டு ஆகிய இரண்டு புதிய மாவட்டங்களை உருவாக்கும் நடைமுறையில் 2 ஐஏஎஸ் அதிகாரிகள் சிறப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர் என்று கூறினார். அதே போல, கள்ளக்குறிச்சி மாவட்டத்தை புதிய மாவட்டமாக அறிவித்தபோதும் முதலமைச்சர் பழனிசாமி புதிய மாவட்டத்தை உருவாக்கும் நிர்வாகப் பணியை முடிப்பதற்கு ஒரு ஐஏஎஸ் அதிகாரி சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார் என்று கூறினார்.

இது குறித்து அரசு நிர்வாக அதிகாரிகள் கூறுகையில், இந்த சிறப்பு அதிகாரி 15 நாட்களில் நியமிக்கப்பட வேண்டும். அந்த சிறப்பு அதிகாரி, வருவாய் ஆணையர் நிர்வாகத்துடன் ஒருங்கிணைந்து அடிப்படை நடைமுறைகளை மூன்று மாதங்களில் நிறைவு செய்ய வேண்டும். இந்த நடைமுறை என்பது ஒரு புதிய மாவட்டத்தை உருவாக்குவதற்கான நடைமுறைகளான பரந்த அளவில் எல்லைகளை வரைதல் மற்றும் புதிய மாவட்டத்தின் தொகுதிகள் மற்றும் வட்டங்களை தீர்மானித்தல் ஆகியவை அடங்கும்.

இந்த திட்டத்தை மாநில அரசு முறையாக ஏற்றுக்கொண்ட பின்னர், வருவாய் மற்றும் காவல் துறை உள்ளடங்கிய புதிய மாவட்ட நிர்வாகம் அமல்படுத்தப்படும் என்று கூறினர்.

சுதந்திரத்திற்குப் பின்னர், தமிழகம் மாவட்டங்களை பிரிக்கும் பணியில் ஒரு நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளது. இதன் மூலம் அரசின் பெரிய மாவட்டங்கள் படிப்படியாக சிறிய பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளன. பெரும்பாலும் மாவட்ட எல்லைகளை மாவட்ட தலைமை இடத்திலிருந்து 100 கி.மீ தூரத்துக்குள் வைத்திருக்க வேண்டும் என்ற விதிமுறை பின்பற்றப்படுகின்றன.

அதன்படி, 2004 ஆம் ஆண்டு முந்தைய தருமபுரி மாவட்டத்தில் இருந்து கிருஷ்ணகிரி மாவட்டம் பிரிக்கப்பட்டது. 2009 ஆம் ஆண்டில் கோவை மற்றும் ஈரோடு மாவட்டங்களில் இருந்து திருப்பூர் மாவட்டமும், 1996 ஆம் ஆண்டு முந்தைய தஞ்சாவூர் மாவட்டத்திலிருந்து தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் என 3 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டன.

அதே போல, ஒரு காலத்தில் மாநிலத்தின் மிகப்பெரிய மாவட்டமாக இருந்த சேலம் மாவட்டத்திலிருந்து வெவ்வேறு காலகட்டங்களில் சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் ஆகிய நான்கு மாவட்டங்களாக பிரிக்கப்பட்டன. பின்னர், திருச்சி மாவட்டத்திலிருந்து மாநிலத்தின் மிகவும் பின்தங்கிய 2 மாவட்டங்களான அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களும் கரூர் மாவட்டமும் பிரிக்கப்பட்டன. பழைய ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரம், சிவகங்கை மற்றும் விருதுநகர் மாவட்டங்களாக பிரிக்கப்பட்டன. மதுரை இரண்டாக பிரிக்கப்பட்டு தேனி மாவட்டம் உருவானது.

நிலுவையில் உள்ள புதிய மாவட்ட கோரிக்கைகள்

கோவை மாவட்டத்தில் இருந்து பொள்ளாச்சியை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை உள்ளது. இதற்கு மக்கள் நிர்வாக ரீதியான பல்வேறு பிரச்னைகளை காரணங்களாக கூறியுள்ளனர். அதே போல, திருநெல்வேலியில் உள்ள இரண்டாவது பெரிய நகராட்சியான சங்கரன்கோவிலை மக்கள் தனி மாவட்டமாக அறிவிக்க கோருகின்றனர். இப்படி இன்னும் புதிய மாவட்ட கோரிக்கை இருந்தபடியே இருக்கிறது.

 

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Explained News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close