தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 6-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் (Tamil Nadu) 10, 11, 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு மார்ச் 1 முதல் ஏப்ரல் 8 ஆம் தேதி வரை நடத்தப்பட்டது. மேலும், இந்தாண்டு மக்களவைத் தேர்தலும் வந்ததால் இதர வகுப்புகளுக்கும் முன்கூட்டியே ஆண்டு இறுதித் தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டன.
அதைத் தொடர்ந்து பள்ளி மாணவர்களுக்கு ஏப்ரல் 24 ஆம் தேதி முதல் கோடை விடுமுறை விடப்பட்டது. வழக்கமாக பள்ளி மாணவர்களுக்கு மே மாதத்தில் கோடை விடுமுறை விடப்பட்டு, ஜூன் மாத தொடக்கத்தில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும். ஆனால், இந்த ஆண்டு மக்களவைத் தேர்தல் முடிவுகள் ஜூன் 4 ஆம் தேதி வெளியாவதால் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்று பெற்றோர்கள் எதிர்பார்த்து கொண்டிருந்தனர்.
இந்நிலையில், தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 6-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது.இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை இயக்குனர் வெயிட்ட அறிக்கையில், "2024-2025 ஆம் கல்வியாண்டில் 1 முதல் 12 வகுப்புகளுக்கு ஜுன் 6 ஆம் தேதி அன்று பள்ளிகள் திறக்கப்படும். எனவே, குறிப்பிட்ட நாளில் பள்ளிகளை துவங்குவதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் அறிவுறுத்தப்படுகின்றனர். அனைத்து பள்ளிகளை திறப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை உடன் எடுத்திடவும் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்படுகின்றது", என்று அதில் கூறப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“