Tata Tanishq Interfaith Ad Tamil News: டாடாவுக்கு சொந்தமான தனீஷ்க் ஒளிபரப்பிய விளம்பரத்தில், இருவேறு மதத்தைச் சார்ந்த தம்பதியர் இடம்பெற்றது, காதல் ஜிஹாத்தை ஊக்குவிப்பதாகக் குற்றம் சாட்டப்பட்டது. இது, பிராண்டுகளின் மீதான பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்கிற அச்சத்தில், இந்த விளம்பரத்தைத் திரும்பப் பெற்றது தனீஷ்க். இந்தியாவில் மத நம்பிக்கை திருமணங்களின் போக்கை இங்கே விரிவாக விளக்கியுள்ளோம்.
இந்தியாவில் நடக்கும் கலப்புத் திருமணங்களின் பதிவு உள்ளதா?
இந்தியாவில் மதங்களுக்கு எதிரான திருமணங்கள் பற்றி மக்கள்தொகை கணக்கெடுப்பில் பதிவு செய்யவுமில்லை அத்தகைய திருமணங்களைப் பற்றி அறிய எந்தவொரு தேசிய பிரதிநிதித்துவ கணக்கெடுப்பை அரசாங்கம் மேற்கொள்ளவுமில்லை.
இந்தியாவில் மதங்களுக்கு எதிரான திருமணங்களின் தாக்கம் குறித்து அறிய ஏதேனும் ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளனவா?
இந்தியாவில் ஆராய்ச்சி அறிஞர்கள் நடத்திய பல ஆய்வுகளில், கலப்புத் திருமணங்கள் சமூகத்தில் பெருமளவில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பதைக் கண்டறிந்துள்ளன. மத்திய அரசு நடத்தும் சர்வதேச மக்கள்தொகை அறிவியல் நிறுவனத்தின் சார்பாக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள், '2005-ம் ஆண்டு இந்திய மனித மேம்பாட்டு ஆய்வு (India Human Development Survey (IHDS))' தரவுகளைப் பகுப்பாய்வு செய்து, இந்தியாவில் நடந்த கலப்புத் திருமணங்கள் குறித்த ஓர் கட்டுரையை 2013-ம் ஆண்டில் வெளியிட்டனர்.
"இந்திய மனித மேம்பாட்டு கணக்கெடுப்பு 2005 (IHDS), தேசிய அளவிலான ஓர் பிரதிநிதி. இதில், 1503 கிராமங்களிலுள்ள 41,554 வீடுகள் மற்றும் இந்தியா முழுவதும் 971 நகர்ப்புறங்களில், பல தலைப்புகளின் கீழ் கணக்கெடுப்பு எடுக்கப்பட்டது. இதனை, மேரிலாந்து பல்கலைக்கழகம் மற்றும் புது தில்லியின் தேசிய பயன்பாட்டுப் பொருளாதார ஆராய்ச்சி கவுன்சில் (National Council of Applied Economic Research (NCAER)) ஆராய்ச்சியாளர்கள் இணைந்து ஏற்பாடு செய்தனர். தேசிய சுகாதார நிறுவனங்களால் இந்த கணக்கெடுப்புக்குத் தேவையான நிதி வழங்கப்பட்டது. இதில் கலப்புத் திருமணம் பற்றிய நேரடி கேள்வி எதுவும் இல்லை என்றாலும், கலப்புத் திருமணங்களின் எண்ணிக்கையைக் கண்டறியக் கணவன்-மனைவியின் மத ரீதியான தொடர்பை இந்த கட்டுரை விளக்குகிறது.
15-49 வயதிற்குட்பட்ட திருமணமான பெண்களில் 2.21 சதவிகிதம் பேர் தங்கள் மதத்திற்கு அப்பாற்பட்டு திருமணம் செய்து கொண்டதாக இந்த ஆய்வு கூறுகிறது. 2.8 சதவிகிதத்துடன் மற்ற வயதினரை விட இளம் வயது பெண்களில் (15-19) மதங்களுக்கு இடையிலான திருமணங்களின் விகிதம் மிக அதிகமாக உள்ளது. மேலும், திருமண வயது அதிகரிக்கும் போது அதாவது, 20-24 வயதிற்குப்பட்டவர்களில் 2.3 சதவிகித பெண்கள் கலப்புத் திருமணம் செய்திருக்கின்றனர். 25-29 வயதுடையவர்கள் 2 சதவிகிதமாகவும், 30 வயதிற்கு மேற்பட்டவர்கள் 1.9 சதவிகிதமாகவும் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. கிராமப்புறங்களின் 1.8 சதவிகிதத்தோடு ஒப்பிடும்போது, நகர்ப்புறங்களில் வசிக்கும் பெண்கள் மத்தியில் 2.9 சதவிகிதத்துடன் கலப்புத் திருமணங்கள் அதிகமாக உள்ளது.
பல்வேறு மதக் குழுக்களில் கலப்புத் திருமணம் எவ்வளவு பிரபலமானது
பெண்கள் தங்கள் மதத்திற்கு வெளியே திருமணம் செய்துகொள்வது கிறிஸ்தவர்களிடையே மிக அதிகமாக உள்ளது. இதில் 3.5 சதவிகித பெண்கள் கலப்புத் திருமணங்கள் செய்துள்ளனர். 3.2 சதவிகிதத்துடன் சீக்கியர்கள் இரண்டாம் இடத்திலும், 1.5 சதவிகிதத்துடன் இந்துக்கள் மூன்றாம் இடத்திலும், 0.6 சதவிகிதத்துடன் முஸ்லிம்கள் நான்காம் இடத்திலும் உள்ளனர். என்றாலும், இந்தப் பெண்கள் எந்த மதத்தினரைத் திருமணம் செய்துகொள்கின்றனர் என்ற தரவு இல்லை.
எந்த மாநிலங்கள் அதிக எண்ணிக்கையிலான கலப்பு திருமணங்களைக் கொண்டுள்ளன
7.8 சதவிகிதத்தோடு பஞ்சாபில் மிக அதிகமான கலப்பு திருமணங்கள் பதிவாகியுள்ளன. சீக்கிய மதமும் இந்து மதமும் பின்பற்றும் சற்றே ஒத்த மத பழக்கவழக்கங்கள் மற்றும் நடைமுறைகள்தான் இந்த அதிக எண்ணிக்கைக்குக் காரணம். ஜார்கண்ட்டில் 5.7 சதவிகிதமும், ஆந்திராவில் 4.9 சதவிகிதமும் பதிவாகியுள்ளன. வங்காளத்தில் 0.3 சதவிகிதத்தோடு மிகக் குறைந்த எண்ணிக்கையிலான கலப்புத் திருமணம் பதிவாகியுள்ளது. மேலும், சத்தீஸ்கர் 0.6 சதவிகிதத்துடனும், ராஜஸ்தான் 0.7 சதவிகிதத்துடனும் பதிவு செய்து குறைந்த சதவிகிதத்தைப் பெற்றிருக்கிறது.
கலப்புத் திருமணங்கள் சமுதாயத்தை எவ்வாறு பாதிக்கின்றன?
மதங்களுக்கிடையேயான அல்லது இனங்களுக்கு இடையிலான கலப்புத் திருமணங்கள், சமூக-கலாச்சார ஒருங்கிணைப்புக்கு உதவுகின்றன மற்றும் சமூகத்தின் ஒருங்கிணைப்பை எளிதாக்குகின்றன என்று சமூகவியலாளர்கள் நம்புகின்றனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.