தெலங்கானா மாநிலத்தில் இருந்து மத்திய அரசிடம் நெல் கொள்முதல் செய்யக் கோரி, தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் திங்கள்கிழமை புது டெல்லியில் “மகா தர்ணா” போராட்டத்தை தொடங்கினார். தெலங்கானா அரசு ஒவ்வொரு பருவத்திலும் கொள்முதல் செய்யும் நெல் அளவு குறித்து எழுத்துப்பூர்வமாக மத்திய அரசிடம் இருந்து உத்தரவாதம் பெற விரும்புகிறது. அது மாநிலத்தில் பயிர் முறைகளைத் திட்டமிட உதவும் என்று தெலங்கானா அரசு கூறியுள்ளது.
தெலங்கானா மாநிலத்தில் தெலுங்கானா ராஷ்டிர சமிதி (டி.ஆர்.எஸ்) மற்றும் பாஜக இடையேயான மோதல் போக்கு இப்போது புது டெல்லி வரை பரவியுள்ளது. புதுடெல்லியில் தெலங்கானா முதல்வர் மற்றும் தெலங்கானா மாநில பாஜக தலைவர் பண்டி சஞ்சய் குமாரின் போஸ்டர்கள் வந்துள்ளன. தேசிய தலைநகரில் உள்ள தெலங்கானா பவனில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் டி.ஆர்.எஸ் கட்சியின் பல தலைவர்களும் ஆதரவாளர்களும் சந்திரசேகர் ராவுடன் இணைந்து கொண்டனர். பாரதிய கிசான் யூனியனின் (பிகேயு) ராகேஷ் சிங் டிகாயித்தும் போராட்டத்தில் கலந்துகொண்டார். மத்திய அரசின் பாரபட்சமான நெல் கொள்முதல் கொள்கைக்கு எதிரான தெலங்கானா அரசின் போராட்டத்தில் தானும் இணைவதாக டிகாயித் கூறினார்.
தெலங்கானாவில் தனது செல்வாக்கை விஸ்தரிக்க பாஜக மேற்கொள்ளும் இடைவிடாத முயற்சிகளும், அது ஆளும் டி.ஆர்.எஸ் கட்சிக்கு விடுக்கும் சவாலும் நெல் கொள்முதல் மோதலின் மையமாக இருக்கிறது. பஜகவின் வளர்ச்சியை எதிர்கொள்ள, டி.ஆர்.எஸ் கட்சி தெலங்கானா விவசாயிகள் மீதான பாஜகவின் அலட்சியத்தை எடுத்துக்காட்டுகிறது.
“மத்திய அரசின் பழிவாங்கும் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட நெல் கொள்முதல் கொள்கையை நாங்கள் முன்னிலைப்படுத்த விரும்புகிறோம்” என்று தெலங்கானா முதல்வரின் மகள் டி.ஆர்.எஸ் கட்சியின் எம்எல்சி கே.கவிதா கூறினார். மத்திய அரசின் அலட்சிய போக்கையும் மீறி, தெலங்கானாவில் உள்ள விவசாயிகளின் நலன்களை டி.ஆர்.எஸ் அரசு பாதுகாக்கும் என்று கூறினார். மத்திய அரசின் திட்டங்கள் மற்றும் கொள்கைகள் தேசிய உணவு பாதுகாப்பு அமைப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகவும், விவசாயிகளின் நலனுக்காக டி.ஆர்.எஸ் கட்சி போராடும் என்றும் அவர் கூறினார்.
பாசனத்திற்கு அதிக அளவில் தண்ணீர் கிடைப்பது, விவசாயப் பண்டு நலத்திட்டம் மற்றும் தடையில்லா மின்சாரம் ஆகியவற்றால் தெலங்கானா விவசாயிகள் நெல் விளைச்சலுக்குத் திரும்பினர். இதை எதிர்பார்த்து, விவசாயிகள் நெல் விதைக்க வேண்டாம் என்றும், அதற்குப் பதிலாக மாற்றுப் பயிர்களுக்குச் செல்லுமாறும் முதல்வர் முன்னதாக எச்சரித்திருந்தார். தெலங்கானா விவசாயிகளை நெல் விதைக்க ஊக்குவித்தவர்கள் பாஜக தலைவர்கள் என்றும், ஒவ்வொரு தானியத்தையும் மத்திய அரசு கொள்முதல் செய்யும் என்று உறுதியளித்ததாகவும் டி.ஆர்.எஸ் தலைவர்கள் கூறுகின்றனர். “இப்போது அவர்கள் எதுவும் சொல்லவில்லை. அனைத்து நெல்லையும் கொள்முதல் செய்வதாக உறுதியளித்தது பற்றி ஒரு வார்த்தையும் இல்லை” என்று மாநில விவசாய அமைச்சர் எஸ் நிரஞ்சன் ரெட்டி கூறினார். 65 லட்சம் டன் கொள்முதல் செய்வதாக உறுதியளித்த மத்திய அரசு, 45 லட்சம் டன் மட்டுமே கொள்முதல் செய்துள்ள நிலையில், 65 லட்சம் டன் என்ற இலக்கை விட, போதுமான அளவு இருப்பு இருப்பதாகக் கூறி, கொள்முதல் செய்ய மறுத்துவிட்டது. சுமார் 75 லட்சம் டன் மொத்த இருப்பையும் மத்திய அரசு கொள்முதல் செய்ய வேண்டும் என மாநில அரசு விரும்புகிறது.
கடந்த ஆண்டு இந்திய உணவுக் கழகம் (எஃப்.சி.ஐ) மூலம் பஞ்சாபிலிருந்து 202.81 லட்சம் டன் தானியங்கள் கொள்முதல் செய்யப்பட்டதாகவும், தெலங்கானாவில் இருந்து 141.38 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டதாகவும் டி.ஆர்.எஸ் தலைவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். “கடந்த காரீப் பருவத்தில், பஞ்சாபிலிருந்து 186.86 லட்சம் டன் கொள்முதல் செய்த மத்திய அரசு, தெலங்கானாவில் இருந்து 70.26 லட்சம் டன் மட்டுமே கொள்முதல் செய்தது. எங்கள் விவசாயிகள் மீதான இந்த பாகுபாட்டையும் அக்கறை இல்லாததையும்தான் நாங்கள் முன்னிலைப்படுத்த விரும்புகிறோம். இது லட்சக்கணக்கான விவசாயிகளை பாதிக்கிறது” என்று தெலங்கானா மாநில விவசாய அமைச்சர் ரெட்டி கூறினார்.
ஒரே மாதிரியான கொள்முதல் கொள்கையை மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்று டி.ஆர்.எஸ் எம்.எல்.ஏ-க்களும் நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்து வருகின்றனர். டி.ஆர்.எஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஜி ரஞ்சித் ரெட்டி கூறுகையில், பியூஷ் கோயலை பலமுறை சந்தித்தும், தெலங்கானா நெல் அனைத்தும் எடுக்கப்படும் என்று மத்திய அரசிடம் இருந்து எந்த உறுதிமொழியும் இல்லை. நாட்டில் போதுமான அளவு அரிசி இருப்பு இருப்பதாகவும், இனி அதை வாங்க மாட்டோம் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளதாக டி.ஆர்.எஸ் தலைவர்கள் தெரிவித்தனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.